சாண்டில்யனின் “ஜலதீபம்” – 70% காமம், 25% சாகசம், 5% சரித்திரம்

ஒரு பத்து வயது வாக்கிலேயே சாண்டில்யன் புத்தகங்கள் அலுத்துவிட்டன. ஆனால் சாண்டில்யன் புத்தகங்களின் வழியாகத் தெரிந்து கொண்ட சரித்திரம் மறந்து போவதே இல்லை. ஒரு வேளை சரித்திரம் குறைவாகவும் சாகசம் அதிகமாகவும் இருப்பதாலோ என்னவோ. சரித்திரத்தை விடுங்கள், சம்பவங்களே ரொம்பக் கம்மி.

ஜலதீபமும் அப்படித்தான். மூன்று பாகம் கதையில் உள்ள சரித்திரம் மூன்று வரி கூட இருக்காது. ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், அபிசீனிய சித்திகள் போன்றவர்களின் போட்டி இருந்தாலும், கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலின் முடி சூடா மன்னர், மகாராஷ்டிர அரண்மனைப் பூசலில் முதலில் ஷாஹுவுக்கு எதிராகப் போராடினாலும் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் முயற்சியால் ஷாஹுவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டார் என்பதுதான் சரித்திரம். அதை வைத்தே ஆயிரத்துச் சொச்சம் பக்கம்.

கதைச்சுருக்கமும் சில வரிகளில் எழுதிவிடலாம். தமிழன் இதயசந்திரன் தஞ்சையில் ராஜாராமின் ரகசிய மனைவிக்குக் கொடுத்த வாக்குக்காக ஒரு ஆளைத் தேடி மகாராஷ்டிரம் வருகிறான். அப்போது ஷாஹு-தாராபாய் அரசுரிமைப் போட்டி. ஷாஹுவின் தரப்பில் இருக்கும் பானுதேவியிடம் மயங்குகிறான். பானு அவனால் ஈர்க்கப்பட்டாலும் ஷாஹு ஜெயிப்பதற்கு அவனை எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் சதா சிந்திக்கிறாள். சித்திகள் தலைவனிடம் ஒரு பூசல், அதிலிருந்து கனோஜியின் வளர்ப்பு மகள் மஞ்சுவால் காப்பாற்றப்படுவது, மாலுமி ஆவது, ஜலதீபம் கப்பலின் உபதளபதி, சில ஆங்கிலக் கப்பல்களைக் கைப்பற்றுவது, அங்கே காதரினோடு உறவு, ஷாஹுவின் தளபதியோடு தரையில் போர், வெற்றி, ஆனால் திடீரென்று தேடி வந்தவன் அவனாகவே மாட்டிக் கொள்வது, பாலாஜி விஸ்வநாத்தின் சமரசம், மஞ்சுவோடு திருமணம் என்று கதை போகிறது.

காமம் (சாண்டில்யன் கண்ணில்) 70%, சாகசம் 25%, சரித்திரம் 5% என்ற கலவையில் நிறைய காகிதத்தை வேஸ்ட் செய்திருக்கிறார். ஆங்கிலக் கப்பல்களை கைப்பற்றுவது ஒரு சாப்டர் என்றால் காதரினோடு குலாவுவது ஐந்து சாப்டர் வருகிறது. அவர் எழுதியது அந்தக் காலத்துக்கு கிளுகிளுப்பான வர்ணனையாக இருக்கலாம். இன்று போரடிக்கிறது. எல்லாரும் இதயசந்திரனுக்கு வசதியாக தமிழ் கற்றிருக்கிறார்கள். இதயசந்திரனும் மற்றவர்களும் ஆண்டுகளையும் மாதங்களையும் ஆங்கிலக் கணக்குப்படிதான் – டிசம்பர் 1712 என்றெல்லாம்தான் கணிக்கிறார்கள், இந்திய மரபுப்படி இல்லை. போரைப் பற்றி சாண்டில்யன் வர்ணிப்பது சின்னப்பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலத்தான் இருக்கிறது. பாலாஜி விஸ்வநாத் சொல்வதை எல்லாரும் அப்படியே கேட்கிறார்கள். முதல் பக்கத்திலேயே அவரை பேஷ்வா ஆக்கி இருந்தால் நாவல் சின்னதாக இருந்திருக்கும்.

