சுஜாதாவின் “மேற்கே ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

மாத நாவலாக வந்தபோது படித்திருக்கிறேன், it was delightful then. நண்பர் கூட்டம் எல்லாருமே சுஜாதா பக்தர்களாக மாறிக் கொண்டிருந்த தருணம் அது. மீண்டும் சமீபத்தில் படிக்க முடிந்தது. இப்போதும் பிடித்திருக்கிறது.

சிம்பிளான மர்மம்தான் என்றாலும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. டென்ஷனோடு கணேஷைப் பார்க்க வரும் ஒரு பெண்ணை கோர்ட்டில் பிசியாக இருக்கும் கணேஷ் காத்திருக்கச் சொல்கிறான். கணேஷ் வருவதற்குள் போய்விடும் அந்தப் பெண் அன்றே ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்தல்ல, கொலை என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள். அவள் ஒன்றும் சொல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட மாதிரி நடிக்கிறார்கள். வில்லன்கள் இவர்களைக் கடத்தி கொள்ளப்போகும்போது அந்தப் பெண் செய்து தருவதாக சொன்ன காரியத்தை தாங்கள் முடித்துத் தருவதாக பேரம் பேசுகிறார்கள். ஜெர்மனிக்குப் போகிறார்கள். என்ன காரியம் என்று அவர்களுக்கே தெரியாது என்பதுதான் ஒரே பிரச்சினை. கணேஷிடம் இருக்கும் ஒரே க்ளூ அந்தப் பெண் கணேஷுக்காக காத்திருக்கும்போது வரைந்துவிட்டுப் போன doodles-தான். வட்ட வட்டமாக வரைந்திருக்கிறது. பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கதையில் எப்போதும் ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் வசந்த் பாத்திரம் அடிக்கும் கமெண்டுகள் சரியான அளவில் எல்லையைத் தாண்டுகின்றன. தமிழுக்கு உயர்தரமான த்ரில்லர். ஆங்கில த்ரில்லர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் படிக்கக் கூடிய த்ரில்லர்தான். ஒரு நல்ல ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகம் அளவில் இருக்கிறது. இன்றைக்கும் யாரும் அந்த அளவுக்குக் கூட போகவில்லை என்பது சோகம்தான்.

கிழக்கு பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறது. விலை எழுபது ரூபாய்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

20 thoughts on “சுஜாதாவின் “மேற்கே ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

 1. இந்தப் புத்தகத்தை குமரி பதிப்பகமோ/விசாவோ/ திருமகளோ வெளியிட்டிருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். தொலைந்து போய் விட்டது. புத்தகச் சந்தையில் கிழக்கில் மீண்டும் வாங்க வேண்டும்.

  Like

  1. நிச்சயம். வாங்கி விடத் தான் போகிறேன். குமரி பதிப்பகம் (தற்போது இல்லை) அந்தக் காலத்தில் நிறைய சுஜாதாவின் நூல்களை வெளியிட்டார்கள். அவற்றை கிழக்கு மீண்டும் கொண்டு வருமாயின் நல்லது. வாங்கி விடலாம்.

   Like

 2. சுஜாதா எழுதிய “மூன்று குற்ற‌ங்க‌ள்”.

  1. மேற்கே ஒரு குற்ற‌ம்
  2. மீண்டும் ஒரு குற்ற‌ம்
  3. மேலும் ஒரு குற்ற‌ம்

  இந்த‌ மூணு கணேஷ்-வசந்த் க‌தைக‌ளையும் தொகுத்து ஒரே புத்தக‌மா வெளியிட்டிருக்காங்க‌, விசா ப‌ப்ளிகேஷ‌ன்ஸ். புத்த‌க‌ விலை Rs.130. ச‌த்திய‌மா குடுக்க‌ற‌ காசு வொர்த்.

  http://www.udumalai.com/?prd=&page=products&id=3015

  அனேக‌மா 1980க‌ள்ல‌ இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட‌ இன்ட்ர‌ஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை – முத‌ல் சில‌ பக்க‌ங்க‌ளில் நிறைய‌ எழுத்துப்பிழை. ப்ரூஃப் ரீட‌ர்க‌ளே, கொஞ்ச‌ம் பாத்து ப‌ண்ணுங்க‌ப்பா, த‌லைவ‌ர் எழுதின‌து, அதுக்காக‌வாவ‌து….

