லலிதாராமின் “துருவ நட்சத்திரம்” – படிக்க விரும்பும் புத்தகம்

லலிதாராமின் இசை மேதைகள் பற்றிய எழுத்துகள் மிகவும் முக்கியமானவை. இவை புகழ் பாடும் hagiographies என்ற நிலையைத் தாண்டுவதில்லைதான். ஆனால் முக்கியமான ஆவணங்கள். அவரைப் போன்ற மகானுபாவர்கள் இல்லாவிட்டால் மான்பூண்டியா பிள்ளை என்ற பேரைக் கூட கேட்டிருக்கமாட்டேன். அவருக்கு ஒரு ஜே போட்டுவிடுகிறேன்!

கல்கியில் வந்த நூல் அறிமுகத்தை (புலிக்கால் தேசிகன் என்பவர் எழுதி இருக்கிறார்) அனுப்பி வைத்த நண்பர் ஸ்ரீனிவாசுக்கு நன்றி!

இசை ரூபத்தை எழுதுவது எளிதல்ல

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளை என்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா. அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.

மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.

16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதை முருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள்! சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்!

– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/

தொடர்புடைய சுட்டிகள்:
லலிதாராமின் தளம்
புத்தகத்திலிருந்து ஒரு excerpt
மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை, முருகபூபதி பற்றி லலிதாராம்
லலிதாராமின் ஜிஎன்பி புத்தகம்

சுஜாதாவின் “மேலும் ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

இதை மாத நாவலாக வந்தபோதும் படித்திருக்கிறேன். பதின்ம வயது நண்பர் கூட்டத்தை பிரமிக்க வைத்த க்ளைமாக்ஸ். இப்போது பிரமிப்பு எல்லாம் இல்லை என்றாலும் விறுவிறுப்பான, சுவாரசியமான கதை.

கணேஷ்-வசந்த் இருவரையும் கூர்க் காஃபி எஸ்டேட் அதிபர் தாமோதரன் ஓய்வுக்காக தன் எஸ்டேட்டுக்கு வருமாறு அழைக்கிறார். கொஞ்சம் எக்சென்ட்ரிக்கான மனிதராக இருக்கிறார். மெதுமெதுவாக அவரது காணாமல் போய்விட்ட மனைவி ஆஷாவைப் பற்றி இருவருக்கும் தெரிய வருகிறது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான், கொஞ்சம் வயது அதிகமான தாமோதரனோடு அவள் சந்தோஷமாக இல்லை, அவளைப் பற்றி சாதாரணமாகப் பேசக் கூட எஸ்டேட் மனிதர்கள் எல்லாரும் தயங்குகிறார்கள் என்றெல்லாம் தெரிகிறது. ஒரு கட்டத்தில் தாமோதரனே அவள் எங்கே போனாள் என்று கண்டுபிடியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார். மெர்க்காரா டவுனில் அவள் போலவே உருவம் உள்ள ஒருத்தியை தற்செயலாக சந்தித்து அது களேபரம் ஆகிவிடுகிறது. தாமோதரனே அவளை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுவிட்டார் என்று அவரால் வேலை நீக்கம் செய்யப்பட ஒரு மேஸ்திரி சொல்கிறான். கணேஷ்-வசந்த் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை.

கதையை இன்று படிக்கும்போது என் தங்கையின் மாமனாரும், வரலாற்று நிபுணரும் ஆன டாக்டர் நாகசாமியைப் பற்றி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது கண்ணில் பட்டது. அதில் ஒரு சின்ன சந்தோஷம்.

பல துப்பறியும் கதைகள் படித்துப் படித்து பழகிவிட்ட இன்று புதிதாக இந்தக் கதையைப் படித்தால் முடிவை யூகித்துவிடலாம். ஆனால் முதன்முதலாகப் படிக்கும்போது மகா த்ரில்லிங் ஆக இருந்தது. இன்றும் இதை புதிதாகப் படித்தால் மர்மம் விலகும் நேரம் சபாஷ் என்று சொல்லத் தோன்றும்.

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை அறுபது ரூபாய்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். சிறந்த கணேஷ்-வசந்த் கதைகளில் ஒன்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா, கணேஷ்-வசந்த்

2012 பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள்

ஒவ்வொரு முறை இந்த விருதுகள் அறிவிக்கப்ப்படும்போதும் அசோகமித்திரன் பேர் இருக்கிறதா என்று பார்ப்பேன். அடுத்த வருஷமும் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் துக்கமாக இருக்கிறது. அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைப்பதற்கு முன் நோபல் பரிசே கிடைத்தாலும் கிடைத்துவிடும் போலிருக்கிறது. பரலோகப் பதவி கிடைப்பதற்குள் ஒரு பத்மபூஷனாவது கொடுங்கப்பா!

இலக்கியத்துக்காக கொடுக்கப்பட்ட விருதுகளில் இரண்டு பேர் தெரிந்தது. ஒன்று ஆலன் சீலி, இரண்டு ந. முத்துசாமி.

ட்ராட்டர்-நாமா என்ற ஓரளவு புகழ் பெற்ற புத்தகத்தை எழுதியவர் ஆலன் சீலி. அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். ஒரு ஆங்கிலோ-இந்தியக் குடும்பத்தின் ஏழெட்டு தலைமுறை வாழ்க்கையை விவரிக்கும் நாவல். 1991-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி (ஆங்கிலம்) விருதை வென்ற புத்தகம். என்றாவது படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆலன் சீலியே ஆங்கிலோ-இந்தியர்தான். அவரது பிற புத்தகங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உத்தரகண்ட் மாநிலத்துக்காரர் என்று தெரிகிறது.

