இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”

சின்ன வயதில் விரும்பிப் படித்த நாவல். இப்போதும் பிடித்திருக்கிறது. விஸ்வத்தின் நிலையில் என்னை பொருத்தி வைத்துப் பார்த்துக் கொள்ள முடிவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

அனேகமாக என் ஜெனரேஷன்காரர்கள் அனைவரும் படித்த நாவல். விகடனில் தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன். பைண்ட் செய்யப்பட்ட புத்தகமாகத்தான் முதல் முறை படித்தேன்.

கதைச்சுருக்கம் எல்லாம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கீழ் மத்தியதரக் குடும்பங்கள் எல்லாவற்றிலும், அதுவும் பிராமணக் குடும்பங்களில் எழுபதுகளில் இருந்த சூழ்நிலை நன்றாக வந்திருக்கிறது. பரசு பெண் பார்க்கப் போகும்போது ருக்மணி வீட்டில் இரண்டு அறைதான் என்று வரும். அப்படித்தான் எக்கச்சக்க ஒண்டுக் குடித்தன வீடுகள் இருந்தன. இருநூறு சதுர அடியில் இரண்டு அறை, பொதுவான குளியலறை, கிணறு என்று சென்னையில் எக்கச்சக்க குடும்பங்கள் வாசித்தன. இன்ஜெக்ஷன் பாட்டில் தேர், எம்ப்ராய்டரி செய்யும் வயதுப் பெண்கள், ட்ரான்சிஸ்டர், அங்கும் இங்குமாக ஹக்ஸ்லி, சார்த்ரே என்று பேசிக் கொண்டு யு.எஸ்.ஐ.எஸ்., பிரிட்டிஷ் கவுன்சில் என்று போய் வரும் சில இளைஞர்கள், குடும்ப பாரத்தை சுமக்கும் இருபத்து சொச்சம் வயதினர், ரிடையர் ஆன தாத்தாக்கள், என்று தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறார்.

கதையில் பல மனதைத் தொடும் இடங்கள் உண்டு. அவற்றின் சாதாரணத் தன்மையாலேயே, அடிக்கடி நடப்பதால் பழகிவிடுவதாலேயே, அவை மனதைத் தொடுகின்றன. மேலே படிக்க விரும்பும் பரசுவை டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ளச் சொல்லும் அப்பா, தங்கை தம்பிகள் பாரம் சுமப்பதை முடிந்த வரைக்கும் தள்ளிப் போடப் பார்க்கும் பரசு இரண்டும் குறிப்பாகச் சொல்லக் கூடியவை. பரசுவை அடைய தனக்கு தகுதி இல்லை என்று ருக்மணி மருகுவது சாதாரணம் இல்லை என்றாலும் மனதைத் தொடுகிறது.

பலவீனங்கள்? இந்துமதிக்கு வெள்ளைத் தோல், உயரம், அழகு இதிலெல்லாம் இருக்கும் obsession அலுப்பைத் தருகிறது. அவரது எல்லா ஹீரோக்களும் வெள்ளையாக உயரமாக இருப்பதும் எல்லா ஹீரோயின்களும் ஏதோ தேவலோகத்திலிருந்து அழுக்குப் படியாமல் வந்து போவதும்… இந்த வர்ணனையைப் பார்க்கும்போதெல்லாம் கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டா என்று தோன்றுகிறது. கடைசியில் எல்லாரும் அவ்வளவு தெளிவாக பல நாள் யோசித்து எழுதி வைத்ததைப் படிப்பது போல பேசுவது படிக்க நன்றாக இருந்தாலும் ரியலிஸ்டிக்காக இல்லை.

ஜெயமோகன் இதை சிறந்த வணிக எழுத்து என்று பட்டியல் இடுகிறார். குறை எல்லாம் சொன்னாலும் எனக்கு இது வணிக எழுத்து இல்லை, இலக்கியம். கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

இந்துமதி ஒரு காலத்தில் பிரபல வாரப் பத்திரிகை எழுத்தாளர். லக்ஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி என்று பெண்களுக்காக பெண்கள் வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுதும் பாரம்பரியத்தை சேர்ந்தவர். எல்லா கதையிலும் ஹீரோ வெள்ளை வெளேரென்று உயரமாக ரிம்லெஸ் கண்ணாடியோடு வருவான். அப்படி என்னையும் நினைத்துக் கொள்ள ஒரு காலத்தில் பிடித்திருந்தது. 🙂 த. இ. விமானங்கள் ஒன்றுதான் அவர் பேரைக் காப்பாற்றும் என்று நினைக்கிறேன்.

நண்பர் விமல் மின் புத்தகத்துக்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி! (காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்)

அனுபந்தம் – படித்த பிற கதைகள்

படித்த வேறு சில கதைகளைப் பற்றி எழுத இனி மேல் கை வராது, அதனால் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

இன்று புதிதாய் பிறப்போம்: அழகான அம்மா மேல் சந்தேகப்பட்டு விவாகரத்து வாங்கும் அப்பா; நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் எட்டு வயது பையன். பையனின் கண்ணோட்டத்தை நன்றாகவே எழுதி இருக்கிறார்.

நிழல்கள் சுடுவதில்லை: டிபிகல் தொடர்கதை. ஹரிணிக்கு நேசமான எல்லாரும் இறக்கிறார்கள். காதலிக்கும் தீரேந்தருக்கும் கான்சர். இன்னும் மூன்று மாதம் இருக்கிறதே, உன்னை மணந்து கொள்கிறேன் என்கிறாள் ஹரிணி.

தொடுவான மனிதர்கள்: கஷ்டப்படும் குடும்பத்தின் மூத்த பெண். அவளுக்கும் ராம்குமாருக்கும் காதல். ராம் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறான். அவளை காதலிக்கும் கார்த்திக்குக்கு இப்போது டூ லேட், சொல்ல முடியவில்லை. ஆனால் ராம் விபத்தில் இறந்துவிட கார்த்திக்குக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறது. கார்த்திக் கஷ்டம், உதவி வேண்டும் என்று கேட்டால்தான் உதவி செய்யும் டைப், ராம் மாதிரி இல்லை. அதனால் இவள் நீ வீண்டாம் என்று கார்த்திக்கிடம் சொல்ல, கார்த்திக் நீ உன் காலில் நிற்பதையே விரும்புகிறேன், நீ independent ஆக இருக்க வேண்டும், ஆனால் தேவைப்படும்போது உதவிக்கு நான் எப்போதும் உண்டு என்று சொல்கிறான். அதை அவளும் யோசித்து ஏற்றுக் கொள்கிறாள். நல்ல தீம், ஆனால் கதை சுமாராகத்தான் வந்திருக்கிறது.

விஷம்: சிறு வயதிலிருந்து காதலிக்கும் பெண்ணை கெடுத்தவனை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போகிறான் ஹீரோ. வேஸ்ட்.

யார்?: இந்துமதி த்ரில்லர் எழுதிப் பார்த்திருக்கிறார். தண்டம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

29 thoughts on “இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”

  1. ///குறை எல்லாம் சொன்னாலும் எனக்கு இது வணிக எழுத்து இல்லை, இலக்கியம். கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.//

    நிஜமாத்தான் சொல்றீங்களா ஆர்வி. இது இலக்கியம் தானா? ”இந்துமதி” என்றாலே எனக்கு ஏனோ “ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன்” தொடரும், ”மணல் வீடுகளும்” தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

    ”தரையில் இறங்கும் விமானங்களை” பூவை எஸ். ஆறுமுகமே சிலாகித்துச் சொல்லியிருக்கிறார் என்றால் சும்மாவா? 😉

    Like

  2. இலக்கியம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஆர்வி…இதுக்கு நீங்க இந்திரா சௌந்திரராஜன் அனைத்துக் கதைகளையும் 10 தடவை படிக்கணும்-னு தண்டனைக் கொடுக்கிறேன் :)…நிற்க.

    இந்துமதி, வாஸந்தி இருவரும் லஷ்மி, சிவசங்கரி, ரமணி சந்திரன் போன்ற ‘தியாக உள்ளங்கள்’ கதைகளிலிருந்துத் தப்பித்த பெண் எழுத்தாளர்கள். இந்துமதியின் கதைகள் கதை மாந்தர்களை urban ஸ்டைலில் படைப்பார். ஆனாலும் இவரின் கதைகளில் ஒரு grip, திரைக்கதை மாடலில் இருப்பதை கவனித்திருக்கிறேன். அந்த வகையில் ஜெமோ-வின் கணிப்பு சரி. ‘யார்’ என்ற தொடர்கதை குமுதத்தில் எழுத்தாளர் பெயர் போடாமல் வந்து இறுதியில் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார். படித்தவரையில் Chase ஸ்டைலில் நன்றாகவே இருந்தது. ramanans சொன்ன “ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன்”-னும் ஒரு நல்ல அமானுஷ்ய கதை (The Omen, The Exorcist-லிருந்து கொஞ்சம் உருவியிருப்பார்). மாலைமதியிலும் சில கதைகள் சுமாரான ரகத்தில். மொத்தத்தில் இந்துமதி, பாலகுமாரன் போல் பிரயாணங்களில் படிக்கலாம். ரொம்ப யோசிக்கவேண்டிய அவசியம் இருக்காது.

