ஒண்ணரை பக்க நாளேடு – வள்ளுவர் கோட்டம் நீச்சல் குளம் ஆகிறது

அண்ணா நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்றத் திட்டம் என்று படித்தவுடன் ஒரு ஒண்ணரை பக்க நாளேடு எழுதலாமே என்று தோன்றியது. ஆரம்பித்தேன், பின் மறந்தே போய்விட்டேன். சரி எழுதிய வரைக்கும் பதிப்போமே என்றுதான்…

அப்புறம் இதை எல்லாம் பதிக்க இந்தத் தளம் ஏற்றதுதானா என்று ஒரு கேள்வி இருக்கிறது. சரி இதுவும் ஒரு வகை கற்பனைதானே என்று சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

துக்ளக்குக்கு நன்றி!

வள்ளுவர் கோட்டம் நீச்சல் குளம் ஆகிறது!

அரசு செய்தி: சென்னையில் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் தண்ணீர் போக வழி இல்லாததை கவனித்து அங்கே உள்ள வள்ளுவர் கோட்டத்தை இடித்துவிட்டு ஒரு செயற்கை ஏரியை நிர்மாணிக்க உத்தரவிட்டிருக்கிறார். அந்த ஏரித் தண்ணீரைப் பயன்படுத்தி ஒரு நீச்சல் குளமும் அமைக்கப்படும். ஏரி மழைக்காலத்தில் நீர் செல்ல ஒரு வடிகாலாக இருக்கும். வெய்யில் காலத்தில் கிரிக்கெட் மைதானமாகவும் பயன்படும்.

ஜெயலலிதாவின் சட்டசபை உரை – லேக் அலேக்!
சட்டசபையில் இது பற்றி உரையாற்றிய ஜெயலலிதா ஒரு காலத்தில் நுங்கம்பாக்கத்தில் பெரிய ஏரி இருந்ததாகவும் அதனால்தான் அது லேக் ஏரியா என்று அழைக்கப்பட்டதாகவும் கூறினார். கருணாநிதி குடும்பத்தினர் அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டு சொற்ப நிலத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டு மிச்ச இடத்தை பிளாட் போட்டு விற்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். லேக்கை அலேக் செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டபோது அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வள்ளுவர் கோட்டம் vs கருணாநிதி கொட்டம்
அமைச்சர் செங்கோட்டையன் வள்ளுவர் கோட்டத்தை இடிக்கப் போவதில்லை, கருணாநிதி கொட்டத்தை உடைக்கப் போகிறோம் என்று கூறியபோது மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு மேஜை உடைந்து முன்னாள் அமைச்சர் செந்தமிழனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர் இது ராஜாத்தி ஃபர்னிச்சரில் வாங்கப்பட்ட மேஜை, மேஜை வாங்குவதிலும் ஊழல் செய்த கருணாநிதி குடும்பம் என்று கத்தியபடியே முதல் உதவி செய்துகொண்டார்.

கருணாநிதி கடும் கண்டனம்: ஒரு சூத்திரன் இன்னொரு சூத்திரனை பெருமைப்படுத்த கட்டிய கட்டிடம் என்றுதான் ஜெயலலிதா இந்த கட்டிடத்தை இடிக்கிறார், நான் கட்டிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு என்னை அழைக்கவில்லை என்றாலும் கட்டிடமாவது இருக்கிறதே என்று ஆறுதல் கொண்டிருந்தேன், அதையும் இடிக்க சொல்லிவிட்டாரே என்று வருந்தினார். கருணாநிதி பேட்டி அளித்தபோது பேராசிரியர் அன்பழகனும் என்னவோ சொன்னார். அது என்ன என்று அவர் உட்பட யாரும் பெரிதாக கவலைப்படவில்லை.

இன்று முரசொலியில் கருணாநிதி உடன்பிறப்புக்கு “தாழ்ந்த தமிழகமே” என்று தலைப்பிட்டு எழுதிய கடித்தத்தில் “முப்பால் செப்பிய மூதறிஞரை ஒரு மூதேவி அவமானப்படுத்தவதை முகம் தாழ்த்தி ஏற்காமல் முரண்டு பிடி உடன்பிறப்பே!” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். இது சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது, வள்ளுவர் புனித தோமாவின் சீடர் என்று சொல்லப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறுபான்மையினர் நலன் காக்க தான் இன்று காலை காப்பி குடிக்காமல் இருக்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். இதைக் கேட்ட பேராயர் தினகரன் கண்ணீர் விட்டு குலுங்கிக் குலுங்கி அழுதது எல்லார் நெஞ்சையும் தொட்டது.