ந. முத்துசாமி நாடகக்காரர். கூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர். அவர் எழுதிய நாற்காலிக்காரர்கள் என்ற ஒரே ஒரு நாடகத்தைப் படித்திருக்கிறேன். அது படிப்பதற்கான நாடகம் இல்லை என்று நினைக்கிறேன். திறமையாக இயக்கினால் பார்க்க நன்றாக இருக்கும்.

இலக்கியம் (மற்றும் கல்வி) விருது பெற்ற மற்றவர்கள் லிஸ்ட் கீழே. பேரே கேள்விப்படாதபோது யாருக்கு இலக்கியத்துக்கு விருது, யாருக்கு கல்விக்கு என்று சுத்தமாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

பத்மபூஷன்: பேராசிரியர் சாந்தாராம் பல்வந்த் மஜூம்தார் (மகாராஷ்டிரம், கல்வி?), பேராசிரியர் வித்யா தெஹெஜியா (அமெரிக்கா, இந்தியக் கலை நிபுணர் போலத் தெரிகிறது), பேராசிரியர் அர்விந்த் பனகரியா (அமெரிக்கா), டாக்டர் ஜோஸ் பெரெய்ரா (அமெரிக்கா), டாக்டர் ஹோமி கே. பாபா (இங்கிலாந்து).

பத்மஸ்ரீ: டாக்டர் எபர்ஹார்ட் ஃபிஷர் (ஸ்விட்சர்லாந்து), கேதார் குருங் (சிக்கிம்), சுர்ஜித் சிங் பாடார் (பஞ்சாப், கவிதைக்காம்), விஜய் தத் ஸ்ரீதர் (மத்தியப் பிரதேசம், ஜர்னலிசத்துக்காம்), டாக்டர் கீதா தர்மராஜன் (டெல்லி), பேராசிரியர் சச்சிதானந்த் சஹாய் (ஹரியானா), பெபிதா சேத் (கேரளா), டாக்டர் ரால்டே தன்மவியா (மிசோரம்)

பாரதிமணி இலக்கியத்துக்கு பத்மஸ்ரீ விருது பெறும் பெபிதா சேத் காந்தி படத்தில் நேருவாக நடித்த ரோஷன் சேத்தின் மனைவி, எழுத்தாளர், தீவிர வாசகர், மேலும் தனக்கு தில்லியில் நண்பர் என்று தகவல் தருகிறார்.

தொடர்புடைய சுட்டிகள்:
விருது பெற்றவர்கள் லிஸ்ட்
அழியாச்சுடர்கள் தளத்தில் ந. முத்துசாமி எழுதிய ஒரு சிறுகதை
ந. முத்துசாமி பற்றி எஸ்.ரா.

ஒண்ணரை பக்க நாளேடு – வள்ளுவர் கோட்டம் நீச்சல் குளம் ஆகிறது

அண்ணா நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்றத் திட்டம் என்று படித்தவுடன் ஒரு ஒண்ணரை பக்க நாளேடு எழுதலாமே என்று தோன்றியது. ஆரம்பித்தேன், பின் மறந்தே போய்விட்டேன். சரி எழுதிய வரைக்கும் பதிப்போமே என்றுதான்…

அப்புறம் இதை எல்லாம் பதிக்க இந்தத் தளம் ஏற்றதுதானா என்று ஒரு கேள்வி இருக்கிறது. சரி இதுவும் ஒரு வகை கற்பனைதானே என்று சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

துக்ளக்குக்கு நன்றி!

வள்ளுவர் கோட்டம் நீச்சல் குளம் ஆகிறது!

அரசு செய்தி: சென்னையில் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் தண்ணீர் போக வழி இல்லாததை கவனித்து அங்கே உள்ள வள்ளுவர் கோட்டத்தை இடித்துவிட்டு ஒரு செயற்கை ஏரியை நிர்மாணிக்க உத்தரவிட்டிருக்கிறார். அந்த ஏரித் தண்ணீரைப் பயன்படுத்தி ஒரு நீச்சல் குளமும் அமைக்கப்படும். ஏரி மழைக்காலத்தில் நீர் செல்ல ஒரு வடிகாலாக இருக்கும். வெய்யில் காலத்தில் கிரிக்கெட் மைதானமாகவும் பயன்படும்.

ஜெயலலிதாவின் சட்டசபை உரை – லேக் அலேக்!
சட்டசபையில் இது பற்றி உரையாற்றிய ஜெயலலிதா ஒரு காலத்தில் நுங்கம்பாக்கத்தில் பெரிய ஏரி இருந்ததாகவும் அதனால்தான் அது லேக் ஏரியா என்று அழைக்கப்பட்டதாகவும் கூறினார். கருணாநிதி குடும்பத்தினர் அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டு சொற்ப நிலத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டு மிச்ச இடத்தை பிளாட் போட்டு விற்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். லேக்கை அலேக் செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டபோது அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வள்ளுவர் கோட்டம் vs கருணாநிதி கொட்டம்
அமைச்சர் செங்கோட்டையன் வள்ளுவர் கோட்டத்தை இடிக்கப் போவதில்லை, கருணாநிதி கொட்டத்தை உடைக்கப் போகிறோம் என்று கூறியபோது மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு மேஜை உடைந்து முன்னாள் அமைச்சர் செந்தமிழனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர் இது ராஜாத்தி ஃபர்னிச்சரில் வாங்கப்பட்ட மேஜை, மேஜை வாங்குவதிலும் ஊழல் செய்த கருணாநிதி குடும்பம் என்று கத்தியபடியே முதல் உதவி செய்துகொண்டார்.

