சோலை சுந்தரப்பெருமாளின் “தப்பாட்டம்”

சோலை சுந்தரப்பெருமாள் கீழ்வெண்மணியில் 44 பேர் எரிக்கப்பட்டதைப் பின்புலமாக வைத்து செந்நெல் என்று ஒரு முக்கியமான புத்தகத்தை எழுதியவர். அதில் இலக்கியத்துக்கான நயம் குறைவுதான் என்றாலும் அது முக்கியமான ஆவணம். எரிக்கப்பட்ட ஒருவரின் தம்பியோ, பக்கத்து வீட்டுக்காரரோ நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியதைப் போல இருக்கும். 2002-இல் தஞ்சை மாவட்ட ஜாதீயப் பின்புலத்தை வைத்து தப்பாட்டம் என்ற இன்னொரு நாவலை எழுதி இருக்கிறார்.

தஞ்சாவூருக்கு அருகே ஒரு சின்ன கிராமம்தான் கதை நடக்கும் இடம். ஊரில் பெரிய மனிதர்கள் மூப்ப ஜாதியினர். அடுத்த இடத்தில் அம்பலக்காரர்கள். பள்ளர், பறையர், சக்கிலியர் மூன்று ஜாதியினரும் உண்டு. மூப்பர்களுக்கும் அம்பலக்காரர்களுக்கும் கொஞ்சம் புகைச்சல் உண்டென்றாலும் மற்றவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இரட்டைக் குவளை டீக்கடை மாதிரி விஷயங்கள் சர்வசாதாரணம். சுந்தரமூர்த்தி வாத்தியார் பிறப்பால் மூப்பர் என்றாலும் கம்யூனிஸ்ட். ஜாதி வித்தியாசம் ஒழியவும், கம்யூனிஸ்ட் கட்சி வளரவும், எல்லாருக்கும் – மூப்பரிலிருந்து சக்கிலியர் வரை எல்லா ஜாதிக் குழந்தைகளுக்கும் உயிரை விட்டு படிப்பு சொல்லித் தருபவர். அவரால் பல மூப்பர் வீட்டுக் குழந்தைகள் பயன் அடைந்திருப்பதால் அவர் மேல் ஊர் பெரிய மனிதர்களுக்கு இருக்கும் எரிச்சல் அவ்வப்போது நொந்து கொள்வதற்கு மேல் போவதில்லை. மெதுமெதுவாக சின்னச் சின்ன தகராறுகள் மூலம் “கீழ்” ஜாதியினர் அடக்குமுறையை எதிர்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வளர்கிறது. அதை மும்முரமாக எதிர்க்கும் “மேல்” ஜாதியினர்.

கதை முக்கியமில்லை. கதை காட்டும் சித்திரம்தான் முக்கியம். ஒரு மெய்நிகர் வாசக அனுபவத்தைத் தருகிறார். ஆனால் அவரால் மனித மனதின் ஆழத்துக்குள் போக முடியவில்லை. மேலோட்டமாகத்தான் அவன் அடக்குமுறை செய்பவன், இவன் அடக்கப்படுபவன் என்ற அளவில்தான் எழுத முடிகிறது. இது புறவயமான உலகம் பற்றிய நாவல் மட்டுமே. வரவர எல்லா நாவலிலும் அகவயமான உலகம் தெரியாவிட்டால் திருப்தியாக இல்லை. சில சமயம் அதைத் தாண்ட முயற்சித்தாலும் – உதாரணமாக, தப்பு வாத்தியத்தை, அதை வாசிப்பதை எதிர்ப்பின் குறியீடாக காட்ட முயற்சிக்கிறார், அதெல்லாம் சரியாக வரவில்லை. நாவலின் பலமே சமீப காலத்தில் கூட, அனேகமாக இன்று கூட, நமக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் கூட, இப்படிப்பட்ட ஜாதீய வன்முறைகள் நடப்பதை தோலுரித்துக் காட்டுவதுதான்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

பெருமாளின் இன்னொரு புத்தகமான பெருந்திணைக்கும் ஆவண முக்கியத்துவம்தான். ஒரு பண்ணை, அதன் பறைய ஜாதி பல ஜாதி முறைப் பழக்கங்களை ஆவணப்படுத்துகிறார். ஆனால் நயம் இல்லாத புத்தகம்.

நா.பா.வின் “குறிஞ்சி மலர்”

இன்று ஒரு நாற்பத்து சொச்சம் வயதுத் தமிழனுக்கு அரவிந்தன் என்று பேரிருந்தால் அவர்கள் அப்பா, அம்மா நா.பா.வின் குறிஞ்சி மலர் நாவலைப் படித்து நெகிழ்ந்தவர்கள் என்று யூகிக்கலாம். எனக்குத் தெரிந்து வேறு எந்த கதாபாத்திரத்தின் பேரும் இத்தனை தூரம் பிரபலம் அடையவில்லை.

குறிஞ்சி மலரை சிறு வயதில் படித்து நானும் உத்வேகம் அடைந்திருக்கிறேன். ஆனால் இன்று அவ்வப்போது கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான் என்று அலுப்பு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. வாசகர்கள் பத்து வயதுக்கு மேல் வளரவே மாட்டார்கள் என்று நா.பா. உறுதியாக நம்பி இருக்கிறார். அவருடைய வில்லன் முகத்தைப் பார்த்தால் புலி போல இருக்கும். இல்லாவிட்டால் கழுகு, வல்லூறு இப்படி ஏதாவது. நாயகி மான், மயில். பேசாமல் நெற்றியில் நான்தான் வில்லன், ஹீரோ, ஹீரோயின், செகண்ட் ஹீரோ என்று பச்சை குத்திக் கொள்ளலாம்.

குறிஞ்சி மலரை நிச்சயமாகப் படித்திருக்கும் தலைமுறைகளுக்கு அடுத்த தலைமுறைகள் வந்துவிட்டன. அதனால் சுருக்கமாக கதை: அப்பாவை இழந்த பூரணி, அரவிந்தன் இருவரும் உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடுகிறார்கள். சமூக அவலங்களைக் கண்டு பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாசகர்களை சோகப்படுத்த அரவிந்தன் இறந்துவிடுகிறான். திருமணம் ஆகாமலே பூரணி வாழ்க்கையை சமூக முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்கிறாள். என்னடா இப்படி ஒரு லைனில் முடித்துவிட்டேனே என்று பார்க்கிறீர்களா? இதுவே ஜாஸ்தி.

அம்புலி மாமாக் கதையின் பலவீனங்களைப் பற்றி என்ன விவரிப்பு வேண்டிக் கிடக்கிறது? பலத்தைப் பற்றிப் பேசுவோம். அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். லட்சியவாதம் என்று அன்று உணரப்பட்டதை இந்தப் பாத்திரப் படைப்புகளின் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். அது இன்று உலக மகா சிம்ப்ளிஸ்டிக்காக இருக்கிறது. அது நா.பா.வின் தவறு இல்லை. நா.பா.வே. அப்படிப்பட்ட ஒரு லட்சியவாதிதான் என்று நினைக்கிறேன். அரவிந்தன் அவரது idealized சுய விவரிப்பாகவே இருக்க வேண்டும். அப்புறம் அகிலனை விட நன்றாகவே எழுதுகிறார்! (எனக்கென்னவோ அகிலன் ஒரு pet peeve ஆகவே மாறிவிட்டார்)

கதையின் முக்கியத்துவும் ஒரு காலத்தில் அதற்கு இருந்த தாக்கத்தால்தான். ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். வணிக நாவல்கள் எப்படி எல்லாம் evolve ஆகி இருக்கின்றன என்று புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டும்.

பிற்சேர்க்கை: சந்தடி சாக்கில் இன்னொரு நா.பா. புத்தகத்தைப் பற்றிய சின்னக் குறிப்பையும் உள்ளே நுழைத்துவிடுகிறேன்.
மூலக்கனல்: நா.பா. ஒரு காலத்தில் காங்கிரசின் ஸ்டார் பேச்சாளரும் கூட. திராவிட இயக்கத்தின் மீது அவருக்குப் பெரிய கசப்பு உண்டு. அந்த கசப்பை ஒரு சம கால (contemporary) வரலாற்று நாவல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருமலைராஜன் (திரு) ஜமீந்தாருக்கு தவறான வழியில் பிறந்த பிள்ளை. அவனை சின்ன ஜமீந்தார் அடித்துத் துரத்திவிடுகிறார். தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்பதற்காக கருப்புச்சட்டைக்காரர் பொன்னுசாமியுடன் சேர்கிறான். கருணாநிதி, கல்லக்குடி-டால்மியாநகர் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் அவனும் ஏதோ ஒரு ஊரை பெயர் மாற்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறான், சினிமாவுக்கு வசனம் எழுதப் போகிறான். குடி, பெண்கள் என்று ஆரம்பிக்கிறான். தன மனைவி, பிள்ளையை விட்டு விலகுகிறான். காலப்போக்கில் மந்திரி ஆகிறான். ஊழல். பிள்ளை பெரியவனாகி இவனை தாக்கி பத்திரிகையில் எழுத, தன பிள்ளைதான் என்று தெரியாமல் அவனைக் ஆட்கள் மூலம் கொன்றுவிடுகிறான்.
கதை சுமார்தான். ஆனால் அந்த சம கால நிகழ்ச்சிகளை – தி.மு.க. ராபின்சன் பூங்காவில் தோன்றியது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் வென்றது, ராஜாஜி திராவிட இயக்கத்துடன் கை கோர்த்தது – கோத்திருக்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.

