இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியின் மோசமான விளைவுகள் தென்னிந்தியாவில் அதிகமாக உணரப்படவில்லை. இந்திரா தேர்தலில் தோற்றதும்தான் விஷயம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. அப்படி வந்தவற்றில் முக்கியமானது ராஜன் கொலை வழக்கு.
ராஜன் கேரள மாணவன். கம்யூனிஸ்ட் அனுதாபி. போலீஸ் ஸ்டேஷன் மேல் தாக்குதலில் ராஜன் என்ற பேருடைய ஒருவன் ஈடுபட்டான் என்று யாரோ இன்ஃபார்மர் போலீசுக்கு செய்தி கொடுத்தாற்போலத் தெரிகிறது. ஹாஸ்டலுக்கு வந்து வேறு கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து ஹாஸ்டல் வாசலில் இறங்கிய ராஜனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். சித்திரவதை முகாமுக்குள் கொண்டு போகப்பட்ட ராஜனை அவன் நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. ராஜன் கைதுக்கு ரெகார்டுகளே இல்லை போலத் தெரிகிறது.
ராஜனின் அப்பா ஈச்சர வாரியர் சாதாரணர் இல்லை. அன்றைய முதல்வராக இருந்த அச்சுத மேனன் போலீசிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டிருந்த காலத்தில் இவர், இவர் குடும்பத்தினர் அவரை பல நாட்கள் ஒளித்து வைத்திருந்திருக்கிறார்கள். வாரியர் இன்னொரு கல்லூரியில் பேராசிரியர். அன்றைக்கு எம்.பி., அமைச்சர் லெவலில் இருந்த பலரை அவருக்கே நேரடியாகத் தெரியும். வயலார் ரவி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாம். அன்றைய உள்துறை அமைச்சர் கருணாகரனின் நெருங்கிய நண்பர்களுக்கு இவர் நெருங்கிய நண்பர். நெருக்கடி நிலை காலம் முழுதும் மனு மேல் மனு கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருணாகரன், அச்சுத மேனன் போன்றவர்கள் தன் உயிரை வாங்கும் எதிரியாக இவரைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நெருக்கடி நிலை முடிந்ததும் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் போடப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வராகிவிட்டிருந்த கருணாகரன் தனக்கு இப்படி ஒரு கைது நடந்ததே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அது பொய் சாட்சி என்று தீர்ப்பாகி அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. கைது செய்த ஜெயராம் படிக்கல் போன்றவர்களுக்கு முதலில் தண்டனை கிடைத்தாலும் (ஜஸ்ட் ஒரு வருஷம் சிறைத் தண்டனை) அது பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டிருக்கிறது. பின்னால் கருணாகரன் பல முறை முதல்வராகி சவுக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.
தன் நினைவுகளை ஈச்சர வாரியர் எழுதி இருக்கிறார், குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்ப்பு. படைப்பு என்ற விதத்தில் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் உண்மை சம்பவத்தின் குரூரம் முகத்தில் அறைகிறது. இவ்வளவு தொடர்புகள் உள்ள ஒரு பெரிய மனிதருக்கே இந்த கதி என்றால் அரசு எந்திரம் ஒரு சாதாரணனுக்கு எதிராக செயல்பட்டால் என்னாகும் என்ற எண்ணம் முதுகெலும்பை உறைய வைக்கிறது.
புலிநகக் கொன்றை நாவலில் இப்படி ஒரு தவறான கைது, சித்திரவதை, மரணம் என்ற காட்சி வந்தபோது இந்த சம்பவத்தைத்தான் நினைத்துக் கொண்டேன். பி.ஏ. கிருஷ்ணனே ராஜன் படுகொலையை வைத்துத்தான் நம்பியின் மரணத்தை எழுதியதாக உறுதிப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டிலும் ஒரு ராஜன் உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்துப் போராடிய உதயகுமார் என்ற மாணவன் “மர்மமான” முறையில் இறந்து போனான். (பேர் என்ன உதயகுமாரா?) இறப்பில் எந்த மர்மமும் கிடையாது, ஆனால் அப்படித்தான் அதிகாரபூர்வமான தகவல். அதைப் பின்புலமாக வைத்து நா.பா. ஒரு நாவல் கூட எழுதி இருக்கிறார்.
நண்பர் ரமணன் இந்த நாவலை எழுதியதால்தான் நா.பா.வுக்கு பி.ஹெச்டி ஆய்வு மூலம் டாக்டர் படம் கிடைப்பது தாமதம் ஆயிற்று என்று சொல்கிறார். நா.பா.வுக்கு அவர் இறந்த பிறகுதான் டாக்டர் பட்டம் கிடைத்ததாம். ஆனால் தி.மு.க.வும் கருணாநிதியும் ஆட்சியை விட்டு இறங்கிய பிறகு அவர் ஒரு ஏழெட்டு வருஷமாவது உயிரோடு இருந்தார், அதனால் இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
தோழி அருணா எழுதுகிறார்:
எளிமையாக ஆனால் மிக உணர்வுபூர்வமாக ஒரு தந்தையால் எழுத பட்டிருக்கிறது. எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்? அவர் தினமும் காணாமல் போன மகனுக்காக எடுத்து வைக்கும் சோறும், இலையும் என்னவோ பண்ணுகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய ஷாஜி கருணின் முதல் படமான பிறவி என்ற ஒரு மிக அருமையான படம் பார்த்திருக்கிறேன். அர்ச்சனா அக்காவாகவும் ப்ரேம்ஜி என்பவர் வயதான அப்பாவாகவும் மிக சிறப்பாக நடித்திருப்பார்கள். 1989 ல் இப்படத்திற்காக ப்ரேம்ஜிக்கு தேசிய விருது கிடைத்தது என விக்கி சொல்கிறது.
இந்த வழக்கில் Habeas Corpus போட்ட எஸ். ஈஸ்வர ஐயர் என் பெரியப்பாவின் அண்ணா. அவர்களின் கூட்டு குடும்ப வீட்டில் வஞ்சியூரில் என் 1 1/2 வயதில் இருந்து 6 வயது வரை நான் வளர்ந்தேன்!
ஜெயமோகன் இந்த சோக சம்பவத்தைப் பற்றி ஒரு சிறப்பான பதிவு எழுதி இருக்கிறார். அவரது பதிவிலிருந்து சில பல பகுதிகள்:
கேரள அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த நிகழ்ச்சி இது. கொல்லப்பட்ட இளைஞரின் தந்தையின் பிடிவாதமான நீதி தேடல் இப்போது ஒரு சமகாலத் தொன்ம அந்தஸ்தை அடைந்துள்ளது.
ராஜன் ஓர் இடதுசாரித் தீவிரவாதக் குழுவில் இருந்தார். இடதுசாரிகளை ஒடுக்கும்படி அரசு ஆணையிட்டதற்கேற்ப போலீஸார் இளைஞர்களைப் பிடித்து வதைத்துத் தகவல்களைக் கறந்தனர். அதில் ராஜன் மரணமடைந்தார். அவரது தந்தை தன் மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசையும் நீதிமன்றத்தையும் நாடினார். ஆனால் எந்தப் பயனும் விளையவில்லை.
ஏனென்றால் ராஜன் கொல்லப்பட்டது அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக. எல்லா அரசுகளும் அடக்குமுறை மேல்தான் அமர்ந்திருக்கின்றன. அடக்குமுறையின் அளவும் அதற்கான மீளும் வழிகளும்தான் அரசுக்கு அரசு வேறுபடும். இந்திய அரசியலமைப்பில் உள்ள மீளும் வழிகள் எல்லாம் அடைபட்ட காலகட்டம் நெருக்கடி நிலைக்காலம்.
