தியாகபூமி பக்கா மசாலா கதை. வெற்றி பெறுவதற்கான எல்லாவற்றையும் கல்கி ஒரு கலக்கு கலக்கிக் கொடுத்திருக்கிறார். சினிமாவாக எடுக்கப்படும் கதை என்ற விளம்பரம். வாராவாரம் சினிமா ஸ்டில்லோடு தொடர்கதை. (எண்பதுகளில் மவுன கீதங்கள், விக்ரம் போன்ற திரைப்படங்களின் கதைகள் இப்படி குமுதத்தில் தொடர்கதையாக வந்து இந்த ஃபார்முலாவை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தின). அன்றைய ஹாட் டாபிக் ஆன சுதந்திரப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு பின்புலம். எல்லாரும், குறிப்பாக பெண்மணிகள் உச்சுக் கொட்ட ஒரு அதிகப் பிரசங்கிக் குழந்தை. கணவனுக்கு நான் ஜீவனாம்சம் தருகிறேன் என்று முழங்கும் புரட்சிப் பெண். அன்று மிகவும் பாப்புலரான விகடன் பத்திரிகையின் platform. தொடர்கதை வெற்றி பெற வேறென்ன வேண்டும்?
ஆனால் கதை பாய்ஸ் கம்பெனி நாடகக் கதைதான். திடுக்கிடும் திருப்பங்கள், சரியான சமயத்தில் உதவி செய்பவர்கள், deux ex machina எல்லாம் உண்டு. கதை மனிதர்கள் – வம்பு பேசும் ஒரு சாஸ்திரி காரக்டரைத் தவிர – எல்லாருமே வெறும் caricatures.
சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்ரியை விருப்பமில்லாமல் ஸ்ரீதரன் மணக்கிறான். சாஸ்திரி நொடித்துப் போய் சென்னைக்கு போய்விடுகிறார். பிரசவத்துக்கு கல்கத்தாவிலிருந்து வரும் சாவித்ரிக்கு விஷயம் தெரியாது. அவள் சாஸ்திரியை தேடி சென்னை செல்ல, குழந்தை பிறக்கிறது. குழந்தையை தற்செயலாகப் பார்க்கும் சாஸ்திரியிடம் விட்டுவிட்டு சாவித்திரி பம்பாய் போகிறாள். ஆறேழு வருஷம் கழித்து தமிழ் சினிமா இலக்கணப்படி பணக்காரியாகத் திரும்புகிறாள். வந்தவுடன் கரெக்டாக சாஸ்திரியை கண்டுபிடித்து பெண்ணை சேர்த்துக் கொள்ள, இதற்குள் கஷ்டப்படும் ஸ்ரீதரன் தன பணக்கார மனைவியிடம் ஒன்றாக வாழவேண்டும் என்று கேஸ் போட, சாவித்திரி நான் உனக்கு ஜீவனாம்சம் தருகிறேன், ஆளை விடு ((அப்போதெல்லாம் விவாகரத்து சட்டம் கிடையாது) என்கிறாள். அப்புறம் வழக்கம் போல சமத்துக் குழந்தையால் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!
சினிமாவில் பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரியாகவும், எஸ்.டி. சுப்புலட்சுமி சாவித்ரியாகவும் நடித்தனர். சினிமாவில் குழந்தையாக நடித்த பேபி சரோஜா பெரிய ஸ்டார் ஆனார். என் அம்மாவின் வயதுள்ள ஒரு சக பள்ளி ஆசிரியைக்கு பேபி சரோஜா என்று பேர். அந்தக் காலத்தில் அது மிகவும் பாப்புலரான பேர், நிறைய குழந்தைகளுக்கு அப்படி பேர் வைத்தார்கள் என்று அவர் சொல்வார். இயக்கம் கே. சுப்பிரமணியம். இன்னும் புனே ஃபில்ம் ஆர்க்கைவ்ஸில் பிரின்ட் இருக்கிறதாம். கல்கி விகடனில் சினிமா விமர்சனம் என்று எல்லா சினிமாவையும் கிழிகிழி என்று கிழித்துக் கொண்டிருந்த காலம். இவர் கதை எழுதிய சினிமா வந்ததும் இதுதான் சான்ஸ் என்று எல்லாரும் கல்கியை கிழிக்க, இவர் பதிலுக்கு அவர்களைக் கிழிக்க, விகடன் சர்குலேஷன் எகிறி இருக்கும்! தியாகபூமி திரைப்படமும் பேனா யுத்தமும் என்று கூட ஒரு புத்தகம் வந்திருக்கிறதாம். நல்ல ஆவணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
தியாகபூமி திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது என்று ராண்டார்கை உட்பட பலரும் சொல்கிறார்கள். தடை செய்யப்படும் என்று தெரிந்ததும் கெயிட்டி தியேட்டரில் இலவசமாக படத்தைக் காட்டினார்கள், தடை உத்தரவு வந்து தியேட்டரிலேயே லத்தி சார்ஜ் நடந்தது என்கிறார் ராண்டார்கை. தியோடோர் பாஸ்கரன் தியாகபூமி திரைப்படம் வெளியானபோது ராஜாஜிதான் தமிழ்நாட்டின் (சென்னை மாகாணத்தின்) முதல்வர் (பிரீமியர்), கல்கியின் mentor, ராஜாஜியை மீறி இது நடந்திருக்க வாய்ப்பே இல்லையே என்று சந்தேகத்தை எழுப்புகிறார். திரைப்படம் 1939-ஆம் ஆண்டு, மே இருபதாம் தேதி அன்றைய கெயிட்டி உட்பட்ட பல தியேட்டர்களில் வெளியானதாம். ராஜாஜி மந்திரிசபை அக்டோபர் 29 வரை ஆட்சியில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் சினிமாக்கள் மாதக்கணக்கில் ஓட வாய்ப்பு உண்டுதான். ஆனால் 150 நாள் ஓடிய பிறகு என்ன பெரிய தடை உத்தரவு என்றுதான் தோன்றுகிறது.
