மூன்று வருஷங்களுக்கு முன் – என் டாப் டென் தமிழ் நாவல்கள், தமிழ் எழுத்தாளர்கள்

மூன்று வருஷங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு பதிவு சமீபத்தில் கண்ணில் பட்டது. சுஜாதாவையும், பாலகுமாரனையும், கல்கியையும் அப்போது தி.ஜா.வுக்கும் அழகிரிசாமிக்கும் மேலாக மதிப்பிட்டிருந்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

கல்கியின் பேரைச் சொல்லப் போகும் ஒரே புத்தகம் பொன்னியின் செல்வன். அதுவும் இப்போது எனக்கு மூன்றாம் படியில் இருக்கும் இலக்கியமே. இதை எழுதும்போது எனக்கு எக்கச்சக்க நாஸ்டால்ஜியாவாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று வார காலகட்டத்தில் பாலகுமாரனின் ஆறேழு சிறந்த புத்தகங்களைப் – பந்தயப்புறா, ஆனந்த வயல், கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், அகல்யா என்று சில – படித்த நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் எழுதப்பட்ட பதிவாக இருக்க வேண்டும். 🙂 இப்போது நன்றாகவே தெரிகிறது – பாலகுமாரன் அழகிரிசாமி, தி.ஜா. அருகே நிற்கக் கூட முடியாது.

சுஜாதா நிற்கலாம். 🙂 இந்த லிஸ்டைப் போடும்போது சுஜாதா சொதப்பிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை – இல்லை, இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும். வாரப் பத்திரிகை எழுத்துகளில் சுஜாதாவின் தரம் மிகவும் உயர்ந்தது, அதனால் அவரது குறைகள் ரெஜிஸ்டர் ஆகவே இல்லை. மீண்டும் அவர் புத்தகங்களை புரட்டும்போதுதான் குற்றம் குறை எல்லாம் தெரிகிறது. சில சமயம் எழுத்தின் தரம் மட்டும் இல்லை, அதன் தாக்கமும் இந்த மாதிரி லிஸ்ட்களில் இடம் பெற ஒரு முக்கியமான காரணி. அப்படித்தான் சுஜாதா has sneaked in. இன்றும் டாப் டென் என்று ஒரு லிஸ்ட் போட்டால் சுஜாதா எப்படியாவது முண்டியடித்து உள்ளே வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

மேலும் இந்தப் பதிவை எழுதும்போது நான் காடு, வாசவேஸ்வரம், ஆழிசூழ் உலகு, பொய்த்தேவு மாதிரி பல புத்தகங்களைப் படிக்கவில்லை. இன்று டாப் டென் நிறைய மாறி இருக்கும். இன்றளவு படிக்காதபோதே பத்துக்குள் அடக்கமுடியவில்லை என்றால் இன்று மிகவும் கஷ்டம், அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. என் ரசனை கொஞ்சம் முன்னேறி, சரி வேண்டாம் மாறி இருப்பதற்கு ஜெயமோகனின் பழக்கம், பரிந்துரைகள், அவர் இங்கு வந்தபோது பரிச்சயமான நண்பர்கள் ஒரு முக்கிய காரணம். அவரது பரிந்துரைகள், விளக்கங்கள் பல புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தன (ஆழிசூழ் உலகு…), சில புத்தகங்களை மீண்டும் படிக்க வைத்தன (பதினெட்டாம் அட்சக் கோடு…) அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்வதில் அர்த்தமில்லை; இருந்தாலும் நன்றி!

Curiosity value-வுக்காக மீள்பதித்திருக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

 1. பின் தொடரும் நிழலின் குரல்
 2. விஷ்ணுபுரம்
 3. பொன்னியின் செல்வன்
 4. என் பெயர் ராமசேஷன்
 5. கரைந்த நிழல்கள்
 6. சாயாவனம்
 7. கோபல்ல கிராமம்
 8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
 9. வெக்கை
 10. ஜேஜே சில குறிப்புகள்
 11. மோகமுள்

எனக்குப் பிடித்த டாப் டென் ஆசிரியர்கள்: (வரிசைப்படி அல்ல)

 1. ஜெயமோகன்
 2. சுந்தர ராமசாமி
 3. புதுமைப்பித்தன்
 4. அசோகமித்ரன்
 5. கல்கி
 6. சுஜாதா
 7. பாலகுமாரன்
 8. தி. ஜானகிராமன்
 9. கி. ராஜநாராயணன்
 10. கு. அழகிரிசாமி
 11. பூமணி
 12. சா. கந்தசாமி

எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. 🙂 ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.

ஜெயகாந்தனை இந்த லிஸ்டில் புகுத்த முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

14 thoughts on “மூன்று வருஷங்களுக்கு முன் – என் டாப் டென் தமிழ் நாவல்கள், தமிழ் எழுத்தாளர்கள்

 1. நீங்கள் கழிக்க வேண்டியது கல்கியையும் பாலகுமாரனையும்தான். கு.அழகிரிசாமியையும் தி.ஜானகிராமனையும் அல்ல!!!

  Like

 2. கடைசி லிஸ்டில் குழப்புகிறீர்கள்…

  >>பாலகுமாரனையும், கல்கியையும் அப்போது தி.ஜா.வுக்கும் அழகிரிசாமிக்கும் மேலாக மதிப்பிட்டிருந்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
  – இப்படி ஆரம்பத்தில்…

  பிறகு லிஸ்ட் போட்டுவிட்டு…
  >>எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. 🙂 ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.

  >>ஜெயகாந்தனை இந்த லிஸ்டில் புகுத்த முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

  – ஆனால் பாலகுமாரன் இன்னும் லிஸ்டில…

  பின்நவீனத்துவம்?! 🙂

  Like

 3. அப்படிங்களா… இது நான் சின்னப் பையனாக இருந்த போது போட நினைத்த டாப் டென் லிஸ்ட் 😉

  சும்மா ஜாலிக்கு சார்

  வாண்டுமாமா
  கல்வி கோபால கிருஷ்ணன்
  அழ. வள்ளியப்பா
  பி.டி,சாமி
  ராஜேஷ்குமார்
  பட்டுகோட்டை பிரபாகர்
  புஷ்பா தங்கதுரை
  பாலகுமாரன்
  சுஜாதா
  சுந்தர ராமசாமி

  இப்போ லிஸ்ட் போடச் சொன்னால் கடைசி இருவரைத் தவிர வேறு யாரையாவது சேர்க்க முடியுமா?

  என் தற்போதைய லிஸ்டில் இவர்கள் இருவரோடு யுவன் சந்திரசேகர்,ஜெயமோகன், சு.ரா, புதுமைப் பித்தன், தி.ஜா., சா. கந்தசாமி, அழகிரிசாமி, லா.ச.ரா. பி.ஏ.கே., ஆகியோருக்கு நிச்சயம் இடம் உண்டு.

  Like

 4. ராஜ் சந்திரா, கொஞ்சம் குழப்பமாகத்தான் எழுதி இருக்கிறேனோ?
  சுந்தர், // நீங்கள் கழிக்க வேண்டியது கல்கியையும் பாலகுமாரனையும்தான். கு.அழகிரிசாமியையும் தி.ஜானகிராமனையும் அல்ல!! // ஆம், இப்போது நானும் அப்படி நினைப்பதைத்தான் எழுதி இருக்கிறேன்.
  ரமணன், கல்வி கோபாலகிருஷ்ணனைப் பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு என்ன வயது என்று யூகிக்க முடிகிறது. 🙂

  Like

 5. //ரமணன், கல்வி கோபாலகிருஷ்ணனைப் பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு என்ன வயது என்று யூகிக்க முடிகிறது. //

  🙂 ஆர்.வி. உங்கள் ஊகம் தவறாகக் கூடும். 😉

  கல்வி கோபாலகிருஷ்ணனை படித்திருக்கிறேன். நான் சின்னப் பையனாக இருந்தபோது. ஆனால் அது என் அப்பா தன் சின்ன/இளம் வயதில் படித்துச் சேமித்தது. அதுபோலவே தான் பொன் விலங்கு, குறிஞ்சி மலர், ஜீவபூமி, உன் கண்ணில் நீர் வழிந்தால், இதயத்தில் நீ, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, பாரிசுக்குப்போ, நல்லதோர் வீணை, பெற்றமனம், டாக்டர் அல்லி, கரித்துண்டு, கிளிஞ்சல் கோபுரம், கடல் கண்ட கனவு போன்ற இன்ன பிற நூல்கள் எல்லாம்.

  என் அப்பா நா.பா. அகிலன், மு.வ., ஜெயகாந்தன்,போன்றோரின் ரசிகர். அவர்களது தொடர்கள் (மு.வ. தவிர்த்து) பத்திரிகைகளில் வெளி வந்தபோது வாங்கி படித்து பைண்டு செய்து பாதுகாத்து வைத்திருக்கிறார். அப்புறம் ராணி முத்து மலிவு விலையில் நாவல்களை வெளியிட்டபோதும் (சுருக்கப் பதிப்பு) அதையும் வாங்கிப் பாதுகாத்திருக்கிறார்.

  அவற்றையெல்லாம் சிறு வயதில் புரட்டிப் பார்த்தும் பின்னால் பொழுது போகாதபோதும் ( உண்மையைச் சொன்னால் வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருந்தபோது) படித்திருக்கிறேன்.

  அப்பாவை விடுங்கள். தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஞானவெட்டியான் (1889ல் வெளியான முதல் பதிப்பு), அகத்தியரின் க்ஷடாக்ஷர அந்தாதி, கமலாம்பாள் சரித்திரம், கனகாங்கி, (துப்பறியும் நவீனம்) விநோதரச மஞ்சரி, ஆறுமுக நாவலரின் சைவசமய விளக்க வினா விடை, பால பாடம், சந்திரசேகரம், எல்லப்ப நாவலர் சரித்திரம், வருணகுலாதித்தன் மடல் (பலானது)…. இப்படி நிறையப் படித்திருக்கிறேன். தாத்தா பின்னர் இது போன்ற பல நூல்களை கள்ளியம் பெட்டியில் போட்டு, அவை கரையான் அரித்து நாசமானதால் பின் தன் சேகரிப்பில் இருந்த நூல்கள் பலவற்றை அந்தக் காலத்தில் கோட்டையூரில் இருந்த முத்தையாச் செட்டியாரிடம் கொடுத்து விட்டார். அவர் பின்னர் ”ரோஜா” முத்தையா என்று அழைக்கப்பட்டார்.

  நான் என்னத்தைப் படித்து என்ன? படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் கதை தான்.

  ஏதோ கொஞ்சம் சுய புராணம் பாட அனுமதி தந்தமைக்கு நன்றி.

  அது சரி என் வயது என்னதான் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சுமார் 60?

  😉

  Like

  1. ரமணன், கல்வி கோபாலகிருஷ்ணனைப் பற்றி தெரிந்திருப்பதால் உங்களுக்கு அறுபத்து சொச்சம் வயது என்றால் எனக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறதே? 🙂 அதனால் நாற்பத்து சொச்சம் என்று வைத்துக் கொள்வோம்…

   Like

   1. நிச்சயம் இல்லை. நான் உங்களை விடச் சின்னப் பையன் தான். 😉

    பட், வயதில் என்ன சார் இருக்கிறது?

    யுவனின் ‘வெளியேற்றம்” மீள் வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.

    Like

 6. வண்ணநிலவனின் கடல்புரத்தில்’ நாவல் தமிழின் மிகமுக்கியமான நாவல். வண்ணநிலவன் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். பகிர்விற்கு நன்றி.

  Like

 7. ஆர்.வி.சார்,
  தி.ஜா வை நீங்கள் இறக்கியது வருத்தம் அளிக்கிறது. வரிசை வேண்டுமானால்
  மாறலாம் உங்கள் ருசிப்படி. ஆனால் நீக்கவே முடியாதே. மீண்டும் ஒரு வாசிப்பு
  செய்தீர்களானால்.( ஒன்றைமட்டும் கூட,) கணிப்பு உடனே மாறிவிடும். (அப்படித்தானே ஆகியிருக்கிறது)நல்ல பதிவு

  Like

 8. ராதாகிருஷ்ணன் துரைசாமி, பாலகுமாரனையும் கல்கியையும் தி.ஜா., அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களை விட அன்று மேலான இடம் தந்தது எனக்கே ஆச்சரியம் அளிக்கிறது. புத்தி கித்தி கலங்கி இருந்ததோ என்னவோ. 🙂
  சித்திரவீதிக்காரன், கடல்புரத்தில் முக்கியமான புத்தகம்தான். ஆனால் நான் படித்தபோது (இருபது வருஷம் இருக்கும்) எனக்கு என்னவோ நிறைவாக இல்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.