வெங்கட் சாமிநாதன் பற்றி எழுதும்போது கூகை நாவலை என்றாவாது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் அதைப் பற்றி எழுதிய அறிமுகமும், அந்த விமர்சனத்தைப் பற்றி எழுந்த விமர்சனங்களும் அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்று ஆர்வத்தைக் கிளப்பின. தற்செயலாக உடனே கிடைக்கவும் கிடைத்தது.
கூகை என்னைப் பொறுத்த வரையில் முழு வெற்றி அடையவில்லை. பிறகு, வெக்கை இரண்டையும் கலந்து கட்டி அடித்த மாதிரி இருக்கிறது. ஆனால் வெற்றி அடையாவிட்டாலும் இது இலக்கியமே. பொதுவாக தலித் இலக்கியம் மாதிரி பாகுபாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் இதை வசதிக்காக தலித் இலக்கியம் என்று சொல்லலாம். (சோ. தர்மன் தான் தலித் எழுத்தாளன் என்று அறியப்படுவதை விரும்பவில்லை என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.) காலம், இருபதாம் நூற்றாண்டு நாகரீகம் ஒரு குழுவை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை இலக்கியமாக ஆவணப்படுத்தி இருக்கிறார். என் கண்ணில் நயம் குறைவு, அங்கங்கே செயற்கையாக (உதாரணமாக கூகையை வலிந்து ஒரு metaphor ஆக புகுத்துவது) இருக்கிறது. இது தலித் இலக்கியம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். அதற்கெல்லாம் பூமணிதான் – அவர் எழுதுவது இலக்கியம், period. இந்த தலித் கிலித் பார்ப்பான் பறையன் அடைமொழி எல்லாம் அங்கே வேலைக்காவதில்லை.
கூகைக்கு கோட்டான் என்றும் பெயர் உண்டா?
நாவல் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது. முத்துக்கருப்பனும், மூக்கனும் துட்டி கேட்கும் சாக்கில் டவுனில் கிளப்புக் கடையில் ஒரு வெட்டு வெட்டுவதும், பெஞ்சு மேல் உட்கார்ந்து சாப்பிடதற்காக ஊரில் காவல்கார முத்தையாப் பாண்டியன் கையில் தர்ம அடி வாங்குவதும் பிரமாதமான காட்சி. பாண்டியன் சண்முகப் பகடையின் மனைவியோடு படுத்து எழுந்த பிறகு குடிக்க சாராயம் வாங்க சண்முகப் பகடையையே அனுப்புவது அடுத்த காட்சி. பத்து பக்கத்தில் ஜாதீய அடக்குமுறையை புட்டு புட்டு வைத்துவிடுகிறார்.
பள்ளக்குடியின் அறிவிக்கப்படாத தலைவனான சீனிக் கிழவன் எப்போதும் அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்த சந்தர்ப்பம் நோக்கி இருக்கிறான். அவனை முன்னால் வைத்து பள்ளக்குடியினருக்கு தன் நிலங்களை குத்தகைக்குத் தந்துவிட்டு நடராஜய்யர் பட்டணம் போய்விடுகிறார். (பறையர்களுக்கு தைரியம் குறைவு என்பதால் அவர்களுக்கு குத்தகை இல்லை என்று வருகிறது. இதைப் பார்த்து தமிழ்நாட்டில் யாரும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கவில்லையா?) பள்ளக்குடியே இது தங்கள் வாழ்க்கை நிலை உயர ஒரு அரிய வாய்ப்பு என்பதை உணர்கிறது. கடுமையாக உழைப்பது மட்டுமல்லாமல் அடக்குமுறையை சமயம் பார்த்து எதிர்க்கவும் செய்கிறது. அப்புச்சுப்பனும் அவன் மகன் அய்யனாரும் ஆளை வெட்டவும் தயங்கவில்லை. ஜமீந்தார், போலீஸ், வன்முறை, அப்புச்சுப்பனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பேச்சி, நகரத்துக்கு குடி பெயரும் பள்ளக்குடி, தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வரவு, நில ரீதியான அடக்குமுறை தொழில் ரீதியான அடக்குமுறையாக மாறுவது என்று காலம் மாறுவதை நன்றாகவே காட்டுகிறார்.
சோ. தர்மன் திறமையான எழுத்தாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அருமையான framework. எனக்கு மிகவும் பிடித்த பகுதி அப்புச்சுப்பன் பன்றிகளுக்கு கோவில்பட்டியில் பாதுகாப்பு பொறுப்பை ஏற்பதுதான்.
கூகைச்சாமியை பற்றிய பகுதிகள் எனக்கு வலிந்து புகுத்தப்பட்டவையாகத் தெரிகின்றன. சீனிக்கிழவனின் பாத்திரம் எப்போது பள்ளக்குடியின் வாழ்க்கை நிலையை உயர்த்த ஒரு சின்ன வாய்ப்பாவது கிடைக்கும் என்று காத்துக் கொண்டே இருந்து சான்ஸ் கிடைத்தால் பாய்ந்துவிடுவது போல இருக்கிறது. பாத்திரத்தின் அந்தக் கூறு நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறது. அதுவே அப்புச்சுப்பன் போன்ற பாத்திரங்கள் தலைமை ஏற்பது natural ஆக இருக்கிறது. திடீர் திடீர் என்று பண்டித நடைக்கு மாறுகிறார், அது பொருத்தமாக இல்லை. கொஞ்சம் ramble ஆகிறது, நடுவில் கருணாநிதி, எம்ஜிஆர் எல்லாம் எதற்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை. நாவல் 1930-50 காலகட்டத்தில் நடக்கிறது என்று நினைக்கிறேன் – அங்கே இந்த references ஒரு anachronism ஆக இருக்கிறது.