கருணாநிதி கடும் கண்டனம்: ஒரு சூத்திரன் இன்னொரு சூத்திரனை பெருமைப்படுத்த கட்டிய கட்டிடம் என்றுதான் ஜெயலலிதா இந்த கட்டிடத்தை இடிக்கிறார், நான் கட்டிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு என்னை அழைக்கவில்லை என்றாலும் கட்டிடமாவது இருக்கிறதே என்று ஆறுதல் கொண்டிருந்தேன், அதையும் இடிக்க சொல்லிவிட்டாரே என்று வருந்தினார். கருணாநிதி பேட்டி அளித்தபோது பேராசிரியர் அன்பழகனும் என்னவோ சொன்னார். அது என்ன என்று அவர் உட்பட யாரும் பெரிதாக கவலைப்படவில்லை.

இன்று முரசொலியில் கருணாநிதி உடன்பிறப்புக்கு “தாழ்ந்த தமிழகமே” என்று தலைப்பிட்டு எழுதிய கடித்தத்தில் “முப்பால் செப்பிய மூதறிஞரை ஒரு மூதேவி அவமானப்படுத்தவதை முகம் தாழ்த்தி ஏற்காமல் முரண்டு பிடி உடன்பிறப்பே!” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். இது சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது, வள்ளுவர் புனித தோமாவின் சீடர் என்று சொல்லப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறுபான்மையினர் நலன் காக்க தான் இன்று காலை காப்பி குடிக்காமல் இருக்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். இதைக் கேட்ட பேராயர் தினகரன் கண்ணீர் விட்டு குலுங்கிக் குலுங்கி அழுதது எல்லார் நெஞ்சையும் தொட்டது.

ஜெயலலிதா பேட்டி:
நிருபர்கள்: கருணாநிதி என்ற சூத்திரன் கட்டிய கட்டிடம் என்றுதான் இடிக்க ஆணை இட்டிருக்கிறீர்கள் என்கிறாரே கருணாநிதி?
ஜெ: இவர் கட்டிய கட்டிடமா? ராமர் எந்த எஞ்சினியரிங் காலேஜில் பட்டம் வாங்கினார் என்று கேட்டாரே, இவர் எந்த காலேஜில் பட்டம் வாங்கினார்?
நிருபர்கள்: தாழ்ந்த தமிழகமே என்று அறைகூவல் விட்டிருக்கிறாரே?
ஜெ: ஆம், இவர் குடும்பம் மணல் கொள்ளை அடித்ததால் தமிழகம் இன்று கடல் மட்டத்தை விட தாழ்ந்து போய்விட்டது. அதனால் மழைத் தண்ணீர் தேங்கி பல வியாதிகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கவே நான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன்.

விஜயகாந்த் தமிழ்நாட்டில் 4824 ஏரிகள் இருப்பதாகவும், அவற்றில் 898 ஏரிகளை இப்போது சமப்படுத்தி வீடு கட்டி இப்போது மக்கள் குடியேறிவிட்டதாகவும், இவற்றில் நுங்கம்பாக்கம் லேக் விஷயத்தில் மட்டும் இறங்கி இருப்பது ஆச்சரியம் தருவதாகவும், அதே நேரத்தில் கருணாநிதி குடும்பம் ஒரு கொள்ளைக்காரக் குடும்பம் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அறிக்கை விட்டிருக்கிறார்.

சுப்ரமணியசாமி 2G வழக்கில் வாங்கப்பட்ட லஞ்சம் எல்லாம் வள்ளுவர் கோட்டத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தனக்கு பப்புவா நியூ கினி நாட்டின் உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருப்பதாக இன்று தெரிவித்தார். கட்டிடத்தை இடிக்கும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக அடியில் தோண்டி இந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று அவர் ஜெயலலிதாவுக்கு யோசனை கூறி இருக்கிறார்.

சோ ராமசாமி அரசு இது போன்ற கட்டிடங்களைக் கட்டுவதில் பணத்தை செலவழிப்பது தவறு, அதனால் இடித்துவிடலாம் என்று தலையங்கம் எழுதி இருக்கிறார். இடிப்பதற்கு ஆகும் செலவு வீண்தானே என்று ஒரு வாசகர் கேட்டதற்கு வேலை வாய்ப்பைப் பெருக்கவே ஜெயலலிதா அப்படி செய்திருப்பதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஜூவி ரிப்போர்ட்: கருணாநிதி போன வாரம் அவர் வீட்டு வேலைக்காரியிடம் இந்த ஜெயலலிதா என்னதான் ஆடினாலும் வள்ளுவர் கோட்டம் இருக்கும் வரைக்கும் என் பேர் நிலைத்திருக்கும் என்று பெருமை அடித்துக் கொண்டாராம். அதை வேலைக்காரி வாசலில் காவலுக்கு இருந்த ஏட்டையாவிடம் சொல்ல, ஏட்டையா அதை டீக்கடை பெஞ்சில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த மஃப்டி உளவுத்துறை அதிகாரி ராமநாதனிடம் தெரியாத்தனமாக சொல்லிவிட்டாராம். அது உடனே சிவனாண்டி, பொன். மாணிக்கவேல், ஷீலா நாயர், ஓ. பன்னீர்செல்வம் என்று பலர் காதுக்குப் போய் கடைசியில் ஜெயலலிதா காதுக்கே போய்விட்டதாம். இதைக் கேட்டதும் ஜெயலலிதாவின் கண் சிவந்ததாம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் தயிர் சாதம் சாப்பிடாமலே எழுந்து போய்விட்டாராம். அடுத்த முறை கையைக் கூட கழுவாமல் போய்விடப் போகிறார் என்று பயந்து போய் வள்ளுவர் கோட்டத்தை இடிக்கும் திட்டத்தை பன்னீர்செல்வம்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தாராம்.

