ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”

விஷ்ணுபுரத்தை பல விதத்தில் படிக்கலாம். அமைப்புகளின் குரூரம், தொன்மங்கள் தோன்றி மறையும் விதம், ஹிந்து தத்துவங்களைப் பற்றிய அறிமுகம் என்றெல்லாம் படிக்கலாம். ஒரு fantasy என்ற விதத்தில் கூட படிக்கலாம். படிக்கும்போது இப்படி பல கூறுகள் எனக்குத் தெரிந்தது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடைக்கு போன மனநிலையில்தான் நான் இருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் ஏதாவது கவனத்தைக் கவர்ந்தது. பல சமயம் மேலே படிப்பதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிஷம் மூச்சு வாங்கிக்கொண்டு படித்ததை ஒரு மாதிரி absorb செய்துகொண்டு பிறகுதான் மேலே படிக்கவே முடிந்தது. ஒரு மாபெரும் ஓவியம் அல்லது சிற்பத்தைப் பார்க்கும் உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் பார்த்திருப்பீர்கள். விவரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா? குயர்னிகா என்ற ஓவியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் புதிது புதிதாக ஏதாவது கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். பார்த்து முடித்துவிட்டோம் என்ற எண்ணமே எனக்கு வருவதில்லை. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தைப் பற்றியும் உணர்ந்தேன்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பதிவு விமர்சனமோ புத்தக அறிமுகமோ இல்லை. இங்கே கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வழக்கமாக பத்து வரியில் கதைச்சுருக்கம் எழுதுவது போல இதற்கு எழுதிவிடவும் முடியாது. படித்தபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான்.


எதைச் சொல்வது, எதை விடுவது? முதலில் அந்தச் சிலை. ஸ்ரீபாதம், அல்லது உந்தி அல்லது முகம் மட்டுமே காணலாம் என்ற அளவுக்கு பிரமாண்டமான ஒரு சிலை! காஞ்சிபுரத்தில் ஒரு இருபது அடி உயரம் இருக்கும் உலகளந்த பெருமாள் சிலையைப் பார்த்தபோது உண்டான மன எழுச்சியே இன்னும் அகலவில்லை (பார்த்து 15 வருஷம் இருக்கும்) திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில்தான் கதையின் மூலக்கரு என்று ஜெயமோகன் எங்கோ சொல்லி இருக்கிறார். அந்த கோபுரங்களும் கண்டாமணியும். அஜிதன். அஜிதன் உண்மையிலேயே வாதத்தில் வென்றானா? திருவடி, அவனுடைய obsession, அவனால் உருவாகும் cult . சங்கர்ஷணன், அவன் சந்திக்கும் இன்னொரு “புலவன்”, அரங்கேற்றம், பின்னாளில் சங்கர்ஷணன் பற்றி உலவும் தொன்மங்கள். கதையின் அமைப்பே – முதல் பகுதியின் மனிதர்கள் மூன்றாம் பகுதியில் தொன்மங்களாக வருவதும், முதல் பகுதியின் தொன்மங்கள் இரண்டாம் பகுதியில் உண்மை மனிதர்களாக வருவதும் அபாரமான construction technique. யானைகள். மீண்டும் யானைகள். சிற்பிகள். அந்த பாண்டிய அரசன். அவனுக்குக் கூட்டிக் கொடுக்க சம்மதிக்கும் வீரர் தலைவன். அந்த ஆழ்வார், அதுவும் அவர் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று சொன்ன ஆழ்வார்! (நம்மாழ்வார் அப்படி சொன்னதாக ஒரு வைஷ்ணவ குருபரம்பரை கதை உண்டு)

தத்துவ விசாரத்தை இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அதுவும் ஆன்மிகம் என்றால் எனக்கு கண் வெகு சீக்கிரம் சொருகிக் கொள்ளும். பொதுவாக தத்துவம் எழுப்பும் கேள்விகளில் எனக்கு அக்கறையே கிடையாது. அதுவும் நமது தத்துவம் எல்லாம் வெறும் speculation-தான். உதாரணமாக சாவுக்குப் பிறகு என்ன? சம்பத் மாதிரி அது ஓர் இடைவெளி என்று சொல்லலாம். சாவுக்குப் பிறகு எல்லாரும் ஒரு நிறமாக மாறுவோம் என்று நான் சொல்லலாம். இந்த வெற்று யூகங்களை எல்லாம் நிரூபிக்க வழி இல்லாதபோது கேள்வியே சாரமற்றது என்ற முடிவுக்குத்தான் நான் வருவேன்.

ஆனால் இந்த மாதிரி speculation எல்லாம் theoretical exercises என்ற அளவுக்காவது என்னை இந்தப் புத்தகம் ஒத்துக் கொள்ள வைத்தது. எனக்கு இன்று நமது தத்துவங்கள் பற்றி ஓரளவாவது தெரிகிறது என்றால் அதற்கு இந்த நாவலே காரணம். ஜெயமோகனின் உழைப்பு அசர வைக்கிறது. தத்துவங்களைப் பற்றி நா.பா. எழுதிய மணிபல்லவம் நாவலிலும்தான் வாதிக்கிறார்கள். அதைப் படிப்பதை விட வெங்காயம் உரிக்கலாம்.

எனக்கு இன்னும் இரண்டு மூன்று முறையாவது படிக்க வேண்டும். வார் அண்ட் பீஸ் படித்துவிட்டு என்று நினைத்திருக்கிறேன், எப்போது முடியுமோ தெரியவில்லை.