  Like

 3. Ramanan, Uyirmmai had released a good collection of “Ganesh-Vasanth” novellas. I have part I, but they release part II last year. I think that is worth, though it is a bit pricey. Kizhakku had released them individual books which is good so you can pick and choose, but I somehow prefer everything in one.

  1. மேற்கே ஒரு குற்ற‌ம்
  2. மீண்டும் ஒரு குற்ற‌ம்
  3. மேலும் ஒரு குற்ற‌ம்

  All of them are in Part I released by Uyirmmai,

  Like

 4. ஸ்ரீனிவாஸ், நானும் இந்த த்ரீ-இன்-ஒன் புத்தகத்தைத்தான் சமீபத்தில் படித்தேன்.
  ராஜ் சந்திரா, இரண்டு பார்ட்டையும் வாங்கிவிட வேண்டியதுதான். வேறு என்ன நாவல் எல்லாம் இந்த தொகுப்புகளில் இருக்கிறது என்று நினைவிருக்கிறதா?

  Like

 5. டியர் ஆர்.வி.
  நல்ல சுவாரஸ்யமான நாவல்தான், சந்தேகமேயில்லை. இந்நாவல் இன்னொரு வகையிலும் என்னால் மறக்க முடியாது. நூலகத்திலிருந்து அவசர கதியில் வீட்டுக்கு எடுத்துச்சென்று, முதல்வேலையாக இடைவெளிவிடாமல் படித்து வந்த நான், நாவலின் கடைசி மூன்று தாள்கள் கிழிக்கப்பட்டு, காணாமல் போயிருந்ததைப்பார்த்து நொந்துபோனேன். புதிதாக வாங்கிவிடுவோம் என்று நினைத்து எதற்கும் ரோட்டோர பழைய புத்தகக் கடையில் தேடிப்பார்ப்போம் என்று தேடியபோது, என்ன அதிசயம், இருந்தது. (இதனை பழைய புத்தகக்கடையில் போட்ட அந்த ரசனையில்லாத வாசகர் யாரென்று தெரியவில்லை). புத்தகத்தைக் கையில் எடுத்ததும் நான் செய்த முதல்வேலை, கடைசி ஐந்து தாள்களும் இருக்கின்றனவா என்று பார்த்ததுதான். புத்தகம் முழுமையாக இருந்தது. கடைக்காரர் கேட்ட விலையைக்கொடுத்து வாங்கி வந்தேன். (புத்தக விலையில் பாதிக்கும் குறைவாகவே அவர் கேட்டார்).

  Like

 6. ஆர்.வி. என்னிடம் part 1 இருக்கிறது. படித்துவிட்டு attic-ல் போட்டுவிட்டேன். மேலே ஏறும்போது எடுத்து லிஸ்ட் இங்கே பதிகிறேன்.

  Like

 7. சாரதா, இந்த மாதிரி புத்தகங்களில் கடைசி பக்கங்கள் இல்லை என்றால் பிரச்சினைதான்!
  ராஜ்சந்திரா, உங்கள் லிஸ்டுக்காக காத்திருக்கிறோம்.

  Like

 8. ஆர்.வி, இதோ லிஸ்ட்:

  1) பாதி ராஜ்யம்
  2) ஒரு விபத்தின் அனாடமி
  3) மாயா
  4) காயத்ரி
  5) விதி
  6) மேற்கே ஒரு குற்றம்
  7) மேலும் ஒரு குற்றம்
  8) உன்னைக் கண்ட நேரமெல்லாம்
  9) மீண்டும் ஒரு குற்றம்
  10) அம்மன் பதக்கம்
  11) மெரீனா
  12) புகார்…புகார்…புகார்
  13) ஐந்தாவது அத்தியாயம்

  மொத்தம் 646 பக்கங்கள். விலை: ரூ400.

