புத்தகங்களைக் காதலித்தவர் – லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

சில வருஷம் முன்பு திருமலைராஜன் புண்ணியத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அபிதா புத்தகத்தை படித்தேன். என்ன அருமையான புத்தகம்! நான் இங்கே லா.ச.ரா.வின் எழுத்தை சொல்லவில்லை, புத்தகத்தின் அட்டை, பேப்பர், பைண்டிங் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். உலகத் தரம் வாய்ந்த புத்தகம் வெளியீடு. இன்றைக்கு கூட இப்படி புத்தகங்கள் வருவதில்லை. யாராவது பழைய வாசகர் வட்டம் (நல்ல கண்டிஷனில் உள்ள) வெளியீடுகளை விற்பதாக/கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறேன்!

வாசகர் வட்டம் நிறுவனர் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரைப் பற்றிய சில பழைய பதிவுகளை இங்கே ஒரு மாதிரி தொகுத்து பதித்திருக்கிறேன்.

லக்ஷ்மி மறைந்து இரண்டரை வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சத்தியமூர்த்தியின் ஒரே மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர். எமர்ஜென்சிக்கு பிறகு தமிழ் நாட்டில் ஜனதா கட்சி என்று ஒரு அமைப்பு உருவாக உழைத்தவர். 77-இல் மயிலாப்பூரில் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அப்போது மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இவருக்காக பிரச்சாரம் செய்து கேட்டிருக்கிறேன். (ஃபெர்னாண்டஸ் மிக அருமையான பேச்சாளர்.) லக்ஷ்மியை (ஃபெர்னாண்டசையும்) நான் அந்த ஒரு சமயத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருக்கு அப்போது ஐம்பது வயது இருந்திருக்கலாம். ஒல்லியாக, ஒரு நாற்பது வயதுக்காரர் மாதிரி இருந்தார்.

வாசகர் வட்டம் அமைப்பை அவர் அறுபதுகளில் உருவாக்கினார். நாங்கள் வசித்த கிராமங்களில் வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்கள் மிக அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் புத்தகங்களை என் அம்மா மிக ஆர்வத்தோடு படிப்பார். நல்ல முறையில் அச்சிடப்பட்டிருக்கும். (சாதாரணமாக நூலகங்களில் புத்தகங்களின் quality சொல்லும்படி இருக்காது, சுலபமாக கிழிந்துவிடும்.) தி. ஜானகிராமன், லா.ச.ரா. ஆகியோரின் புத்தகங்களை கேட்டு வாங்கி பதித்தார் என்று ஞாபகம். எனக்கு பர்சனலாக ஞாபகம் இருப்பது சாயாவனம் மட்டுமே. நல்ல இலக்கியத்தரம் உள்ள புத்தகங்களை பதிக்க ஒரு குழுவினர் முயற்சி செய்கிறார்கள் என்று என் அம்மா சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

எண்பது-தொண்ணூறுகளில் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என் அம்மாவுக்கு வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்களை பார்த்து ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

லக்ஷ்மி வாசகர் வட்டம் உருவாகிய முயற்சியை பற்றி இங்கே பேசுகிறார். மிக அருமையான பேட்டி, மிஸ் செய்யாமல் படியுங்கள்! வீட்டை எல்லாம் அடகு வைத்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார்! அவருடைய வார்த்தைகளில்:

வாசகர் வட்டம் ஆரம்பித்த வருஷம் 1965. முதலில் என் திட்டங்களை அச்சடிச்சு எல்லோருக்கும் கொடுத்தேன். அதாவது, 25 ரூபாய் கொடுத்து சந்தாதாரர் ஆகணும். சந்தாதாரர்களுக்கு சலுகை விலையிலே புத்தகங்களை அனுப்பி வைப்பேன். விற்பனை மையங்களுக்கு புத்தகங்களை அனுப்புறது இல்லை. ஏன்னா, அவன் கமிஷன் கேட்பான். அதனாலே, குறைந்த விலைக்கே நேரடியாக வாசகர்களுக்கு கொடுத்தேன். வருசத்துக்கு ஆறு புத்தகங்களை வெளியிட்டேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நூலாசிரியருக்கும் அவருடைய புத்தக விற்பனைக் கணக்கைச் சரிபார்த்து, உடனுக்குடன் பணத்தைக் கொடுத்துவிடுவேன். எழுத்தாளர்களுக்கு எந்த குறையும் வைக்கலே. இதைப் பார்த்துட்டு ராஜாஜியே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவருடைய நூல்களுக்குக் கூட சரியான கணக்கோ, தொகையோ கொடுக்காத நிலையிலேதான் அப்போதைய பதிப்பாளர்கள் இருந்தார்கள்…

மேலும்:

“எத்தனை சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள்?”
“தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு இரண்டாயிரம் வாசகர்கள் தமிழுக்கு கிடைக்கமாட்டார்களா என்று நம்பினேன். ஐந்நூறு சந்தாதான் சேர்ந்தது. அப்போ நல்ல நூல்களை படிக்கிற பழக்கம் அதிகமா இல்லே.”

அவர் மறைந்தபோது சா. கந்தசாமி காலச்சுவடு பத்திரிகையில் ஒரு அஞ்சலி எழுதி இருந்தார்.

விகடனில் அவர் அண்மையில் மறைந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை பற்றி 10-4-66 அன்று விகடனில் வந்த கட்டுரையை கீழே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன். விகடனுக்கு நன்றி! “புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய் சிரிப்பு” மாதிரி எழுதுவது quaint ஆக இருக்கிறது.

ஹரிஜன நிதிக்காக, பணமும் நகைகளும் வசூல் செய்துகொண்டு இருந்தார் காந்தியடிகள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லோரிடமும், தாழ்த்தப்பட்ட மக்களை உய்விப்பதற்காக அந்த மகாத்மாவின் கரம் தாழும். புவனத்தையே ஈர்க்கும் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கண்டவர்கள் எல்லோரும் தங்களிடமிருக்கும் நகைகள் அனைத்தையுமே தயங்காமல் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள்.

அன்றும் காந்தியடிகள் கரம் நீட்டிக்கொண்டிருந்தார். கான்வென்ட் பள்ளியிலிருந்து பள்ளிக்கூட டிரஸ்ஸிலேயே வந்திருந்த சிறுமி ஒருத்தி, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் தன் கையிலிருந்த வளைகளைக் கழற்றி மகாத்மாவிடம் கொடுத்துவிட்டாள்.

மறுநாள், மகாத்மா அந்தப் பெண்ணை அழைத்து, “நேற்று நீ வெள்ளி வளையைக் கழற்றிக் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டாயே!” என்று கேட்டார். “பாபுஜி, நான் அதைத் தங்க வளை என்று சொல்லவே இல்லையே! எல்லோரும் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தவுடன், என்னையும் மீறி நான் என் கையிலிருந்ததைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள் சிறுமி.

“அதெல்லாம் தெரியாது. அதற்குப் பிராயச்சித்தமாகப் பவுன் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்” என்றார் காந்திஜி. அந்தச் சிறுமி, மகாத்மாவின் கட்டளைப்படி பவுன்களைக் கொண்டு போய்க் கொடுத்து, அவரது பாராட்டுதல்களையும் ஆசிகளையும் பெற்றார்.

மகாத்மாவின் ஆசிகளை மட்டுமா? நேருஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பல பெரும் தலைவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர் அந்தப் பெண். ஒரு மாபெரும் தியாகியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தேசபக்தியும் சுதந்திர வேட்கையும் அவருடைய உடன்பிறப்புகள்.

அவர்தான் – தீரர் எஸ்.சத்தியமூர்த்தியின் மகளான திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.

கேரள நாட்டுக் கோட்டையம் பகுதிக்குச் சென்று, திருமதி லக்ஷ்மியைப் பற்றி விசாரித்தால், அவருடைய அரும்பணிகளின் சிறப்பு நன்கு புரியும். அங்கே ‘பிளாண்டராக’ இருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தரசியான திருமதி லக்ஷ்மி, பங்கு பெற்றிராத சமூக ஸ்தாபனங்களே இருக்க முடியாது. தமது இல்லத்திலேயே பெண்களுக்காக இலவச மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார் அவர். ‘ஸ்டேட் சோஷல் வெல்ஃபேர் கமிட்டி’ ஒன்றின் தலைவராகப் பணியாற்றுகிறார். மாகாண குடும்பக் கட்டுப்பாடு திட்டக் கல்வி ஆசிரியராக இருக்கிறார். இவை தவிர, கூட்டுறவு இயக்கங்களிலும் தொண்டாற்றுகிறார்.