ரொம்ப கஷ்டம்தான், ஆனால் விஷ்ணுபுரம் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

கட்டாயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம். தத்துவம் என்றவுடன் பயப்பட வேண்டாம், மிகவும் சுவாரசியமான எழுத்தும் கூட. Unputdownable.

விஷ்ணுபுரத்தை எஸ்.ரா. தமிழின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். ஜெயமோகன் அதைத்தான் தமிழின் தலை சிறந்த நாவலாகக் கருதுகிறார். அப்படி சொன்னதற்காக நிறைய பேர் அவரை கர்வி என்று திட்டி இருக்கிறார்கள். 🙂 அவருடைய வார்த்தைகளில்:

ஐதீகத் தொன்மை அணுகு முறையின் வழியாக இந்திய வரலாற்றையும், தத்துவ மரபையும் ஆய்ந்து மாற்று சித்திரம் ஒன்றைத் தரும் முயற்சி. அதன் முழுமை, மொழியின் தீவிரம், குறியீட்டு கவித்துவம் காரணமாக பெரிதும் பாராட்டப் பட்டது. ‘நூறு வருடத் தமிழிலக்கியத் தளத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இலக்கிய முயற்சி’ என்று மதிப்பிட்டார் அசோகமித்திரன்.

1997ல் பிரசுரமாயிற்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
பா. ராகவனின் விமர்சனம்
கோபி ராமமூர்த்தியின் விமர்சனம்

38 thoughts on “ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”

  1. பாண்டிய தேசத்தின் திருக்கோளூரில், அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவி ஆழ்வார், அயோத்தி முதலான வடதேச யாத்திரையில் இருந்தார். அப்போது, தென்திசையில் இருந்து பேரொளி ஒன்று ஜ்வலிப்பதைக் கண்டு சிலிர்த்து, ‘என்ன விந்தை இது!’ என்று வியந்தார். உடனே அயோத்தியிலிருந்து தென் திசை நோக்கிப் பயண மானார். திருக்குருகூரை அடைந்தபோது, ‘இங்கே மிக உன்னதமான மகானைத் தரிசிக்கப் போகிறோம்’ என்பதை உணர்ந்தார் மதுரகவி ஆழ்வார்.

   திருக்குருகூரின் ஆலயத்தில் அமைந்துள்ள புளிய மரத்தடியை நெருங்கினார். அங்கே, கடும் தவத்தில், யோக நிஷ்டையில் தன்னுள் இருக்கிற பரந்தாமனுடன் இரண்டறக் கலந்திருந்தார் மாறன். ‘பகவானை இவர் இப்போதே அடைந்துவிட்டால், உலக மக்களுக்கு நற்கதி ஏது?’ என யோசித்த மதுரகவி, தன் இரண்டு கைகளையும் கொண்டு பலமாக ஓசை எழுப்பினார். அந்தக் கைத்தட்டல் சத்தத்தில், சட்டென்று தவ நிலையில் இருந்து மீண்டு வந்தார் மாறன்.

   எதிரில் பவ்யமாக, கை கூப்பியபடி நின்றிருக்கும் மதுரகவி ஆழ்வாரைப் பார்த்தார். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் உடல் சிலிர்த்த மதுர கவியார், அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

   பின்பு, ”செத்தத்தின் வயிற்றிலே சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். அதாவது, உயிரற்றதாகிய உடலில், அணு வடிவாக உள்ள ஆன்மா வந்து புகுந்தால், அந்த ஆன்மா எதை அனுபவித்துக்கொண்டு இருக்கும்? எந்த இடத்தில் இன்பம் உண்டென்று நினைக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.

   அதற்கு நம்மாழ்வார், ”அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” எனப் பதில் அளித்தார். அதாவது, அந்த உடலையே… அதில் இருக்கும் இன்ப துன்பங்களையே அனுபவித்துக் கொண்டு அந்த இடத்திலேயே கிடக்கும்” என விளக்கினார்.

   மாறனின் மகிமையை உணர்ந்து பூரித்தார் மதுரகவி ஆழ்வார். ‘நீங்களே என் ஆச்சார்யர்’ என நமஸ்கரித்தார். பிறகு, மாறனுக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமையாகக் கொண்டு, அவருடனேயே இருந்தார். நல்ல குரு கிடைப்பதும் அரிது; அந்த குருவை அடையாளம் கண்டுகொள்வதும் அரிது. இந்த இரண்டையுமே மதுரகவி ஆழ்வாருக்குக் காட்டி அருளினார் பரந்தாமன்.

   Like

   1. பால ஹனுமான்,
    பொறுமையாக பதிலளித்தற்கு மிகவும் நன்றி….

    Like

   2. Bal Hanuman
    Ur answer does not make clear the meaning of the statement attributed to Nammaazhwaar. The story is also distorted to ur convenience.
    Madurakavi was a brahmin from an agraharam at Thiruththolaivilii mangalam about 18 miles away from Azhwar Thirunagar where Nammaazvaar lived. Even to this day, surprisingly, only a katcha road leads to T.mangalam from A.T. These brahmins were imported by Pandian king to do priestly work in the temple and also in the so called 9 divya desams in Srivaikuntam of Tuticorin district. They lived isolated lives; and the people with whom they lived, I mean, the locals were all agricultural farmers and coolies, or, some landed gentry. Pl note, Srivaikuntam is on the banks of reiver Tambrabarni and wherever you see, even to this day, you see only paddy fields there.
    Maduraikavi had the usual supremacist illusions that Tamil brahmis suffered from, namely it was they who alone were capable of spiritual inclination and enquiries. This had misled Madurai kavi to not look for a guru in the lower varnas and nearby. Hence, his search for a guru everywhere, which led him to Ayodhya. That he saw a light in the sky, just as St Paul saw a light on the way to Damascus that led him to Jerusalem when Jesus was on trail there, Madurai kavii similarly was led by the light to Alwar Thirunagari almost near his native place – is a fairy tale, or legend often found in Tamil vaishnavite lore. We must dismiss it and look for some credible theory. Accordingly, we might say he finally returned to his native village fed up with the futile search and came to know from the locals that a young person by name Maran was being venerated by the locals as a Gnani and he was sitting in meditative pose since his childhood. Curious to know all about him, he went to AT and found the person so young in years – decades separated him and the young person, according to the same Vaishnavite lore (Guru parambara Prabhaavam) – and was not convinced about his spiritual eminence as he thought that the young man could be an imposter or venerated by the locals who believed anyone in meditative pose. Horror of horrors! The young man was from the fourth varna, the sudras, a low caste who were not allowed to have any spiritual pretentions.

