எனக்கு எது இலக்கியம்?

தரையில் இறங்கும் விமானங்கள் எனக்கு இலக்கியமே என்று சொன்னதைக் கண்டு ரமணன், ராஜ்சந்திரா, எஸ்செக்ஸ் சிவா வியப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் ரியாக்ஷன் எனக்கு எது இலக்கியமாகத் தெரிகிறது என்று என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.

எனக்கு வணிக எழுத்து, சீரிய எழுத்து போன்ற பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லை. வசதிக்காக சில சமயம் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன், அவ்வளவுதான். இலக்கியம், இலக்கியம் இல்லை என்ற பாகுபாடுதான் எனக்கு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. எழுதியது விற்கிறதா இல்லையா என்பதை வைத்து அதன் தரத்தை நிர்ணயிப்பதில் எனக்கு சம்மதமில்லை. ஜெயகாந்தனும் அசோகமித்ரனும் விகடனில், குமுதத்தில் எழுதியது இலக்கியமே. சாண்டில்யன் கணையாழியில் எழுதி இருந்தாலும் அது எனக்கு இலக்கியம் ஆகாது. ராஜேஷ்குமார் டைப் எழுத்துகளை சுலபமாக அடையாளம் காட்டும் ஒரு பேர்தான் எனக்கு வணிக எழுத்து.

யோசிக்க வைக்கும் படைப்புகள்; சித்தாந்தங்கள்+பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை அசைக்கும் படைப்புகள்; உண்மையான மனிதர்கள், உணர்ச்சிகள், சூழல்களின் சித்தரிப்பு; மனிதர்களின் உயர்வுகளை, தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுவது; அபூர்வமாக, ஒரு அருமையான framework, அதை விவரிக்கும் படைப்புகள்; மனிதர்களின் பண்பாட்டை, அனுபவங்களை சில வரிகளில் காட்டும் கவிதைகள் இவை எல்லாம் எனக்கு இலக்கியமாகத் தெரிகின்றன. இவை எல்லாம் எனக்கு மன எழுச்சியைத் தருகின்றன, இல்லாவிட்டால் யோசிக்க வைக்கின்றன, இல்லாவிட்டால் நுணுக்கங்கள், நுட்பங்கள் நிறைந்த படைப்பாக இருக்கின்றன. மன எழுச்சியைத் தருபவற்றை நான் அனேகமாக மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறேன். என்னை யோசிக்க (மட்டும்) வைக்கும் படைப்புகளுக்கு அனேகமாக இரண்டாம் வரிசை. என் இதயம், புத்தி இரண்டையும் தொடாமல் என் ரசனை, அழகுணர்ச்சி வரை மட்டுமே வரும் படைப்புகளுக்கு அனேகமாக மூன்றாவது இடம் அளிக்கிறேன். இந்த மூன்றாவது வரிசையில் உட்காரும் படைப்புகளில் அனேகமாக நுட்பம், நுணுக்கம், framework என்று ஏதாவது ஒன்று இருக்கும். இன்னொரு விதமாகச் சொன்னால் நுட்பம், நுணுக்கம் இத்யாதியை நான் craft என்ற அளவில் மதிக்கிறேன். மன எழுச்சியைத் தூண்டுபவை எனக்கு art.

சுருக்கமாகச் சொன்னால் நான் இலக்கியம் என்று கருதும் எல்லாப் படைப்புகளுமே என் அழகுணர்ச்சி, ரசனை போன்றவற்றுக்கு அப்பீல் ஆக வேண்டும். அதோடு நின்றுவிடாமல் என் புத்தி வரைக்கும் போய் மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைக்கும் படைப்புகள், எனக்கு மன எழுச்சியைத் தரும் படைப்புகளுக்கு இன்னும் உயர்ந்த இடம் தருகிறேன்.

அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் இருக்கக்கூடிய அருமையான உறவைக் காட்டும் To Kill A Mockingbird எனக்கு உயர்ந்த இலக்கியம். ஒவ்வொரு முறை படிக்கும்போது நான் மன எழுச்சி அடைகிறேன். இது எனக்குப் பெண்கள் பிறப்பதற்கு பல வருஷங்கள் முன்னாலேயே ஆரம்பித்த விஷயம். ஒரு காலத்தில் என் உறவினர்கள், நண்பிகள், நண்பர்களின் மனைவிகள் எல்லாரும் கர்ப்பம் ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பேன். என் தங்கைகள் உட்பட யாரும் படித்ததில்லை. 🙂 ஆனால் அது ஆய்வாளர்களின் லிஸ்டில் அநேகமாகத் தென்படுவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் அதை சீந்தக் கூட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அப்படி சீந்தாவிட்டால் அது ஜெயமோகனின் குறைபாடு என்றும் நினைக்கிறேன்.) Mockingbird மட்டுமல்ல, போரின் தேவையற்ற தன்மையை விவரிக்கும் All Quite on the Western Front, இரண்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத விஷ்ணுபுரம், அமைப்புகளின் குரூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பின் தொடரும் நிழலின் குரல், புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள், புரியும்போதெல்லாம் டங்கென்று மண்டையில் அடிக்கும் அசோகமித்ரனின் பல படைப்புகள், அறம் சீரிஸ் சிறுகதைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை என் ரசனை வழியாக என்னைத் தாக்குகின்றன என்றே சொல்லலாம். இந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது எனக்கு பல முறை லிட்டரலாக ஜிவ்வென்று மண்டையில் ஏறும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பல முறை அப்படியே உட்கார்ந்து படித்ததை அசை போடத் தோன்றும். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற வரியைப் படித்த கணத்தில் பல காலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த கற்பு, ஆண்-பெண் உறவு கருத்தாக்கங்கள் சுக்குநூறாக உடைந்தன, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். எனக்கு மன எழுச்சியும் தந்து சிந்தனையையும் தூண்டிய படைப்பு இது. இது போன்ற படைப்புகளைத்தான் முதல் இடத்தில் வைக்கிறேன்.

யோசிக்க மட்டும் வைக்கும் படைப்புகள் என்பது பல முறை SF-இல் எனக்கு நேர்கிறது. உர்சுலா லே க்வின் எழுதிய ஒரு கதையில் மனிதர்களுக்கும் ஒரு சீசனில் மட்டும்தான் செக்ஸ் உணர்வுகள் வரும், அப்போது அவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இஷ்டம் போல மாறிக் கொள்ளலாம். அவர் எழுதியது கொஞ்சம்தான், ஆனால் எனக்கு அம்மா, அப்பா, குடும்பம், இதெல்லாம் இந்த செட்டப்பில் எப்படி இருக்கும் என்று நிறைய யோசனை வந்தது. பைரப்பாவின் பர்வா, தாண்டு, அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்று SF தவிர்த்தும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பர்வா, தாண்டு, அசோகமித்திரன் படைப்புகள் எனக்கு மன எழுச்சியையும் தருகின்றன என்பதால் அவை முதல் வரிசைக்குப் போய்விடுகின்றன.

ரசனைக்கு மட்டும் அப்பீல் ஆகும் கதைகள் என்று ஷெர்லாக் ஹோம்ஸ் (சுவாரசியம்), பொன்னியின் செல்வன் (கதைப்பின்னல் என்ற தொழில்நுட்பம்), வாசவேஸ்வரம் (உண்மையான சித்தரிப்பு), நிர்வாண நகரம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவை Strand பத்திரிகையில், கல்கியில், சாவியில் வந்தவை என்பதால் மட்டுமே வணிக எழுத்து ஆகிவிடாது. இவற்றில் பலவற்றை நான் minor classic என்று வகைப்படுத்துவேன். அவற்றின் சாதனை ஒரு புதுமைப்பித்தனை விட குறைவு, அவ்வளவுதான். ஐம்பது செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் அளவுக்கு குண்டப்பா விஸ்வநாத் சாதிக்கவில்லை என்பதால் அவர் மோசமான பாட்ஸ்மன் ஆகிவிடுவாரா என்ன?

த.இ. விமானங்கள் எனக்கு மூன்றாவது வகை இலக்கியம். Minor classic. உண்மையான மனிதர்கள், சித்தரிப்பு, மனதைத் தொடும் சில சீன்கள் இருக்கின்றன. கதைக்கு யூனிவர்சல் அப்பீல் இருக்கிறது. இந்தக் கதை போலந்தில் ஒரு யூதக் குடும்பத்தில், என் பக்கத்து வீட்டில் ஒரு மெக்சிகன் குடும்பத்தில், தாய்லாந்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் நிகழலாம், நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அது விகடனில் வந்தது, இந்துமதி எழுதியது போன்ற சாரமற்ற காரணங்களுக்காக என்னால் நிராகரிக்க முடியாது.

நேரடியாகச் சொல்லப்படும் கதைதானே, அது எப்படி இலக்கியம் ஆகும் என்று சிலர் யோசிக்கலாம். ஜெயமோகன் போன்ற நான் மிகவும் மதிக்கும் விமர்சகர்கள் சில சமயம் நேரடியாகச் சொல்லப்படுவதை ஒரு குறையாகச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. நேரடியாகக் கதை சொல்லுவது, subtle ஆக சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் ஒரு லிடரரி டெக்னிக். ஒரு டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாகாது.