  புத்தகத் தலைப்பு: சுஜாதாவின் குறுநாவல்கள் – மூன்றாம் தொகுதி – கணேஷ்-வசந்த்

  உடுமலையில் கிடைக்கிறது: http://udumalai.com/?prd=&page=products&id=2899
  நான்காம் தொகுதி – இதுவும் கணேஷ்-வசந்த் தொகுப்புகள்தான்…நான் இன்னும் வாங்கவில்லை – http://udumalai.com/?prd=sujathavin%20kurunaavalgal%204%20(Ganesh%20-%20vasanth)&page=products&id=9174

  Like

  1. ராஜ் சந்திரா, உங்கள் சுஜாதா குறுநாவல் லிஸ்டில் பாதிக்கு மேல் நான் இன்னும் படிக்கவில்லை, இந்தத் தொகுப்பை வாங்க வேண்டும்…

   Like

 9. சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் – வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன.
  இதில் உள்ள கதைகள் கீழ் வருமாறு:

  பாதி ராஜ்ஜியம்
  ஒரு விபத்தின் அனாடமி
  மாயா
  காயத்ரி
  விதி
  மேற்கே ஒரு குற்றம்
  மேலும் ஒரு குற்றம்
  உன்னைக் கண்ட நேரமெல்லாம்
  மீண்டும் ஒரு குற்றம்
  அம்மன் பதக்கம்
  மெரீனா
  புகார்..புகார்..புகார்
  ஐந்தாவது அத்தியாயம்.

  இனி கதைகளைப் பற்றி பார்ப்போம்.

  பாதி ராஜ்ஜியம்: நைலான் கயிற்றில் அறிமுகம் ஆன கணேஷை நாம் மறுபடியும் டெல்லியில் சந்திக்கிறோம். நீரஜா என்னும் பெண் அவனைத் தேடி வருகிறாள்-அவள் பணக்கார அப்பாவின் சார்பாக. மோதலில் ஆரம்பிக்கும் கதை போக போக ஒரு blackmail நாடகத்தில் சங்கமித்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதோடு முடிகிறது. பாதி ராஜ்ஜியம் அந்த பணக்காரர் கணேஷுக்கு கொடுக்கும் பரிசு. தனியாக இருந்தாலும் கணேஷ் காட்டும் சாமர்த்தியம், ஒவ்வொரு நூலாக அலசி ஆராய்ந்து அவன் முடிவை யூகிக்கும் தேர்ச்சி நம்மை வியக்க வைக்கும்.

  ஒரு விபத்தின் அனாடமி: டெல்லியின் பரபரப்பான சந்து பொந்துகளில் ஒன்றில் ஒரு கோர விபத்து நடக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவரும் அந்த விபத்தை பார்த்த ஒரே சாட்சியும் கணேஷின் உதவியை நாடுகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் கணேஷ் விபத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கும் கதை இது. வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கிறார் சுஜாதா. ஒவ்வொரு செங்கல்லாக கணேஷ் நகர்த்தும்போதும், இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை அணுகும் பொது குடுக்கப்படும் poetic justice நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கும். A very excellent story.

  மாயா: இது போலி சாமியார்களின் காலம். இந்தக் கதையும் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. வழக்கு ஒன்றை நடத்துவதற்காக ஒரு ஆசிரமம் செல்லும் கணேஷ் அங்கு எதிர்கொள்ளும் சவால்களே கதை. கூடுதல் ஊக்கமாக இதில் வசந்த் அறிமுகமாகிறான். முதல் கதையிலேயே வசந்த்தின் குறும்புத்தனங்கள் நம்மை ‘அட’ போட வைக்கின்றன. உதாரணமாக:

  “ஒன்று: வாசுதேவனை போய் பார்க்க வேண்டும்”.

  “ஒ.கே.”
  .
  “இரண்டு: இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் வேண்டும்”.

  “ஒ.கே”

  “மூன்று: ஒரு பாட்டில் பீர்”.

  “பீரா? எப்பொழுது?”

  “இப்பொழுதே!”

  “ரெடி”. என்றான் சிரித்துக்கொண்டே.

  இந்தக் கதை நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக சொல்வார்கள். ஆனால் ஒரு விறுவிறுப்பான கதை என்பதைத் தாண்டி ஒன்றும் ஏடாகூடமாக நமக்கு இதில் தெரிவதில்லை-கூர்ந்து வாசித்தால்.