சாண்டில்யனின் பலவீனங்கள் தெரிந்தவையே. அவரது பலம் என்ன, ஏன் அலுத்துவிட்டன என்று குறை சொல்லிக் கொண்டே ஜலதீபம் போன்ற புத்தகங்களை இன்னும் படிக்கத் தோன்றுகிறது, நாஸ்டால்ஜியாவைத் தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவலைப் பொறுத்த வரையில் எனக்குத் தெரிவது அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் – கனோஜி, பாலாஜி விஸ்வநாத் மற்றும் அபிசீனிய சித்திகள், ஜன்ஜிரா கோட்டை ஆவலைத் தூண்டும் பாத்திரங்கள்+தளங்கள். அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலைக் கிளப்பி விடுகிறார். ஜன்ஜீரா கோட்டை இன்னும் இருக்கிறதாம், அதைப் பார்க்க வேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது. இடது பக்கம் இருக்கும் படத்தைப் பாருங்கள், தீவு ஒரு பெரிய மரகதப் பதக்கம் போல ஜொலிக்கிறது! இரண்டாவதாக சாண்டில்யனின் பாத்திரங்கள் caricatures-தான் என்றாலும் ஒரு ஜெகசிற்பியனை விட, அகிலனை விட உயிருள்ள பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

ஜெயமோகன் இதை historical romances-இன் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சாண்டில்யனின் படைப்புகளில் இது நல்ல நாவல்தான். சரித்திர நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாண்டில்யன் நூற்றாண்டு
சாண்டில்யனின் “கன்னி மாடம்”
கனோஜி ஆங்க்ரே பற்றி விக்கி குறிப்பு
பாலாஜி விஸ்வநாத் பற்றி விக்கி குறிப்பு
ஜன்ஜிரா கோட்டை பற்றி விக்கி குறிப்பு
சித்திகள் பற்றி விக்கி குறிப்பு

9 thoughts on “சாண்டில்யனின் “ஜலதீபம்” – 70% காமம், 25% சாகசம், 5% சரித்திரம்

 1. 2006 ல் நான் நாஞ்சில்நாடன் வசந்தகுமார் நண்பர் ஷண்முகம் ஆகியோர் ஒரு காரில் கிளம்பி ஆந்திரா வழியாக மகாராஷ்டிரம் போனோம். சிவாஜியின் கோட்டைகளை வரிசையாக பார்த்துக்கொண்டே மங்களூர் சென்று அவ்வழியாக கோவை வந்தோம். அந்தப்பயணத்தில் ஜல்ஜீராவை கண்டோம் [இனியநீர் என்று பொருள்] அது ஒரு மாபெரும் கடற்பாறை. பாறையை முழுமையாக வளைத்து கட்டப்பட்ட க்டற்கோட்டை கடலுக்குள் ஒரு பிரம்மாண்டமான கப்பல் போலவே நிற்கும். எல்லா பகுதியிலும் ஆழமான கடல். கப்பல்கள் எங்கும் நெருங்கமுடியும். இன்று பராமரிப்பில்லாமல் பெரும்பாலும் புதர்மண்டி கிடந்தாலும் அது கம்பீரமான அற்புதமான ஓர் இடம். நானும் கூட சாண்டில்யனின் நினைவுடன்தான் அந்த இடத்தைப்பார்த்தேன்.

  ப்ர்ரும்ப்ரொஉள் l waan vasawthakumaar waNpar நானும்

  Like

 2. சாண்டில்யனின் பலமே அவரின் கதையமைக்கும் திறந்தான். ஒரு சிறுபொறியாக ஆரம்பித்து வெகு வேகமாக இழுத்து விடுவார். இன்றுவரை Dan Brown போன்றோர் வெற்றி பெறுவது சாண்டில்யன் ஸ்டைலில்தான். குமுதம் அவருக்கு பக்கபலமாக இருந்ததால் இலட்சக்கணக்கானவர்கள் அவரைப் படிக்கமுடிந்தது.

  மற்றபடி கதை மாந்தர்களில் main protagonist தவிர மற்றவர்கள் bird brain அளவே அறிவுத்திறம் படைத்தவர்களாகக் காட்டப்பட்டிருப்பார்கள். அதிலும் பெண்கள்வர்ணனைகள்…எப்படி கலாச்சாரக் காவலர்கள் அவர் வீடு முன்னால் கலாட்டா செய்யாமல் இருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

  Like

 3. ஜெயமோகன், // நானும் கூட சாண்டில்யனின் நினைவுடன்தான் அந்த இடத்தைப்பார்த்தேன். // இதுதான் சாண்டில்யனின் பலம் என்று தோன்றுகிறது. எளிமையான அறிமுகங்கள்.
  ராஜ், // எப்படி கலாச்சாரக் காவலர்கள் அவர் வீடு முன்னால் கலாட்டா செய்யாமல் இருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன் // உண்மை, பல சமயம் அவர் எழுத்து அந்தக் காலத்துக்கு போர்னோவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ குமுதம் படிப்பது கொஞ்சம் கௌரவக் குறைவாக கருதப்பட்டது.
  தனபாலன் மற்றும் ரத்னவேல், மறுமொழிக்கு நன்றி!

  Like

 4. டியர் ஆர்.வி.