கடைசி செய்தி: ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு மதுரையில் அழகிரி கட்டி இருக்கும் மாளிகைதான் என்று தெரிகிறது. அதை இடித்துவிட்டு அங்கே ஒரு பூங்கா அமைக்கப்படும் என்று மதுரையில் ஒரு வதந்தி உலவுகிறது. இதனால் அழகிரி சென்னைக்கு குடி பெயர்ந்துவிடப் போகிறாராம். வேளச்சேரியில் ஸ்டாலின் வசிக்கும் வீட்டை தனக்குக் கொடுத்துவிட வேண்டும், ஸ்டாலின் கொளத்தூரில் புதிதாக ஒரு வீடு கட்டிக் கொள்ளட்டும் என்று கருணாநிதியிடமும் தயாளு அம்மாளிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

சில பழைய ஒண்ணரை பக்க நாளேடுகள்:
கலைஞர்-ஜெயலலிதா கூட்டணி
தாத்தா நான் பாஸாயிட்டேன்!
தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது!
நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

பி.ஏ. கிருஷ்ணனின் “கலங்கிய நதி”

இது நண்பர் பாலாஜியின் பதிவு. சென்னையிலிருந்து திரும்பி வரும்போது பி.ஏ. கிருஷ்ணனின் “Muddy River” புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்து அதைப் பற்றி எழுதி இருக்கிறார். இது தமிழில் “கலங்கிய நதி” என்று வெளியாகி இருக்கிறது. ஆங்கில வடிவம் அமேசானில் கிடைக்கிறது.

This is his second novel, after Tiger Claw Tree (புலிநகக் கொன்றை) that we discussed a while back.

I liked this novel, though I think புலிநகக் கொன்றை is a better work.

The structure is a novel(“This Street has no other side”) inside the main novel (“Muddy River”), with the novel TSHNOS being critiqued and revised in the main piece. In addition, MR itself is a supposedly fictional account of Mr.Krishnan’s experiences in Assam. So, the intrigue extends to what has been fictionalized from real life, and what has been altered in TSHNOS from MR itself. A complex multi-layered piece! Here, I think it works for the most part. The criticisms that we would have on TSHNOS are already mostly addressed in MR. I think when we pick this book for discussion, whether this literary device worked or not would be a main debate point.

The characters are all well read and the constant name dropping and literary references is often tangential and doesn’t go well with the flow of the novel. Characters that meet for the first time talk about Hardy and his poems. The main character’s wife sees an abstract religious painting by Albert Herbert and quickly recognizes it and even points out how the painting differs from the original! There are enough marxist references, quotes from Gandhi’s works and other sundry english authors that the novel could have done without.

– The interesting tidbits are the ones that Mr.Krishnan throws out in passing – an exhibitionist bureaucrat, the argument over what nuts to buy in meetings, intricacies of delhi government life and the pecking order. This is sprinkled generously to keep the reader interested.

At the core, Mr.Krishnan just falls short of what he hoped to achieve. His intentions are twofold, one to expose the amount of corruption in public sector. Two, to highlight the political thought process of the locals in Assam. For one, the kind of revelation that he brings out hardly startles us. We are so used to reading about bigger and better worked out corruption that this doesn’t even make us take a step back and ponder over the issue. About Assam, I just felt like what I read had no relevance and was dated on arrival. Every region has a story, and Assam’s history as brought out in this book is hardly intriguing. Probably, this is just my point of view now, but I had no enthusiasm to read about north east states’ struggle to stay in/out of the country and feel empathetic to the concerns.

I liked the constant underlying philosophical tussle between an old fashioned Gandhian way (that the author and his father hold) and the marxist PoV brought forth by the rebels. That is the strong point of this book. I think this is where the book moves up a couple of notches from just being a fast paced political thriller. The part of the novel where the father of the author (and subsequently the author) tries to make a visit to Rajghat stands out, a brilliant and heart-felt piece of writing.

In puli nagak konRai and in this novel, the protagonist is not one who acts decisively and makes history. Rather, he is a bystander and often is indecisive, and finally history just passes him by and sweeps him away. I was happy to see this thread continue in Muddy River as well, as this captures the psyche of Mr.Krishnan’s generation of TamBrahms very well. This can be another important piece for discussion. Mr.Krishnan had two layers in which he could have portrayed his protagonist as a hero. Rather, he chooses to present a more realistic portrayal.

சுஜாதாவின் “மீண்டும் ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

கணேஷுக்கு பத்து மணி வாக்கில் ஒரு ஃபோன் வருகிறது. பேசுவது பெரிய பணக்காரத் தொழிலதிபர். உன் உதவி வேண்டும், உடனடியாக என்னை வந்து பார், என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்கிறார். கணேஷ் பதினோறு மணிக்குப் போவதற்குள் அவர் இறந்து கிடக்கிறார். அவரது சொத்துக்கு நாலைந்து வாரிசுதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் அருணாசலம் – இவருக்கு திருமணம் செய்து கொள்ள இருக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்தவன் – மேல் விழுகிறது. அருணாசலம் ஃபோன் வந்த நேரத்துக்கு அருகில் வீட்டுக்கு வந்து போயிருக்கிறான். அதற்கப்புறம் வேறு யாரும் வரவில்லை. பிடிபட்டதும் அப்போதே அவர் இறந்து கிடந்தார், தான் பயந்து ஓடி வந்துவிட்டேன் என்று அழுகிறான். அருணாச்சலத்தின் கேசை கணேஷ் எடுத்துக் கொள்கிறார். Obviously, அருணாசலம் நிரபராதி. யார் குற்றவாளி, எப்படி கொலை நடந்தது என்று கண்டுபிடிப்பதுதான் கதை.

