ஜெயகாந்தனின் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்”

புதுமைப்பித்தன், அசோகமித்திரன் மாதிரி பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துகளால் மட்டும்தான் அறியப்படுகிறார்கள். ஜெயகாந்தனோ ஹீரோ. சுந்தரராமசாமி ஜெயகாந்தன் ஒரு பொது மேடையில் மந்திரிகள் எதிரில் (காமராஜும் இருந்தாரோ என்னவோ நினைவில்லை) கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்ததை நினைவு கூர்கிறார். அண்ணாதுரை இறந்து தமிழ்நாடே அழுது புலம்பும் வேளையில் நேற்று வரை விமர்சித்தவர் இன்று இறந்துவிட்டதால் பொய்யாகப் பாராட்டிப் பேச முடியாது என்று முழங்கியவர் அவர். விகடனும் குமுதமும் அவர் எழுத்துக்களை விரும்பிப் பதித்தன. அக்னிப்பிரவேசம் போன்ற ஒரு சிறுகதையை விகடனில் பதிப்பதற்குத் தர துணிச்சல் வேண்டும். இன்றும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அவருடைய ஆளுமை என்பது என் தலைமுறைக்காரர்களுக்கே அவ்வளவாகத் தெரியாத விஷயம். ஆனால் எழுத்தை மீறிய ஆளுமை உண்டு என்று தெரிந்திருக்கும். இந்தப் புத்தகம் அதை ஓரளவு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1945-75 காலகட்ட அனுபவங்களை இதில் எழுதி இருக்கிறார். எனக்கு விசேஷமாகத் தெரிவது அவர் உண்டாக்கிக் கொண்ட உறவுகள், சமரசம் அற்ற நேர்மை, தன நிறைகுறைகளை, நெருங்கிப் பழைய நண்பர்களின் குணங்களை மறைக்காமல் பேசும் தைரியம்.

சிறு வயதிலேயே கலை உலகத் தொடர்பு துவங்கிவிட்டது. சின்னச் சின்ன வேஷம் போட்டுப் பார்த்திருக்கிறார். சிறு வயதினருக்கே உரிய naivete இருந்திருக்கிறது. நல்லதம்பி திரைப்படத்தில் மதுவிலக்கைப் பற்றி ஆயிரம் பேசிவிட்டு வீட்டுக்குள் தண்ணி அடிக்கும் பிரமுகர்களை (என்எஸ்கே, அண்ணா?) பேர் சொல்லாமல் சாடுகிறார். தமிழ் ஒளியுடன் நண்பராக இருந்து அவர் போட்ட வேஷத்தை வெளிப்படையாக விவரிக்கிறார். விந்தன், சந்திரபாபு போன்றொரு இருந்த நட்பைப் பற்றி பேசுகிறார். திரைப்படம் இயக்கியது, வெற்றி/தோல்வி அடைந்த படங்கள், செலவு, கதைகளை கொடுத்த அனுபவங்கள், பீம்சிங், சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பல அனுபவங்களை எழுதி இருக்கிறார். தான் இயக்கிய “யாருக்காக அழுதான்” படத்தையே கிழிகிழி என்று கிழிக்கிறார்.

தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.

புத்தகத்தின் சிறந்த பகுதி என்று சந்திரபாபுவின் நட்பைப் பற்றிப் பேசும் பகுதியைத்தான் சொல்வேன். இரண்டு சுவாரசியமான ஆளுமைகளின் நட்பு அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கக் கேட்பானேன்? சினிமா ஆசையால் நீர்த்துப் போனவர் என்று விந்தனைப் பற்றி குறிப்பிடுகிறார், அது உண்மைதான் என்று நினைக்கிறேன்.

வேறு சில titbits: விந்தனின் “அன்பு அலறுகிறது” என்ற புத்தகத்தின் முதல் இரண்டு சாப்டர் மட்டும்தான் அவர் எழுதினாராம், மிச்சத்தை எழுதியது ஜெயகாந்தன்தானாம். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை எழுதியது கா.மு. ஷெரிஃப், பேரை வேறு யாரோ தட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்று இவர் எழுத, கண்ணதாசன் தான்தான் எழுதினேன் என்று மறுத்திருக்கிறார்.

எனக்கு நா.பா.வின் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவரது கனவு இப்படிப்பட்ட ஒரு மனிதனாக வாழ்வதுதான் என்று சமுதாய வீதி புத்தகத்திலிருந்து யூகிக்கிறேன்.

முக்கியமான ஆவணம். சுவாரசியமும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன், சினிமா

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயகாந்தனும் சினிமாவும்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – திரைப்படம்
ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’
அம்ஷன்குமார் எழுதிய கட்டுரை

5 thoughts on “ஜெயகாந்தனின் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்”

  1. ஜெயகாந்தன் உண்மையிலேயே ஹீரோதான். மதுரை புத்தகத்திருவிழாவில் ஒருமுறை அவர் பேசும்போது பார்த்தேன். அவரைப் பார்த்ததும் சிங்கம் போலத் தோன்றியது. அவரது சில சிறுகதைகள், ஓரிரு நாவல்கள், கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். அவர் எடுத்த திரைப்படங்களைத்தான் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பகிர்விற்கு நன்றி.

    Like

  2. ஆர்.வி, – ஜெயகாந்தனை இன்று ஒரு ஆஸ்பத்திரியில் சந்தித்தேன். சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து டாக்டரை பார்க்க வந்திருந்தார். மிக இளைத்து, மீசை மட்டும் இல்லாமல் இருந்தால் அடையாளமே தெரிந்து இருக்காது, கூட்டி வந்தவரிடம் இவர் ஜெ.கா வா என கேட்டேன். எனக்கு அவரை அடையாளம் தெரிந்ததை கண்டே அவை ஆச்சரியப்பட்டார். அவர் எழுத்து நிறைய படித்திருக்கிறேன் என்று கேட்டு மேலும் அதிசயப்பட்டார். இப்ப இருக்கறவங்களுக்கெல்லாம் அடையாளமே தெரிவதில்லை என்று அங்கலாய்த்தார்.வந்து பேசச் சொன்னார். அந்த ஞூழலில் போய் பேச தயக்கமாக இருந்தது. இன்னொரு முறை வருவதாக சொல்லி விட்டு சென்றேன். திரும்பி வந்தவுடன் அவரிடம் ஒரு இளம்!! வாசகி என சொன்னேன், சந்திக்க விரும்புகிறார் என்றார். சென்று வணக்கம் சொன்னேன். சிரித்து சந்தோஷபட்டார். ஆனால் ஒரு சிறு குழந்தையை போல் இருந்த அவரை அவ்விதம் அங்கு பார்க்க எனக்கு தான் மிக கஷ்டமாக இருந்தது. உடனே வேறு ஒரு நாள் வீட்டில் வந்து சந்திப்பதாக சொல்லி விடை பெற்றேன்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.