ராஜன் கொல்லப்பட்ட காலகட்டத்தில் வங்கத்திலும் பீகாரிலுமாகக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களைக் கொன்று அழித்தது இந்திய அரசு. அவர்களில் முக்கால்வாசிப்பேர் நிரபராதிகளாகவே இருப்பார்கள். எவருக்கும் நியாயம் வழங்கப்பட்டதில்லை. அரசைப் பொறுத்தவரை ராஜன் அவர்களில் ஒருவர்.
கொடுமைதான், ஆனால் உலகின் எந்த அரசும் இதை விட மேலானதல்ல என்பதும் உண்மை. சொந்த மக்களைக் கொன்று குவிக்காத அரசுகளே இல்லை. குறைவாகக் கொல்வது நல்ல அரசு, அவ்வளவுதான். இன்று பயங்கரவாத எதிர்ப்பின் ஒரு பகுதியாக இந்த அடக்குமுறை உலகநாடுகளெங்கும் இன்னும் அதிகரித்துள்ளது.
ராஜன் கொலையை வைத்து ஷாஜி என். கருண் இயக்கிய பிறவி என்ற திரைப்படம் வெளிவந்தது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற கலைப்படம் அது. ஈச்சர வாரியராக நடித்த பிரேம்ஜி சிறந்த நடிப்புக்கான தேசிய விருது பெற்றார்.
ராஜனைக் கொலை செய்ய ஆணையிட்டவராகக் கருதப்பட்ட காவல் அதிகாரி ஜெயராம் படிக்கல் பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புக்கும் கசப்புக்கும் ஆளானார். அவரது வாழ்க்கையை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற படம் வெளிவந்தது. டி. தாமோதரன் எழுத ஐ.வி. சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்] மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றி பெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் (சத்யராஜ் நடித்து) “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என மறு ஆக்கம் செய்யப்பட்டது.
ராஜனைக் கொலைசெய்தவர் என நம்பப்பட்ட காவலர் புலிக்கோடன் நாராயணன் சமூகப்புறக்கணிப்பால் மன உளைச்சல் அடைந்து குடிநோயாளியாக ஆனார். அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தாலும் அவரது குடும்பம் புறக்கணிப்பின் நிழலிலேயே இருந்தது. தன் செயலைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருந்தார்.
ஜெயராம் படிக்கல் வாழ்நாள் இறுதியில் ஆன்மீகச் சொற்பொழிவாளராக உருவானார். ஆனாலும் கடைசிவரை அவரை அந்த நிழல் துரத்தியபடியேதான் இருந்தது.
ஆனால் அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டார்கள். கே. கருணாகரன் அதிக நாள் இந்தக் குற்றத்தின் சுமையை தாங்க நேரவில்லை. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த முதல்வரான சி. அச்சுத மேனன் கொஞ்சம் கூடக் குற்றம் சாட்டப்படவில்லை.
ஏனென்றால் மக்களுக்கு ஒன்று தெரியும். இந்த அரச வன்முறை மக்களின் மௌன ஆதரவுடன்தான் நிகழ்கிறது. நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டபின் கேரளத்தில் காங்கிரஸ்தான் வென்று அரசமைத்தது. ஆகவே தங்கள் மௌன ஆணையைச் செயல்படுத்தும் அரசியல்வாதிகளைத் தங்கள் பிரதிவடிவங்களாகவே மக்கள் நினைத்தார்கள்
மக்களின் கோபம் ஏன் போலீஸ்காரர்கள் மேல் வந்தது என்றால் அவர்கள் செய்ததை மக்கள் தனிப்பட்ட பாவச் செயலாக எடுத்துக் கொண்டார்கள். கே. கருணாகரன் பொதுவான ஒரு கொள்கை முடிவை எடுத்தார், ஆகவே அவர் குற்றவாளி அல்ல. ஆனால் புலிக்கோடன் அவரது கையாலேயே ராஜனைக் கொன்றார். ஆகவே அவர் பாவி.
இந்த முரண்பாட்டை விரிவாகவே யோசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு தீவிரமான புனைகதை வழியாகவே இந்த நுட்பமான மன நாடகத்தைத் தொட்டு விளக்க முடியும்.
நெருக்கடி நிலைக்கால அரசியல் படுகொலைகளில் ராஜன் கொலை மட்டுமே இன்றும் சமூக மனசாட்சியை உலுக்குவதாக, அடிப்படை அறக் கேள்விகளை கேட்கச் செய்வதாக உள்ளது. அதற்குப் பின்னர் கேரள காவல்துறை அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் முழுமையாகவே மாறியது. எளிதில் தப்பிவிட முடியாதென்ற அச்சம் அவர்களிடம் உருவாகியது. இப்போது தெருப்படுகொலைகள் செய்த மார்க்ஸிய-ஆர்.எஸ்.எஸ். அரசியல் தொண்டர்கள் கூடக் காவலர்களால் மிக மரியாதையுடன் கையாளப்படுகிறார்கள். ராஜன் கொலையின் ஒட்டுமொத்த சாதக விளைவு அது எனலாம்.
அதைச் சாதித்தது ராஜனின் தந்தை ஈச்சர வாரியர் மொழியைக் கையாளத் தெரிந்தவராக, இலக்கியமறிந்த பேராசிரியராக இருந்தார் என்பது மட்டுமே.
தொடர்புடைய சுட்டிகள்:
ஆங்கிலத்தில் மின்னூல்
ராஜன் கொலை வழக்கு பற்றி விக்கியில்
ஜெயமோகன் பதிவு
அந்த மாணவர் பெயர் அதுதான். அவர் பெற்றோர் மிரட்டப்பட்டு, தன் மகனல்ல என்று வாக்குமூலம் தந்ததாக பல இடங்களில் படித்துள்ளேன். இது பற்றி தமிழ் பேப்பரில் http://www.tamilpaper.net/?p=4379
LikeLike
//அதைப் பின்புலமாக வைத்து நா.பா. ஒரு நாவல் கூட எழுதி இருக்கிறார்//
நா.பாவை கண்மணிகள் கட்டம் கட்டியதன் முக்கியமான காரணம் அதுதான். அவரை பிஹெச்.டி வாங்க விடாமல் தடுத்தது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
LikeLike
ஆர். வி – எளிமையாக ஆனால்மிக உணர்வுபூர்வமாக ஒரு தந்தையால் எழுத பட்டிருக்கிறது. எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்? அவர் தினமும் காணாமல் போன மகனுக்காக எடுத்து வைக்கும் சோறும், இலையும் என்னவோ பண்ணுகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய ஷாஜி கருணின் முதல் படமான பிறவி என்ற ஒரு மிக அருமையான படம் பார்த்திருக்கிறேன். அர்ச்சனா அக்காவாகவும் ப்ரேம்ஜி என்பவர் வயதான அப்பாவாகவும் மிக சிறப்பாக நடித்திருப்பார்கள். 1989 ல் இப்படத்திற்காக ப்ரேம்ஜிக்கு தேசிய விருது கிடைத்தது என விக்கி சொல்கிறது.
இந்த வழக்கில் Habeas Corpus போட்ட எஸ். ஈஸ்வர ஐயர் என் பெரியப்பாவின் அண்ணா. அவர்களின் கூட்டு குடும்ப வீட்டில் வஞ்சியூரில் என் 1 1/2 வயதில் இருந்து 6 வயது வரை நான் வளர்ந்தேன்!
LikeLike
உதயகுமார்தான் அந்த மாணவர் பெயர் என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி, ரெங்கசுப்பிரமணி !
நா.பா.வுக்கு டாக்டர் படம் கிடைப்பதில் சதி என்பது தெரியாத விஷயம். இன்னும் விவரங்கள் கொடுங்களேன், ரமணன்!
