பொருளடக்கத்திற்கு தாவுக

விமலாதித்த மாமல்லன் – ஜெயமோகனை சதா பின் தொடரும் நிழலின் குரல்

by மேல் பிப்ரவரி 7, 2012

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஒன்று, ஒன்றரை வருஷத்துக்கு முன் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தின் மூலக்கரு தான் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் என்ற சிறுகதைதான், அதை ஜெயமோகன் மறைக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதைப் பற்றி கருத்து சொல்லக் கூடியவர்கள் ஜெயமோகன், மாமல்லன், மற்றும் இந்த இரண்டையும் படித்தவர்கள். மாமல்லன் என்ன நினைக்கிறார் என்பது தெளிவு. ஜெயமோகன் கண்டு கொள்ளவே இல்லை. அப்போது அந்தக் கதையை நான் படித்திருக்கவில்லை. வீணான யூகங்களில் பயனில்லை என்று நானும் கம்மென்று இருந்துவிட்டேன்.

ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். நான் ஒரு சுயநலவாதி. எனக்கு வேண்டியது நல்ல வாசிப்பு அனுபவம். ஜெயமோகன் காப்பி அடித்திருந்தால் அது எனக்கு இரண்டாம் பட்சமே. அசோகமித்ரன் “Boarded Window” கதையைப் படித்து பிரயாணம் எழுதி இருக்கக் கூடும். புதுமைப்பித்தன் வால்டர் மிட்டி கதையைப் படித்து சுப்பையாப் பிள்ளையின் காதல்கள் கதையை எழுதி இருக்கலாம். பிரேம்சந்தின் சால்ட் இன்ஸ்பெக்டர் கதையைப் படித்துத்தான் கல்கி புது ஓவர்சியர் கதையை எழுதி இருக்கிறார் என்பது தெளிவு. எனக்கென்ன போச்சு? பிரயாணம், சு. பிள்ளை இரண்டும் எனக்கு வித்தியாசமான, உயர்ந்த வாசக அனுபவத்தை தருகின்றன. புது ஓவர்சியர் தரவில்லை. அதனால் நான் பிரயாணம், சு. பிள்ளை இரண்டையும் உயர்ந்த இடத்தில் வைக்கிறேன், புது ஓவர்சியர் கதையை நிராகரிக்கிறேன். அத்தோடு முடிந்தது.

ஜெயமோகன் காப்பியே அடித்திருந்தாலும் பி. தொ. நி. குரல் ஒரு உலக சாதனை என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அப்புறம் இன்னும் சில விஷயங்கள் எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. 25 பக்கக் கதையை காப்பி அடித்து ஆயிரம் பக்கம் எழுதுவது எல்லாம் நடக்காத காரியம். கண்ணெதிரில் புகாரின் என்ற நிஜ மனிதரின் வாழ்க்கை இருக்கும்போது ஜெயமோகனுக்கு ஒரு சிறுகதையைக் காப்பி அடித்து கதைக்கரு கண்டுபிடிக்க வேண்டியதில்லை. பழைய பேப்பர் கடையில் நோட்டுப் புத்தகம் வாங்குவது போலவும் அதில் ஒரு கதை இருப்பது போலவும் சுஜாதா எழுதிய காயத்ரி புத்தகத்தில் கூடத்தான் வருகிறது. அதற்காக மாமல்லனின் கதைக்கரு சுஜாதாவை காப்பி அடித்து எழுதப்பட்டது என்று சொல்ல முடியுமா என்ன? மாமல்லனாவது முப்பது நாற்பது கதை எழுதி பிரசுரித்திருக்கிறார். நான் ஒரே ஒரு (சுமாரான) கதை மட்டுமே பிரசுரித்திருக்கிறேன், அதுவும் இணையத்தில் மட்டுமே. என் கம்ப்யூட்டரில் நான் எழுதி வைத்திருக்கும் மூன்று கதைகளைப் போலவே கரு உள்ள கதைகளை நான் படித்திருக்கிறேன். கீதா பென்னட் “முந்தைய நாள் சாப்பாட்டை” ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடும் ஒரு NRI-யின் சமையல்காரத் தாய்க்கு அந்த முந்தைய நாள் சாப்பாடு மேல் இருக்கும் aversion-ஐப் பற்றி எழுதி இருக்கிறார். ஜெயமோகனே வாழ்க்கையில் எவ்வளவோ சிறுமைகள் அடைந்தும் ஜாதி பிரக்ஞை போகாத ஒருவரைப் பற்றி கதை எழுதி இருக்கிறார், அந்த சாயலில் நானும் கதை எழுதி வைத்திருக்கிறேன். பாண்டு பிள்ளைகள் பாண்டவர் என்று அழைக்கப்பட, திருதராஷ்டிரன் பிள்ளைகள் தாரத்தராஷ்டிரர் என்று இல்லாமல் குருவம்சத்தவர் என்று பொருள்படும்படி கௌரவர் என்று அழைக்கப்பட்டதிலும் அரசியல் உள்குத்து என்று ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன், தேவகாந்தன் அதை கதாகாலம் நாவலில் சொல்லி இருக்கிறார். நான் எப்படி இந்தக் கதைகளை நான் காப்பி அடிக்கவில்லை, இவை எல்லாம் என் சொந்த மூளையில் உருவானவையே, இவற்றை எழுதிய பிறகே இந்த “மூலக்கதைகளை” படித்தேன் என்று நிரூபிக்க முடியும்? முதல் படி கூட ஏறாத – படியை விடுங்கள், “ப” கூட ஏறவில்லை – எனக்கே இது பிரச்சினை என்றால் ஜெயமோகனுக்கு இருக்காதா?