மகாராஷ்டிரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, கேரளத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி, தற்போது ‘புஸ்தக சங்கம்’ (Book venture) ஒன்றைத் துவக்கி, சிறப்பான இலக்கியப் பணி ஆற்றிவருகிறார். இதற்கு, சென்னையில் ஒரு பெரிய புஸ்தகக் கம்பெனியை வைத்து நடத்தி வரும் இவருடைய கணவர், பேராதரவு தந்து வருகிறார்.

“என் கணவருக்குப் புத்தகங்கள் மீதுதான் முதல் காதல். நான் கூட இரண்டாவது பட்சம்தான்” எனக் கூறும் திருமதி லக்ஷ்மி, இந்தப் புத்தகசங்கத்தின் வளர்ச்சிக்காக, இதுவரை முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொந்தப் பணத்தைச் செலவழித்துள் ளார்.

“இந்தியாவிலுள்ள படித்த தமிழ்ப் பெண்களில் 500 பேர் எனக்கு உதவி செய்தால், இந்தக் கிளப்பை வெற்றிகரமாக நடத்திவிடுவேன் நான். ஆளுக்கு ஆறு மெம்பர்களைச் சேர்த்துத் தந்தால், மூவாயிரம் மெம்பர்கள் கிடைத்துவிடுவார்கள். அது போதும் எனக்கு” என்கிறார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள 500 பெண்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்! கண்டிப்பாகக் கிடைப்பார்கள்.

“காந்தியடிகளை முதன்முதலாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டபோது, சிறிது நேர யோசனைக்குப் பின்னர், “சரியாக நினைவில்லை. ஆனால், பல முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பு உண்டு அவருக்கு. என்னை ஹிந்தியில் கடிதம் எழுதச் சொல்லுவார். நான் எழுதும் ஹிந்திக் கடிதத்திலுள்ள பிழைகளையெல்லாம் திருத்தி, அவற்றைத் திருப்பி அனுப்புவார். தாமே கைப்பட விலாசம் முதற்கொண்டு எழுதுவார். அவரிடம் நான் கவனித்த பெரிய விஷயம், அவருடைய போட்டோகிராபிக் மெமரி! நமது பெரியவாளைப் பற்றிச் சொல்வோமே, அதே போன்ற ஞாபக சக்தி உடையவர் அவர்” என்றார்.

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான தொண்டினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் கூடவே நிழல் போல இருந்து வந்த திருமதி லக்ஷ்மியிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால், அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்த தேச பக்தியையும், தியாக உணர்வையும் பற்றிய சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

காமராஜ் அவர்களைப் பற்றிக் கேட்ட போது, “திருவல்லிக்கேணி வீட்டுக்கு வருவார் அவர். அவர் அதிகமாகப் பேசியே கேட்க முடியாது. அப்பாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை. அப்பாவும் காமராஜ் அவர்களின் ஆற்றலை நன்கு அறிந்து வைத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை காமராஜ் அவர்களிடம் நான் இரண்டு சிறப்பான குணங்களைக் கவனித்து வருகிறேன். பழங்காலத் தலைவர்களையும் தியாகிகளையும் மறக்காத குணம். பதவிக்கு ஆசைப்படாத மனம். இந்த இரண்டுதான்! அவர் வகித்த பதவிகள் எல்லாம் வற்புறுத்தி அவரிடம் ஒப்படைக்கப்பட்டவை. டி.ஸி.ஸி. தலைவர் பதவியை அப்பா அவரிடம் வற்புறுத்திதான் ஏற்றுக்கொள்ள வைத்தார். ‘நீ தலைவனாக இரு; நான் காரியதரிசியாக இருக்கிறேன்’ என்றார் அப்பா. ஒரு முறை தலைவராக இருந்தவர், காரியதரிசியாக உழைக்க முன் வந்தார் என்றால், காமராஜ் அவர்களின் ஆற்றலை அப்பா எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது தெரிகிறதல்லவா?” என்றார் லக்ஷ்மி.