சிம்பிளான, யூகிக்கக்கூடிய முடிச்சுதான். ஆனால் சுவாரசியமாக எழுதி இருக்கிறார்.

இந்த குறுநாவல் வெளியான காலம் மாத நாவல்களின் பீக் என்றுதான் சொல்ல வேண்டும். ராணிமுத்து தவிர நாவல்கள் சகாய விலையில், சுலபமாக எல்லா கடைகளிலும் கிடைப்பது அப்போதெல்லாம் அபூர்வம். ராணிமுத்துவின் பாப்புலாரிட்டிக்கே அதில் வந்த ஆயிரம் ரூபாய் பரிசுப் போட்டியும் ஒரு முக்கிய காரணம். அதிலும் பாதி நாவல்களை சுருக்கிப் போடுவார்கள். அப்புறம் பி.டி. சாமி, அமுதா கணேசன் போன்றவர்கள் எழுதிய நாவல் எல்லாம் வரும். இந்த நிலையில் மாலைமதி என்ற பேரில் மாதாமாதம் சுவாரசியமான வணிக நாவல்கள் – சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், சவீதா, மகரிஷி மாதிரி பலரும் எழுதியவை – வர ஆரம்பித்தது ஒரு small scale புரட்சிதான். அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலியே (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை), மேற்கே ஒரு குற்றம் உள்ளிட்ட சில பல கணேஷ்-வசந்த் நாவல்கள் நினைவு வருகின்றன. எழுபதுகளின் இறுதியில் வர ஆரம்பித்தன என்று நினைக்கிறேன். ஒரு ரூபாயோ என்னவோ விலை. அது எனக்கு சின்ன விஷயம் இல்லை. எனக்கு அப்போதெல்லாம் வருஷத்துக்கு மூன்று ரூபாய் பாக்கெட் மணி கிடைக்கும். அதை அனேகமாக கால் இறுதி, அரை இறுதி, ஆண்டு இறுதி பரீட்சைகள் முடிந்த அன்று ரெயில்வே காண்டீனில் இரண்டு மசாலா தோசை சாப்பிட செலவழிப்பேன். சைதாப்பேட்டையிலிருந்து தாம்பரம் வரைக்கும் உள்ள ரெயில்வே காண்டீன்களில் எங்கே மசாலா தோசை நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் குழுவில் பெரிய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. (மகா மோசம் – மீனம்பாக்கம் ஸ்டேஷன். பெஸ்ட் – தாம்பரம்)

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 50 ரூபாய்.

என்னைப் போல நாஸ்டால்ஜியா நினைவுகள் (புத்தகத்தைப் பற்றி எழுதியதை விட மசாலா தோசை பற்றிதான் நிறைய இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.) இல்லாதவர்களும் படிக்கலாம். கணேஷ்-வசந்த் ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாத புத்தகம்.

புத்தகங்களைக் காதலித்தவர் – லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

சில வருஷம் முன்பு திருமலைராஜன் புண்ணியத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம்! நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்!

வாசகர் வட்டம் நிறுவனர் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரைப் பற்றிய சில பழைய பதிவுகளை இங்கே ஒரு மாதிரி தொகுத்து பதித்திருக்கிறேன்.

லக்ஷ்மி மறைந்து இரண்டரை வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சத்தியமூர்த்தியின் ஒரே மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர். எமர்ஜென்சிக்கு பிறகு தமிழ் நாட்டில் ஜனதா கட்சி என்று ஒரு அமைப்பு உருவாக உழைத்தவர். 77-இல் மயிலாப்பூரில் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அப்போது மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இவருக்காக பிரச்சாரம் செய்து கேட்டிருக்கிறேன். (ஃபெர்னாண்டஸ் மிக அருமையான பேச்சாளர்.) லக்ஷ்மியை (ஃபெர்னாண்டசையும்) நான் அந்த ஒரு சமயத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருக்கு அப்போது ஐம்பது வயது இருந்திருக்கலாம். ஒல்லியாக, ஒரு நாற்பது வயதுக்காரர் மாதிரி இருந்தார்.

வாசகர் வட்டம் அமைப்பை அவர் அறுபதுகளில் உருவாக்கினார். நாங்கள் வசித்த கிராமங்களில் வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்கள் மிக அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் புத்தகங்களை என் அம்மா மிக ஆர்வத்தோடு படிப்பார். நல்ல முறையில் அச்சிடப்பட்டிருக்கும். (சாதாரணமாக நூலகங்களில் புத்தகங்களின் quality சொல்லும்படி இருக்காது, சுலபமாக கிழிந்துவிடும்.) தி. ஜானகிராமன், லா.ச.ரா. ஆகியோரின் புத்தகங்களை கேட்டு வாங்கி பதித்தார் என்று ஞாபகம். எனக்கு பர்சனலாக ஞாபகம் இருப்பது சாயாவனம் மட்டுமே. நல்ல இலக்கியத்தரம் உள்ள புத்தகங்களை பதிக்க ஒரு குழுவினர் முயற்சி செய்கிறார்கள் என்று என் அம்மா சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

எண்பது-தொண்ணூறுகளில் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என் அம்மாவுக்கு வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்களை பார்த்து ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

லக்ஷ்மி வாசகர் வட்டம் உருவாகிய முயற்சியை பற்றி இங்கே பேசுகிறார். மிக அருமையான பேட்டி, மிஸ் செய்யாமல் படியுங்கள்! வீட்டை எல்லாம் அடகு வைத்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார்! அவருடைய வார்த்தைகளில்:

வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்…

மேலும்:

“எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்?”
“தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்கு கிடைக்கமாட்டார்களா என்று நம்பினேன். ஐந்நூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களை படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே.”

அவர் மறைந்தபோது சா. கந்தசாமி காலச்சுவடு பத்திரிகையில் ஒரு அஞ்சலி எழுதி இருந்தார்.

விகடனில் அவர் அண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரையை கீழே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன். விகடனுக்கு நன்றி! “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.

ஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்கும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.

அன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.

மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.

“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.

மகாத்மாவின் ஆசிகளை மட்டுமா? நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.

அவர்தான் – தீரர் எஸ்.சத்தியமூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.

கேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.

மகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.

“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.

“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்! கண்டிப்பாகக் கிடைப்பார்கள்.

“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி! நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக உணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

காமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான்! அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா?” என்றார் லக்ஷ்மி.

ஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம்! புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.

“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம்! அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.

சென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.

பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்!

தொடர்புடைய சுட்டிகள்:
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்த சாரதா

அருணாவின் புத்தகக் கண்காட்சி அனுபவங்கள்

அமெரிக்காவில் இருக்கும்போது அருணாவை நினைத்து பெருமூச்சுதான் விட முடிகிறது! ஓவர் டு அருணா!

புத்தகக் கண்காட்சிக்கு 8-ஆம் தேதி போய் விட்டு வந்தேன். டிஸ்கவரி புத்தக கடையில் ஒரு புத்தகத்தை பாரதி மணி சார் வெளியிட்டார். அவருடன் போய்விட்டு சரியாக 15 நிமிடத்தில் அங்கு இருந்த கூட்டத்தில் அவரைத் தவறவிட்டேன். நாஞ்சில்நாடன் சார் அப்போதுதான் தமிழினியில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றார். பாரதி மணி சார் தமிழினி வசந்தகுமாரை அறிமுகம் செய்து வைத்தார். கடைக்கு வந்தவர்கள் எல்லாம் காவல்கோட்டம் இருக்கிறதா என கேட்ட வண்ணம் இருந்தார்கள். தீர்ந்து போயிருந்தது. பாரதி மணி சாரை தவறவிட்டு நான் தனியாகவே சுற்ற ஆரம்பித்தேன். ஞாயிறு மாலை என்றதால் பயங்கர கூட்டம்.

ஒரு திருவிழா போல் அங்கங்கே குடும்பத்துடன் உட்கார்ந்து சோளம் சாப்பிடுபவர்களே அதிகம் பேர். உயிர்மையில் பெரும்பாலும் சுஜாதா புத்தகங்களிலேதான் கூட்டம். கிழக்கில் அவர்களின் வெளியீடே பெரும்பாலும் இருந்தது. ஜடாயுவிற்காக அ. நீயின் கம்யூனிஸம் – பஞ்சம், படுகொலை, பேரழிவு என்ற புத்தகம் வாங்கினேன். அப்புத்தகம் நன்றாக விற்பது போல் தெரிந்தது.

பின் காலச்சுவடில் சில புத்தகங்கள் வாங்கினேன். அ.கா. பெருமாளின் சிவாலய ஓட்டம் எடுத்து தந்தவர் நல்ல ஆன்மிக புத்தகம் மேடம் என்று சொல்லி என்னை பயமுறுத்தினார். வானதியில் அம்மாவிற்காக சிவகாமியின் சபதமும், ராஜம் கிருஷ்ணனின் ஏதோ இரண்டு புத்தகங்களும் வாங்கினேன். கல்கியின் புத்தகங்கள் இன்றும் நிறைய பேரால் வாங்கப்படுவது கண்கூடாக தெரிகிறது.

எல்லா புத்தகங்களையும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கவிதா வெளியீடு வரை போனால் அ.மியின் மொத்த சிறுகதை தொகுப்புக்களும் விற்று போயிருந்தது.

சந்தியாவில் சென்று யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் இருக்கிறதா என விசாரித்தேன். அது இப்ப பதிப்புல இல்லைம்மா என யாரோ சொன்னார்கள். யாரென்று பார்த்தால் வண்ணதாசன். முந்தைய நாள்தான் அவருக்கும் வண்ணநிலவனுக்கும் அளிக்கப்பட்ட சாரல் விருதில் சந்தித்து இருந்தேன். சிறிது நேரம் புத்தக விழாவையும், பதிப்புக்களையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

நாஞ்சிலாரின் நாவல்கள் வாங்க விஜயா சென்றால் அவர்கள் பணம்தான் கொடுக்க வேண்டும் என்றார்கள். எல்லாவற்றையும் தீர்த்தாகி விட்டது. சொல்புதிது குழுமத்தில் இருக்கும், சென்னையில் வசிக்கும் செந்தில் குமரன் தேவன் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதாக text செய்து கொண்டே இருந்தவர் வந்து சேர்ந்தார். அவரிடம் பணம் வாங்கி விஜயாவில் புத்தகங்கள் வாங்கினேன். பின்னர் சாகித்ய அகாடமி கடையில் சென்று மேலும் சில புத்தகங்கள் வாங்கி விட்டு வெளியேறினோம்.

செந்தில் சொன்னார், கிடைக்க பெறாத புத்தகங்களை மட்டுமே கண்காட்சியில் வாங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் உடுமலையில் online-இலேயே வாங்கலாம் என. முதல் தடவை என்பதால் ஆர்வத்தில் வாங்கி விட்டு பின்னர் அதை பெங்களூர் வரை எடுத்தும் வர வேண்டி இருந்தது.

எஸ்.ரா உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். சுற்றி நல்ல கூட்டம். எனக்கு கூட்டம், வெயில் எல்லாம் தாங்கவே முடியவில்லை. நானும் செந்திலும் ஒரு வழியாக ஒரு coffee shop-இல் சென்று தஞ்சம் அடைந்தோம். பாரதி மணி சார் கூப்பிட்டு எங்கம்மா இருக்க நானும் உன்னை ரொம்ப நேரமா தேடிண்டிருக்கேன் என்றார்!

நான் வாங்கிய புத்தகங்கள்:

  1. க்ரியாவின் தற்கால தமிழகராதி
  2. உயிர்த்தண்ணீர் – கண்மணி குணசேகரன்
  3. ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
  4. வண்ணநிலவன் கதைகள் தொகுப்பு – வண்ணநிலவன்
  5. நாவல் கோட்பாடு – ஜெ. மோ
  6. மிதவை – நாஞ்சில்நாடன்
  7. மாமிச படைப்பு – நாஞ்சில்நாடன்
  8. என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில்நாடன்
  9. சிவாலய ஓட்டம் – அ.கா. பெருமாள்
  10. மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன் – தொகுப்பு – தியோடர் பாஸ்கரன்
  11. ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
  12. சில இறகுகள் சில பறவைகள் – வண்ணதாசன்
  13. ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்
  14. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
  15. சு. ரா – சிறுகதைகள் – முழுத்தொகுப்பு
  16. மாதொருபாகன் – பெருமாள் முருகன்
  17. யுகத்தின் முடிவில் – ஐராவதி கார்வே – தமிழில் – இராக. விவேகானந்த கோபால்
  18. இனி நான் உறங்கட்டும் – பி. கெ – பாலகிருஷ்ணன் – தமிழில் – ஆ. மாதவன்
  19. பருவம் – எஸ். எல். பைரப்பா – தமிழில் – பாவண்ணன்

பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதியை பாரதி மணி சாரும், ஆங்கில மூலமான Muddy River-ஐ நான் வாங்குவதாகவும் ஏற்பாடு. ஆங்கிலத்தில் காலச்சுவடில் கிடைக்கவில்லை. வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை.

ஜெமோவின் அறம் தொகுப்பு கிழக்கில் நன்றாக விற்கிறது. அவருக்கு வாசலில் ஒரு பெரிய போஸ்டரும் வைத்திருந்தார்கள். ஆதவனின் காகித மலர்களும் வாங்கினேன்.

பாரதி மகாகவியா இல்லையா? – 1935-இல் முதல் விவாதம்

சமீபத்தில் ஜெயமோகன் பாரதி மகாகவி இல்லை என்று எழுதியதும், அதை மறுத்து முத்துக்குமாரசாமி உட்பட பலரும் வாதாடியதும் நினைவிருக்கலாம். இந்தப் பூசல் எல்லாம் 1935-இலேயே ஆரம்பித்துவிட்டது. வ.ரா. தலைமையில் மணிக்கொடி குழுவினர் பாரதி மகாகவிதான் என்றும் கல்கி போன்றவர்கள் இல்லை என்று படு தீவிரமாக வாதிட்டிருக்கின்றனர். ஜெயமோகன்-முத்துக்குமாரசாமி சண்டை எல்லாம் ஜுஜூபி.

கடலோடி நரசையா சென்னையில் ரோஜா முத்தையா நூலகத்தில் வரும் ஜனவரி 20 அன்று இந்த விவாதத்தைப் பற்றி உரையாற்றப் போகிறாராம். தோழி அருணா அந்த invitation-ஐ அனுப்பி இருக்கிறார். போய்ப் பாருங்கள்! பார்க்க முடிந்தால் மறக்காமல் அதைப் பற்றி எழுதுங்கள்!

Dear Friends,

Roja Muthiah Research Library cordially invites you for the monthly lecture. Please forward this to your friends.

——————————————————-

Prof. M. Anandakrishnan Endowment Lecture Series 3

Roja Muthiah Research Library

invites you for a lecture on The “Great Poet” Debate: Mahakavi Yaar?

by

Mr. K. R. A. Narasiah

Writer

Date: 20th January 2012

Time: 5.00 p.m.

Venue:
Roja Muthiah Research Library
3rd Cross Road, Central Polytechnic Campus
Taramani, Chennai 600 113
Telephone: 2254 2551 / 2254 2552

Tea will be served at 4.30 p.m.

——————————————————-

Summary of the talk:

In 1935 there was a wordy duel between two literary groups – one that of Manikkodi and the other that of Kalki Krishnamurthi of Anandavikatan. It all started with V Ramaswami Iyengar then editor of Veerakesari in Colombo and former editor of Manikodi, declaring that Subramania Bharati as a Great Poet, whereas the Kalki group felt that Bharati was a good national poet and not a Great poet.

The talk focuses on the letters and essays written by both the groups declaring their views. However, it must be noted that the debate, while generating a lot of heat and light, did not create any ill-feelings among the individuals. In fact, they all remained friends and respected each other!

The speaker, K R A Narasiah, biographer of Chitti Sundararajan – one of the important participants of the debate – has the original letters written by some of the stalwarts of that day and is now presenting the lot available with him to show the level of the debate and the important Dramatis Personae in their learned correspondence.