தியாகபூமி கதையே கோரூர் ராமஸ்வாமி ஐயங்கார் கன்னடத்தில் எழுதிய கதையைச் சுட்டு கல்கி எழுதியதோ என்று டோண்டு ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். கோரூர் எழுதிய நாவலின் பேர் ஹேமாவதி.
ஜெயமோகன் இதை சிறந்த social romances லிஸ்டில் சேர்க்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இதை எந்த லிஸ்டிலும் சேர்த்து நான் பார்த்ததில்லை. அசோகமித்ரனும் இ.பா.வும் இதை சிபாரிசு செய்திருக்கிறார்கள் என்று அப்புறம் பார்த்தேன்.
சுவாரசியமான formula கதை. அன்றைய பாய்ஸ் கம்பெனி நாடகங்கள், சினிமா எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் இது உயர்ந்த பொழுதுபோக்கு கதை. ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்ற முறையில் படிக்கலாம். தமிழில் பாபுலர் எழுத்து எப்படி எல்லாம் வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்
தொடர்புள்ள சுட்டிகள்:
தியாகபூமி – மின்னூல்
தியாகபூமி திரைப்படத்துக்கு தடை!
திரைப்படத்தைப் பற்றி ராண்டார்கை
தியோடோர் பாஸ்கரனின் சந்தேகம்
மிகச்சிறந்த வலைதளம், இதற்கு முன் உங்கள் (ஆர்.வி) பெயரை தமிழ் ஹிண்டு, வினவு தளத்தில் கண்டதுண்டு. இப்போதுதான் வலைப்பூவை பார்க்க முடிந்தது. ஒரே நாளில் முடிந்தவரை அனைத்து பதிவுகளையும் படித்தேன். இப்பொதும் புத்தகங்கள் படிப்பவர்களை, அதைப் பற்றி பேசுபவர்களை காண்பது அரிது.
தியாகபூமி, ஒரு காலத்தில் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த புதிதில் படித்தது. பொன்னியின் செல்வன் ஹேங் ஓவரில் கல்கியின் அனைத்து கதைகளையும் பிடித்து படித்தேன். மலிவுவிலை பதிப்பு என்று படு குறைந்த விலையில் நிறைய கதைகள் கிடைத்தன. தியாகபூமி படிக்கும் போது, பழைய சினிமா பார்ப்பது போலத்தான் இருந்தது. கொடுமைக்கார மாமியார், முரட்டு கணவன், அப்பாவி மனைவி. இதில் தேச பக்தியை கலந்ததுதான் வெற்றியின் ரகசியம். கொஞ்சம் பிரச்சார நெடி அடித்தாலும், சுவாரஸ்யமாக படிக்க முடியும்.
கல்கியைப் பற்றி உங்கள் மதிப்பீடுகளை மற்ற பதிவுகளில் கண்டேன், அவரின் கதைகளின் அமைப்பு, தன்மை, உள்ளடக்கம் போன்றவை சாதரணமாக இருக்கலாம். ஆனால் அவரின் எழுத்து நடை மிக அபாராம். மகுடபதி என்னும் மொக்கை கதையையும் படிக்க முடிவதற்கு காரணம் அவரின் எழுத்து. கல்கி கதைகள்தான் எனக்கு பெரிய தலையணை சைஸ் புத்தகங்கள் படிக்க உதவியது.
LikeLike
ரெங்கசுப்பிரமணி, உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி! முடியும்போது உங்கள் கருத்துகளை எழுதுங்கள், அதுதான் மேலும் எழுத உற்சாகம் தருகிறது.
உண்மை, கல்கியின் நடை அவருக்கு ஒரு பெரிய பலம்.
LikeLike
போகிற போக்கில் எழுதாமல் நிறைய உழைத்து தகவல்கள் சுட்டிகளுடன் எழுதியிருக்கிறீர்கள் ஆர்வி. வாழ்த்துக்கள்
LikeLike
கல்கியின் தியாகபூமி கதையை அந்தக் காலத்தில் நாலைந்து தடவை படித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அதைப் படிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. கல்கியினுடைய கதைகள் ( ஏன் பல பிரபலங்களில் பல பிரபல நாவல்கள் /சினிமாக்கள் எல்லாம் ) அந்தக் கால கட்டத்திற்காக எழுதப்பட்டவை. பின்னாளில் அவற்றைப் பற்றிப் படிக்கலாம். விமர்சிக்கலாம். ( நீங்கள் எழுதியதுபோல ) அவ்வளவுதான்.
ஆனால் பொன்னியின் செல்வன் மட்டும் ஒரு விதிவிலக்கோ என்று எனக்குத் தோன்றுகிறது.
LikeLike
குவிகம் சுந்தரராஜன், எனக்கும் பொ. செல்வன்தான் அவரது புனைவுகளில் டாப். ஆனால் சி. சபதம், இரண்டு மூன்று சிறுகதைகள் (மயிலைக்காளை, தப்பிலி கப்…) ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். அவரது அபுனைவுகள் – ஏட்டிக்குப் போட்டி – போன்றவை இன்று அனேகமாக மறக்கப்பட்டுவிட்டன, ஆனால் அவற்றில் அவர் உச்சங்களைத் தொட்டிருக்கிறார்…
LikeLike