இன்னொரு சின்ன விஷயம். மு.வ.வெ. புறாக்கள் சிறுகதையை ஒரு வழியாகப் படித்துவிட்டேன். இதிலிருந்துதான் பி.தொ.நி. குரல் உருவானது என்று மாமல்லன் நினைத்தாரானால் அவர் நாவலைப் படிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணங்களுக்கு அவர் நேர்மையாக இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அவரது கருத்துகள் ஏதோ கோபத்தில் உண்டானவை போலத் தெரிகிறது. இதனால்தானோ என்னவோ எப்போதும் ஜெயமோகனை நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மு.வ.வெ. புறாக்கள் சிறுகதையைப் பற்றி ஒரு வார்த்தை – எனக்கு இன்னும் இலையும் போர்வையும்தான் டாப் என்றாலும் இதுவும் அந்த வரிசையில் வைக்கக் கூடிய சிறுகதைதான்.

பிற்சேர்க்கை: ஜெயமோகனை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். என் மரியாதைக்குரிய நண்பர். அவருடன் உள்ள நட்பு இந்தப் பதிவை, மாமல்லனின் குற்றச்சாட்டைப் பற்றிய என் முடிவை பாதிக்கக் கூடாது என்பது எனக்கு முக்கியம். அப்படித்தான் இதை எழுதி இருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
விமலாதித்த மாமல்லனின் குற்றச்சாட்டு
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை
கிரிதரனின் பதிவு

10 பின்னூட்டங்கள்
 1. ஆமாம் நீங்கள் சொல்வது சரியே

  Like

 2. Mathi india permalink

  இணைய உலக சுப்பிரமணியம் சுவாமி பட்டத்தை சற்றும் தயங்காமல் அண்ணன் மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன். யாருக்கு என்ன பிரச்சனை, எங்கே விவகாரம் என்றாலும் உடனே அந்த ரிப்போர்ட் அல்லது ஆவணத்தை ஒரு ஸ்கேன் போட்டு சுப்பிரமணியம் சுவாமிக்கு அனுப்பிவிடுவார்கள். அதுபோல, இணையத்தில் எங்கே கசமுசா என்றாலும் அண்ணன் மாமல்லனுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.  அவரும் தொடர்ந்து குலைத்துக்கொண்டே இருக்கிறார். சுப்பிரமணியம் சுவாமி போலவே, எப்போதாவது ஒருமுறை தவிர அவர் பேசுவதில் ஒரு மண்ணாங்கட்டி பொருளும் இல்லை, பொறுப்பும் இல்லை என்பது தான் தலையாய ஒற்றுமை.  அவருக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களில் கூட தானாகவே தலையில் அக்ஷதை போட்டுக்கொண்டு ஒரு சொம்போடு வந்து பஞ்சாயத்து செய்யும் அழகுக்கு அவருக்கு இணைய உலக விஜயகுமார் அல்லது விஜயகாந்த் பட்டத்தை தரலாமா என்றும் யோசித்தேன். ஆனால் இப்போது அவருக்கு இணைய உலக சுப்பிரமணியம் சுவாமி எனும் பட்டமே மிகச்சிறப்பாக இருக்கும் என்பதால் அதையே முன்-வழி எல்லாம் மொழிகிறேன்.