  காயத்ரி: இந்த பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் பற்றி நான் அறிவேன். ஆனால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது. கதாசிரியரே சொல்லுவதாக அமைந்திருக்கும் இந்தக் கதையில் கணேஷ்-வசந்த்திற்கு வேலை கம்மிதான். ஆனால் இறுதியில் ஈடு கொடுக்கிறார்கள் அபாரமாக. அவர்கள் இருவரையும் விட கதாநாயகி காயத்ரி நம் மனத்தில் அதிக இடம் பிடிக்கிறாள்.

  விதி: ஒரு பஸ் விபத்து, காணாமல் போன ஒரு அண்ணன், அழகான தங்கை, இதில் என்ன முடிச்சுக்கள் இருக்கும்? உண்டு என்கிறது விதி. சம்பந்தமே இல்லாத முடிச்சுக்களை வைத்துக்கொண்டு கணேஷ் ஓட்ட வைக்கும் இடங்கள் புத்திசாலித்தனத்தின் ஆச்சர்ய உதாரணங்கள்.

  மேற்கே ஒரு குற்றம்: கணேஷை ஒரு நடனக் குழுவை சேர்ந்த பெண் காண வருகிறாள். ஆனால் எதுவும் சொல்லும் முன் கொல்லப் படுகிறாள். விசாரணை கணேஷ்-வசந்த்தை ஜெர்மனி பக்கம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு செல்கிறது. அவர்கள் அதை சமாளிக்கும் விதமே இந்த கதை. காகிதத்தில் வரையப்படும் வட்டங்கள், கணேஷ் அதை வைத்து ஆடும் ஆட்டம் அருமையான இடங்கள்.

  மேலும் ஒரு குற்றம்: ஒரு அனாமநேய டெலிபோன் அழைப்பு வருகிறது கணேஷுக்கு. பிறகு அழைத்தவர் கொலையுண்டு போகிறார். ஒரே சாட்சி கணேஷ்! எப்படி இருக்கும்? கொலையாளியின் சாதுர்யமான அணுகுமுறைகள் கணேஷை குழப்ப வைக்கின்றன, நம்மையும் சேர்த்து.

  உன்னைக் கண்ட நேரமெல்லாம்: ‘ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.

  மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை. விடுமுறைக்காக மெர்க்காரா செல்லும் கணேஷ்-வசந்துக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அவர்கள் ஜெயித்தார்களா என்பது….படித்து தெரிந்து கொள்ளுங்கள். சதுரங்க ஆட்டம் போல சிந்தனைக்கு வேலை வைக்கும் கதை இது.

  அம்மன் பதக்கம்: அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு விலை உயர்ந்த பதக்கம் காணாமல் போகிறது. பதக்கதோடு ஒரு பெண்ணும் ஒரு பைத்தியக்காரனும் சம்பந்தப் படுகிறார்கள். பதக்கத்தை கணேஷ் வசந்த் கண்டு பிடித்து மேலும் முடிச்சுக்களை அவிழ்க்கும் சுவாரசியங்கள் நிறைந்த கதை.

  மெரீனா: மெரீனா கடற்கரையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. மெரீனாவில் பொழுது போக்கிற்காக செல்லும் ஒரு பணக்கார இளைஞன் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்கிறான். சாதாரணமாக இதை அணுகும் கணேஷ்-வசந்த் இதில் இன்னும் புதை குழிகளைக் கண்டு பிடிப்பதே கதை. இறுதி முடிவு நம்மை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும்.

  புகார்..புகார்..புகார்: ஒரு pipe ரிப்பேர் விஷயம் கணேஷ்-வசந்தை பாடாய் படுத்தும் சுவாரசியமான கதை. அள்ள அள்ள குறையாத பணம் போல் இதில் அள்ளக் குறையாத பிணங்கள் நம்மை பயமுறுத்தும். Raskol Nikov Syndrome என்ற சிந்தாந்தத்தை வைத்து பின்னப்பட்ட கதை. சட்டம் படித்தவர்கள், சட்டம் பயிலுவோர் இந்தக் கதையை அதிகம் ரசிப்பார்கள்.