  ‘ஜலதீபம்’ நாவலை குமுதம் வார இதழில் வெளிவந்ததன், பைண்டு செய்யப்பட்ட வடிவத்தில், வாரா வாரம் இடம்பெற்ற ‘லதா’வின் ஓவியங்களோடு படித்திருக்கிறேன். (அந்த வடிவத்தில் படித்தவர்களுக்கு, பதிப்பகங்களின் முழுப் புத்தக வடிவம் ருசிக்காது). அதில் அவர் வர்ணித்த கனோஜி ஆங்கரே, சாத் சித்திகள் இவர்களின் கடற்கரைக்கோட்டைகளை, திரு ஜெயமோகன் அவர்களைப்போல நேரில் சென்று பார்க்க கொடுத்து வைக்காவிடினும், வேறொரு வடிவில் சந்தர்ப்பம் வாய்த்தது.

  ஆம், சில ஆண்டுகளுக்கு முன் என்.டி.டி.வி.யில் மகாராஷ்டிராவில் புனாவிலிருந்து பம்பாய் வரையில் கட்டப்பட்ட கடலோரக் கோட்டைகளைப் பற்றிய முக்கால் மணி நேர டாக்குமெண்ட்டரி ஒன்றைக் காட்டினார்கள். கேமரா கோட்டைகளின் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து விளையாடியிருந்தது. நல்லவேளை, விளக்கம் இந்தியில் அல்ல தெளிவான ஆங்கிலத்தில். அதனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது என் நினைவில் முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டிருந்தது ‘ஜலதீபம்’ நாவல்தான்.

  அரபிக்கடலின் பயங்கர முகம் திடுக்கிட வைத்தது. அதிலும் சில காட்சிகளை இரவில் எடுத்திருந்தார்களா, அது கனவிலும் வந்து பயமுறுத்தியது. வங்கக்கடல் என்றால் அமைதி என்றும் (சுனாமி வரும் வரை), அரபிக்கடல் என்றால் பயங்கரம் என்றும் சிறு வயதிலேயே மனதில் பதிந்திருந்தது. (அதனால்தான் அரவிந்த சாமி ‘உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு’ என்று பாடும்போது அவர் முகத்தைப்பார்க்காமல் அரபிக்கடலின் உக்கிரத்தையே பார்த்துக்கொண்டிருப்பேன்).

  முதல்வாரத்தில் (தொடரும்) போடக்கூடிய இடத்தில் ஒற்றை வரியில் நிறுத்திய சஸ்பென்ஸை விவரிக்க அடுத்த வாரம் சுமார் இரண்டு பக்கங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டு ‘வளவளப்ப்து’ சாண்டில்யன் பாணி. பல ஆண்டுகள் வரையில் குமுதம் பத்திரிகையில் தலையங்கம், கார்ட்டூன், வாசகர் கடிதம் இவற்ரைப்போல, சாண்டில்யனின் ஏதாவதொரு தொடர் நாவல் இடம்பெறுவது வாடிக்கையாகிப்போனது. அவை இளைஞர்களைக்கவரக் காரணம் நீங்கள் குறிப்பிட்ட 70 சதவீத சமாச்சாரமாக இருக்கலாம். அதனால் இவரும் ‘சீன மோகினி’ போன்ற குப்பைகளையெல்லாம் காசாக்கினார்.

  சொல்ல வந்ததை நறுக்குத்தெறித்தாற்போல ‘சுருக்’கென்று சொல்லும் எழுத்தாளர்கள் வரத்துவங்கியதும், இவர் சற்று வெளுக்கத் துவங்கினார். இருந்தபோதிலும் சாண்டில்யனின் எழுத்துக்களுக்கு ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது, இன்று வரை.

  Like

  1. சாரதா, //முதல்வாரத்தில் (தொடரும்) போடக்கூடிய இடத்தில் ஒற்றை வரியில் நிறுத்திய சஸ்பென்ஸை விவரிக்க அடுத்த வாரம் சுமார் இரண்டு பக்கங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டு ‘வளவளப்ப்து’ சாண்டில்யன் பாணி. //
   மிகச்சரி. ஆனால் ஜெகசிற்பியன், அகிலன் போன்றவர்களின் சரித்திர நாவல்கள் இவற்றை விட வளவளவாக எனக்குத் தெரிகிறது.

   Like

 5. கல்கியின் ”பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன்” நாவல்கள் வாசித்ததும் வரலாற்று நாவல்கள் மேல் ஈர்ப்பு வந்தது. சாண்டில்யனின் சரித்திர புகழ்பெற்ற நாவல்களை அப்போதுதான் படிக்கத்தொடங்கினேன். எங்கள் நூலகத்திலிருந்த பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை படித்தேன். பிறகு அலுத்து போய்விட்டது. அற்புதமான பகிர்வு. மேலும், சாண்டில்யனின் படத்தை இந்த பதிவின் மூலம் தான் பார்த்தேன். நன்றி.

  Like

  1. சித்திரவீதிக்காரன், சாண்டில்யன் நீங்கள் சொல்வது போல சீக்கிரமே அலுத்துவிட்டாலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. அது நாஸ்டால்ஜியாவா, இல்லை வேறு ஏதாவதா என்று எனக்கு இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.