  Like

 3. அன்புள்ள ஆர்.வி,

  ரெண்டு கதைகளுக்கும் சில பொதுவான விஷயங்கள் உள்ளன என்பது மட்டுமே இரண்டையும் படித்த என் எண்ணமும். புகாரினின் வாழ்க்கைக் குறிப்பே கையில் இருக்கும்போது இந்தக் கதையைப் படித்துதான் நாவல் எழுதப்பட்டது என்பதெல்லாம் சும்மா. அப்படி செய்திருக்கக் கூடிய வாய்ப்பே இல்லை என இரண்டையும் படித்தவர்கள் சொல்வார்கள். அதே சமயம், சிலர் சொல்வது போல பத்து பக்கங்களிலிருந்து ஆயிரம் பக்கம் எழுதமுடியுமா என்பதும் சரியான வாதமில்லை.

  என் கருத்தை இங்கு பதிந்திருக்கிறேன்.

  http://beyondwords.typepad.com/beyond-words/2011/05/mudavan_purakkal.html

  Like

  • @கிரிதரன், புகாரினின் வாழ்க்கைக் குறிப்பே கையில் இருக்கிறது. வாஸ்தவம் தான். ஆனால் அது எப்படி அருணாசலத்தின் கையில் வந்து சேர்கிறது?:-)

   \\அதே சமயம், சிலர் சொல்வது போல பத்து பக்கங்களிலிருந்து ஆயிரம் பக்கம் எழுதமுடியுமா என்பதும் சரியான வாதமில்லை.\\

   இதோடு ஒத்துப் போகிறேன். ஜெமொவைப் பொறுத்தவரை அவருக்குத் தேவை ஒரு சிறு பொறி (spark) மட்டுமே. அதைக் கொண்டு அவரால் பல்லாயிரம் பக்கங்களில் புனைவைப் படைக்க முடியும்.

   இரண்டையும் படித்தவன் என்ற முறையில் என் கருத்து இதுதான்:

   ஒரே மாதிரி சிந்தனை இருவருக்குச் சாத்தியம். பதிவில் ஆர்வி பல உதாரணங்கள் தந்துள்ளார். மாமல்லனும் ஜெமொவும் இதுபோலக் கதைகள் எழுதியதை ஒரு உடனிகழ்வாகவே (coincident) நான் பார்க்கிறேன்.

   Like

   • @கோபி

    //புகாரினின் வாழ்க்கைக் குறிப்பே கையில் இருக்கிறது. வாஸ்தவம் தான். ஆனால் அது எப்படி அருணாசலத்தின் கையில் வந்து சேர்கிறது?:-) //

    🙂

    பல வருடங்களாக புகாரினின் மனைவி மனனம் செய்த குறிப்புகளையும் கணக்கில் கொள்ளலாம். அவருக்குத் துணையாக பலர் இருந்துள்ளனர். இவையெல்லாம் சேர்ந்ததுதான் பின் தொடரும் நிழலின் குரல்’கள்’. அதிலிருக்கும் ஒரு குரல் தான் அருணாச்சலம். இந்திய இறையாண்மையோடு உரசியதில் பிறந்த குரல் தான் கே.கே.எம் 🙂

    //சிறு பொறி//

    ஆமாங்க, நாவலின் முன்னுரையிலேயே அதைச் சொல்லியிருப்பார். இரு குறள்களின் சாராம்சமாக தியான மந்திரம் போல ஒரே கேள்வியின் பன்முக விசாரணைகள் தான் அந்த நாவல். என்னைப் பொறுத்தவரை மாமல்லனின் கதை விசாரணையாக அமையவில்லை. அது ஒரு நிகழ்வு என்றளவில் எழுதப்பட்டது.