    So, the old man subjected the young man to cross-examination with a flurry of questions thrown one after another. He, in his intellectual arrogance, thought that the young person being a sudra, and also, so small and inexperienced, could be easily cornered and humiliated !!!!

    Bal Hanuman makes us believe that the old man asked only one question, which is not correct if I we read the aforesaid legend itself. According to that, he asked a series of philosophical (religious philosophy) questions and the final one was the question “If a supersize entity enters the tiniest entity, how will it survive?”.

    The question should beg a natural reply which is: It is impossible for a larger entity to enter the smaller one, let alone survive! So, the question itself is illogical!

    Maduraikvai, in his brahimincal intellectual arrogance, expected that reply only. To his surprise, the bala yogi replied that although big, it will draw succour from the very place to which it goes to live, however small the place may be, and will survive”

    This is a philosophical question and the reply is to be philosophical. Nammaazhwaar gave that. I don’t actually understand what great surprise or wisdom lies in the reply. Except that it is original, that too, comes from a small man inexperienced in practical life ! Others could reply that it is not possible for the larger entity to survive within smaller entity.
    Is there anything in nature where we find a large entity able to enter a small entity and survive residing within drawing upon the resources from within ? On what basis Nammaazhavaar says this – this is what we need to know.

    Going back to the story, the old man seems to have taken the reply as a cap of all the questions and replies and was thoroughly swept off his feet – literally and figuratively – he prostrated before the Bala yogi, and accepted him as his guru. It might be that he was also surprised at the replies to his earlier question all of which must have been deeply philosophical. The Vaishnavite legend clearly says that many questions were asked of which only this survives to this day as history !

    For this act – pl note this. Wont you?- a brahimin of orthodox variety accepting the sudra who is not qualified to do any spiritual enquiries, let alone to become a guru to a brahmin, is a REVOLUTION at the time. Also, note here, the same incident happened in the life of Ramanujar, but the non-brahmin (Thirukachchi nambikal), declined to become his guru.

    So, it is a fair guess that Madurakavi suffered the pangs of ridicule and criticisms from his own caste ppl and also, other upper castes for accepting Nammaazhvaar, a sudra, as his guru. The consequences were not recorded in history, as, on Azvaars, the Tamil vaishanvite brahmins had ensured that only hagiography was written, not any attempt at history.
    We have lost all recorded history – or oral traditional history – on Alwaars because of the machinations Tamil vaishnavite Brahmins !

    Like

 1. இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன். மெதுவாக, மிக நிதானமாகப் படிக்க வேண்டும். அது இப்போதைய எனது சூழலில் முடியாது. முழுமையாகப் படித்த பின்பு ஒரு பதிவு போட எண்ணம்.

  தத்துவம் பற்றி ர.சு. நல்லபெருமாள் அவர்கள் “பிரம்ம ரகசியம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். மிக சுவாரஸியமாக இருக்கும். வானதி வெளியீடு. நீங்கள் வாசித்ததுண்டா? த்வைதம், அத்வைதத்தில் ஆரம்பித்து மீமாச்மை, அநான்ம வாதம் என்று எல்லா தத்துவங்கள் பற்றியும் அதில் ஆராயப்பட்டிருக்கும்.

  ஜெயமோகன் ஒரு எழுத்தாளர் என்ற நிலையை எப்போதோ தாண்டி விட்டார். அவர் ஒரு சிந்தனாவாதி, தத்துவவாதி.

  அவர் (இருக்கும்) நிலையை அவ்வளவு எரிதில் புரிந்து கொள்ள இயலாது. இராமகிருஷ்ணர் சொல்வார், “ மேல் நிலைக்குச் சென்ற பிரம்ம ஞானிகளில் பலர் அதிலேயே அமிழ்ந்து விடுவர். ஒரு சிலர் மட்டும் மற்ற உயிர்கள் மீது கொண்ட பாசத்தால்/அன்பால் கீழே இறங்கி வருவர்” என்று.

  ஜெயமோகனும் அவ்வாறே தத்துவ ஞானத்தில் மேலே சென்று விட்டு, அதை இலக்கியப் படைப்புகளாகக் கீழ் இறக்கிக் கொண்டிருக்கிறார் என்பது என் அனுமானம்.

  இது வெறும் புகழ்ச்சியில்லை.