    இனிமே இலக்கியம்-னு சொல்லுவீங்க (அது சரி உங்க தளம், உங்க கருத்து)?! 🙂

    Like

  3. எழுத்தாளர் இந்துமதியின் பல்வேறு நாவல்களில், என் மனதை மிகவும் கவர்ந்த ஒன்று என்றால் என் மனதில் பளிச்சென்று நினைவுக்கு வருவது ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ தான். (அவரது பல நாவல்கள் எனக்குப்பிடிக்காது என்பது வேறு விஷயம்)

    பொதுவாக நாவல்கள் என்றால் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். அல்லது கதாசிரியர் தனது வார்த்தைகளில் காட்சிகளை விவரித்துக்கொண்டு போவார். இது இன்னொரு ரகம். அல்லது கதாசிரியர் தனது கற்பனை வளத்தைக்காட்ட, எல்லை தாண்டி அதீதமாக வர்ணித்துக்கொண்டு போவார். இவையெல்லாம் இல்லாமல் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் மூலமாகவே ஒரு கதையை, நாவலை நகர்த்திக்கொண்டு போக முடியுமா?. அப்படி அபூர்வமாக அமைந்த ஒரு நாவல்தான், இந்துமதி எழுதிய “தரையில் இறங்கும் விமானங்கள்”.

    இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் மன உணர்வுகள் நம்முடன் பேசும். மிகக்குறைந்த அளவே பாத்திரங்கள். பரமு என்கிற பரமசிவம் அண்ணன். அவனுக்கு விஸ்வம் என்றொரு தம்பி. விஸ்வத்துக்கு பாசமே உருவான ஒரு அண்ணி, ரொம்ப கண்டிக்காமல் பொறுப்பை உணரவைக்க எத்தனிக்கும் அப்பா. பாதியில் மறைந்துவிடும் அம்மா. விஸ்வம், வாழ்க்கையை எந்திரமாக அல்லாது கலையாக ரசித்து வாழத்துடிப்பவன். அவனுக்கு காதல், திருமணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை, பல பட்சங்களுக்கு கீழே. படிப்பு, படித்தபின் வேலை, வேலை கிடைத்ததும் திருமணம், திருமணத்தைத் தொடர்ந்து குழந்தைகள், பின் அவர்களை ஆளாக்க போராட்டம்….. இவ்வளவுதான் வாழ்க்கையா?. இதுக்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாமே என்று ஆதங்கப்படும் வித்தியாசமான வாலிபன்.

    அவனுடைய உலகமே வேறு. அதனுள் தனக்குத்தானே மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு அதிலேயே சஞ்சரித்துக்கொண்டு இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வாழும் அவனுக்கு முதல் இடியாக வந்தது அம்மாவின் மறைவு. ஆனால் அதையும் கூட பேரிழப்பாக தோன்றாதவாறு அவனுக்கு இன்னொரு தாயாய் அண்ணி இருந்து ஈடுகட்ட, அவன் தொடர்ந்து தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு தாக்குதலுக்கு ஆட்பட்டது அண்ணனின் வேலை மாற்றலின்போது. இனியும் அவன் கற்பனை உலகில் உலவிக்கொண்டிருக்க முடியாது என்று அப்பா பக்குவமாக எடுத்துச்சொல்லி குடும்பப்பொறுப்புக்களை சுமக்க வைக்க, அதுவரை வானத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறங்குகிறது.

    எவ்வளவுதான் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தாலும், அது அங்கேயே பறந்துகொண்டிருக்க முடியாது ஒருசமயத்தில், குறைந்தபட்சம் எரிபொருள் தீரும் நிலையிலாவது அது தரையிறங்கியே தீர வேண்டும். இறங்கிய பின்னும் அது தன் பழைய நினைப்பில் சிறிது தூரம் மூச்சிரைக்க ஓடி ஒரு நிலைக்கு வந்தே தீர வேண்டும் என்ற ய்தார்த்த உண்மையை விளக்கும் அருமையான நாவல்.

    இதில் மனதை கொள்ளைகொள்ளும் விஷயம், நான் முன்பே குறிப்பிட்டதுபோல உரையாடல்கள் மிகக்குறைவாக, உள்ளத்துக்குள்ளே தோன்றும் எண்ண ஓட்டங்களையே அதிகமாகக்கொண்டு புனையப்பட்டிருப்பதால், இந்துமதியின் மற்றைய நாவல்களினின்றும் இது தனித்து நிற்கிறது. கதையில் வரும் வர்ணனைகள்தான் எவ்வளவு யதார்த்தமானவை, எவ்வளவு ஜீவனுள்ளவை. வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகும் விஸ்வம், அந்த அலுவலக வெளிவராந்தாவில் காத்திருக்கும் நேரத்தில் பார்த்து ரசிக்கும் மரக்கூட்டமும், அதில் துள்ளி விளையாடும் அணிலும் அப்படியே தத்ரூபமாக நம் கண்முன்னே தோன்றுகின்றன. மீண்டும் அதே அலுவலகத்துக்கு இண்ட்டர்வியூவுக்குப்போகும்போது விஸ்வத்தின் மனம் குதூகலிக்கிறது, வேலை கிடைக்கும் என்பதை எண்ணி அல்ல, மறுபடியும் அந்த காம்பவுண்டில் நிற்கும் மரக்கூட்டத்தையும் அதில் விளையாடும் அணிலையும் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்தில். அந்த அளவுக்கு இயற்கையை நேசிக்கும் அவன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த எந்திர வாழ்க்கைக்கு ஆட்படுகிறான் என்பதை இந்துமதி விவரிக்கும் அழகே தனி.

    மனதைக்கவரும் பல இடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் தெருப்பக்கம் விளக்கை அணைத்து விட்டு விஸ்வமும் அண்ணியும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போது தூரத்தில் மெல்ல ஒலிக்கும் வண்டி மாடுகளின் கழுத்து மணிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மாட்டுவண்டிகள் வரிசையாக தங்கள் வாசலைக்கடந்து போகும்போது மணல் நறநறவென்று அரைபடுவதும், மெல்ல மெல்ல மணிச்சத்தம் தூர தூரமாகப்போய் அடங்கிப்போக, ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த்து போல விஸ்வம் நினைத்துக்கொண்டிருக்க, ‘விஸ்வம் கொஞ்ச நேரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்ததுபோல தோன்றியதில்லையா?’ என்று அண்ணி கேட்க அவன் அதிர்ச்சியடைவது.

    ஒரு அண்ணிக்கும் கொழுந்தனுக்குமான உறவை தாய்க்கும் பிள்ளைக்குமான உறவுபோல சித்தரிப்பதில் கதாசிரியை பெரும் வெற்றி கண்டுள்ளார். விஸ்வம், அண்ணன் பரமு, அண்ணி, அப்பா, அம்மா என்று எல்லோருமே கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத, நம் கண்முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் கள்ளம் கபடமில்லாத வெகுளியான பாத்திரங்கள். அதுமட்டுமல்ல இக்கதையில் வரும் எல்லோரும் நல்லவர்கள். யாரும் யாருக்கும் குழிபறிக்காதவர்கள். அதனால் இக்கதையில் திடீர் திருப்பம் போன்ற சுனாமிகள், சூறாவளிகள் எதுவுமின்றி, சம்பவங்கள் மனதை தென்றலாய் வருடிப்போகும். கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

    இக்கதை தூரதர்ஷன் சேனலில் தொலைக்காட்சித் தொடராகக்கூட வந்ததாகச்சொன்னார்கள். பார்க்கவில்லை, பார்க்காததற்கு வருந்தவுமில்லை. காரணம், நான் படித்திருந்த சில நல்ல நாவல்கள் தொடராகவோ, திரைப்படமாகவோ உருவானபோது அதன் ஜீவன் பலமாக சிதைந்துபோனதைப் பார்த்து வேதனை அடைந்தவள் நான்.

    ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை பலர் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாய்ப்புக்கிடைத்தால் படியுங்கள்.

    Like

  4. ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று தான் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ வாசித்தேன். இன்று வந்த தங்களுடைய பதிவையும் வாசித்தேன். மிகவும் நல்ல நாவல். இந்நாவலில் தலைப்பே கதையை அருமையாக சொல்லி விடுகிறது. விமானம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வானில் பறக்கலாம், இறுதியில் தரையில் இறங்கித்தானே ஆக வேண்டும். அதுபோலத்தான், நம் வாழ்க்கையும். அஜித் நடித்த முகவரி படமும் ஞாபகம் வந்தது. அஜித் இசையமைப்பாளராகனும் என்று விரும்புவார். அவரது குடும்பமும் அதைத்தான் விரும்பும். இறுதியில் அவருடைய அண்ணன் ரகுவரனுக்கு உடல்நிலை முடியாமல் போக இசையமைப்பாளராக விரும்பும் எண்ணத்தை விட்டு வேலைக்கு கிளம்பிவிடுவார். இந்நாவலில் வரும் விஸ்வத்தோடு மனசு நெருங்கிப்போகிறது. வேலைக்கு சைக்கிளில் செல்லும் பரசுராமனும் நெருக்கமாக இருக்கிறார். பரசுராமன் பணிமாற்றலாகி வேறு ஊர் செல்லும் போது விஸ்வம் பொறுப்பேற்பது இயல்பாகத்தான் இருக்கிறது. ருக்மணி சொல்வது போல ‘மனுசன் மனுசனா இருக்கணும், எல்லாருடனும் சந்தோஷமா வாழத்தெரியணும்’ இதான் வாழ்க்கை. பகிர்விற்கு நன்றி.

    Like

  5. முதலில் தொலைக்காட்சித்தொடராகத்தான் பள்ளி நாட்களில் பார்த்தேன். கெச்சலான, உயரமான ரகுவரன் மற்றும் பெரிய கண்களுடன் ஒரு நடிகை (ராஜ..என்று பெயர்ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்).
    பின் கதையை தேடிப்படித்தேன்…தொலைக்காட்சியில் ‘கொலை’ நடக்கவில்லை, நன்றாக வந்திருந்ததாகத்தான் பட்டது.

    அந்த நினைவிலிருந்து எழுதுகிறேன்.
    சம்பவங்கள், அண்ணி பாதங்கள் நகங்கள் வெட்டி, சுத்தமாக இருப்பதை விஸ்வம் கவனித்தலிருந்து, இருவருக்கும் ரசனைகள் ஒத்து போவது நன்றாக வந்திருக்கும் – அண்ணி காரை பெயர்ந்த சுவரைப்பார்த்து சொல்லும் சித்திரம், சாரதா அவர்கள் குறிப்பிட்ட காளை மணிச்சத்தம்…) அண்ணி அப்புறம் இலக்கிய விழாக்களுக்கு கூட வருவார் என நினைக்கிறேன்.
    நடுத்தர/|ஏழை பிராமண குடும்பச்சித்திரம் நன்றாக வந்திருக்கும்…
    அப்புறம் திஜா படிக்க ஆரம்த்தவுடன் இங்கிருந்துதான் இன்ஸ்பிரேஷன் வந்திருக்கும் என நினைத்துக்கொண்டேன்…
    தலைப்பு – மிக அழகான பொருத்தமான தலைப்பு. இதற்கப்புறம் இவரது மற்ற எழுத்துகளை தேடிப்படித்தேன், ஆர்வி சொல்வதுபோல இது ஒன்றுதான் நினைவில் நிற்கிறது.

    //. லக்ஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி என்று பெண்களுக்காக பெண்கள் வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுதும் பாரம்பரியத்தை சேர்ந்தவர்.//
    வாஸந்தியை இவர்களை கூட லிஸ்டில் ஒரு சேரக்கருதமாட்டேன், கண்டிப்பாய் ஒரு படி மேலேதான்! அப்புறம் வைத்துக்கொள்வோம், வாஸந்தி எழுத்துகளைப்பற்றி பேச்சு வரும்போது!

    அப்புறம் இலக்கியம்…:) கமான் ஆர்வி..!உங்க இலக்கிய definition British weatherயை விட வேளச்சேரி மின்விநியோகத்தைவிட மோசம்! நிறைய fluctuation!
    சின்ன வயதில் படித்து பிடித்துப்போனதால் வளர்ந்து நமது அளவுமுறைகள்/வரையறைகள் மாறினாலும் அந்த soft corner அப்படியே இருக்கிறது!
    தப்பில்லை! நான் ‘இலக்கிய’ வார்த்தை உபயோகிக்க மாட்டேன், பிடித்திருக்கிறது/மனதில் நிற்கிறது – இது போதும்…!
    சரி, உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்கவேண்டும் என்று நினைத்தேன், எங்கிருந்து இத்தனை புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கின்றன – சொந்த வீட்டு நூலகத்திலிருந்தா (பெரிய castle/mansion தான் நீங்கள் குடியிருக்கவேண்டும்!) அல்லது ஏதாவது தளங்களா…
    பிகு: இப்போதுதான் நண்பர் விமல் கொடுத்த லிங்க் பார்த்தேன்…நன்றி!
    Essex சிவா

    Like

  6. எஸ்செக்ஸ் சிவா, ராஜசந்திரா, ரமணன், த. இ. விமானங்கள் இலக்கியம் என்று ஏன் கருதுகிறேன் என்று விளக்கி ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். உங்கள் எண்ணங்களையும் எழுதுங்கள், பேச ஆர்வமாக இருக்கிறது.

    விமல், சுட்டிக்கு நன்றி! பதிவிலும் இணைத்துவிட்டேன். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன். 🙂

    சந்திரமவுலி/சித்திரவீதிக்காரன், ஆம் முகவரி திரைப்படம் இந்த தீம்தான், இந்த format-தான்.

    சாரதா, உங்கள் மறுமொழியைப் பதிவாகவே போட்டுவிடப் போகிறேன்.

    சிவா, நீங்கள் மிகவும் இளைஞர் என்று தெரிகிறது. பொறாமைப்படுகிறேன். 🙂

    ரமணிச்சந்திரனுக்கு லக்ஷ்மி மேல், லக்ஷ்மிக்கு சிவசங்கரி மேல், சிவசங்கரிக்கு இந்துமதி மேல், இந்துமதிக்கு வாஸந்தி மேல் என்ற தரவரிசை எனக்கு இசைவானதே. ஆனால் இவர்களை எல்லாம் ஒரே க்ரூப்பில்தான் வைப்பேன்.

    நான் எழுதுவது எல்லாம் நேற்றுப் படித்து இன்று எழுதப்படுவது இல்லை. எப்போதோ படித்ததை எல்லாம் எழுதுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படித்தால் அதிகம். 🙂 அது மட்டும் இல்லை, வாழ்க்கையில் ஒரு கஷ்டமான வேளையில் இருக்கிறேன். படிப்பது ஒரு போதைப் பழக்கம் போல. 🙂

    Like

  7. ஆஹா..! ஆர்வி, நான் நிறைய தாமதம் போலிருக்கிறதே! இப்போதுதான் உங்கள் பதிலை பார்க்கிறேன்!
    “சிவா, நீங்கள் மிகவும் இளைஞர் என்று தெரிகிறது” இந்த இடத்தில் ‘(!)’ இந்த குறி விட்டுபோய்விட்டது!

    மெனக்கெட்டு இன்னொரு பதிவு இதற்காக போட்டிருக்கிறீர்கள் – மிக்க நன்றி, குற்ற உணர்ச்சியாகவும் உள்ளது!

    பதிலளிக்க பார்க்கிறேன்.

    படிப்பது நிச்சயம் போதைப்பழக்கம்தான், சந்தேகமே இல்லை!
    வாழ்க்கையில் கஷ்டமான வேளை என்று படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது.
    உடலா, உள்ளமா தெரியவில்லை. பார்த்துக்குங்க!

    Like

  8. ஆமா, எனக்கு நன்றாக நினைவிலுள்ளது! இப்போது முழுக்கதையும் ஞாபகமில்லையெனினும்., அவன் மோர் இட்டு சோறு சாப்பிட்டது, தங்கை இடங்களை துடைபது, இரவில் அணிவகுத்துச் செல்லும் மாட்டு வண்டிகளின் , வர்ணணை இதெல்லாம் நினைவிலுண்டு!

    Like

    1. காந்த முருகன்,

      இன்னும் “தரையில் இறங்கும் விமானங்கள்” வர்ணனைகள் எல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்களே!

      Like

  9. என்னைப் பொறுத்த வரை இந்துமதியின் மிகச் சிறந்த நாவல் தரையில் இறங்கும் விமானங்கள் என்று சொல்வேன்.

    எனக்கும் இது இலக்கியத் தரம் வாய்ந்தது என்றே தோன்றுகிறது.

    ஒரு சிறு சந்தேகம் என் மனதில் எப்போதும் உள்ளது!

    ஒரு நாவலை இலக்கியம் என்று முத்திரை பதிக்க என்னென்ன தேவை என்று யாராவது இலக்கியவாதியோ அல்லது ஏதாவது இலக்கிய அமைப்போ வரையறுத்திருக்கிறார்களா?

    Like

    1. சுந்தரராஜன் சார், எப்படி இருக்கிறீர்கள்? கௌரி மேடம், கிருபானந்தன் சார் நலமா?

      // ஒரு நாவலை இலக்கியம் என்று முத்திரை பதிக்க என்னென்ன தேவை என்று யாராவது இலக்கியவாதியோ அல்லது ஏதாவது இலக்கிய அமைப்போ வரையறுத்திருக்கிறார்களா? // வசமாக மாட்டிக் கொண்டீர்கள். இதைப் படித்துப் பாருங்கள் – https://tinyurl.com/enakku-edhu-ilakkiyam

      Liked by 1 person

  10. நாங்கள் சென்னையில் (நான்கு சுவற்றுக்கு மத்தியில்) நலம். நீங்களும் அதுபோலவே அங்கு நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    கிருபா சியேட்டிலிலிருந்து உங்களிடம் பேசியதாகக் கூறினார்.

    எது இலக்கியம் என்ற கேள்வியைப் பலரிடம் கேட்டிருக்கிறேன் . உங்கள் வலைப்பதிவு ‘ எனக்கு இது இலக்கியம்’ என்பதைத் தெளிவு படுத்துகிறது.

    ஆனால் பொதுவாக எது இலக்கியம் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது.

    “இன்று நான் எதை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக்க மட்டும்தான் முயற்சி செய்திருக்கிறேன்.” – என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள முடிகிறது

    அப்படியானால் இலக்கியம் என்பது தனித்தனி வாசகரின் கருத்தா?

    மனதுக்குப் பிடித்தால் எதுவும் இலக்கியம் ஆகுமா?

    ஸ்ரீவேணுகோபாலனாக எழுதினால் இலக்கியம், புஷ்பா தங்கதுரையாக எழுதினால் ஆபாசமா?

    சரித்திரக் கதைகள் , விஞ்ஞானக் கதைகள், சிறுவர் கதைகள் இலக்கிய வட்டத்துக்குள் வராதா?

    ஞானபீடம், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கதைகள் எல்லாம் இலக்கியத்தரம் வாய்ந்தவையா?

    இலக்கியத் தரம் வாய்ந்த கதையாக இருக்க ‘இதெல்லாம் தேவை’ என்று யாராவது பட்டியல் போட்டால் சிலர் முயற்சியாவது செய்யலாம்.

    வறுமை , பஞ்சம், தீவிரவாதம், காதல், சாவு, தியாகம், கொலை , கற்பழிப்பு , தவறான உறவு போன்றவை இலக்கியத்தரத்துக்கு கட்டாயமா?

    எப்பொருளை யார்யார் வாயில் கேட்டாலும் அது மெய்ப்பொருள் என்று அறிவு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறது.

    ஏதாவது ஒரு கமிட்டி ‘இது இலக்கியம்’ ‘இது இல்லை’ என்று சொன்னால் கேட்டுக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டு போய்விடலாம். !

    Like

  11. சுந்தரராஜன் சார்,

    // ஆனால் பொதுவாக எது இலக்கியம் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. // இலக்கியம் என்பது ஒரு தளத்தில் subjective மட்டுமே அல்லவா? எது நல்ல திரைப்படம்? எது நல்ல இசை? எது நல்ல உணவு? இவற்றுக்கெல்லாம் திட்டவட்டமாக வரையறுக்கப்படாத, ஆனால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் தரவரிசை இருக்கிறது. கோழிக்கறி நல்ல உணவா, இல்லை சக்கைப் பிரதமன் நல்ல உணவா என்று வரையறுப்பது ஒவ்வொருவரின் ருசியைப் பொறுத்தது. ஆனால் அனேகமாக எல்லாருக்கும் ஊசிப் போன பண்டம் அருசிதான்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.