சுஜாதாவின் “மேற்கே ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

மாத நாவலாக வந்தபோது படித்திருக்கிறேன், it was delightful then. நண்பர் கூட்டம் எல்லாருமே சுஜாதா பக்தர்களாக மாறிக் கொண்டிருந்த தருணம் அது. மீண்டும் சமீபத்தில் படிக்க முடிந்தது. இப்போதும் பிடித்திருக்கிறது.

சிம்பிளான மர்மம்தான் என்றாலும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. டென்ஷனோடு கணேஷைப் பார்க்க வரும் ஒரு பெண்ணை கோர்ட்டில் பிசியாக இருக்கும் கணேஷ் காத்திருக்கச் சொல்கிறான். கணேஷ் வருவதற்குள் போய்விடும் அந்தப் பெண் அன்றே ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்தல்ல, கொலை என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள். அவள் ஒன்றும் சொல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட மாதிரி நடிக்கிறார்கள். வில்லன்கள் இவர்களைக் கடத்தி கொள்ளப்போகும்போது அந்தப் பெண் செய்து தருவதாக சொன்ன காரியத்தை தாங்கள் முடித்துத் தருவதாக பேரம் பேசுகிறார்கள். ஜெர்மனிக்குப் போகிறார்கள். என்ன காரியம் என்று அவர்களுக்கே தெரியாது என்பதுதான் ஒரே பிரச்சினை. கணேஷிடம் இருக்கும் ஒரே க்ளூ அந்தப் பெண் கணேஷுக்காக காத்திருக்கும்போது வரைந்துவிட்டுப் போன doodles-தான். வட்ட வட்டமாக வரைந்திருக்கிறது. பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கதையில் எப்போதும் ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் வசந்த் பாத்திரம் அடிக்கும் கமெண்டுகள் சரியான அளவில் எல்லையைத் தாண்டுகின்றன. தமிழுக்கு உயர்தரமான த்ரில்லர். ஆங்கில த்ரில்லர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் படிக்கக் கூடிய த்ரில்லர்தான். ஒரு நல்ல ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகம் அளவில் இருக்கிறது. இன்றைக்கும் யாரும் அந்த அளவுக்குக் கூட போகவில்லை என்பது சோகம்தான்.

கிழக்கு பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறது. விலை எழுபது ரூபாய்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.