விஷ்ணுபுரம் விருது விழா – டிசம்பர் 18 ஞாயிறு அன்று கோவையில்

என் தளத்தைப் படிப்பவர்கள் யாரும் ஜெயமோகன் தளத்தைப் படிக்காமல் இருக்கப் போவதில்லை, விஷயம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும் இங்கேயும் போட்டு வைக்கிறேன். நாஞ்சில்நாடன், எஸ்.ரா., அவர்கள் அளவு அவ்வளவாக வெளியில் தெரியாத, ஆனால் பிரமாதமாக எழுதக்கூடிய யுவன் சந்திரசேகரும் பேசுகிறார்கள். கோவை சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மிஸ் செய்யாதீர்கள். முடிந்தால் ஜெயமோகனிடமும் கொஞ்ச நேரமாவது பேசிவிட்டு வாங்கள், அவரை போன்ற விஷயமுள்ள, பேசத் தெரிந்த ஆளுமைகள் அபூர்வம்.

பூமணி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். ஜெயமோகன் எனக்குப் பிடித்த வாசகர்களில் முதன்மையானவர். ஜெயமோகனைச் சுற்றிச் சுழலும் விஷ்ணுபுரம் வட்டத்தினர் போன முறை ஆ. மாதவனையும் இந்த முறை பூமணியையும் விருதுக்கு தேர்ந்தெடுத்தது கண்டவர்களுக்கும் விருது கொடுக்கும் (அகிலனுக்கு ஞானபீடம், வைரமுத்துவுக்கும் கோவி. மணிசேகரனுக்கும் சாஹித்ய அகாடமி) நம் ஊரில் பெரிய ஆறுதல். விஷ்ணுபுரம் விருது மேலும் மேலும் உன்னதம் அடைய வாழ்த்துகிறேன்.

அரங்கசாமிதான் பொறுப்பெடுத்து செய்கிறார் என்று நினைக்கிறேன், அவருடன் நேரம் செலவழிக்க முடியாதது என் துரதிருஷ்டம். அவருக்கு ஒரு ஜே!

தொடர்புடைய சுட்டிகள்:
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
பூமணியின் “வெக்கை”

பா. ராகவனின் “புவியிலோரிடம்” – இட ஒதுக்கீடு வாதங்கள்

1989-இல் மண்டல் கமிஷன் சிபாரிசுகளை வி.பி. சிங் அரசு ஏற்றபோது வட இந்தியா கொந்தளித்தது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 69% இட ஒதுக்கீடு இருந்ததால் பெரிதாக ரியாக்ஷன் தெரியவில்லை. மண்டல் கமிஷன் பற்றிய புத்தகத்தை பா.ரா. எழுதி இருக்கிறார் என்று முன்னுரையில் தெரிந்தபோது தமிழர் என்னதான் சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான் படிக்க ஆரம்பித்தேன். மேலும் ஜெயமோகன் நாவலின் உள்கட்டுமான, தொழில் நுட்ப யோசனைகளை பகிர்ந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று வேறு எழுதி இருந்தார்.

ஏழை பிராமணக் குடும்பம். எட்டு பையன் ஒரு பெண். யாருக்கும் படிப்பு வரவில்லை. கடைசி பையன் வாசு தட்டுத் தடுமாறி ப்ளஸ் டூ பாஸ் செய்துவிடுகிறான். குடும்பத்தில் ஒருவராவது காலேஜ் போக வேண்டும் என்று நினைக்கும் அப்பா, ஆனால் ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவான மார்க்தான். அண்ணன் வரதன் கொடுக்கும் தைரியத்தில் நாடார் என்று போலி சான்றிதழ் கொடுத்து ஒரு காலேஜில் சேர்ந்துவிடுகிறான். நாளாக நாளாக மனசாட்சி உறுத்துகிறது. காலேஜை விட்டு டெல்லிக்கு ஓடிவிடுகிறான். அங்கே பல வேலைகள், தொழில்கள். மெதுமெதுவாக முன்னுக்கு வருகிறான். அப்போதுதான் மண்டல் கமிஷன் சிபாரிசுகள் ஏற்கப்படுகின்றன. ஏழைகள், குறிப்பாக ஏழைப் பிராமணர்கள் என்ன செய்வார்கள் என்பது உட்பட பல வித வாதங்களை பாத்திரங்கள் மூலமாக பா.ரா. முன் வைக்கிறார். சலுகைகளை ஏற்பது அவமானம் என்ற வாதத்தை கடைசியாக வாசு சொல்கிறான்.

புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை. வி.பி. சிங் அரசு காலத்திலேயே கல்கி, விகடன் மாதிரி பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருந்தால் பெரிய ஹிட் ஆகி இருக்கும். நான் கேள்விப்பட்டிருப்பேன். அப்படி இல்லாததால் பிற்காலத்தில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இட ஒதுக்கீடு பற்றி pro and cons வாதங்களை விட கதையில் எனக்கு பிடித்த விஷயம் வாசு குடும்பச் சித்தரிப்புதான். ரியலிஸ்டிக்காக இல்லை, (அதெப்படி எல்லோரும் நல்லவராக இருப்பார்கள்? குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இல்லாமலா?) என்றாலும் படிக்கப் பிடித்திருந்தது. பாசமுள்ள மன்னிகள், அண்ணன்மார்கள், வயிற்றுப்பாட்டுக்காக அவர்கள் செய்யும் தொழில்கள், சொந்த வீடு கட்டும் கனவு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் தெரு, ஜெயராஜ் தியேட்டர் references, எல்லாம் நன்றாகவே வந்திருந்தன. பா.ரா. சைதாப்பேட்டையில் வளர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த குடும்ப சித்தரிப்புக்காகப் படிக்கலாம்.

தொடர்புள்ள சுட்டிகள்:
பா. ராகவனின் தளம்
இட ஒதுக்கீடு – ஆர்வியின் சொந்த அனுபவம்
பா.ரா.வின் ஆர்.எஸ்.எஸ்.: மதம், மதம், மற்றும் மதம்
பா. ராகவனின் 108 வடைகள் சிறுகதை
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்