அருணா, ஈஸ்வர ஐயர் உங்கள் உறவினர் என்பது தெரியும்போது உலகம் சின்னது என்றது என்ற க்ளிஷேவைத் தவிர்க்கமுடியவில்லை…
LikeLike
அன்புள்ள திரு ஆர்வி அவர்களுக்கு,
மதுரை நண்பர் சேதுராமலிங்கம் வேலுமணி இந்தத் தளத்தில் எழுதியிருப்பதை எனது பார்வைக்குக் கொண்டு வந்தார். ‘ 1970 களின் இறுதியில் வெளிவந்த Frontier Anthology என்ற நூலில் ராஜன் கொலையைப் பற்றிப் படித்ததில் ஏற்பட்ட தாக்கம் என்னிடம் பல நாட்கள் இருந்தது. நம்பியின் கொலை பற்றி நான் எழுதியது இந்தத் தாக்கத்தின் விளைவே. எனது நினைவு சரியாக இருக்குமானால், ராஜன் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரின் பெயர் சண்முகநாதன்!
மிக்க அன்புடன்,
பி ஏ கிருஷ்ணன்
LikeLike
அன்புள்ள கிருஷ்ணன்,
நீங்கள் இந்தத் தளத்தைப் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது. சான் ஹோசே பக்கம் வருவீர்கள் என்று நண்பர் ராஜன் சொல்லுவார், அடுத்த முறை உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்..
LikeLike
‘A Fine Balance’ நாவலில் கூட இப்படி ஒரு சம்பவம் வருகிறது. எமர்ஜென்சியை ஒட்டி நடக்கும் கதையில் வரும் அந்த கல்லூரி மாணவனின் மரணம், ‘ராஜன் கொலை வழக்கின்’ பாதிப்பில் தான் எழுதியதோ என்று தோன்றுகிறது. யாருக்கேனும் மேலும் தெரிந்தால் எழுதவும்.
LikeLike
பாலாஜி, நான் இன்னும் Fine Balance படிக்கவில்லை. இதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?
LikeLike
ஆர். வி.,
‘Fine Balance’ படித்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. 600 பக்க நாவல். சில தொடர்ச்சிகள் மறந்து விட்டன. முழுமையாக எழுத ஆசைதான். இயலுமா தெரியவில்லை.
இப்போதைக்கு சுருக்கமாக சொல்ல முடிகிறதா பார்க்கிறேன்,
வெவ்வேறு வாழ்க்கை நிலையைச் சேர்ந்த 4 பேர்களின் பாதைகள் குறுக்கிடுகின்றன. போராட்டமான வாழ்க்கைப் பயணத்தில், ஒவ்வொருவருக்கும் மற்றவரது உதவி தேவைப்படுகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும், சுக துக்கங்களும், ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அவநம்பிக்கைகள், அதனால் வரும் பயங்கள் என உணர்ச்சிக் கலவையாக ஒரு வாழ்க்கை தரிசனத்தை காட்டுகிறார்.
இந்த நால்வரது கூட்டு வாழ்க்கை ஒரு விதம் என்றால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முற்றிலும் வேறு விதமானது. அரசியல், சமூக அவலங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்ற ஆசையினால் தலித் கொடுமைகள், இந்து-முஸ்லிம் சண்டைகள், எமர்ஜென்சி கால அட்டூழியங்கள் என பல விஷயங்களை நுழைத்ததால் நாவல் நீண்டிருக்கிறது. ஆனாலும், ஒரு முழுமையான சித்திரம் கிடைப்பதால் வாசிப்பனுபவத்திற்க்குக் குறையே இல்லை. கண்டிப்பாக படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்… தங்கள் ஸ்டைலில் 🙂
LikeLike
பாலாஜி, Fine Balance பற்றி இன்னும் கொஞ்சம் விவரித்தால் இங்கேயே பதித்துவிடுகிறேன்…
LikeLike