மன எழுச்சி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடத்தான் செய்யும். அது subjective விஷயம். எனக்கு மன எழுச்சி தரும் படைப்பு உங்களுக்கு வெட்டியாகத் தெரியலாம். அதனால் இலக்கியமா இல்லையா என்று எப்படி பொதுவாக நிர்ணயிப்பது என்ற கேள்வி எழலாம். அது அர்த்தம் இல்லாத கேள்வி. ரசனைதானே தரம் பிரிப்பதன் அடிப்படை? இரட்டைப் பிறவிகளுக்கு கூட ரசனை நூறு சதவிகிதம் ஒத்துப் போகாது! காலப்போக்கில் தானாக அவ்வளவு தரம் இல்லாத, ஆனால் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நூல்கள் மறக்கப்படுகின்றன. அந்த ஜனநாயக முறையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

உணர்ச்சிகளைத் தூண்டும் படைப்புகள் எல்லாம் மன எழுச்சி தரும் படைப்புகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். என்னால் சிம்பிள் கதையான லவ் ஸ்டோரி-யின் கடைசி பக்கங்களை கண்ணில் நீர் வராமல் படிக்க முடிந்ததே இல்லை. அப்பா-பிள்ளை சீன் வந்துவிட்டால் ஒரு வேளை நான் உணர்ச்சிவசப்படுகிறேனோ என்னவோ. அதை நான் மன எழுச்சி லிஸ்டில் சேர்ப்பதில்லை. மூன்றாவது பட்டியலில்தான் சேர்ப்பேன்.

எது இலக்கியம் என்று என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எது நூறு ஆண்டுகளுக்கு மேல் நிற்கும், எது காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும் என்று கண்டுபிடிக்க ஃபார்முலா உண்டா என்று தேடி இருக்கிறேன். இதைப் பற்றிய எனது எண்ணங்கள் எதுவும் இறுதியானவை இல்லை. ஆனால் இந்தப் பதிவில் காலம் தாண்டி நிற்கும் இலக்கியம் என்பதை எல்லாம் அடையாளம் காண நான் முயற்சிக்கவில்லை. இன்று நான் எதை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக்க மட்டும்தான் முயற்சி செய்திருக்கிறேன்.

இதைப் பற்றி எல்லாம் எழுதுவதின் ஒரே பயன் கருத்துப் பரிமாற்றம்தான். என் வரையறை உங்களுக்கு சரிப்படாமல் போகலாம். மன எழுச்சியாவது மயிராவது என்று நீங்கள் நினைக்கலாம். மேலே பேசுவோமே! இலக்கியத்துக்கு உங்கள் வரையறை என்ன? மறுமொழியிலோ இல்லை உங்கள் ப்ளாகிலோ எழுதி சுட்டி கொடுங்கள்!

அனுபந்தம்

சிரில் அலெக்சின் வரையறை:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

எது காலத்தை வெல்லும் இலக்கியம் பதிவுக்கு எழுதிய மறுமொழியில் ஜெயமோகன் சொன்னது:

நூறாண்டு தாங்கும் படைப்பு எது? இதுவரை தாங்கிய படைப்புகளை வைத்து இப்படிச் சொல்லலாம்.

  1. தொன்மமாக மாறும் படிமத் தன்மை கொண்டது
  2. கலாச்சாரம் சம்பந்தமான பேச்சுகளில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது
  3. எளிதில் வாயால் சொல்லத்தக்கது
  4. நடை, உத்தி போன்றவற்றை நம்பாமல் பண்பாட்டின் சாராம்சமான ஒன்றை வரையறுத்து கூறும் கருவாலேயே நிலைநிற்கும் படைப்பு

தொடர்புள்ள சுட்டிகள்:
ஏன் படிக்கிறேன்?
எது நல்ல இலக்கியம்?சிரில் அலெக்ஸ்
எது காலத்தை வெல்லும் இலக்கியம்?

11 thoughts on “எனக்கு எது இலக்கியம்?