ஜெயலலிதா பேட்டி:
நிருபர்கள்: கருணாநிதி என்ற சூத்திரன் கட்டிய கட்டிடம் என்றுதான் இடிக்க ஆணை இட்டிருக்கிறீர்கள் என்கிறாரே கருணாநிதி?
ஜெ: இவர் கட்டிய கட்டிடமா? ராமர் எந்த எஞ்சினியரிங் காலேஜில் பட்டம் வாங்கினார் என்று கேட்டாரே, இவர் எந்த காலேஜில் பட்டம் வாங்கினார்?
நிருபர்கள்: தாழ்ந்த தமிழகமே என்று அறைகூவல் விட்டிருக்கிறாரே?
ஜெ: ஆம், இவர் குடும்பம் மணல் கொள்ளை அடித்ததால் தமிழகம் இன்று கடல் மட்டத்தை விட தாழ்ந்து போய்விட்டது. அதனால் மழைத் தண்ணீர் தேங்கி பல வியாதிகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கவே நான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன்.

விஜயகாந்த் தமிழ்நாட்டில் 4824 ஏரிகள் இருப்பதாகவும், அவற்றில் 898 ஏரிகளை இப்போது சமப்படுத்தி வீடு கட்டி இப்போது மக்கள் குடியேறிவிட்டதாகவும், இவற்றில் நுங்கம்பாக்கம் லேக் விஷயத்தில் மட்டும் இறங்கி இருப்பது ஆச்சரியம் தருவதாகவும், அதே நேரத்தில் கருணாநிதி குடும்பம் ஒரு கொள்ளைக்காரக் குடும்பம் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அறிக்கை விட்டிருக்கிறார்.

சுப்ரமணியசாமி 2G வழக்கில் வாங்கப்பட்ட லஞ்சம் எல்லாம் வள்ளுவர் கோட்டத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தனக்கு பப்புவா நியூ கினி நாட்டின் உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருப்பதாக இன்று தெரிவித்தார். கட்டிடத்தை இடிக்கும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக அடியில் தோண்டி இந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று அவர் ஜெயலலிதாவுக்கு யோசனை கூறி இருக்கிறார்.

சோ ராமசாமி அரசு இது போன்ற கட்டிடங்களைக் கட்டுவதில் பணத்தை செலவழிப்பது தவறு, அதனால் இடித்துவிடலாம் என்று தலையங்கம் எழுதி இருக்கிறார். இடிப்பதற்கு ஆகும் செலவு வீண்தானே என்று ஒரு வாசகர் கேட்டதற்கு வேலை வாய்ப்பைப் பெருக்கவே ஜெயலலிதா அப்படி செய்திருப்பதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஜூவி ரிப்போர்ட்: கருணாநிதி போன வாரம் அவர் வீட்டு வேலைக்காரியிடம் இந்த ஜெயலலிதா என்னதான் ஆடினாலும் வள்ளுவர் கோட்டம் இருக்கும் வரைக்கும் என் பேர் நிலைத்திருக்கும் என்று பெருமை அடித்துக் கொண்டாராம். அதை வேலைக்காரி வாசலில் காவலுக்கு இருந்த ஏட்டையாவிடம் சொல்ல, ஏட்டையா அதை டீக்கடை பெஞ்சில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த மஃப்டி உளவுத்துறை அதிகாரி ராமநாதனிடம் தெரியாத்தனமாக சொல்லிவிட்டாராம். அது உடனே சிவனாண்டி, பொன். மாணிக்கவேல், ஷீலா நாயர், ஓ. பன்னீர்செல்வம் என்று பலர் காதுக்குப் போய் கடைசியில் ஜெயலலிதா காதுக்கே போய்விட்டதாம். இதைக் கேட்டதும் ஜெயலலிதாவின் கண் சிவந்ததாம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் தயிர் சாதம் சாப்பிடாமலே எழுந்து போய்விட்டாராம். அடுத்த முறை கையைக் கூட கழுவாமல் போய்விடப் போகிறார் என்று பயந்து போய் வள்ளுவர் கோட்டத்தை இடிக்கும் திட்டத்தை பன்னீர்செல்வம்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தாராம்.

கடைசி செய்தி: ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு மதுரையில் அழகிரி கட்டி இருக்கும் மாளிகைதான் என்று தெரிகிறது. அதை இடித்துவிட்டு அங்கே ஒரு பூங்கா அமைக்கப்படும் என்று மதுரையில் ஒரு வதந்தி உலவுகிறது. இதனால் அழகிரி சென்னைக்கு குடி பெயர்ந்துவிடப் போகிறாராம். வேளச்சேரியில் ஸ்டாலின் வசிக்கும் வீட்டை தனக்குக் கொடுத்துவிட வேண்டும், ஸ்டாலின் கொளத்தூரில் புதிதாக ஒரு வீடு கட்டிக் கொள்ளட்டும் என்று கருணாநிதியிடமும் தயாளு அம்மாளிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

சில பழைய ஒண்ணரை பக்க நாளேடுகள்:
கலைஞர்-ஜெயலலிதா கூட்டணி
தாத்தா நான் பாஸாயிட்டேன்!
தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது!
நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை