டார்க்வின் ஹாலின் விஷ் பூரி சீரிஸ்

டார்க்வின் ஹால் (Tarquin Hall) ஆங்கிலேய எழுத்தாளர். தில்லிவாசி விஷ் பூரி என்ற துப்பறிபவரை வைத்து இரண்டு நாவல்கள் எழுதி உள்ளார் – Case of the Missing Servant , Man Who Died Laughing.

விஷ் பூரி ஒரு connected, இந்தியாவைப் புரிந்த துப்பறிபவர். எல்லா லெவலிலும் தொடர்பு இருக்கிறது. ஒரு ஐம்பது ஐம்பத்தைந்து வயது இருக்கும். புதுப் பணக்காரர். இன்றையப் பணக்காரர்களின் ஊரான குட்காவோனில் வசிக்கிறார். ஒரு ஏழெட்டு உதவியாளர்கள். கொலஸ்டரால் பிரச்சினை உண்டு. இரண்டு நாவல்களிலும் ஒரே நேரத்தில் நாலைந்து மர்மங்கள் முளைக்கின்றன. நிஜ வாழ்க்கை அப்படித்தானே இருக்கும்? இரண்டு நாவல்களிலும் விஷ் பூரியின் மம்மியும் ஒரு மர்மத்தைத் தீர்த்து வைக்கிறார். நிஜ வாழ்க்கை அப்படி இருந்தாலும், நாலைந்து மர்மம் என்றால் கதை கொஞ்சம் ramble ஆகிறது.

Case of the Missing Servant (2009): ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு வக்கீல். அவரது வீட்டில் வேலை செய்த மேரியைக் காணவில்லை. வக்கீல்தான் அந்தப் பெண்ணைக் கெடுத்து கொன்றுவிட்டார் என்று அவர் மேல் கெட்ட பேர் சுமத்துகிறார்கள். பூரி பல ஊர்களுக்கு அலைந்து உண்மையைக் கண்டுபிடிக்கிறார்.

Man Who Died Laughing (2010): ஆரம்பக் காட்சியில் ஒரு NRI-யின் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நாள் கழித்து சாமியார்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று தாக்கிக் கொண்டிருக்கும் டாக்டர் ஜா ராஜ்பத்தில், இந்தியா கேட் அருகே, நண்பர்களோடு சிரிப்பு தெரபி எடுத்துக் கொண்டிருக்கும்போது இருபதடி உயரக் காளியால் சம்ஹரிக்கப்படுகிறார். அவர் கடைசியாக தாக்கிய, பிரதமரே வணங்கும் சுவாமி மகாராஜ்தான் காரணமோ என்று விஷ் பூரி சந்தேகிக்கிறார். பூரியின் மனைவி கலந்து கொள்ளும் கிட்டி பார்ட்டியில் திருடு போகிறது. பூரியின் அசட்டு மச்சான் நிலம் விற்பது வாங்குவதில் பிரச்சினைகளை சந்திக்கிறார்.

ஹாலின் பலம் நம்பகத்தன்மை உள்ள இந்திய சித்தரிப்பு. இந்தியா, குறிப்பாக bureaucratic இந்தியாவை, புதுப் பணக்கார இந்தியாவை, நன்றாக சித்தரித்திருப்பார். நான் டெல்லியைப் பற்றிய நிபுணன் இல்லை, ஆனால் டெல்லியின் ambience-ஐ தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார். துப்பறியும் நாவல்கள் என்ற வகையில் சுவாரசியம் உள்ள, ஆனால் சுஜாதா அளவுக்குக் கூட போகாத நாவல்கள். இவற்றை துப்பறியும் நாவல்கள் என்பதை விட இந்திய நாவல்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குப் பிடித்திருந்தன, மேலும் இந்த சீரிஸில் நாவல்கள் வந்தால் கட்டாயம் படிப்பேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
டார்க்வின் ஹால் தளம்