லலிதாராம் எழுதிய “இசை உலக இளவரசர் ஜி.என்.பி”

இந்தப் புத்தகத்தை விமர்சிக்கும் அருகதை எனக்கில்லை. லலிதாராமை இணையத்தின் மூலம் தெரியும், அவர் எழுதிய புத்தகம் நூலகத்தில் கிடைத்தபோது தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன், அவ்வளவுதான். அவர் பஞ்சமம் ஷட்ஜமம் என்றால் நமக்கு எங்கே புரிகிறது? ஒரு சாதாரணனுக்கு இந்தப் புத்தகத்திலிருந்து என்ன கிடைக்கிறது என்றுதான் எழுத முடியும். ஜிஎன்பி பாட்டுகளை சில சமயம் யூட்யூபில் கேட்டிருக்கிறேன். சுகமான குரல். சொன்னதை செய்திட சாகசமா என்று அவர் பாடுவது அற்புதமான இசை அனுபவம். சகுந்தலை படம் பார்த்திருக்கிறேன். ஜிஎன்பிக்கும் எம்எஸ்ஸுக்கும் உறவு இருந்தது என்று படித்திருக்கிறேன். எனக்கு அவரைப் பற்றித் தெரிந்தது அவ்வளவுதான். ஜிஎன்பி கொண்டாடப்படுவது ஏன், நல்ல குரல், நல்ல பாடகர் என்பது மட்டும்தானா, எம்எஸ் உறவைப் பற்றி லலிதாராம் ஏதாவது எழுதி இருக்கிறாரா என்ற இரண்டு கேள்விகள்தான் என் மனதில் இருந்தன.

லலிதாராம் எழுதி இருப்பது நிறை குறைகளை சீர்தூக்கிப் பார்க்கும் வாழ்க்கை வரலாறு இல்லை. புகழ் பாடும் புத்தகம். அவரைப் பற்றி சுவாரசியமான சில சம்பவங்களை விவரிக்கும் புத்தகம். ஜிஎன்பி பற்றிய ஆவணங்களை சேர்த்து வைக்கும் புத்தகம். ஒரு “சம்பிரதாயமான” வாழ்க்கை வரலாறு. இதில் நமக்குக் கிடைப்பது ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு கலைஞனின் சித்திரம் – சங்கீதக் குடும்பம், பெரிய பெரிய வித்வான்கள் வந்து போகும் வீடு, இளமையிலேயே இசைப் பித்து, சினிமா பிரவேசம், டாக்கியில் பாடுபவன், மற்றும் பி.ஏ. ஹானர்ஸ் என்பது ஒரு கர்நாடகமான இசை ரசிகர்களுக்கு ஒரு குறையாகத் தெரிந்தது, ஸ்டார் ஆனது, பிற வித்வான்களுடன் அவருடைய உறவு, நல்ல வருமானம், கடைசியில் சின்னச் சின்ன சிரமங்கள் – என்று ஒரு சித்திரத்தை அளிக்கிறார். அவர் சொல்லும் டெக்னிகல் விஷயங்கள் எல்லாம் என் தலைக்கு மேலே பவுன்சர். கடைசியில் ஜிஎன்பி எழுதிய சில கட்டுரைகளையும் தொகுத்திருக்கிறார்.

புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி டாக்கியில் நடிக்கும் பி.எ. ஹானர்ஸ் படித்தவனெல்லாம் திருவையாற்றில் பாட வந்துவிட்டான் என்று குறை சொன்னவர்களின் மனதை ஜிஎன்பி வென்றதுதான். லலிதாராம் அதை ஏறக்குறைய ஒரு புனைவாக எழுதி இருக்கிறார்.

சங்கீத ரசிகர்களுக்கு மட்டும். என் போன்றவர்களுக்காக லலிதாராம் அவர் சிலாகித்துச் சொல்லும் வாசுதேவயானி மாதிரி பாட்டுகளையாவது யூட்யூபிலோ அல்லது வேறு எங்கோ தரவேற்றினால் கேட்டுக் கொள்வோம்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஜிஎன்பி.காம்
லலிதாராமின் ப்ளாக்
யூட்யூபில் ஜிஎன்பி
டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய “MS – A Life in Music” (ஜிஎன்பி எம்எஸ் உறவு பற்றி பேசுகிறது)