ஆழி சூழ் உலகு பற்றி Bags

இது இன்னொரு ஆழி சூழ் உலகு புத்தக விமர்சனம்.

கடலோடிகளின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார் என்று எளிதாகக் கூறினால் அது அபத்தமாகத்தான் முடியும். நம்மை அழைத்து சென்று எந்த அளவு அவ்வாழ்க்கையில் ஈடுபடுத்தமுடியுமோ அவ்வளவு ஈடுபடுத்தியிருக்கிறார். ஜோ சொல்வதுபோல் ஒரு இரண்டு பக்க கட்டுரையிலோ ஒரு அரசாங்க குறை கேட்கும் அமைப்புக்கு அனுப்பும் விண்ணப்பத்திலோ பரதவர் அவலங்களை எழுதி தன் சமுதாய கடமையை சுருக்கியிருந்தால் கேளாச் செவிகளில் விழாமலோ கவனிக்கப்படாத குப்பையாகவோ முடிந்திருக்கும். ”மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை காணவில்லை” என்ற செய்திகளை பத்திரிக்கைகளை வாசிக்கும் பொழுது, சம்பந்தப்பட்டவர்களைத் தவிற பிறர் காலை காஃபியுடன் சொகுசாக செய்தியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்தத் தெரியாமல் வறட்டுத் தனமாக மனமும் அறிவும் பதிவு செய்ய மறுத்து அதனை புறந்தள்ளி கடப்பவர்களை தடுத்து நிறுத்துகிறார் ஜோ. மகத்தான வெற்றியும் அடைந்திருக்கிறார்.

பொருளியல் தளத்தில் பிற குலத்தவர் புரிந்துக் கொள்ளாவிட்டால் ஒருவிதமாக எடுத்துக் கொள்ளலாம். தங்கள் உணர்வுகளின் அருகில் இருக்கும் ”மெனக்கடன்”காரர்களும், ”மேஜை” காரர்களுமே புரிந்து கொள்ளாவிட்டால் பிரச்சனை தீர்வுக்கு வராமல் நழுவி ஓடுகிறது. இவர்களுடன் சேர்ந்து விசைப்படகுக் காரர்கள் தொழில் போட்டியாக வந்து மீன்களின் சந்தை மதிப்பை கீழே இழுக்கும் பொழுது நிலை குலைந்து மூர்க்கமாகிறார்கள் மரக்கரர்கள். கடலில் 6 கிமீ தொலைவு வரை மரங்களில் இறங்குபவர்களுக்கே அனுமதி என்பதும், கப்பல்களுக்கு இன்னும் தொலைவிலே என்பது பெயரளவிலேயே இருக்கிறது. தண்ணீருக்கு கீழே சிறிய மீனை பெரியது உட்கொள்வது போல் கப்பல்கள் போட்டையும், போட் மரங்களையும் விழுங்குகிறது. அந்த சோகத்தின் உந்துதலினால் ”மெனக்கடனே” தங்களுக்கு நிலைக்கு மாற்றாகவும், இலட்சியமாகவும் பார்க்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது அங்கே ஒரு வாழ்க்கை முறை, ஒரு எளிய நாகரிகம் சிதைய தொடங்குகிறது.

தங்கள் இலட்சியப் பாதையை மாற்ற முயற்ச்சிக்கும் பொழுது கல்வி பயிலும் பள்ளியிலிருந்து தொடங்கி இவர்கள் பல அறைகூவல்களை சந்திக்கிறார்கள். சமுதாயம் முன்முடிவுடன் செயல்படும் பொழுது இந்த அறைகூவல்கள் அசாதரணமாக உருமாறி அவர்களை கடலை நோக்கியே விரட்டிக் கொண்டிருக்கிறது. கடலுடனே இணைத்து பொருளாதார எல்லைகளுக்குள் உட்படுத்தப்பட்டு சூழ்நிலைக் கைதிகளாக காலம் தள்ளுகிறார்கள். அதனால் சமூக தளமும் சிக்கல் நிறைந்ததாக பரிணமிக்கிறது. குடும்பச் சண்டைகள், சச்சரவுகள், கட்சி, கமிட்டி, பாலியல் குற்றங்கள் என்று ஊர் பல்வேறு வகையில் துண்டுபட்டு நிற்கிறது. ஆனால் இவைகளிடனிடையே தான் இவர்களை இணைக்கும் சரடான பாசங்களும் பந்தங்களும் கொட்டிக் கிடக்கின்றன.

