மாலன் எழுதிய “ஜனகணமன”

எனக்கு காந்தி மற்றும் சுதந்திரப் போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. தமிழில் கல்கி எழுதிய “அலை ஓசை“, சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய “மண்ணில் தெரியுது வானம்“, கா.சி. வேங்கடரமணி எழுதிய “தேசபக்தன் கந்தன்“, ர.சு. நல்லபெருமாள் எழுதிய “கல்லுக்குள் ஈரம்” என்று சில புத்தகங்கள்தான் ஏதோ பரவாயில்லை என்ற ரேஞ்சிலாவது இருக்கும். மாலன் எழுதிய இந்தப் புத்தகத்தைப் பற்றி நல்லபடியாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் சான் ஹோசே நூலகத்தில் கிடைத்தது.

சின்னப் புத்தகம். ஏறக்குறைய ஒரு திரைப்பட வசனத்தைப் படிப்பது போல இருந்தது. எடிட்டர் ஒருவர் மீண்டும் மீண்டும் கட் செய்து வேறு வேறு காட்சிகளைக் காட்டுவது போல உணர்ந்தேன். சீன் செட்டிங் விவரிப்பு இருந்தால் திரைக்கதை என்றே சொல்லிவிடலாம். காந்தியின் இறுதி நாட்கள், கோட்சே குழுவினரின் திட்டங்கள், போலீஸ் விசாரணை பற்றிய நேரடியான விவரிப்பு. ரமணன் என்ற போலீஸ்காரர் மட்டும்தான் கற்பனைப் பாத்திரம்.

ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார். ஜனவரி 1948-இல் காந்திக்கு வயது 78. டாக்டர் சுசீலா 75 என்று சொல்வதாக எழுதி இருக்கிறார். சரி பேசும்போது தோராயமாகச் சொல்வது அதிசயமில்லை என்று விட்டுவிட வேண்டியதுதான். ஒவ்வொரு விவரமும் சரிபார்க்கப்பட்டது என்று முன்னுரையில் அவர் பெருமையாக எழுதி இருப்பதால்தான் இதை இங்கே குறிப்பிடுகிறேன். காந்தி பிறந்தது 1969 1869 என்று கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி வேண்டாமே! மிச்சம் எத்தனையோ விவரங்களை கஷ்டப்பட்டு தேடி எடுத்து எழுதி இருப்பவரைப் பற்றி இப்படி நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று கொஞ்சம் என் மேலேயே எரிச்சல் வருகிறது.

படிக்கலாம். இந்த மாதிரிப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பவர்களுக்கு காலின்ஸ் மற்றும் லாப்பியர் எழுதிய “Freedom at Midnight” புத்தகத்தை சிபாரிசு செய்வேன். இதை விட நிறைய விவரங்கள், சுவாரசியம் உள்ள புத்தகம். இன்னும் நேரம் இருப்பவர்களுக்கு மனோகர் மல்கோங்கர் எழுதிய “Men Who Killed Gandhi” புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன்.

காந்தியைப் பற்றி ஆயிரம் புனைவுகள் வரலாம். அந்த மனிதரின் நிஜ வாழ்க்கை எந்தப் புனைவையும் விட சுவாரசியமானது, inspiration நிறைந்தது. No novel can do justice to the real man.

பிற்சேர்க்கை: நண்பர் சந்திரமவுலி இந்த நாவலில் உள்ள தகவல் பிழைகளை இங்கே பட்டியல் இட்டிருக்கிறார். மிகவும் சிறப்பான, அவசியமான செயல், ஒரு biographical புனைவில் இத்தனை பிழைகள் இருக்கக் கூடாது. மாலன் அதற்கு சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார், ஆனால் அவற்றில் எனக்கு இசைவில்லை. பெயரை மாற்றுவதால் நாவலில் என்ன குடி முழுகிவிட்டது என்பதெல்லாம் ஏற்கக் கூடிய வாதமே இல்லை. அப்புறம் காந்தியைக் கொன்றவன் கோட்சே இல்லை, மன்னார்சாமி என்று கூட எழுதலாம். ஆனால் விமர்சனத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு பதிலளித்த மாலனின் செயல் பாராட்டப்பட வேண்டியது. சந்திரமவுலியின் எதிர்வாதம் இங்கே.

தொடர்புள்ள சுட்டிகள்:
மாலனின் தளம்
சந்திரமவுலியின் விமர்சனம், மாலனின் விளக்கம், சந்திரமவுலியின் எதிர்வினை
காலின்ஸ்+லாப்பியர் எழுதிய “Freedom at Midnight” – விக்கி குறிப்பு
கல்கி எழுதிய “அலை ஓசை
சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய “மண்ணில் தெரியுது வானம்
ர.சு. நல்லபெருமாள் எழுதிய “கல்லுக்குள் ஈரம்

11 thoughts on “மாலன் எழுதிய “ஜனகணமன”

 1. இந்தப் புத்தகத்திற்கு நான் எழுதிய விமர்சனம்

  http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html

  மாலன் சொன்ன விளக்கம்

  http://mowlee.blogspot.com/2009/02/blog-post_17.html

  மாலனுக்கு நான் சொன்ன விளக்கம்

  http://mowlee.blogspot.com/2009/02/blog-post_2783.html

  கிழக்கு பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தின் சுட்டியில் எனது விமர்சன லிங் இருக்கிறது

  Like

 2. நானொரு இணைய தளத்தில் வாசித்தேன். கோட்சே காந்தியைக் கொல்வதற்கு முன்பு தன் உடம்பில் ஒரு முஸ்லீமின் பெயரைப் பச்சை குத்திக் கொண்டிருந்ததாகவும், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லீம் என்று உலகத்தாரை நம்பவைப்பதற்கான முயற்சி என்றும், இதன் மூலம் மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைச் சிதைத்து பெரிய கலவரங்களை ஏற்படுத்த கோட்சே கூட்டத்தினர் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த இணைய தளத்தில் பதியப் பட்டிருந்தது.

  இது சம்பந்தமான பதிவெதுவும் ஜனகணமண நாவலில் காணக் கிடைக்கவில்லையே! அந்த நாவலை விமர்சித்த சந்திரமௌளியும் அது பற்றி எதுவும் வினா எழுப்பவில்லையே!

  அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காந்தியின் கொலை வெறும் 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்குக் கொடுக்கச் சொன்னதற்காக நடந்தது என்ற மாலனின் கூற்றை நம்ப முடியவில்லையே!

  சரித்திரத்தைக் கரைத்துக் குடித்த இணைய சாம்பவான்கள் யாராவது தெளிவு படுத்தினால் சந்தோஷப் படுவேன்!

  எனக்கென்னவோ ஜனகனமண என்ற மொத்த நாவலின் சாரமும் கோட்சேயும் கொஞ்சம் நல்லவன் தான்; ஏதோ உணர்ச்சி வேகத்தில் காந்தியைக் கொன்றுவிட்டான் என்பதைச் சொல்வதற்காக எழுதப் பட்டதோ என்ற சந்தேகம் வருகிறது. அதனால் தான் அவன் தன் உடம்பில் ஒரு முஸ்லீமின் பெயர பச்சை குத்திக் கொண்டது விவரிக்கப் படவில்லை என்று தோன்றுகிறது. அப்படித்தானா அறிவுலக நண்பர்களே!

  Like

 3. ஜனகணமன ரொம்ப பழைய புஸ்தகம் என நினைவு (நாவல்-அ.புனைவு என வகை தொகையெல்லாம் தெரியாதே). மூன்று தசாப்தங்கள் முன் வாசித்த புஸ்தகம்? நாதுராம் கோட்சே என்ற மனிதர் காந்தியை கொலைசெய்தார் எனினும் அப்படி ஒண்ணும் மோசமான வ்யக்தி இல்லை என மாலன் சித்தரிக்கிறார். ஃபாஸிக்கு முன் தினம் அவர் அமைதியாக இருந்ததைப்பற்றி மாலன் எழுதியதாக நினைவுக்கு வருகிறது.

  ஸ்ரீ காந்தி அவர்களைப் பற்றி எனக்கு கலப்படமான அபிப்ராயமே. மொராரி பாபு போன்றோர் முன் வைக்கும் காந்தி என்ற வைஷ்ணவர் என்னைக் கவர்ந்தவர். காந்தி என்ற அரசியல் வாதி கசப்பானவர்.

  மாலனின் புஸ்தகம் வாசிக்குமுன்பு பரணில் தூசிதட்டி மிகப்பழைய (1948?) முகப்பில் நேரு படத்துடன் வந்த கல்கி புஸ்தகத்தில் காந்தி பற்றி படிக்க நேர்ந்தது. அதில் 55 கோடி ரூபாய் விஷயமும் இன்னும் சிந்த் பஞ்சாபில் இருந்த ஹிந்துக்களுக்கு அவரின் உபதேசமும் பற்றி கசப்புடன் வாசித்தது நினைவுக்கு வருகிறது. அதன் பின் Tragic story of partition இதெல்லாம் படித்த பின் காந்தி என்ற அரசியல்வாதி பால் வெறுப்பே இருந்தது. தில்லிவாசத்தில் எனது பஞ்சாபி சிந்தி நண்பர்களின் பழக்கத்தில் அவர்கள் குடும்பங்களில் பட்டுவாடாவைப் பற்றி பேசும்போதெல்லாம் அவர்கள் கண்களில் முட்டி நிற்கும் கண்ணீரும் ஆயாசமும் எனக்கு இந்த வ்யக்தியின் பால் வெறுப்பையே வளர்த்தது.

  இதைப்படித்ததும் Freedom at Midnight படிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறீர்கள். O Jerusalem படித்தபோதே இதையும் படிக்க வேணும் என்று தோன்றியது. முனையணும். கிட்டத்தட்ட சமகாலகட்டத்தில் ஒருபக்கம் புத்திக்கூர்மையான அரசியல்வாதிகளாலும் மறுபக்கம் ஸ்வயநல அரசியல்வாதிகளின் கையிலும் அகப்பட்ட அரசியல் மற்றும் சமூஹம் இழந்த நிலப்பரப்பை மீட்டதும் கைவசமிருந்த நிலப்பரப்பை இழந்ததையும் ஆராய்ச்சி செய்து பதிவு செய்யப்பட்ட புஸ்தகங்களாயிற்றே.

  Like

 4. சந்திரமவுலி, சிறப்பான விமர்சனம், சுட்டிகளை பதிவோடு இணைத்துவிட்டேன்.

  சுப்புராஜ், பெயர், தளம் குறிப்பிடாமல் யாரோ மண்டபத்தில் எழுதி அதை நீங்கள் இணைய தளத்தில் வாசித்ததற்கெல்லாம் இணையம் பிரபலம் ஆவதற்கு முன்பே எழுதப்பட்ட புத்தகத்தில் விடைகளை எதிர்பார்ப்பது உங்களுக்கே கேனத்தனமாக இல்லையா? FIR-இல் இப்படி எழுதி இருக்கிறது, விசாரணை கமிஷன் ரிப்போர்ட்டில் இப்படி எழுதி இருக்கிறதே, மனு காந்தி இப்படி எழுதி இருக்கிறாரே, அதற்கெல்லாம் விடை இல்லையே என்று கேட்டால் பரவாயில்லை.

  க்ருஷ்ணகுமார், காந்தி ௫௫ கோடி ரூபாயைத் திருப்பித் தரச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தது மானுடம் அடைந்த உச்சங்களில் ஒன்று. இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று உங்கள் பழைய எதிர்வினைகளை வைத்து அனுமானிக்கிறேன்.

  தனபாலன், பாராட்டுக்கு நன்றி!

  Like

 5. “ஏகப்பட்ட நொட்டை சொல்கிறேனே” என்று வருத்தப்படும் ஆர்வியின் பதிவிலே எனக்கும் நொட்டை கண்ணில் படுகிறதே! 

  “காந்தி பிறந்த வருடம் 1969” !!!

  Like

 6. சென்ற வருடம் கிழக்கின் அதிரடி சேலில் பத்து ரூபாய்க்கு கிடைத்தது இந்தப் புத்தகம். அதிக சுவாரஸ்யம் இல்லாமல் தான் வசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப பீடிகையே இன்றைய தலைமுறையின் கண்ணோட்டத்தை பிரதிபலித்து விடுவதால் டக்கென்று கதைக்குள் பிரவேசிக்க வைத்து விடுகிறார். மௌலி சொல்லி இருக்கிறா மாதிரி சுவாரஸ்யமாகவே செல்கிறது. காந்தியையும் கோட்செயவையும் எதிர் எதிர் தளத்தில் நேர் கோட்டில் வைத்து இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே முக்கியத்துவமே
  கொடுக்கப்படுகிறது.

  எப்படி காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அனைத்து இந்தியரின் எண்ணமோ அதே போல் கோட்சேவின் மேலும் ஒரு பட்சாதாப உணர்வு பலருக்கும் இருக்கிறது. நாவல் இரெண்டையும் சேர்த்தே வெளிப்படுத்தியதாக உணர்கிறேன். ஹே ராம் மும் கிட்டத்தட்ட இதே உணர்வுகளை பிரதிபலித்ததாக நினைக்கிறேன். அதில் கொலையை தவிர்க்கப்பட்டு இருக்கும்

  ஆனால் இவ்வளவு தகவல் பிழைகளா?
  அப்புறம் காந்தி பிறந்தது 1969 ???

  Like

 7. விருட்சம், இணையம் இல்லாத நாட்கள், தகவல் சேகரிப்பதில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்திருக்கும் என்றாலும் இவ்வளவு தகவல் பிழைகள் இருப்பது ஆச்ச்சரிப்படுத்துகிறது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.