பொருளடக்கத்திற்கு தாவுக

சுஜாதாவின் “கொலையுதிர்காலம்”

by மேல் பிப்ரவரி 9, 2012

கொலையுதிர்காலம் குமுதத்தில் தொடர்கதையாக வந்தபோது அதை தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. அவ்வப்போது விட்டு விட்டுத்தான் படிக்க முடிந்தது. படித்த பகுதிகள் மிச்சத்தையும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டின, ஆனால் முழுவதுமாக கிடைக்கவே இல்லை.

சமீபத்தில்தான் முதல் முறையாக முழுமையாகப் படித்தேன். அந்தக் காலத்தில், அதுவும் தொடர்கதையாக இது தூள் கிளப்பி இருக்கும். சின்னச் சின்ன சஸ்பென்ஸ் (சில சமயம் மொக்கை), திறமையான உரையாடல்கள், இன்னும் உயிர்ப்பு இருக்கும் நடை, இன்று கூட முழுமையாக சாத்தியம் இல்லாத டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி வைப்பது (லேசர், தத்ரூபமான ஹோலோக்ராம்?) டெக்னாலஜி vs. அமானுஷ்யம் என்று கலக்கி இருக்கிறார். ஆனால் முழுமையான நாவலாகப் படிக்கும்போது சில குறைகள், சின்னச் சின்ன பிரச்சினைகள் தெரியத்தான் செய்கின்றன.

எண்பதுகளில் சென்னையிலிருந்து திருப்போரூர் வெகு தூரம். அங்கே ஒரு பண்ணையில் வசிக்கும் வியாசன் குடும்பத்தார். நிறைய சொத்துக்கு வாரிசு விரைவில் மேஜர் ஆகப் போகும் லீனா. சுஜாதாவின் வழக்கமான, வசந்த் ஜொள்ளுவிடும் அழகான இளம் பெண். சித்தப்பா குமாரவியாசன்தான் கார்டியன். காதலன் தீபக் கேட்டுக்கொண்டதால் கணேஷும் வசந்தும் பண்ணைக்குப் போய் சித்தப்பாவிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். முதல் சாப்டரின் இறுதியிலேயே லீனா ஒரு கொலை செய்திருக்கிறாள் என்கிறார் சித்தப்பா. தொடர்கதைகளுக்குத் தேவையான சாப்டருக்கு சாப்டர் அதிர்ச்சியும் ஆச்சு, நமக்கும் சுஜாதா கதைகளில் ஹீரோயின் கொலை செய்யமாட்டாள் என்று தெரியும் அதனால் ஆர்வம் கிளம்புகிறது. சில சமயம் அவளைப் பேய் பிடித்துக் கொள்கிறது என்கிறார் சித்தப்பா. கணேஷும் வசந்தும் பொத்தப்பா என்கிறார்கள். (அப்பாடா எதுகை மொகனை போட்டுவிட்டேன்!) பிறகு சில இரவுகளில் லீனாவைப் போலவே ஒரு உருவத்தைப் பார்க்கிறார்கள். கணேஷ் அதன் அருகே பயந்துகொண்டே தைரியமாகப் போய் அடி வாங்குகிறான். பழைய மரணம் ஒன்று தோண்டப்படுகிறது. ரொம்பப் பழைய காலத்தில் ஒரு பெண் “சாபம்” இட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் கணேஷ் சாமியார் ஆகவில்லை போலிருக்கிறது, கணேஷையும் லீனாவையும் வைத்து இரண்டு மூன்று கிளுகிளு பக்கம். வில்லன் என்று நினைத்த சித்தப்பா கொல்லப்படுகிறார். பிணம் காணாமல் போகிறது. போலீஸ் எப்படி கேசை எழுதுவது, பேய் வந்தது என்று எழுத முடியாதே என்று திகைக்கிறது. கணேஷும் வசந்தும் ஒரு திட்டம் போட்டுக் கொள்கிறார்கள். கணேஷ் இதெல்லாம் சும்மா டெக்னாலஜியை வைத்துச் செய்யும் ஏமாற்று என்று நிறுவ வேண்டும். வசந்த் இல்லை இதெல்லாம் உண்மையிலேயே அமானுஷ்ய நிகழ்ச்சி என்று நிறுவ வேண்டும். இரண்டு பேரும் இரண்டு டீமாக வேலை பார்க்கிறார்கள். கணேஷுக்கு ஒரு விஞ்ஞானி டெக்னாலஜி இவ்வளவு தூரம் முன்னேறவில்லை என்று சொல்கிறார். அப்போது ஒரு “திடுக்கிடும்” திருப்பம். அமானுஷ்யமா, இல்லை டெக்னாலஜியா என்று தெரிந்து கொள்ள புத்தகத்தைப் படியுங்கள்.

சென்னையிலிருந்து திருப்போரூர் வெகு தூரம் என்ற எண்ணம் என்னை மீண்டும் மீண்டும் புன்முறுவலிக்க வைத்தது.

தமிழுக்கு நல்ல த்ரில்லர். எனக்குப் பிடித்த விஷயம் – எல்லாரும் குழம்புவது நன்றாக வந்திருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி நிமிஷத்தில் விடை கண்டுபிடிக்கப்படுவதில்லை. மர்மம் நன்றாகப் பின்னப்பட்டிருக்கிறது. கணேஷும் வசந்தும் ஆரம்பத்திலேயே இரண்டு டீமாகப் பிரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அவருக்கே அந்த ஐடியா பாதி எழுதிய பிறகுதான் வந்திருக்க வேண்டும்.

இது இலக்கியம் எல்லாம் இல்லை. தொடர்கதைக்குரிய எல்லா பலவீனங்களும் உண்டு. நல்ல துப்பறியும் நாவல் என்று கூட சொல்லமாட்டேன், வாசகர்களை ஏமாற்றுகிறார். சுவாரசியம், complicated மர்மம், கணேஷ்-வசந்தின் ரியலிஸ்டிக்கான குழப்பம் போன்றவைதான் இன்னும் படிக்க வைக்கின்றன.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் மிஸ் செய்யாதீர்கள்.

7 பின்னூட்டங்கள்
 1. நல்ல விமர்சனம்.
  நன்றி.

  Like

 2. geep permalink

  ரொம்ப நாள் கழித்து இங்கே வந்து எட்டிப் பார்த்தால் செத்தும் (hits) கொடுக்கும் சீதக்காதியாக இருக்கிறார் சுஜாதா. கொலையுதிர் காலத்தில் வரும் evil genius பாத்திரம் ஹாலிவுட்டில் அரைத்த மாவை அரைப்பது போல் இருந்தாலும் தமிழுக்குப் புதுசு. இருபத்தைந்து வருசங்களுக்கு முன் ஜீனியசுகளைப் பற்றி எழுத்தே குறைவு. அதில் கொலைத்திட்டம் போடும் IISc ப்ரோபசர்களுக்கு எங்கே போவது? ஒரு முன்னைய பதிவில் தமிழில் Science Fiction எழுதி வெற்றி பெற்றதை ஒரு முக்கிய தாக்கமாகக் குறிப்பிட்டதற்கு நன்றி

  Like

 3. விமல் permalink

  கொலையுதிர்காலம் – PDF வடிவம்

  http://www.mediafire.com/download.php?9yi3z0z5t08zqwl

  1 MB

  Like

 4. சிவா கிருஷ்ணமூர்த்தி permalink

  இந்த கதையை படித்ததே ஒரு சுவாராசிய அனுபவம். பதினொன்றாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு – ராஜேஸ்குமார் – ‘பம்பாய்க்கு பத்தாம் மைலில்’ எல்லாம் தாண்டி சுஜாதா எழுத்துகளை தேடித் தேடி படிக்க ஆரம்பித்த காலம். தாராபுரம் நூலகத்தில் எடுத்த புத்தகத்தில் கடைசி இரு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன என்றால் நம்புவீர்களா?! அறிவியலா அமானுடமா..! ஹோலோகிராம் எல்லாம் அறிமுகப்படுத்தியது இந்த கதை.
  அப்புறம் வழக்கமான வஸந்த்! புரொபஸரின் இரட்டை பெண்களிடம் (விமலா, நிமலா!) அசட்டு ஜோக்!
  இன்னொரு கதையில் கூட இரட்டைப் பெண்கள் பெயர்களைச் சொன்னவுடன் ‘என்ன திங்கட்கிழமை, திங்கட்கிழமை பெயர் மாற்றிக்கொள்வீர்களா’ என்பார் வராது வந்த வஸந்த்!

  சிவா கிருஷ்ணமூர்த்தி

  Like

 5. //முழுமையாக சாத்தியம் இல்லாத டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி வைப்பது (லேசர், தத்ரூபமான ஹோலோக்ராம்?) //

  இந்தக் கதையைப் படிக்கும் போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் சிங்கப்பூர் செண்டோஸாவில் லேஸர் ஷோவைப் பார்த்த பிறகு முடிவை மாற்றிக் கொண்டேன்.

  இது சாத்தியம் தான். என்ன 100% சரியாக வராது. பட், சுஜாதா இதை எழுதிய காலத்தில் இது சாத்தியமாகியிருக்குமா எனத் தெரியவில்லை.

  ஆனால் நல்ல கற்பனை. ட்விஸ்ட். அந்தப் பெண் (ரீனா என்று ஞாபகம்), வசந்த் ஜொள், பேய், உத்தரத்தில் கால் தடம், மாடியில் கசமுச பேச்சு என்று அமானுஷ்ய நாவல் போல் எழுதியிருப்பார். பின்னால் எல்லாவற்றிற்கும் விஞ்ஞான விளக்கம் வரும்.

  தொடராகப் படித்த போது இருந்த சுவாரஸ்யம் ஏனோ புத்தகமாகப் படிக்கும் போது இல்லை.

  Like

  • ரமணன், // இது சாத்தியம் தான். என்ன 100% சரியாக வராது. பட், சுஜாதா இதை எழுதிய காலத்தில் இது சாத்தியமாகியிருக்குமா எனத் தெரியவில்லை. // நிச்சயமாக இருந்திருக்காது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: