வைரமுத்துவின் “கள்ளிக்காட்டு இதிகாசம்” – விருதா புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம். விருதுகள் கவுரவம் இழப்பதற்கு இது போன்ற புத்தகங்கள்தான் காரணம்.

வைரமுத்துவுக்கு இலக்கியம் படைக்கும் ஆசை இருக்கிறது. அதற்கு வேண்டிய சொந்த அனுபவம் இருக்கிறது. நல்ல களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் ஒரு சாதாரணக் கதையைத்தான் எழுத முடிந்திருக்கிறது.

பேயத்தேவரின் சிரமமான வாழ்க்கை என்று சுருக்கமாகச் சொல்லலாம். மனைவி, “கீழ்” ஜாதியைச் சேர்ந்த பழைய காதலி, சண்டியர் மகன், அப்பனை கஷ்டப்படுத்தி பணம் பிடுங்கியாவது வாழத் துடிக்கும் மகள், மகளின் முதல் கணவன் வழிப்பேரன் என்று சில பாத்திரங்கள். வைகை அணை கட்டி சில பல கிராமங்கள் முழுகியதுதான் கதையின் உச்சகட்டமாக வைத்திருக்கிறார். போரடிக்கும் ஃபார்முலா கதை. பேயத்தேவருக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வந்துகொண்டே இருப்பது அலுப்பைத் தருகிறது. செயற்கையாக, மெலோடிராமாவாக இருக்கிறது. பேயத்தேவர் சோதனை மேல் சோதனை என்று பாடாததுதான் பாக்கி. இவர் பூமணியின் “பிறகு” போன்ற நாவல்களைப் படித்தாவது சிரமமான வாழ்க்கையை எப்படி படைப்பில் கொண்டு வருவது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

கதையின் ஒரே பலம் வார்த்தைப் பிரயோகங்களும், நுண்விவரங்களும்தான். “வருச நாட்டு யானையே கோமணம் இல்லாம அலையுது”, மாடுகளின் ஏறுபூரான் சுழி, இறங்குபூரான் சுழி என்றெல்லாம் நிறைய எடுத்துவிடுகிறார். சிவசங்கரியின் “பாலங்கள்” புத்தகத்தை நினைவுபடுத்தியது. அதிலும் நுண்விவரங்கள், preparation எல்லாம் உண்டு, ஆனால் அவரும் வெற்றி அடையவில்லை.

இங்கே மின்நூலாகக் கிடைக்கிறது.

படிக்கலாம். சாஹித்ய அகாடமி கிடைத்திருக்காவிட்டால் (ஒரு வேளை “வாங்கி” இருக்காவிட்டால்) இவ்வளவு கோபம் வராது. தோல்வி அடைந்த, ஆனால் sincere ஆன முயற்சி என்று குறிப்பிட்டிருப்பேன். இப்போது இந்த விருதா புத்தகத்துக்கெல்லாம் ஒரு விருதா (வைரமுத்துவைப் பற்றி எழுதினால் வாலி ஸ்டைலில் சிலேடை வருகிறதே!) என்ற கடுப்புதான் முன்னே நிற்கிறது.

இதே template-ஐ வைத்து எழுதப்பட்ட இன்னொரு புத்தகம் ‘கருவாச்சி காவியம்‘. ‘பத்தினிக்கு இன்னல் வரும் தீரவே தீராது” என்பதுதான் கதைச்சுருக்கம். இந்த நாவலை விட எக்கச்சக்க நுண்விவரங்கள். கருவாட்டுக் குழம்பு எப்படி வைப்பது, கள்ளிப் பழத்தை எப்படி பறிப்பது என்று நுண்விவரங்களை கொட்டி இருக்கிறார். ஆனால் அவை புகுத்தப்பட்டிருப்பது செயற்கையாக இருக்கிறது. தட்டையான கதாபாத்திரங்கள், cliche-க்கள் நிறைந்த கதை, வலிந்து புகுத்தப்பட்ட நுண்விவரங்கள் என்று பல குறைகள் இருந்தாலும் நுண்விவரங்களுக்காகப் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், விருதுகள்