2012 பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள்

ஒவ்வொரு முறை இந்த விருதுகள் அறிவிக்கப்ப்படும்போதும் அசோகமித்திரன் பேர் இருக்கிறதா என்று பார்ப்பேன். அடுத்த வருஷமும் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் துக்கமாக இருக்கிறது. அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைப்பதற்கு முன் நோபல் பரிசே கிடைத்தாலும் கிடைத்துவிடும் போலிருக்கிறது. பரலோகப் பதவி கிடைப்பதற்குள் ஒரு பத்மபூஷனாவது கொடுங்கப்பா!

இலக்கியத்துக்காக கொடுக்கப்பட்ட விருதுகளில் இரண்டு பேர் தெரிந்தது. ஒன்று ஆலன் சீலி, இரண்டு ந. முத்துசாமி.

ட்ராட்டர்-நாமா என்ற ஓரளவு புகழ் பெற்ற புத்தகத்தை எழுதியவர் ஆலன் சீலி. அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். ஒரு ஆங்கிலோ-இந்தியக் குடும்பத்தின் ஏழெட்டு தலைமுறை வாழ்க்கையை விவரிக்கும் நாவல். 1991-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி (ஆங்கிலம்) விருதை வென்ற புத்தகம். என்றாவது படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆலன் சீலியே ஆங்கிலோ-இந்தியர்தான். அவரது பிற புத்தகங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உத்தரகண்ட் மாநிலத்துக்காரர் என்று தெரிகிறது.

ந. முத்துசாமி நாடகக்காரர். கூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர். அவர் எழுதிய நாற்காலிக்காரர்கள் என்ற ஒரே ஒரு நாடகத்தைப் படித்திருக்கிறேன். அது படிப்பதற்கான நாடகம் இல்லை என்று நினைக்கிறேன். திறமையாக இயக்கினால் பார்க்க நன்றாக இருக்கும்.

இலக்கியம் (மற்றும் கல்வி) விருது பெற்ற மற்றவர்கள் லிஸ்ட் கீழே. பேரே கேள்விப்படாதபோது யாருக்கு இலக்கியத்துக்கு விருது, யாருக்கு கல்விக்கு என்று சுத்தமாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

பத்மபூஷன்: பேராசிரியர் சாந்தாராம் பல்வந்த் மஜூம்தார் (மகாராஷ்டிரம், கல்வி?), பேராசிரியர் வித்யா தெஹெஜியா (அமெரிக்கா, இந்தியக் கலை நிபுணர் போலத் தெரிகிறது), பேராசிரியர் அர்விந்த் பனகரியா (அமெரிக்கா), டாக்டர் ஜோஸ் பெரெய்ரா (அமெரிக்கா), டாக்டர் ஹோமி கே. பாபா (இங்கிலாந்து).

பத்மஸ்ரீ: டாக்டர் எபர்ஹார்ட் ஃபிஷர் (ஸ்விட்சர்லாந்து), கேதார் குருங் (சிக்கிம்), சுர்ஜித் சிங் பாடார் (பஞ்சாப், கவிதைக்காம்), விஜய் தத் ஸ்ரீதர் (மத்தியப் பிரதேசம், ஜர்னலிசத்துக்காம்), டாக்டர் கீதா தர்மராஜன் (டெல்லி), பேராசிரியர் சச்சிதானந்த் சஹாய் (ஹரியானா), பெபிதா சேத் (கேரளா), டாக்டர் ரால்டே தன்மவியா (மிசோரம்)

பாரதிமணி இலக்கியத்துக்கு பத்மஸ்ரீ விருது பெறும் பெபிதா சேத் காந்தி படத்தில் நேருவாக நடித்த ரோஷன் சேத்தின் மனைவி, எழுத்தாளர், தீவிர வாசகர், மேலும் தனக்கு தில்லியில் நண்பர் என்று தகவல் தருகிறார்.

தொடர்புடைய சுட்டிகள்:
விருது பெற்றவர்கள் லிஸ்ட்
அழியாச்சுடர்கள் தளத்தில் ந. முத்துசாமி எழுதிய ஒரு சிறுகதை
ந. முத்துசாமி பற்றி எஸ்.ரா.