  Like

 2. விஷ்ணுபுரம் வானைக் கிழித்துக் கொண்டு பாயும் பேராறு. திராணியிருந்தால் தைரியமாகத் தலையை நீட்டி களிமண்ணைக் கரைத்துக் கொள்ளலாம் :))
  என்ன செய்ய??…குடைக்கம்பியிலிருந்து வழிந்து சொட்டும் ஒரு துளியே எறும்புக்குப் பேய்மழை. ஹ்ம்ம்..
  மறுபடியும் விஷ்ணுபுரத்திற்குப் போகத் தூண்டுகிறது உங்கள் ‘வியப்புப் பதிவு’ 🙂

  //அதைப் படிப்பதை விட வெங்காயம் உரிக்கலாம்// சிரித்துவிட்டேன். எப்படி ஆர்.வி. இப்படியெல்லாம்?? இந்த சரளம் தான் உங்கள் ட்ரேட்மார்க்.

  //ஜெயமோகன் ஒரு எழுத்தாளர் என்ற நிலையை எப்போதோ தாண்டி விட்டார். அவர் ஒரு சிந்தனாவாதி, தத்துவவாதி.//- உண்மை, ரமணன்.

  Like

 3. விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவனின் அருமையான அறிமுகம் சமீபத்தில் படிக்க முடிந்தது (பின்கதைச் சுருக்கம் என்கிற பொதுவான தலைப்பில் வாரம் ஒரு நாவல், அதன் மூலம் நாவலாசிரியர் குறித்த அறிமுகம் என்கிற அமைப்பில் கல்கியில் பா.ராகவன் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள்)

  Like

 4. விஷ்ணுபுரம் நாவலை ஜெயமோகன் எப்படி எழுதினாரோ! அவ்வளவு விஷயங்கள்! கோயில் கோபுர அமைப்பு, சைவம், வைணவம், சித்தர்கள், பௌத்தம், பழங்குடிகள், சோனா நதி என பல விசயங்களை வாசித்த போது ஏற்பட்ட பிரமிப்பை சொல்லில் அடக்க முடியாது. அந்நாவலை வாசித்துக்கொண்டிருந்த போது மதுரை புத்தகத்திருவிழாவிற்கு ஜெயமோகன் வந்திருந்தார். ஆனால், அவரிடம் நான் அதை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லக் கூடத்தயக்கம். என்னைப்பொருத்த வரை விஷ்ணுபுரம் நாவலை விட கொற்றவை’யே நெஞ்சில் நிற்கிறது. பகிர்விற்கு நன்றி.

  Like

 5. பிரகாஷ், புத்தகத்தின் சைஸ் கொஞ்சம் பயமுறுத்தும் என்றாலும் ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது என்பதுதான் என் அனுபவம்.
  ரமணன், சீக்கிரம் படித்துவிடுங்கள்! என் கருத்தில் ஜெயமோகன் தனது அடையாளம் எழுத்தாளன் என்பதுதான் என்றுதான் நினைக்கிறார். அவர் தத்துவவாதி என்பதை அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
  சித்திரவீதிக்காரன், எனக்கு கொற்றவை கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது. நடை ரா.பி. சேதுப்பிள்ளையை நினைவுபடுத்துகிறது. தம் பிடித்து படிக்க வேண்டி இருக்கிறது.
  ஸ்ரீனிவாஸ், நவனுக்கு நம்மாழ்வார் பற்றி விளக்கியதற்கு நன்றி! பா. ராகவன் எழுதியதைப் பதியுங்களேன்!
  கதிர்முருகா, பதிவு உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி!

  Like

 6. ஆர்வி,

  பிரம்மித்து நின்றுவிட்டீர்கள் , வழக்கமான விமர்சனப்பார்வை இல்லை , பரவாயில்லை , பின்பு எழுதுங்கள்.

  கொற்றவை அதன் தளத்திற்காக அந்த நடையில் எழுதப்பட்டது , வேறு எப்படி எழுதியிருந்தாலும் கொற்றவை இவ்வளவு ஆழமான படைப்பாக வந்திருக்காது , அதன் கவிநடைதான் அதன் சிறப்பு என்றே நினைக்கிறேன்,

  Like

 7. \\திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில்தான் கதையின் மூலக்கரு என்று ஜெயமோகன் எங்கோ சொல்லி இருக்கிறார்\\

  அ.கா. பெருமாளின் திருவட்டார் ஆதிகேசவ ஆலயம் பற்றிய புத்தகத்திலும் இவ்வாறு வருகிறது.

  நான் விஷ்ணுபுரம் இன்னமும் படிக்கவில்லை. கூடிய விரைவில் படிக்கவேண்டும்.

  Like

 8. ஆர்.வி,

  இன்னும் விரிவாக விமர்சனம் எழுதவேண்டிய நாவல். விஷ்ணுபுரத்தைப் பற்றி, சிற்றிதழ்களில் எதிலாவது விரிவாக விமர்சனம் செய்திருப்பார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் தேடிய வரை, இனையத்தில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் யாரும் அதைப் பற்றி எழுதவில்லை. [ஜெ. தன் தளத்தில் நாவல் குறித்து வந்த வாசகர் கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கிறார். நம் குழுமத்தில் அதை பகிர்ந்திருக்கிறார்.]

  நீங்கள் சொல்லியது போல முதல் முறை நாவலை படித்துவிட்டு பிரமித்துவிட்டேன். தத்துவம், வரலாறு, தொன்மங்கள் உருவாகும் விதம், சிற்பக்கலை, யானை வளர்ப்பு, குதிரை வளர்ப்பு என்று நாவல் தொடாத தளம் இல்லை. (எங்க பாஷைல சொன்னா ‘வெறித்தனம்.சும்மா, பின்னி பெடலெடுத்திருக்கிறார்’ ]..

  “எனக்கு இன்னும் இரண்டு மூன்று முறையாவது படிக்க வேண்டும். வார் அண்ட் பீஸ் படித்துவிட்டு என்று நினைத்திருக்கிறேன், எப்போது முடியுமோ தெரியவில்லை.”

