தேவகாந்தனின் “கதாகாலம்” – மகாபாரத (மறு)வாசிப்பு

தேவகாந்தனின்கதாகாலம்” நாவல் பற்றி எங்கே கேள்விப்பட்டேன் என்று நினைவில்லை. மகாபாரதக் கதை, ஆற அமரப் படிக்க வேண்டும் என்றும் pdf ஆகப் படிப்பதை விட புத்தகமாகவே கிடைக்குமா என்றும் யோசித்துக் கொண்டு படிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். pdf ஆக டவுன்லோட் செய்து வைத்த கம்ப்யூட்டரே எங்கே போயிற்று என்று தெரியவில்லை. நூலகம் தளத்தைப் பார்த்ததும் இந்தப் புத்தகம் இருக்கிறதா என்றுதான் பார்த்தேன். இருந்தது.

ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். நிறைய எதிர்பார்த்தேன், ஏமாற்றம்தான். சில நல்ல ஐடியாக்கள், ஒரு நல்ல framework (மகாபாரதக் கதை அங்கங்கே சொல்லப்படுகிறது), நல்ல நடை எல்லாம் இருந்தும் ஏமாற்றம்தான். இது என் மாதிரி மகாபாரதப் பித்துள்ளவர்களுக்கு ஏற்ற தீனி இல்லை. என் கண்ணில் இது வாசிப்புதான், மறுவாசிப்பே இல்லை.

ஐராவதி கார்வே குறிப்பிட்ட மாதிரியே விதுரன்தான் யுதிஷ்டிரனின் உடல் ரீதியான அப்பா, சகாதேவன் மாத்ரி உடன்கட்டை ஏறியதால் குந்தி மீது கசப்போடு இருந்தான், அர்ஜுனன் பிருஹன்னளை வேஷத்திலிருந்து ஒரு வருஷம் முடியும் முன்பே வெளிப்பட்டுவிட்டான், திரௌபதியுடன் படுக்கும் வாய்ப்புக்காக சகாதேவன் அடக்கி வாசித்தான் என்கிறார். இவற்றை எல்லாம் இன்னும் டெவலப் செய்திருந்தால் எனக்குப் பிடித்திருக்கலாம்.

துரியோதனாதிகளை தார்த்தராஷ்டிரர்கள் என்று அழைக்காமல் குரு வம்சத்தினர் என்று பொருள்படும்படி கௌரவர்கள் என்று அழைப்பதில் அரசியல் உள்குத்து என்று ஒரு கதை கற்பனை பண்ணி வைத்திருந்தேன். அதே ஐடியாவை இவரும் சொல்லிவிட்டார்! 🙂

எனக்கென்னவோ எஸ்.ரா.வின் மொழி நினைவு வந்து கொண்டே இருந்தது.

தேவகாந்தன் புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர். டொராண்டோவில்தான் வாழ்கிறாராம்.

நான் மீண்டும் எல்லாம் படிக்கமாட்டேன். படித்தே ஆக வேண்டிய அளவுக்கு முக்கியமான புத்தகம் இல்லை, ஆனால் படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான புத்தகமும் இல்லை.

தொடர்புள்ள சுட்டிகள்:
நூலகம் தளத்தில் மின்னூல்
தேவகாந்தன் தளம்
என் மகாபாரதப் பித்து