வெ.சா.வின் விமர்சனம் பற்றியும் ஒரு வார்த்தை. நடராஜய்யர் நாவலில் ஒரு சின்ன பாத்திரம். வெ.சா.வின் விமர்சனத்தைப் படித்துவிட்டு நான் என்னவோ நினைத்தேன். வெ.சா. நாவலில் தன் முடிவுகளுக்கு சாதகமான ஒரு சிறு பகுதியைப் பற்றி விலாவாரியாக பேசுகிறார். அது என் கண்ணில் தவறு இல்லை. அந்தப் பகுதி – ஒரு அய்யர் நிலங்களை நாயக்கர்-தேவர் போன்ற ஆதிக்க ஜாதியினரைத் தவிர்த்து பள்ளருக்கு குத்தகைக்கு கொடுப்பது, பிறகு விற்பது இத்யாதி – நிச்சயமாக highlight செய்யப்பட வேண்டிய ஒன்றே. இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் ஒரு பிம்பத்தை அது கட்டுடைக்கிறது. எண்பது வயதிருக்கும் வெ.சா.வே தன் பிம்பங்களையே அது கட்டுடைத்தது, இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா என்று நானே சோ. தர்மனிடம் கேட்டேன் என்று எழுதுகிறார். இந்தப் பகுதிக்கு நிச்சயமாக ஒரு சமூக முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் இது நாவலின் ஒரு சிறு பகுதி என்பதை வெ.சா. எங்கும் குறிப்பிடவில்லை. விமர்சனத்தைப் படிப்பவர்களுக்கு சோ. தர்மன் நாயக்கர்-தேவர் அடக்குமுறை, அய்யர்களின் உதவி இரண்டையும் ஏறக்குறைய சம அளவில் வைத்து சோ. தர்மன் எழுதி இருக்கிறார் என்று தோன்றும். (எனக்கு அப்படித்தான் தோன்றியது.) உண்மையில் இது பள்ளர்களின் வாழ்க்கை, அதில் சம்பந்தப்படும் அளவுக்குத்தான் பிற ஜாதியினர் விவரிக்கப்படுகிறார்கள். இந்த விமர்சனத்தை வைத்து வெ.சா.வை பிராமணப் பிரியர் (வெறியர்) என்றெல்லாம் சொல்வது டூ மச்.
ஜெயமோகன் சோ. தர்மன் பூமணியின் மருமகன் என்று குறிப்பிடுகிறார். மகளைக் கட்டிய மருமகனா, இல்லை சகோதரி மகனா என்று தெரியவில்லை. சகோதரி மகனாம்.
குறைகள் இருந்தாலும் நல்ல புத்தகம், படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொடர்புள்ள சுட்டிகள்:
வெ.சா.வின் விமர்சனம்
சோ. தர்மனைப் பற்றி ஜெயமோகன்
சோ. தர்மனின் பேட்டி
சோ. தர்மனின் ஒரு சிறுகதை
நன்றி
//இதைப் பார்த்து தமிழ்நாட்டில் யாரும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கவில்லையா//
விமர்சனங்களை மட்டுமே படிப்பதுதானே நம்மவரின் இயல்பு… நூலை ஒழுங்காக வாசிப்பவர் எல்லாம் குதிப்பவர்கள் இல்லையே
LikeLike
கூகை பதிவுக்கு இணைப்பு தந்ததற்கு நன்றி, பாஸ்டன் பாலா!
LikeLike
சோ.தர்மனின் தூர்வை நாவலை போன வாரம் தான் படித்தேன். இந்த நாவல் குறித்து கி.ரா சிலாகித்து சொல்லியிருக்கிறார்..
உருளகுடி என்ற ஊரில் ஒரு காலத்தில் தலித் சமுதாயத்தினர் நிலபுலன் களுடன் வாழ்ந்த சித்திரத்துடன் இந்த நாவல் தொடங்குகிறது (பொதுவாக அவர்கள் சமூக அடுக்கில் கீழ்ச்சாதியாக இருந்து சுரண்டலுக்கு ஆட்பட்டிருந்த போதிலும், சில ஊர்களில் இத்தகைய நிலை இருந்திருக்கிறது) இறுதியில் மழை பொய்த்து, கரிசல் பூமியில் தீப்பெட்டித் தொழிலும் மற்ற தொழிற்சாலைகளூம் வர, நிலத்தையும் உழவையும் இழந்து பிழைப்புக்காக ஊரைத் துறந்து செல்லும் அவலத்துடன் நாவல் முடிகிறது..
வட்டார வழக்குகளும், சில அலாதியான நாட்டார் கதைகளும், கரிசல் பூமியில் அந்த சமூகத்தினரின் வாழ்க்கை முறையும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.. எனக்கு நாவல் பிடித்திருந்தது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
LikeLike
ஜடாயு
நானும் 2 வாரங்கள் முன் தான் படித்தேன். எனக்கும் பிடித்தது. கூகையை புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். நீங்கள் புத்தக கண்காட்சிக்கு எப்பொழுது வருகிரீர்கள்?
LikeLike