  இப்போதுதான் ‘வார் அண்ட் பீஸ்’ படித்துக்கொண்டிருக்கிறேன். ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ வாங்கி வைத்துள்ளேன். உங்களிடமிருந்து வாங்கிய நாவல்களைப் படித்துவிட்டேன். அவற்றிற்கு ‘வாசகர் பார்வை’ எழுதிவிட்டு விஷ்ணுபுரத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு ‘வாசகர் பார்வை’ எழுதவேண்டும். [விமர்சனம் – எனக்கு கொஞ்சம் ஓவரான வார்த்தை.] நம் சி.இ.வ சந்திப்புகளிள், இந்நாவலை பகுதி பகுதியாகவாவது நாம் விவாதிக்க வேண்டும்.

  Like

 9. விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்…

  ஆங்கிலத்தில் மிக அதிகம் பேரால் வசை பாடப்பட்ட நாவல், சாங்சுவரி. வில்லியம் ஃபாக்னருடைய நாவல் இது. உன்னதமான இலக்கியப் படைப்பு என்று ஒரு சாரார் இதைத் தொடர்ந்து சொல்லி வந்தாலும், இந்நாவலில் ஃபாக்னர் விதைத்திருக்கும் குரூரமும், வக்கிரமும், வன்முறையும் வெறியும் வேகமும் சராசரி மனிதர்கள் சகித்துக் கொள்ளவே முடியாதவை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. சாங்சுவரி நாவலைத் திட்டித்தீர்த்த அத்தனை பேருமே அதன் சுடும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்தான் திட்டினார்கள். இப்படியெல்லாமுமா அப்பட்டமாக எழுதுவது என்று சபித்தார்கள். எல்லா சாபங்களையும் மீறி சாங்சுவரி சாகாவரம் பெற்றதொரு படைப்பானது சரித்திரம்.

  தமிழிலும் இப்படி எல்லாத் தரப்பினராலும் வசை பாடப்பட்ட நாவல் ஒன்று உண்டு. சாங்சுவரிக்கு இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நாவலைப் படித்தவர்களும் திட்டினார்கள், படிக்காதவர்களும், கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு திட்டினார்கள்! இந்த நாவலைத் திட்டினால்தான் நமக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கூடத் திட்டினார்கள். திட்டுவதற்கு இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடித்தேடியும் திட்டினார்கள்.

  தன்னளவில், உண்மையிலேயே சிறப்பான நாவலான விஷ்ணுபுரம், அதற்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களினால் மேலும் பிரபலமடைந்ததே தவிர, தோல்வி காணவில்லை.

  ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளியாகி, வெகுநாள் ஆகவில்லை என்பதால் வாசர்களுக்கு அப்போது ஏற்பட்ட பரபரப்புகள் மறந்திருக்காது. தமிழில் அதற்கு முன்னால் வேறு எந்த ஓர் இலக்கியப் படைப்பு வெளியானபோதும், அப்படியொரு பரபரப்பும் பேச்சும் எழுந்ததாகச் சரித்திரமில்லை.

  விஷ்ணுபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வாசிக்க ஆரம்பித்து, பாதியில் நிறுத்தி விட்டவர்கள் அதிகம், என்னுடைய நண்பர்கள் பலரே, ‘படிக்க முடியவில்லை’ என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன். நாவலின் பக்க அளவு ஒரு பொருட்டே இல்லை. வழுக்கிக்கொண்டு ஓடும் ஜெயமோகனின் மொழியின் உதவியுடன் இரண்டேநாளில் கூட வாசித்து விடலாம்.

  –விமர்சனம் தொடரும்…

  Like

 10. பத்து வரியில் ‘கதைச் சுருக்கம்’ எழுத முடியாதுன்னா, நூறு வரியில்தான் எழுதுங்களேன்.
  முழுமையான விமர்சனமும் வழங்கலாமே.
  தங்களின் பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  Like

 11. விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்… (விமர்சனம் தொடர்கிறது…)

  பிரச்னை, நாவலின் கட்டுமானம் தொடர்பானது. விஷ்ணுபுரம் நாவல் மூன்று பாகங்கள் கொண்டது. நாவலில் காலம் புரண்டு கிடக்கிறபடியால், வாசிப்பு நடுவில் லேசாகத் தடைபடக்கூடும். சற்றே கவனமுடன் நடைபயின்றால் இது ஒரு சிக்கலே இல்லை.

  ஆனால், ஏன் நாவலை இப்படி புரட்டிப் போட்டு எழுத வேண்டும் என்று கேட்கக் கூடாது! நம்மால் நமது சிந்தனையை ஒரு நேர்க்கோட்டில் எப்போதும் வைத்துக் கொள்ள முடிகிறதா என்ன! விஷ்ணுபுரம், காலத்தை உதைத்துத் தள்ளி, படைப்புக்கு ஒரு காவியத்தன்மை சேர்த்து, கற்பனையில் ஒரு நகரை நிர்மாணிக்கும் பிரும்ம பிரயத்தனம்.

  நகரை நிர்மாணிப்பதென்றால் ஊரும் தெருவும் வீடும் வாசலும் மட்டுமல்ல. விஷ்ணுபுரம் என்கிற புராதன, கற்பனை நகரை உருவாக்கி, நூற்றுக்கணக்கான கற்பனைக் கதாபாத்திரங்களைச் சித்திரித்து உலவ விட்டு, நிஜம் போன்ற பிரமையை உருவாக்கும் படைப்பு அது. ஆதிகாலத்தில், இங்கு இருந்த சைவ, வைணவப் பிரிவுகள், இடையில் வந்த பவுத்த மதத் தாக்கம், பவுத்தத்துக்கும் மற்றவற்றுக்குமான மோதல்கள் (மோதல் என்றால் இன்றைய அர்த்தத்தில் அல்ல. மிக அழகான, ஆழமான விவாத மோதல்கள்.), பவுத்தத்தின் ஆட்சி மற்றும் வீழ்ச்சி என்று மறைந்து போன ஒரு கால கட்டத்தை மீட்டெடுத்துக் கொண்டுவந்து கண்முன் நிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒரு மாபெரும் பிரளயத்துடன் நிறைவடைகிறது.

  உண்மையில் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டதற்கு அப்பால் நமக்கு எதுவும் தெரியாது. ஜெயமோகனுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் ஒரு நதியின் பெருக்கெடுப்பை மையமாக வைத்து ஒரு முழு நகரமும் அதற்கு அப்பாலும் இல்லாமல் போவதை சிறு சிறு அத்தியாயங்களில் காட்சிப்படுத்தும் நேர்த்தியில் வாசிக்கும் யாருக்கும் சிலிர்த்துப் போவது நிச்சயம்.

  –விமர்சனம் தொடரும்….

  Like

 12. விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்… (விமர்சனம் தொடர்கிறது…)

  விஷ்ணுபுரத்தின் மையப்புள்ளி ஜெயமோகனுக்குக் கிடைத்த இடம், திருவட்டாறு. தமிழக – கேரளா எல்லையில் அமைந்துள்ள ஒரு புராதானத் திருத்தலம். ஆதிகேசவப் பெருமாள் இங்கே மூன்று கருவறைகளை அடைத்தபடி மிகப் பிரம்மாண்டமாக சயன கோலம் கொண்டிருக்கிறார். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை இந்த ஊருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். கைக்கு அடக்கமான கடவுள் உருவங்களைப் பார்த்து சிநேகம் கொண்ட மனங்களுக்கு ஆதிகேசவப் பெருமாளின் ஆகிருதி நிச்சயமாக அச்சமூட்டவே செய்யும். ஒரு மலை படுத்திருப்பது போலக் கிடப்பார். ஒரு நபர் மட்டுமே ஒரு சமயத்தில் நுழையக் கூடிய கருவறை. இருளும், திருமேனியின் கருமையும் ஒன்று சேர்ந்து, எண்ணெய் நெடியில் என்னவோ செய்யும். நம்பூதிரிகள் வாழை இலைத் துண்டில் வைத்துக் கொடுக்கும் சந்தனப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்து, கோயிலைச் சுற்றிக் கொண்டு ஓடும் அந்தச் சிறு ஓடையின் கரையில் சற்று நேரம் நின்றால்தான் பதற்றமும் தவிப்பும் சற்றே தணியும்.

  வாழ்க்கையில் செய்வதற்கு ஏதுமில்லை என்கிற முடிவு ஏற்பட்டு எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், துறவியாகி விடலாம் என்ற யோசனையுடன் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்த ஜெயமோகன், இந்தக் கோயிலின் மண்டபத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க படுத்தார். வேறு சிலரும் அந்த மண்டபத்தில் ஏற்கனவே படுத்திருந்தார்கள். நல்ல இருட்டு. பக்கத்தில் இருப்பவர் முகம் தெரியாதபடிக்குக் கவிந்திருந்த இருட்டு. அந்த இருட்டில் ஒரு வயதானவர் கோயிலைப் பற்றியும், ஆதிகேசவப் பெருமாளைப் பற்றியும் பேசியிருக்கிறார். “ஒரு யுகம் முடியும் போது ஆதிகேசவன் புரண்டு படுப்பார்.”

  இது கற்பனையா, ஏற்கனவே சொல்லப்பட்ட கதையா, புராணத்தில் இருக்கிறதா எதுவுமே தெரியாது. ஆனால், பிரம்மாண்டமான ஆதிகேசவப் பெருமாள் சிலை ஒரு முறை புரண்டு படுப்பது என்கிற படிமம், அங்கு படுத்திருந்த ஜெயமோகனைத் தாக்கியது. அதற்குமேல், அவரால் அன்றைய இரவு உறங்கக்கூட முடியவில்லை.

  ஏழெட்டு வருடங்கள் அலைந்து திரிந்து புராண இதிகாசங்கள், பவுத்த தத்துவங்கள், மேலைத் தத்துவங்கள் என்று கிடைத்த அனைத்தையும் படித்து அறிந்து, பல ஞானியருடன் தொடர்பு கொண்டு விவாதம் மேற்கொண்டு, தனக்குக் கிடைத்த படிமத்தை ஒரு கலைவடிவமாக்குவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டு, அதன் பிறகே இந்த நாவலை அவர் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

  –விமர்சனம் தொடரும்…

  Like

 13. விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்… (விமர்சனம் தொடர்கிறது…)

  விஷ்ணுபுரம், காவியத்தன்மையுடன் படைக்கப்பட்ட ஒரு நாவல். ஆனால் அதன் அமைப்பும் கட்டுமானமும் நுட்பமான செதுக்கல்களும் நேர்த்தியான விவரணைகளும் முற்றிலும் நவீன மொழியில் சாத்தியமாகியிருப்பது, தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

  இந்நாவல் நடைபெறும் களமாக ஜெயமோகன் சொல்லும் விஷ்ணுபுரம் தமிழகத்தில் இருக்கிறதா, கேரளத்தில் இருக்கிறதா, அல்லது ஹரித துங்கா, வராகபிருஷ்டம் போன்ற பெயர்களைப் பயன்படுத்துவதால் ஆந்திரப்பிரதேசமா என்று சரியாகத் தெரியவில்லை என்றும், சமஸ்கிருதப் பெயர்கள் நிறைய இடம் பெறுவது ஒட்டவில்லை என்றும், விஷ்ணு ஆலயம் ஒன்றின் பின்னணியில் பின்னப்படும் நாவலில் துளசியைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்றும் அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்பூரம் இருந்ததாக எப்படிக் காட்டலாம் என்றும் இன்னபலவாகவும் இதற்கு வந்த விமர்சனங்கள் அனைத்தும் எனக்கு அப்போது மிகவும் வியப்பூட்டின.