  1. கலை கலைக்காகவே(Art for art sake) அல்லது கலைமூலமாக பூடமாக சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு கருத்து சொல்லவேண்டும் என்று இரண்டு விதமான school of thoughts உண்டு. ஒரு நாட்டியத்தையோ ஒரு இசையையோ எந்த நோக்கமும் இன்றி அதன் அனுபவத்திற்காகவே ரசிப்பதுபோன்று ரசிக்கக்கூடிய இலக்கியமும் இலக்கியம்தான். Didactic literature என்று சொல்லக்கூடிய கருத்துசொல்வதற்காகவே எழுதப்படுககின்ற இலக்கியமும் இலக்கியம்தான். ஆனால் அதில் போதனைகள் துருத்திக்கொண்டிராமல் பூடமாக சொல்லப்பட்டால்தான் அது ரசனைக்குறியதாகும். தரையில் இறங்ககும் விமானங்கள் எழுதப்பட்ட காலகட்டத்தில் ஏதோ ஒரு வகையில் தங்களை அந்த கதாபாத்திரதோடு இனங்கண்டு கொள்ளப்பட்டு எல்லோரர்லும் சிலாகிக்கப்பட்ட கதைதான்.நிச்சயமாக அதற்கு இலக்கிய அந்தஸ்து உண்டு.

    Like

  2. உங்கள் அளவுக்கு ஆழ்ந்த பரந்த வாசிப்பு இல்லை எனினும் நான் நினைத்திருந்தனவற்றை அப்படியே வார்த்தைகளில் இலக்கியமாக வடித்திருக்கிறீர்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சுட்டிகளுக்கு மிக்க நன்றி

    Like

  3. நம் வாழ்வோடு ஒன்றி வரும் புத்தகங்கள்(உதாரணம்- தரையில் இறங்கும் விமானங்கள்), அல்லது நம் வாழ்விலிருந்து நம்மை துண்டித்து புதியதோர் உலகில் நம்மை கொண்டு செல்லும் புத்தகங்கள்(உதாரணம்- விஷ்ணுபுரம்) எல்லோமே சிறந்தவைதான் என்னைப்பொருத்தவரை.

    Like

  4. ஆர்வி,

    இன்றுதான் இந்தப் பதிவை முழுக்கப் படிக்க முடிந்தது. நன்றி. நல்ல effort எடுத்து எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு முறை தெளிவாகப் படிக்கவேண்டும். பிறகு discussion-ல் கலந்து கொள்கிறேன்.

    Like

  5. தண்டபாணி, எனக்குப் பொதுவாக பிரச்சார நோக்கத்துடன் எழுதப்படும் புனைவுகள் இலக்கியமாகத் தெரிவதில்லை.
    பாலராஜன்கீதா, எனக்கு பரந்த வாசிப்பு உண்டு, ஆழ்ந்த வாசிப்பு உண்டா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.
    சித்திரவீதிக்காரன், நீங்கள் சொல்வதை வழிமொழிகிறேன்.
    ராஜ்சந்திரா, காத்திருக்கிறேன்.

    Like

  6. ஆர்வி,
    பெரிய பதிவாய்தான் இருக்கிறது!

    ஒவ்வொருத்தருக்கும் ஒரு அலகு – வணிக/சீரிய எழுத்து,
    இலக்கியம்/அஇலக்கியம்.

    நான் இப்படி ஆரம்பிக்கிறேன்.
    முதலில் எனக்கு ‘பிடித்திருக்கிறது/ மனதில் நிற்கிறது’.

    இரண்டாவது ஏன் பிடித்திருக்கிறது, ஏன் மனதில் நிற்கிறது?

    நீங்கள் உபயோகித்த வார்த்தைகளையே எடுத்துக் கொண்டால் – மன எழுச்சி, உண்மையான உணர்ச்சிகள், சூழல்களின் சித்தரிப்பு; மனிதர்களின் உயர்வுகளை, தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுவது – முழுமையாக ஒத்துப் போகிறேன்.
    அப்புறம் சுவாரசியமான படைப்புகள் (உ.தா:டாக்டர் வாட்சனின் நண்பர்).

    ஆனால் ஒரளவிற்கு மேல் என்னால் ‘உள்ளே போய்’ ஏன் பிடித்திருக்கிறது/இல்லை என்று பார்க்க முடியவில்லை,
    Master chef மாதிரி இந்த பண்டம் 110 டிகிரியில் bake செய்ததால், இந்த பர்செண்டெஜில் கலவை இருந்ததால், இன்னெல்லாம் சேர்ந்திருந்ததால் நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என்றெல்லாம் சொல்லமுடியவில்லை; நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது!
    அந்த மாதிரி சொல்வதிற்கு இன்னும் நிறைய அகல மற்றும் ஆழ படித்திருக்க வேண்டும்; நான் இன்னும் அந்த ரேஞ்சில் இல்லை (தன்னடக்கம் எல்லாம் இல்லை, உண்மை நிலை அதுதான்!).
    ஒரு மாதிரி, முன்னால் இருக்கும் பண்டம் நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது.