பிற்சேர்க்கை: விமல் புண்ணியத்தில் “குறிஞ்சி மலர்” மின்னூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் – சோ ச்வீட்

குழந்தைகளுக்கு எழுதுவது ஒரு கலை. அதில் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு. கிப்ளிங் அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஜஸ்ட் சோ ஸ்டோரீசைப் படிக்கக் கூடாது, குழந்தைகளுக்குப் படித்துக் காட்ட வேண்டும். அதுவும் சின்ன வயதிலேயே ஆங்கிலம் புரியும் குழந்தைகளுக்கு கட்டாயம் படித்துக் காட்ட வேண்டும். படங்களோடு இருந்தால் இன்னும் உத்தமம். பெரியவர்களுக்கே குஷி பிறக்கும்!

இதற்கு மேல் எதுவும் எழுத விரும்பவில்லை. இங்கே கதைகள் இருக்கின்றன, மகன், மகள், nephew, niece, நண்பர்களின் குழந்தைகள் யாருக்காவது படித்துக் காட்டுங்கள்! அப்படி யாரும் கிடைக்காவிட்டால் உங்கள் உள்ளேயே இன்னும் இருக்கும் குழந்தைக்காகப் படியுங்கள்!

தொடர்புள்ள சுட்டிகள்: ஜங்கிள்புக்

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்

ஜெயமோகனின் “அவதாரம்” (பிடித்த சிறுகதை)

அவதாரம் உக்கிரமான சிறுகதை. முதல் இரண்டு பாராவும் மெதுவாகப் போகிறது. ஆசீரான் கதைக்குள் வந்ததுமே சூடு பிடிக்கிறது. ரவுடிகளின் டெக்னிக்குகள் – காலுறச்சு நிற்பது, உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பார்வை, இடது கைப்பழக்கம் என்றெல்லாம் விவரித்து அசத்துகிறார்.

வேறு எங்கோ போவது போல நடந்த ஆசீரான் சட்டென்று பிரபாவின் பின்பக்கத்தைப் பற்றி ஒரு அமுக்கு அமுக்கினான். அவள் ‘ச்சீ” என்று சீறியபடி திரும்ப அப்படியே அள்ளிப் பிடித்து மார்பை அள்ளிக் கசக்கினான்

என்று சர்வசாதாரணமாக ஒரு அநீதியை இரண்டு வரியில் எழுதிச் செல்கிறார்.

நேர்மாறாக பயந்தாங்கொள்ளி கோலன் அப்பு. ஒரு கால் வேறு ஊனம். பிரபாவின் சகோதரன். பிரபாவுக்கு நடந்ததைக் கேட்டு அவன் ஆசீரானோடு மோத வரும்போது நீ என்ன செய்ய முடியும் என்றுதான் தோன்றுகிறது.

கதையின் உச்சக்கட்டமாக அந்த சண்டை. சண்டை கிண்டை என்றெல்லாம் சொன்னால் சரிப்படவில்லை. போர், யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நுணுக்கமாக விவரிக்கப்படும் வன்முறை.

ஜெயமோகனின்வாழ்விலே ஒரு முறை” என்ற சிறுகதைத் தொகுப்பில்தான் இந்தக் கதையை முதன்முதலாகப் படித்தேன். எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை. சிறுகதையைப் பதித்திருக்கும் தமிழ் தொகுப்புகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் சிங்கமணிக்கு ஒரு ஜே!

என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

தொடர்புடைய சுட்டி:
அவதாரம் சிறுகதை