  தமிழகம், கேரளம், ஆந்திரம் எல்லாம் நேற்றே பிறந்தவை அல்லவா ! இந்தக் கதை நடந்த காலத்தில் மாநிலப் பிரிவினைகள் ஏது ? கற்பூரம் என்று சொல்லப்படுவது வாசிக்கும்போது எனக்கு பச்சைக் கற்பூரமாகத்தான் வாசனை அடித்தது. பெருமாள் கோயில் இருக்கும் இடத்தில் அந்த வாசனை இல்லாமல் எப்படி இருக்கும் ?

  –அடுத்த பதிவு விமர்சனத்தின் நிறைவுப் பகுதி…

  Like

 14. விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்… (விமர்சனம் தொடர்கிறது…)

  ஜெயமோகனுடன் எனக்கு அதிகப் பழக்கம் கிடையாது. இரண்டொருமுறை சந்தித்திருக்கிறேன். ஏழெட்டு கடிதப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. நான்கைந்து முறை மின்னஞ்சல் தொடர்பு. அவ்வளவுதான். எப்போதோ ஒரு முறை விஷ்ணுபுரத்துக்கு வந்த விமர்சனங்கள் அவரை எப்படி பாதித்தன என்று கேட்டேன். அவர் சிரித்தது நினைவிருக்கிறது. என்ன பதில் சொன்னார் என்று நினைவில்லை.

  ஆனால் அவர் சொல்லியிருக்கமுடியாத அந்த பதில், சில மாதங்களுக்குள்ளாக வந்துவிட்டது. அடுத்த நாவல். பின் தொடரும் நிழலின் குரல். இன்னொரு எண்ணூறு பக்கம்!

  அவரைப் போல ஒரு கடும் உழைப்பாளியை எழுத்து வட்டத்தில் நான் இன்றுவரை சந்தித்ததே இல்லை. சுவாசித்துக் கொண்டு இருக்கும் பொழுதெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் நபர் அவர். சளைக்காமல் கடிதங்கள் எழுதுவார். கூட்டங்களில் கலந்துகொள்வார். பல கூட்டங்களைத் தானே முன் நின்றும் நடத்துவார். டெலிகாம் துறையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு நாவல்களும் எழுதுவார்.

  நாவலென்பது வாழ்வைச் சித்திரிப்பது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு அந்தக் கருத்துடன் உடன்பாடு கிடையாது. வாழ்வின் அடிப்படைகளை ஆராய்வதுதான் ஒரு நாவலின் பணி என்று நினைப்பவர் அவர். விஷ்ணுபுரம் மட்டுமல்லாமல் அவரது அத்தனை நாவல்களுக்குமே இதுதான் அடிப்படை. எடுத்துக்கொள்ளும் விஷயங்களின் மீது அவர் எழுப்பும் ஆழமான கேள்விகள் முக்கியமானவை. நூற்றுக்கணக்கான கேள்விகளைத் தனக்குத் தானே எழுப்பிக்கொண்டு விடைகளைத் தேடி ஓடும்போது எந்த இடத்துக்கு வந்து சேருவோம் என்பது நமக்கே தெரியாது. நமது விருப்பம் வேறாகவும் இருக்கலாம். ஆனால் வந்தடைவதை நேர்மையுடன் முன்வைப்பதுதான் ஒரு கலைப்படைப்பின் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

  விஷ்ணுபுரத்தில் இடம் பெற்றிருக்கும் தர்க்கங்களுக்கு அப்பால் பண்டையத் தென்னிந்தியர்களின் வாழ்க்கை முறை, பேச்சு முறை, கலைகள், கலாசாரம், சமூக அடுக்குகள், அரசியல், ஆன்மிகம் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றிய அசலான தகவல்களை நம்மால் பெற முடியும். எத்தனை பெரிய உழைப்புக்குப் பிறகு இதெல்லாம் சாத்தியமாகியிருக்கக்கூடும் என்கிற வியப்பு அவசியம் உண்டாகும்.

  தேவை திறந்த மனம் மட்டுமே..

  –விமர்சனம் நிறைவடைந்தது…

  Like

 15. ஸ்ரீனிவாஸ், பா. ரா.வின் அறிமுகத்தை இங்கே பதித்ததற்கு நன்றி! அவற்றைத் தொகுத்து ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்.

  அரங்கசாமி, கொற்றவையின் ஆரம்பப் பகுதி என் மனம் கவர்ந்த ஒன்று. கண்ணகியின் கதையில்தான் மேலே போக கஷ்டப்படுகிறேன்.

  கோபி, விஷ்ணுபுரம் தவற விடக்கூடாத புத்தகம். கட்டாயம் படியுங்கள்.

  மயிலேறி, விஷ்ணுபுரம் இன்னும் நிறைய எழுதத் தகுந்த புத்தகம்தான். ஆனால் பிரமிப்பு இன்னும் கொஞ்சமாவது அடங்கினால்தான் அடுத்த நிலைக்குப் போக முடியும்.