Profile:

Mr. K. R. A. Narasiah was born in Berhampur, Orissa, into a Telugu family. After completing his early education in Tamilnadu, he became a marine engineer and sailed in the naval vessels for ten years and, later, for three years in the merchant navy. During his naval time he was deputed to the Harland & Wolff Shipyard in Belfast, North Ireland, for standing by the construction of I N S Vikrant, Navy’s first aircraft carrier and took over as its Fight Deck Chief. He joined the port of Visakhapatnam in 1965 and retired in 1991 as its Chief Mechanical Engineer. While in Port Service his services were requisitioned by the Navy during the Bangladesh liberation war. Later he was invited by the World Bank as a consultant for the emergency rehabilitation in Cambodia. He was also a consultant to the Asian Development Bank.

Mr. Narasiah took to writing early in his life and has published more than 100 short stories in Tamil that have come out in four volumes. Four of his works have been given Tamil Nadu State Literary Awards. He writes in English as well. He is a regular reviewer of books for The Hindu.

தொடர்புடைய சுட்டிகள்:
பாரதி – ஆர்வியின் மதிப்பீடு

2011 – திரும்பிப் பார்க்கிறேன்

வோர்ட்பிரஸ் இந்தத் தளத்தைப் பற்றி உருவாக்கிய 2011 ரிப்போர்ட்டைப் பார்த்தேன். போன வருஷம் எழுதியவற்றில் மிகப் பாப்புலரான பதிவு கல்கியின் வாரிசுகள் என்ற பதிவாம். அந்த சரித்திர நாவல்கள் சீரிஸ் பதிவுகளை எனக்கும் பிடிக்கும். மிச்ச டாப் பதிவுகள்:

ஜெயமோகன் தளத்திலிருந்தும், தமிழ்மணம் திரட்டியிலிருந்தும் நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறார்களாம். இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவிலும் வாசகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை, ஆனால் அர்ஜென்டினா, சிலி, அல்ஜீரியா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் படிக்கிறார்கள் என்பது வியப்புதான். நிறைய மறுமொழிகள் எழுதிய ரமணன், ஸ்ரீனிவாஸ், ஜெயமோகன், சாரதா, சிமுலேஷன், மற்ற எல்லாருக்கும் நன்றி!

படித்ததில் எது நல்ல படைப்பு என்பதுதான் முக்கியம், 2011-இல் என்னத்தைப் படித்தேன் என்பதெல்லாம் எனக்கே மேட்டர் இல்லை. இருந்தாலும் போன வருஷம் என்னதான் எழுதி இருக்கிறோம் என்று ஒரு அவசரப் பார்வை பார்த்தேன். போன வருஷம் எழுதிய பதிவுகளில் எது நல்ல நாவல் பற்றியது, எது நல்ல சிறுகதை பற்றியது என்று கீழே. சிறுகதைகள் பேரைக் கிளிக்கினால் அந்த சிறுகதையைப் படிக்கலாம்.

சிறுகதைகள்
எழுத்தாளர் சிறுகதை(கள்) பதிவு
லா.ச.ரா. பாற்கடல் என் பதிவு
சுந்தர ராமசாமி விகாசம் என் பதிவு
கு.ப.ரா. கனகாம்பரம் என் பதிவு
சுஜாதா ஒரு லட்சம் புத்தகங்கள் என் பதிவு
ஜெயமோகன் அறம் என் பதிவு
ஜெயமோகன் சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர், வணங்கான், தாயார்பாதம், யானை டாக்டர், மயில்கழுத்து, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, மெல்லிய நூல், பெருவலி, கோட்டி, உலகம் யாவையும் அறம் சீரிஸ் சிறுகதைகள் – என் அலசல்
நாஞ்சில்நாடன் வனம் என் பதிவு
Jack London A Piece of Steak என் பதிவு
ஆலந்தூர் மள்ளன் சுமைதாங்கி என் பதிவு
ஆர்வி (நானேதான்) கிருஷ்ணனைப் பிடிக்காதவன்
ஜெயமோகன் மாடன் மோட்சம் என் பதிவு
பிரகாஷ் சங்கரன் ஞானலோலன், அன்னை, அன்னதாதா என் பதிவு
விவேக் ஷன்பாக் சுதீரின் அம்மா என் பதிவு
சந்திரா அறைக்குள் புகுந்த தனிமை என் பதிவு

நாவல், நாடகம், அபுனைவு இத்யாதி

நாவல்கள்:

  1. சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”
  2. லா.ச.ரா.வின் “அபிதா”
  3. சுஜாதாவின் “நைலான் கயிறு”
  4. அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”
  5. பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”
  6. ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”
  7. கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்”
  8. ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”
  9. பாலகுமாரனின் “அகல்யா”
  10. சம்பத்தின் “இடைவெளி”
  11. ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”
  12. இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”

 
சரித்திர நாவல்கள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

நாடகங்கள்:
மெரினாவின் “மாப்பிள்ளை முறுக்கு”
சோ ராமசாமியின் “சாத்திரம் சொன்னதில்லை”
சுஜாதாவின் “டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு”

ஆங்கிலப் புத்தகங்கள்:
John Carlin’s “Playing the Enemy”
Jane Austen’s “Pride and Prejudice”
Stuart Neville’s “Ghosts of Belfast”
Frederick Forsyth’s “Dogs of War”

சிறுவர் புத்தகங்கள்:
Roald Dahl’s “BFG”, “Enormous Crocodile”, “Matilda”, “Fantastic Mr. Fox”
Rudyard Kipling’s “Junglebook”
Calvin and Hobbes
R.L. Stevenson’s “Treasure Island”

அபுனைவுகள்:
சுந்தர ராமசாமியின் நினைவோடை சீரிஸ் – “ஜீவா”
யதுகிரி அம்மாளின் “பாரதி நினைவுகள்”
அ.கா. பெருமாளின் “சுண்ணாம்பு கேட்ட இசக்கி”