தெலுங்கு புத்தக சிபாரிசுகள்

கொல்லப்புடி மாருதி ராவ் – தெலுங்கு எழுத்தாளர், நடிகர் – படிக்க வேண்டிய தெலுங்கு புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு லிஸ்ட் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலாவின் தளத்தில் லிஸ்ட் இருக்கிறது.

சாதாரணமாக லிஸ்டுக்கு குறிப்புகள் எழுதுவேன். இந்த முறை படித்திருப்பது ரொம்ப கொஞ்சம், அதனால் குறிப்பு கிறிப்பு எல்லாம் இல்லை. படித்திருக்கும் இரண்டு புத்தகங்கள் பற்றி கீழே:

குருஜாதா அப்பாராவ் எழுதிய கன்யா சுல்கம் – செகந்தராபாதில் வாழ்ந்தபோது கேள்விப்பட்ட ஒரே தெலுங்கு புத்தகம் இதுதான் கன்யா சுல்கம் ஒரு க்ளாசிக். இப்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும்.

கொடவகண்டி குடும்பராவ் எழுதிய சதுவு தமிழ் மொழிபெயர்ப்பு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும். தமிழில் இதன் பெயர் படிப்பு. சாஹித்ய அகாடமி வெளியீடு. 1910-35 கால கட்டத்தில் ஒரு மத்திய தர குடும்பம், ஸ்கூல் படிப்பு, சுதந்திர போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது. பின்புலம் நன்றாக வந்திருக்கும், ஆனால் கதையில் என்ன பாயின்ட் என்று எனக்கு தெளிவாகவில்லை.

மற்ற இந்திய மொழி எழுத்தாளர்களை பற்றி நாம் அவ்வளவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது, அப்படியே படித்தாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமே தெரிந்து கொள்வது நம் துரதிருஷ்டம். இது போன்ற லிஸ்டுகள் கொஞ்சமாவது உதவுகின்றன.

கொல்லப்புடி குறிப்பிடும் மற்ற புத்தகங்கள்

 1. விஸ்வநாத சத்யநாராயணாவின் ஏகவீரா
 2. புச்சி பாபுவின் சிவரகு மிகிலேதி
 3. ரா. விஸ்வநாத சாஸ்திரியின் அல்பஜீவி
 4. ஸ்ரீ ஸ்ரீயின் மஹாப்ரஸ்தானம்
 5. ஸ்ரீபாதா சுப்பிரமணிய சாஸ்திரியின் அனுபவாலு-ஞாபகாலு
 6. கல்லகூரி நாரயணராவின் வரவிக்ரயம்
 7. கொல்லப்புடி மாருதிராவின் கள்ளு, சாயங்காலாமாயிந்தி
 8. வத்தேரா சண்டிதாசின் ஹிமஜ்வாலா
 9. த்ரிபுரனேனி கோபிசந்தின் கதைகள்
 10. தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் கெயிஷ்ன பக்ஷம்

அல்பஜீவி ஜெயமோகனும் “சிபாரிசு” செய்யும் நாவல். தெலுங்கில் எதுவுமே தேறவில்லை, இருப்பதில் இதுதான் பெஸ்ட் என்று அலுத்துக் கொண்டே பரிந்துரைக்கிறார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட முக்கியமான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிற மொழிப் புத்தகங்கள் என்ற லிஸ்டில் அவர் குறிப்பிடும் தெலுங்குப் புத்தகங்கள்:

 1. அவன் காட்டை வென்றான், ஆர். கேசவ ரெட்டி, தமிழாக்கம் எதிராஜுலு
 2. கடைசியில் இதுதான் மிச்சம், ஆர். புச்சிபாபு, தமிழாக்கம் பி.வி. சுப்ரமணியம்
 3. கறுப்பு மண், பாலகும்மி பத்மராஜு, தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்
 4. யாகம், காலிபட்டினம் ராமராவு, தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்
 5. ஏமாற்றப்பட்ட தம்பி, பலிவாடா காந்தாராவ், தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்
 6. காகித மாளிகை, முப்பால ரங்கநாயகம்ம, தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்

தொடர்புடைய சுட்டிகள்: கொல்லப்புடி பற்றி விக்கியில்