    //மாமல்லனும் ஜெமொவும் இதுபோலக் கதைகள் எழுதியதை ஒரு உடனிகழ்வாகவே (coincident) நான் பார்க்கிறேன்//

    மேலும், இது ஒரு காலகட்டத்தில் பலரும் எழுதிய பாணி தான். ஹென்ரி ஜேம்ஸ், ஜே.டி.லாங்கிஸ் (The Longing) போன்றவர்கள் இப்படி மற்றவர்களின் குறிப்புகளைக் கொண்டு நாவல் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் புனைவிலிருந்து புனைவும் எழுதப்பட்டுதான் வருகிறது – ஹென்ரி ஜேம்ஸை முன்வைத்து டோபின் எழுதிய The Master நாவல் அதற்கு சரியான உதாரணம். இதெல்லாம் ஒரு வகைக்குள் அமைந்துவிடுவதால் காப்பி அடித்ததாக ஆகாது 🙂

    Like

 4. மதி இந்தியா, மாமல்லன் நல்ல எழுத்தாளர், அருமையான கதைகளை எழுதி இருக்கிறார். அவருக்கு என்னவோ தோன்றிவிட்டது, அந்தக் கோபத்தில் அவரது கவனம் திசை திரும்பிவிட்டது. அவர் இன்னும் புனைவுகள் எழுதமாட்டாரா என்று என் போன்றவர்கள் காத்திருக்கிறோம்.

  கிரி, கோபி, சுவாரசியமான கருத்து பரிமாற்றம்! தொடருங்கள்…

  Like

 5. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

  ஆர்வி,
  இந்த பதிவிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பே புன்னகைக்க வைத்தது!
  மல்லன் அவர்களின் பாணியிலேயே, வழியிலேயே:)
  ‘இலை’, ‘வயிறு’ இந்த வரிசையில் ‘சத்தம்’ – இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  உங்களது மற்றும் கிரிதரன் தரப்பு கருத்துகள் – மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவைகளாக இருக்கின்றன.

  சிவா கிருஷ்ணமூர்த்தி

  Like

  • சிவா கிருஷ்ணமூர்த்தி – இதே வரிசையில் ‘உயிர்த்தெழுதல்’, ‘சோழிகள்’, ’தாசில்தாரின் நாற்காலி’ போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அருமையான கதைகள்.

   நீங்க தான் எஸ்ஸெக்ஸ் சிவா-வா? 🙂

   Like

 6. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

  நன்றி கிரிதரன். அந்த கதைகளை படிக்கவேண்டிய பட்டியலில் சேர்த்துக்கொண்டேன். நீங்கள் குறிப்பிடும் நபர் எனது ஒன்று விட்ட அண்ணன். நான் Sussex சிவா!

  Like

 7. @ஆர்வி, @கிரிதரன்,

  வேறு காரணங்களுக்காகப் புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பைப் புரட்டும்போது ‘கட்டிலை விட்டிறங்காக் கதை’ என்ற சிறுகதை கண்ணில் பட்டது.

  பாளையங்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது மிதந்து வந்த ஏடுகளில் சிலவற்றைச் சேகரிக்க முடிந்ததாகவும் அதில் வரும் முற்றுப் பெறாத கதைதான் இது எனவும் ஆசிரியரே கூறுவது போல வருகிறது.

  பின் தொடரும் நிழலின் குரலில் நிறைய அடிக்குறிப்புகள் வரும். இந்தச் சிறுகதையிலும் இரண்டு இடங்களில் அவ்வாறு வருகின்றன. ‘ஏடு சிதிலமானதால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை’ என்பது அதில் ஒன்று.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: