மாலன் எழுதிய “ஜனகணமன”

எனக்கு காந்தி மற்றும் சுதந்திரப் போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. தமிழில் கல்கி எழுதிய “அலை ஓசை“, சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய “மண்ணில் தெரியுது வானம்“, கா.சி. வேங்கடரமணி எழுதிய “தேசபக்தன் கந்தன்“, ர.சு. நல்லபெருமாள் எழுதிய “கல்லுக்குள் ஈரம்” என்று சில புத்தகங்கள்தான் ஏதோ பரவாயில்லை என்ற ரேஞ்சிலாவது இருக்கும். மாலன் எழுதிய இந்தப் புத்தகத்தைப் பற்றி நல்லபடியாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் சான் ஹோசே நூலகத்தில் கிடைத்தது.

சின்னப் புத்தகம். ஏறக்குறைய ஒரு திரைப்பட வசனத்தைப் படிப்பது போல இருந்தது. எடிட்டர் ஒருவர் மீண்டும் மீண்டும் கட் செய்து வேறு வேறு காட்சிகளைக் காட்டுவது போல உணர்ந்தேன். சீன் செட்டிங் விவரிப்பு இருந்தால் திரைக்கதை என்றே சொல்லிவிடலாம். காந்தியின் இறுதி நாட்கள், கோட்சே குழுவினரின் திட்டங்கள், போலீஸ் விசாரணை பற்றிய நேரடியான விவரிப்பு. ரமணன் என்ற போலீஸ்காரர் மட்டும்தான் கற்பனைப் பாத்திரம்.

ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார். ஜனவரி 1948-இல் காந்திக்கு வயது 78. டாக்டர் சுசீலா 75 என்று சொல்வதாக எழுதி இருக்கிறார். சரி பேசும்போது தோராயமாகச் சொல்வது அதிசயமில்லை என்று விட்டுவிட வேண்டியதுதான். ஒவ்வொரு விவரமும் சரிபார்க்கப்பட்டது என்று முன்னுரையில் அவர் பெருமையாக எழுதி இருப்பதால்தான் இதை இங்கே குறிப்பிடுகிறேன். காந்தி பிறந்தது 1969 1869 என்று கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி வேண்டாமே! மிச்சம் எத்தனையோ விவரங்களை கஷ்டப்பட்டு தேடி எடுத்து எழுதி இருப்பவரைப் பற்றி இப்படி நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று கொஞ்சம் என் மேலேயே எரிச்சல் வருகிறது.

படிக்கலாம். இந்த மாதிரிப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பவர்களுக்கு காலின்ஸ் மற்றும் லாப்பியர் எழுதிய “Freedom at Midnight” புத்தகத்தை சிபாரிசு செய்வேன். இதை விட நிறைய விவரங்கள், சுவாரசியம் உள்ள புத்தகம். இன்னும் நேரம் இருப்பவர்களுக்கு மனோகர் மல்கோங்கர் எழுதிய “Men Who Killed Gandhi” புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன்.

காந்தியைப் பற்றி ஆயிரம் புனைவுகள் வரலாம். அந்த மனிதரின் நிஜ வாழ்க்கை எந்தப் புனைவையும் விட சுவாரசியமானது, inspiration நிறைந்தது. No novel can do justice to the real man.

பிற்சேர்க்கை: நண்பர் சந்திரமவுலி இந்த நாவலில் உள்ள தகவல் பிழைகளை இங்கே பட்டியல் இட்டிருக்கிறார். மிகவும் சிறப்பான, அவசியமான செயல், ஒரு biographical புனைவில் இத்தனை பிழைகள் இருக்கக் கூடாது. மாலன் அதற்கு சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார், ஆனால் அவற்றில் எனக்கு இசைவில்லை. பெயரை மாற்றுவதால் நாவலில் என்ன குடி முழுகிவிட்டது என்பதெல்லாம் ஏற்கக் கூடிய வாதமே இல்லை. அப்புறம் காந்தியைக் கொன்றவன் கோட்சே இல்லை, மன்னார்சாமி என்று கூட எழுதலாம். ஆனால் விமர்சனத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு பதிலளித்த மாலனின் செயல் பாராட்டப்பட வேண்டியது. சந்திரமவுலியின் எதிர்வாதம் இங்கே.

தொடர்புள்ள சுட்டிகள்:
மாலனின் தளம்
சந்திரமவுலியின் விமர்சனம், மாலனின் விளக்கம், சந்திரமவுலியின் எதிர்வினை
காலின்ஸ்+லாப்பியர் எழுதிய “Freedom at Midnight” – விக்கி குறிப்பு
கல்கி எழுதிய “அலை ஓசை
சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய “மண்ணில் தெரியுது வானம்
ர.சு. நல்லபெருமாள் எழுதிய “கல்லுக்குள் ஈரம்