    இதில் இன்னொன்று சொல்ல வேண்டும் – நமது ரசனைகள் வயதிற்கு, பெறும் அனுபவங்களுக்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டே இருக்கின்றன.
    இருபது வயதில் பிடித்தவை அடுத்த பதினைந்து வருடங்களில் அதே statusல் இருப்பதில்லை, பெரும்பாலும்.
    இப்போது இணையம் வந்த பிறகு ரசனைகளை பரிமாறிக்கொள்வது, தேர்ந்த விமரிசகர்கள் (உ.தா: வெ.சா, ஜெமொ) மூலம் கண் சோதனையில் மாற்றப்படும் சோதனைக் கண்ணாடிகள் மாதிரி நமது பார்வைகள் மேம்படுத்த /மாற்றப்பட சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
    (ஆனால் மாறுவது நமது ரசனையைப் பொறுத்துதான். Our own taste is the final call)

    உங்களுக்கு To Kill A Mockingbird மாதிரி எனக்கு ‘அதிகாலையின் அமைதியில்’ என்ற ருஷ்ய நாவல். அனேகமாய் யாருடைய லிஸ்ட்லையும் இருக்காது!
    சாதாரண இன்னொரு ருஷ்ய இரண்டாம் உலகப் போர் த்ரில்லர் என்று ஒதுக்கிவிட முடிவதில்லை. அதற்கு மேலே அதில் என்னவோ இருக்கிறது. எனக்கு…

    சில சமயம் இப்படித் தோன்றுகிறது. சில பாடல்கள்/திரைப்படங்கள் சுமாராகத்தான் மற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் நமக்கு மிகப் பிடித்திருக்கும் – அதை கேட்ட போது இருந்த சூழ்நிலை, மனநிலை, இப்படி நிறைய…
    அது மாதிரி சில கதைகளை சொல்லலாம் என்று படுகிறது.
    சுமாரான கதைகள்தான். ஆனால் அதை பல வருடங்களுக்குப் பின் படிக்கும் போது அது பழைய நினைவுகளையும் கொண்டு தருவதால் நமக்கு ஒரு ‘soft corner’…
    இது ஒரு உரத்த சிந்தனைதான். சரியாக இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை.

    இப்படி நிறைய பேசிக் கொண்டே போகலாம்!

    இதுவே பெரியதாய் போய்விட்டது என்று நினைக்கிறேன்.
    இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடருவோம்!
    நன்றி

    Essex சிவா

    Like

    1. சிவா,
      // ஆனால் ஒரளவிற்கு மேல் என்னால் ‘உள்ளே போய்’ ஏன் பிடித்திருக்கிறது/இல்லை என்று பார்க்க முடியவில்லை // எனக்கும் அப்படித்தான்.
      // நமது ரசனைகள் வயதிற்கு, பெறும் அனுபவங்களுக்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டே இருக்கின்றன. // உண்மை.
      // உங்களுக்கு To Kill A Mockingbird மாதிரி எனக்கு ‘அதிகாலையின் அமைதியில்’ என்ற ருஷ்ய நாவல். // யார் எழுதியது?

      Like

  7. ஆர்வி

    ”இலக்கியம்” குறித்து எனது சிம்பிளான கருத்து : எந்த ஒரு படைப்பு தலைமுறைகளைக் கடந்தும் நிற்கிறதோ, வாசகர்களை ஈர்க்கிறதோ, வாசக கவனத்தில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறதோ அது இலக்கியம்.

    பாரதியும், புதுமைப்பித்தனும் அதனால்தான் இன்னமும் போற்றப்படுகின்றனர். நினைவில் நிற்கின்றனர்.ஜானகிராமன்? – அசோகமித்திரன் சொன்னது மாதிரி அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. அதே தான் மற்றைய படைப்பாளிகளுக்கும். ஒருகாலத்தில் நா.பா. மு.வ. அகிலன் எல்லாம் மிகப் பெரிய இலக்கியவாதிகளாக மதிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. அவர்களை அழகியல் எழுத்தாளர்களாக, அலங்காரப் படைப்பாளிகளாகவே பலர் கருதுகின்றனர் ( ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை)

    ஆனால் வயது, முதிர்ச்சி, அனுபவங்களுக்கேற்ற மாதிரி இலக்கிய ரசனையும் மாறிக் கொண்டே தான் இருக்கிறது என்பது உண்மை.

    Like

    1. ரமணன், // எந்த ஒரு படைப்பு தலைமுறைகளைக் கடந்தும் நிற்கிறதோ, வாசகர்களை ஈர்க்கிறதோ, வாசக கவனத்தில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறதோ அது இலக்கியம். //
      ஆமோதிக்கிறேன்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.