ஒருமுறை, காமராஜ் அவர்களின் கல்யாணத்தைக் காணவென்று ஆயிரம் மைல் பிரயாணம் செய்தார் திருமதி லக்ஷ்மி. ஆமாம்! புவனேஸ்வர் காங்கிரஸில், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை காமராஜ் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் திருமதி லக்ஷ்மி.

“எங்கள் காமராஜுக்கு அதுதானே திருமணம்! அந்த ‘காடி’யை அவர் அலங்கரிக்கப் போகும் கண்கொள்ளாக் காட்சியைக் காண, நானும் என் கணவரும் புவனேஸ்வரம் போனோம். உழைப்பும் நேர்மையும் கௌரவிக்கப்பட்ட மகத்தான காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார் திருமதி லக்ஷ்மி.

சென்னை மேல்சபையில் அங்கத்தினர் பதவி வகிக்கும் திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஒரு காலத்தில் பல பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், நன்றாக வீணை வாசிப்பார்.

பெண்கள் முன்னேற்றம், தமிழ் இலக்கிய வளர்ச்சி இவை இரண்டிலும்தான் தற்போது இவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அன்றைக்கு 30000 ரூபாய் என்றால் இன்றைக்கு மூன்று கோடி பெறும் என்று நினைக்கிறேன். வீட்டை அடகு வைத்து இத்தனை பணத்தை போட்டிருக்கிறார். உண்மையான புத்தக காதல்!

தொடர்புடைய சுட்டிகள்:
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்த சாரதா

9 thoughts on “புத்தகங்களைக் காதலித்தவர் – லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

 1. ஆறே ரூபாய் விலையில் அச்சு, அமைப்பு, பைண்டிங் எல்லாம் மிகத் தரமான
  முறையில் உள்ளது.லாப நோக்கம் அறவே இல்லை. இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கு.ப.ரா. சிறுகதைகள், நரஸையாவின் ”கடலோடி” , கிரா. வின் கோபல்ல கிராமம் ஆகியவை படித்திருக்கிறேன்.அப்போதைய சூழலில்
  அபாரமான முயற்சி.

  Like

  1. ராதாகிருஷ்ணன், நரசையாவின் கடலோடி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறீர்களா? படித்தவர்கள் யாராவது இருந்தால் அது பற்றி எழுதுங்களேன்!

   Like

 2. ”கடலோடி” நான் படித்திருக்கிறேன். வாசகர் வட்டம் வெளியிடது. நரசய்யாவின் இளம் பருவ வாழ்க்கை, அவர் கடல் சார் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தது, கடுமையான பயிற்சிகள், மலையேற்றம், ஆங்கில அதிகாரிகளின் கண்டிப்பு மற்றும் ஒழுங்கு, கம்பீரமான ஆங்கில உச்சரிப்புகள், பயிற்சியின் கட்டுப்பாடுகள், அது பின்னால் தன் வாழ்க்கைக்கு எவ்விதம் பயன்பட்டது, பற்றி அழகாக விளக்கியிருப்பார்.

  குறிப்பாக கப்பலில் மேற்கொள்ளும் பயிற்சிகள் – இரண்டு கப்பல்கள் விரைவாகச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு கயிறு மூலம் செல்வது, எண்ணெய் மாற்றுவது, எதிரிகளிடமிருந்து தற்காப்பு நடவடிககைகள் என நாம் அதுவரை அறியாத ஒரு புது தளத்தை அந்த நூல் காட்டும்.

  நரசய்யாவின் ஒரு பகுதி வாழ்க்கைதான் ’கடலோடி’. கப்பல் போலவே கொஞ்சம் வேகமாக, நடுவே மிக மெதுவாகச் செல்லும் நூல். ஆங்கிலத்தில் சிந்தித்து அவர் தமிழில் எழுதிய நூல் என நினைக்கிறேன். படிக்கும் போதே அந்த நடை காட்டிக் கொடுத்து விடும். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

  இதுவரை படித்த நூல்கள் பலவும் (எடைக்குப் போட்ட குப்பைகள் தவிர) மேலே பரணில் பத்திரமாக இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் ’எழுத்து கைவரும் போது’ விமர்சனமாக எழுத முயற்சிக்கிறேன்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.