  பரமசிவம், இன்னும் எழுத ஆசைதான், ஆனால் கொஞ்ச நாளாகும்.

  சுதாகர், விஷ்ணுபுரம் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி! படித்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொன்னவர்களை நான் இது வரை பார்க்கவில்லை. விமர்சிப்பவர்களும் இது ஒரு சாதனை என்று ஒத்துக் கொள்கிறார்கள். (விமலாதித்த மாமல்லன் குறை சொல்லலாம். 🙂 )

  ஜோ அமலன், ஸ்ரீனிவாஸ் வைஷ்ணவ குரு பரம்பரையில் நம்மாழ்வார்-மதுரகவி தொன்மம் என்று எது சொல்லப்படுகிறதோ அதை எழுதி இருக்கிறார். அதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஸ்ரீனிவாஸ் தன வசதிக்கேற்ப திரித்துப் பேசுகிறார் என்று எழுதி இருக்கிறீர்கள்.

  Like

 16. RV
  விஷ்ணுபுரம் எந்த எந்த பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு இருக்கிறது ?
  அட்டையில் கவிதா வெளியீடு நு இருக்கு. இந்த புத்தக விழாவில் கிடைக்குமா தெரியவில்லை.

  Like

  1. ஜெயமோகனையே கேட்டேன் – அவர் பதில்: “கவிதாதான் வெளியிட்டிருக்கிறது. புத்தகச்சந்தையில் கிடைக்கும்”

   Like

 17. திரு ஜெ.மோ , நேற்று புத்தகக் கண்காட்சியில் கவிதா பதிப்பகத்தில் விஷ்ணுபுரம் இல்லை. ஸ்டாக் இல்லை என்று நாளை (இன்று ) வரும் என்றும் தெரிவித்தார்கள்

  Like

 18. முதலில் உங்களின் இந்த பதிவை படிக்கும் போதுதான் விஷ்ணுபுரத்தை இரண்டாம் தடவை படித்துக் கொண்டிருந்தேன். எனது வழக்கம் முதல் தடவை மிகவேகமாக படிப்பது, இரண்டாம் முறை கொஞ்சம் நிதானமாக, பிறகு பல முறை தெளிவாக. அனைவரும் கூறுவது போல அதன் சைஸ் என்னை பயமுறுத்தவில்லை. பொன்னியின் செல்வனையே 20 முறைக்கு மேல் படித்ததால் (7வதில் ஆரம்பித்தது), பார்த்த உடன் ஒன்றும் தெரியவில்லை. படிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்தது அது காட்டும் ஒரு பிரம்மாண்ட உலகம்.
  முதல் பாகம் பல கதைப்பின்னல்கள், தவற விட்ட சில சில நுணுக்கமான விஷயங்களை இரண்டாம் முறை படிக்கும் போதுதான் அறிய முடிந்தது. இரண்டாம் பாகம் இன்னும் முழுவதுமாக படிக்க முடியவில்லை. தத்துவங்கள் எல்லாம் தலையில் ஏற மாட்டேன் என்கின்றது. (30 வயதிற்கு அது சரியா தவறா தெரியவில்லை, சீரியஸ் புத்தக வாசிப்பு என்பதே இப்போது 2 வருடங்களாகத்தான்). கடைசிபாகம் படிக்க எளிதாக இருந்தது. ஒட்டு மொத்த இந்து தர்மத்தின் கதையை விஷ்ணுபுரத்தின் வழியாக கூறுகின்றார் எனத் தோன்றியது. மேலும் பல முறை படித்தால் பல புதியவிஷயங்கள் தோன்றும் போல
  முதல் பாகத்தில் காட்டும் பிரம்மாண்டம் கற்பனை செய்யமுடியாததாகத்தான் உள்ளது. ஜெயமோகனுக்கே உரிய நகைச்சுவை அங்கங்கு. பல இடங்களில் பிராமணர்களை கிண்டலடிக்கும் வரிகள். வழக்கமாக அது போல படிக்கும் போது கோபம் வரும், விகடன் கருத்து பகுதியில் பல முறை பலரிடம் பாய்ந்திருக்கின்றேன். ஆனால் இது கோபத்தை வர வைக்கவில்லை, உண்மைக்கு அருகிலிருந்ததாலிருக்கலாம். சிற்ப கலை, ஆடல் கலை, பாடல் கலை பற்றி அவர் கூறும் பல கருத்துக்கள் (பூரண அலங்காரம், சங்கீத யட்சி) உண்மையா, கதையா ஒன்றும் புரியவில்லை
  பிரம்மாண்ட விஷ்ணு கற்பனை செய்யவே நிறைவாக உள்ளது. எப்படியும் இன்னும் இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும். கீதைக்கு பாஷ்யம் எழுதுவது போல, இதற்கும் யார்வது எழுதினால் நன்றாக இருக்கும்.
  ஒன்றே ஒன்று், இந்த புத்தகங்களின் அட்டைப்பட ஓவியங்கள், யார் அதை டிசைன் செய்கின்றார்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தை கொஞ்சமாவது பிரதிபலிக்க வேண்டாமா? ஒரு பிரமிப்பு உண்டாக வேண்டும். இந்த படத்தை பார்த்தால் நிஜமாக எரிச்சலாகத்தான் உள்ளது.

  Like

  1. ரெங்க சுப்பிரமணி, நீங்களே பாஷ்யம் எழுதுங்கள், இங்கேயே பதித்துவிடுவோம்! நண்பர் விசுவும் எழுதுகிறேன் எழுதுகிறேன் என்று பில்டப் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.