விமலாதித்த மாமல்லன் பதிவு – “விற்றதும் கற்றதும்”

விமலாதித்த மாமல்லன் தன் புத்தகங்களின் விற்பனை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அவரது புத்தகங்களை அவரேதான் பதித்திருக்கிறார் – அறியாத முகங்கள் இரண்டு பதிப்புகள்(1983, 1994), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்(1986), உயிர்த்தெழுதல்(1994). புத்தகத்தை அச்சடிக்க காகிதம் வாங்குவதிலிருந்து எல்லாப் பணிகளையும் அவரேதான் செய்திருக்கிறார். புத்தகங்கள் பெரிதாக விற்கவில்லை. இன்னும் அந்தப் புத்தகங்களின் காப்பிகள் சில அவரிடம் இருக்கின்றன என்று தெரிகிறது.

மயிலாப்பூர் அச்சகத்தில் இருந்து 1200 புத்தகங்களைக் கொண்டு வந்தாயிற்று. வரக்கூடும் என எதிர்பார்க்கும் நூலக ஆணைக்குமாக சேர்த்து 1200 பிரதிகளாய் அச்சடித்தால்தான் அந்தக் காலத்தில் நஷ்டத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்

என்ற வரிகள் எனக்கு மிகவும் poignant ஆக இருந்தன. நஷ்டம் வரும் என்று தெரியும், அதை எப்படிக் குறைக்கலாம் என்றுதான் திட்டம் போட முடியும். எழுத்தை மட்டும் வைத்துப் பிழைக்க முடியாது என்று ஒரு முறை ஜெயமோகன் சொன்னார். நஷ்டம் வரும் வியாபாரத்தை வைத்து எப்படிப் பிழைப்பது? அசோகமித்ரன், சி.சு. செல்லப்பா ஆகியோரின் வாழ்க்கையும் இதைத்தான் காட்டுகிறது.

மனுஷ்யபுத்திரன் சொன்னாராம் –

உங்க கதைகளை தளத்துலப் போட்டாலும் பெருசாப் பிரச்சினை ஒண்ணுமில்லை. ஒரு லட்சம் காப்பி போட்டு நெட்டுல வந்துட்டதால அம்பதாயிரம் பிரதி விக்காம நஷ்டமாயிடுச்சின்னு சொன்னா வருத்தப்படறதுல அர்த்தமிருக்கு. இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருத்தரையும் நேரடியாப் பேரோட தெரியற அளவுக்கு சின்ன எடம் இது. சூதாட்டம் மாதிரி இறங்கிட்டோமேன்னு ஆடிகிட்டு இருக்க வேண்டி இருக்கு. மூனு வருஷமா லைப்ரெரி ஆர்டரே கிடையாது. எப்பையோ தேடிகிட்டு வர வாசகனுக்காக ஷெல்ஃபுல புக்கு இருந்துகிட்டு இருக்கு.

எப்போது நாமெல்லாம் புத்தகம் வாங்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதுதான் இந்த நிலை மாறும். அமெரிக்காவில் இருக்கும், ஓரளவு பணம் புழங்கும் என்னைப் போன்றவர்கள் கூட புத்தகத்தை விட ஷிப்பிங் செலவு அதிகமாக இருக்கிறதே என்றுதானே யோசிக்கிறோம்? தமிழ் சினிமாவுக்கு வெளிநாடுகளில் ஒரு மார்க்கெட் இருப்பது போல தமிழ் புத்தகங்களுக்கு ஏன் இல்லை? உலகம் முழுவதும் ஒரு ஆயிரம் தமிழர்கள் புத்தகம் வாங்கினால் ஒரு பதிப்பு விற்றுவிடுமே!

வி. மாமல்லன் கூட எனக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டு. தன் திறமையை ஜெயமோகனை நொட்டை சொல்வதிலேயே வீணடிக்கிறார் என்ற வருத்தம் உண்டு. ஆனாலும், அவர் சில கதைகளே எழுதி இருந்தாலும், அவற்றில் வெகு சிலவற்றையே நான் படித்திருந்தாலும், படித்தவற்றிலும் சில புரியவே இல்லை (சிறுமி கொண்டு வந்த மலர்) என்றாலும், அவர் குறிப்பிடப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புள்ள சுட்டிகள்:
மாமல்லனின் தளம்
எனக்குப் பிடித்த சில மாமல்லன் சிறுகதைகள் – இலை, போர்வை

9 thoughts on “விமலாதித்த மாமல்லன் பதிவு – “விற்றதும் கற்றதும்”

 1. >>தமிழ் சினிமாவுக்கு வெளிநாடுகளில் ஒரு மார்க்கெட் இருப்பது போல தமிழ் புத்தகங்களுக்கு ஏன் இல்லை?
  – எனக்குத் தெரிந்து இங்கு கொண்டு வந்து விற்கும் அளவு நிர்வாகக் கட்டமைப்பு இல்லை (தமிழ் சங்கங்கள் செய்யலாம், கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும்). கிழக்கு மட்டும் amazon.com வழியே புத்தகங்களை வாங்கும் வசதி வைத்திருக்கிறது, எத்தனை பேர் அதை உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  Like

 2. கோபி ராமமூர்த்தி எழுதிய ஒரு பின்னூட்டத்தைப் படித்து மறுமொழிகளுக்கு சம்பிரதாயமான பதில் சொல்ல வேண்டாம் என்று ஒரு ஞானோதயம் பிறந்துவிட்டதால் இனிமேல் மறுமொழிக்கு நன்றி, உங்களுக்கும் பிடித்ததிருந்தது மகிழ்ச்சி மாதிரி எல்லாம் பதில் எழுதுவது இதுவே கடைசி முறை. சஞ்சயன், உங்களுக்கும் ஜனகனமன பிடித்திருந்தது மகிழ்ச்சி.
  ரத்னவேல், மறுமொழிக்கு நன்றி.
  கோபி, உங்கள் சுட்டியையும் இப்போது இணைத்துவிட்டேன்.
  சித்திரவீதிக்காரன், இப்போது தேவை ஒரு அட்டவணை – எந்த சிறுகதை, நாவல் எங்கே கிடைக்கும் என்று. அது யார் உருவாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
  ராஜ், இது வேறு infrastructure பிரச்சினை என்று தோன்றவில்லை. தமிழனுக்கு புத்தகம் வாங்க மனம் வராது என்றுதான் தோன்றுகிறது. நல்ல infrastructure அமைந்து நான் நினைப்பது தவறானால் சந்தோஷமாக இருக்கும்.

  Like

 3. தமிழ் புத்தக விற்பனையை பார்க்கும் போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. பெரிய எழுத்தாளர்களின் புத்தகமே மறுபதிப்பு காண்பது சிரமமாக உள்ளது. தமிழர்கள் ஆறுகோடிப்பேரா எனச் சந்தேகமாக இருக்கிறது. திரைப்படங்களுக்கு மாதம் ஐநூறு ரூபாய் வரை செலவு செய்பவர்கள் நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்க யோசிக்கிறார்கள். வீட்டில் ஒரு சின்ன அலமாறியாவது புத்தகங்களுக்கு ஒதுக்கும் வீடுகள் குறைவாக இருக்கிறது. நூலகங்களை விட அரசு மதுக்கடைகளை திறக்கவே விரும்புகிறது. அதனால்தான், நூலகத்தைக்கூட மருத்துவமனையாக மாற்ற விரும்புகிறார்கள்போல. புத்தகவாசிப்பை அதிகப்படுத்த இனி திருமணவிழாக்களிலிருந்து நம் அலுவலக விழாக்கள் வரை சிறு புத்தகத்திருவிழாக்களை நாம் நடத்தினால் நூற்றுக்கு பத்துபேர் புத்தகங்கள் பக்கம் திரும்ப வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், நமக்கு நாமே திட்டம் போல வாசிப்பவர்களே வாசித்து அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான். பகிர்விற்கு நன்றி.

  Like

 4. இத்தனைக்குப்பிறகு இருபதுகளில் இருப்பவர்களிடையே வாசிப்பில் புதிதாக ஆர்வத்தை உண்டுபண்ணுவது குதிரைக்கொம்பே. பள்ளி மாணவர்களிடத்தில் நமது எழுத்தாளர்கள் உரையாற்றுவது மூலமாக வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசிப்பின் பக்கம் அவர்களது கவனத்தை ஈர்க்கலாம்.

  “இப்போது தேவை ஒரு அட்டவணை – எந்த சிறுகதை, நாவல் எங்கே கிடைக்கும் என்று. அது யார் உருவாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.”

  கிழக்கின் NHM தளத்தில் நிறைய பதிப்பகங்களின் நூல்களும் உள்ளன. நான் தேடிய பெரும்பாலான நாவல்கள் கிழக்கு பதிப்பக தளத்திலேயே கிடைத்து, சென்ற்மாதம் ஊருக்குப்போனபோது 51-க்கு ஆர்டர் கொடுத்து, முப்பத்து சொச்சம் கிடைத்து, பத்தோ என்னவோதான் எடுத்துவர இயன்றது எடை பிரச்சினையால்.

  “தமிழ் சங்கங்கள் செய்யலாம், கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும்” – ஆனால் அதற்கு தொடர்ச்சியாக தமிழ்நூல்கள் வாங்குவோர் எண்ணிக்கை எவ்வளவு இருப்பார்கள் என்று தெரியவேண்டும்.

  “தன் திறமையை ஜெயமோகனை நொட்டை சொல்வதிலேயே வீணடிக்கிறார் என்ற வருத்தம் உண்டு”

  எனக்கும் அதே ஆதங்கம்தான்.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

  Like

 5. சித்திரவீதிக்காரன், சிறு புத்தகத்திருவிழா நல்ல ஐடியாவாக இருக்கிறதே!
  முத்துக்குமார், நீங்கள் சொல்வதை எங்கள் லோகல் சிலிகான் ஷெல்ஃப் குழுமத்திலேயே நடத்திப் பார்க்கலாம் என்று இப்போதுதான் தோன்றுகிறது.

  Like

 6. //சிறு புத்தகத்திருவிழா//

  இதைத்தான் ’கிழக்கு’ பல ஆண்டுகளாக திருமண மண்டபங்களில், ஷாப்பிங் மால்களில், இன்னும் மக்கள் கூடுமிடங்களில் நடத்தி வருகிறதே! கிழக்கு மட்டுமல்லாமல் இன்னும் பல பதிப்பகத்தினர் கலந்து கொண்டால் அது நன்மை பயக்கும். புத்தகங்களை வேன்களில் வைத்து ’மொபைல் விற்பனை’ கூட நடக்கிறது. ஆனால் அது அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பொதுவாக பெரும்பான்மையான மக்களிடையே படிக்கும் ஆர்வம் – குறிப்பாக இக்கால நகர்ப்புற இளைஞர்களிடம் – குறைந்து வருகிறது என்பதே உண்மை.

  Like

 7. ஆர்.வி, நன்றி.

  ஜெ.மோ நல்ல உரையாடல்காரர். அதே போல எஸ்.ரா-வும் சிறப்பான பேச்சாளர் / உரையாடல்காரர் என்றே தெரிகிறது (பதிவர் அதிஷா எஸ்.ரா-வின் சமீபத்திய உலக இலக்கிய அறிமுக பேச்சை – அதற்கு கூடிய நல்ல கூட்டத்தை சிலாகித்து எழுதியிருந்தார்)

  இப்படியான இன்றைய ஸ்டார் இலக்கியவாதிகளை பள்ளி பிள்ளைகள் மத்தியில் பேசவைத்து, அவர்கள் மத்தியில் வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கவைத்து …… ம்ஹ்ம்ம்

  எல்லார் வீட்டு குழந்தைகளும் அப்படியா என்று தெரியவில்லை. சென்ற மாதம் ஊருக்குப்போனபோது எங்கள் வீட்டு பொடிசுகள் டி.வி.சீரியல்கள் பார்ப்பதில் நிறைய நேரம் செலவழிப்பதை கண்டு, இந்த அபத்தங்களைவிட்டு விலகி கொஞ்சம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள அறிவுறுத்திவிட்டு வந்தேன். (ஏதோ நம்மால் முடிந்தது)

  இங்கே (கனெக்டிகட்டில் இதுவரை நான் பார்த்த 3) நூலகங்களுக்கு தொடர்ச்சியாக தாய் தந்தையரோடு வரும் குழந்தைகளை, குறிப்பெடுக்கும் அறையில் அமர்ந்து குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் – நிறைய நூலகளை அள்ளிக்கொண்டுபோகும் பள்ளி விடலைகளை, நூலகத்தில் நடக்கும் வருடாந்தர தள்ளுபடி விற்பனையில் பை பையாக நூலகள் வாங்கி சுமந்துகொண்டு போகும் இளைய/நடுத்தர/முதிய தலைமுறையை பார்க்கும்போதெல்லாம் பெருமூச்சுத்தான் வருகிறது.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

  Like

 8. அன்புள்ள முத்துக்குமார்,

  // இப்படியான இன்றைய ஸ்டார் இலக்கியவாதிகளை பள்ளி பிள்ளைகள் மத்தியில் பேசவைத்து, அவர்கள் மத்தியில் வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கவைத்து // போக வேண்டிய தூரம் நிறைய இருந்தாலும் இருபது வருஷத்துக்கு முன் இருந்த நிலையை விட இன்று பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.