மரிய அல்ஃபோன்ஸ் காகு சாமியார் அன்பிற்கு கட்டுப்பட்டு செலுத்தப்படும் ஆமந்துரை மக்களின் வாழ்க்கை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கதை மாந்தர்களின் குடும்-பங்களின் மூலம் மனிதர்களின் உணர்வுகள், ஆசைகள், இயலாமைகள், கோபங்கள், தாபங்கள் வாசகனை வந்தடைகிறது. எந்தச் சமூகத்திலும் இருக்கும் உணர்வுகள்தான் இந்தச் சமூகத்திலும் கொட்டிக் கிடக்கிறது. பெருங் கல்வி கற்ற் சமூகத்திலும் பார்க்கமுடியாத உயர் பண்புகளை நாம் பார்க்கிறோம். சூசை-சிலுவை-கோத்ரா வலை திரும்பாத கடைசி நாட்களில் மேரி சுந்தரி டீச்சரையும் தன்னுடன் இணைத்து பரிதவிக்கும் தருணம் தமிழ் இலக்கியங்களில் சந்திக்கும் தமிழ் பெண்ணைப் எதிர்கொள்கிறோம். தோக்களத்தா-கோதரா தங்கள் இறுதி மூச்சு வரை ஒருமையாக் சிந்திப்பது வியக்க வைக்கிறது. குடுமப வாழ்க்கையை தியாகம் செய்து வாழ்க்கை அர்பணிக்கும் அவர்களை காகு சாமியார் தேவனின் ஆசிர்வாதத்திற்கு உரியவர்களாக அடையாளப் படுத்துகிறார். தொம்மாந்திரையை கூட அந்த அளவிற்கு அவர் உயர்த்தவில்லை. வானவில்லின் மறுபகுதியாக மானாப்பிள்ளை-மந்தாப்பிள்ளை உறவுகள். மானிட மனம் விடும் விடுகதைகள். ஜஸ்டின் கதை கெட்ட குமாரனின் கதை. வசந்தாவின் பொறுமையற்ற வாழ்க்கை மூலம் யதார்த்த பெண்ணை சந்திக்கிறோம். சூசை ஒரு யதார்த்த மனிதனாக உருவாக்கப் பட்டிருக்கிறார். அவர் சிலுவையின் வாழ்க்கையில் இரண்டு முகங்களுடன் பவனி வருகிறார். உயர்ந்த பண்புகள் இருந்தாலும் கட்டுக் கடங்காமல் போகும் காமத்தால் சிலுவையின் தாயை கொடிய முறையில் பலிகடா ஆக்குவதை சொல்வதன் மூலம் பாத்திரங்களை சமரசமின்றி இயல்பாக படைத்திருக்கிறார் ஜோ. அதே சமயத்தில் மனிதர்கள் தங்கள் உணர்வுகளுடன் போராடி மீளமுடியாமல் எந்த எல்லையையும் தாண்டத் தயாராகும் நுண்ணுணர்வு சூசை மூலம் உணர்த்தப்படுகிறது. விரசமாக இருந்தாலும் காரக்டரைசஷன் பலமாக இருக்கிறது.

கடலுக்கடியில் ஒங்கல்களும் மற்ற மீன்கள் தொடர்ந்து வருவதை விவரிக்கும் பொழுது ஜோவின் நடையில் கவித்துவம் எட்டிப் பார்க்கிறது. பரதவர்களின் வாழ்க்கையை பற்றி ஒளிவு மறைவு இல்லாத ஒரு illustration.

பின் குறிப்பு – ஆமந்துறை கற்பனை பெயர். உண்மைப் பெயர் உவரி.

தொடர்புடைய சுட்டி:

ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன் பதிவு

ஆழி சூழ் உலகு பற்றி ஆர்வி