  ஐந்தாவது அத்தியாயம்: மர்மக் கதையில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் வரிக்கு வரி நடந்தால்? இது தான் இந்தக் கதையின் முடிச்சு. பிரபல இருதய மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலை வருகிறது. அதுவும் அவள் வாசிக்கும் மர்மக் கதையின் ஐந்தாவது அத்தியாயம் முடிவதற்குள் அவள் கொலையுண்டு போவாள் என்கிறது கதை. அந்த கொலை நடப்பதற்குள் கணேஷ் -வசந்த் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது suspense. விறுவிறுப்பு கம்மி என்றாலும் (என்னை பொறுத்தவரையில்) இறுதியில் முடிச்சுக்கள் அவிழும் பொது கணேஷின் மூளை இன்சூர் செய்யப்பட்டதோ என்னும் கேள்வி நம் மனதில் எழுவது என்னவோ நிஜம்.

  இப்படி சுவாரசியம் குறையாத பதிமூன்று கதைகள் இந்த தொகுப்பில். பிறகு என்ன? வாங்கி படித்து மகிழுங்கள்!

  Like

 10. இந்தக் கதைகளில் சிலவற்றை குமரி/விசா மூலம் ஏற்கனவே படித்திருக்கிறேன். விதி, புகார்… புகார்.. ,அம்மன் பதக்கம், உன்னைக் கண்ட நேரமெல்லாம் எல்லாம் இதுவரை படிக்கவில்லை. இவற்றை தனித்தனிப் புத்தகங்களாக ஏதும் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளனவா (கிழக்கு?) என்று பார்க்க வேண்டும்.

  ஆர்வி. புக் ஃபேர் போய் வந்தாகி விட்டது. மேற்கே ஒரு குற்றம், கை என்று படிக்காத (அல்லது படித்து மறந்த) சுஜாதாவின் நாவல்களையும் வாங்கி விட்டேன். பிற நூல்களையும் வாங்கி விட்டேன். விரைவில் லிஸ்டை எனது வலைப்பூவில் அப்டேட் செய்கிறேன்.

  Like

 11. சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

  சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே, சுஜாதாவின் துப்பறியும் காதபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும், வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவை விட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை.

  இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள 5 குறுநாவல்கள்:

  1-மேகத்தைத் துரத்தினவன்
  ‘மாலைமதி’ இதழில் 1979-ல் வெளியான நாவல். ஒன்று விட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்தில் வஸந்தும் தலை நுழைக்கும் சுவாரசியமான நாவல் இது.

  2-நில்லுங்கள் ராஜாவே!
  “நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!” இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை… எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.

  3-கொலையரங்கம்
  குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.

  4-எதையும் ஒரு முறை
  குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.

  5-மலை மாளிகை

  உயிர்மைப் பதிப்பக வெளியீடான இதன் விலை Rs.250

  Like

 12. அன்புள்ள ஸ்ரீனிவாஸ், மகா அழுத்தக்காரரான நீங்கள் கோதாவில் இறங்கி உங்கள் எண்ணங்களை பதிவு செய்துவிட்டீர்களே! வாழ்த்துக்கள்! இதையும் விரைவில் ஒரு பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

  Like

 13. மேகத்தை துரத்தினவன் – வஸந்த் மட்டும்தான் வருவார்.
  கதாநாயகன் அன்பழகன் என்ற அன்பு – கஞ்சா மாதிரி ஏதோ போதை வஸ்துவை அடித்திருக்கும் போது
  “அன்பழகன் பேசியது அன்பழகனுக்கு கேட்டது” என்று தலைவர் சொல்லிக் கொண்டு போவார்!
  அப்புறம் “ஆறிலிருந்து அறுபது வரை” நைட் ஷோ பார்த்து அன்புவின் சித்தி விசித்து விசித்து அழுததும், சித்தப்பா விநாயகம், ரத்னா…
  80களில் படித்திருந்தாலும் இன்னும் நினைவிலிருக்கிறது!

  Essex சிவா

  Like

  1. சிவா, எனக்கும் மேகத்தைத் துரத்தினவன் பற்றி மலரும் நினைவுகளைக் கிளப்பிவிட்டுவிட்டீர்கள்!

   Like

 14. சுஜாதாவின் எழுத்துக்கு விளம்பரமா? என்ன நடக்குது நாட்டில? தமிழ் வாசித்தலையே ஒரு அனுபவமாய் மாற்றிய ஜாலகாரர்…எத்தனை பேர் வந்தாலும், யார் என்ன சொன்னாலும் சுஜாதாவிற்கு முன்னும் பின்னும் தமிழை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க செய்தவர்கள் யாருமில்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.