விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம்

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு)

மிகைக்கற்பனை (fantasy), யதார்த்தவாதம் (realism), மாய யதார்த்தவாதம் (Magical Realism), நவீனத்துவம் (modernism), பின் நவீனத்துவம் (post-modernism) என்றால் ‘வைகைக்கரை நாணல் போல ஏதோவொன்று’ என்றுதான் நினைத்திருந்தேன். பல காலகட்டங்களைச் சேர்ந்த நாவல்களைப் படித்ததன் வாயிலாகவும், ஜெயமோகனின் இணையதளம் வாயிலாகவும் இப்போது ஓரளவு புரிகிறது. (‘மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத முரணியக்கம்’ தான் ரொம்ப படுத்துது 🙂 ). இந்த இலக்கிய கலைச்சொற்ககளை, நான் புரிந்துகொண்டவரை கீழ்கண்டவாறு சொல்வேன்.

யதார்த்தவாதத்தில் கதை சித்தரிப்பு தர்க்கரீதியானது (லாஜிக் மீறாது) என்றால் மிகைக் கற்பனை அதற்கு நேரெதிர் (லாஜிக்கெல்லாம் யோசிக்கக்கூடாது). இவை இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைவது மாய யதார்த்தவாதம். (மாய நிகழ்வுகள் யதார்த்தம் போலவே இருக்கும். இதை நம்பகத்தன்மையோடு சொல்வது எழுத்தாளனின் திறனைப் பொறுத்து). நவீனத்துவம் கதை சொல்லியின் குரலாகவோ, ஒரு காலகட்டத்தின் குரலாகவோ ஒலிக்குமென்றால், பின் நவீனத்துவம், பல தரப்புகளின், பல காலகட்டத்தின் குரல். எவ்வகையிலும் ஒற்றைப்படைத்தன்மை அற்றது.

ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா ‘மானுடத் தேடல்’ என்ற கருவில் எழுதப்பட்ட யதார்த்தவாத பாணிக் கதை. யதார்த்தவாத பாணியினாலேயே என்னால் அக்கதையில் ஒன்ற முடியவில்லை. இரண்டாவது முறை படிக்க முயற்சி செய்து மூடி வைத்துவிட்டேன். ஜெயமோகனின் வாசகனானதால், எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை, யதார்த்தவாத / நவீனத்துவ கதைகளில் நுழைய முடியாமை. தமிழில் சிறந்த யதார்த்தவாத நாவல் பதினெட்டாம் அட்சக்கோடு என்கிறார்கள். உண்மையில் வாசிப்பு அகங்காரக் கோடரியோடு, எந்த மரத்தை வெட்டி வீழ்த்தலாம் என்று பதினெட்டாம் அட்சக்கோட்டில் நுழைந்து, அங்கு ஒரு புல்வெளியைக் கண்டு ஏமாற்றமடைந்தேன். “அசோகமித்ரன் கதைப்புலத்தில், ஒரு இளம் வாசகன் தன் வாசிப்பு அகங்காரத்தைக் கொண்டு, தான் முட்டித் திறக்க வேண்டிய குறியீடு எது என்று தேடினால், ஏமாற்றம்தான் மிஞ்சும்” என்று “நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்” குறிப்பிடுகிறார் ஜெயமோகன். பதினெட்டாம் அட்சக்கோடு வாசித்தபின் இந்த வரிகளைப் படித்தேன். ஆச்சரியமாக இருந்தது. பிரச்சினை என்னிடம்தான், நாவலை அந்தக் காலகட்டத்திற்கு சென்று வாசிக்காமல், என்னை நோக்கி இழுக்க முற்படுகிறேன். எனக்கு கோபல்ல கிராமம், பதினெட்டாம் அட்சக்கோடு போன்றவை பின்பு எப்போதாவது திறக்கலாம். ஆனால், வாசிப்புக் கோடரி கொண்டு வருபவர்களுக்கு, விஷ்ணுபுரம் ஒரு அமேசான் காடு, வெட்ட வெட்ட மரங்கள் முளைத்தபடியே இருக்கும்.

நவீன இலக்கியத்தில், மிகைக்கற்பனை, யதார்த்தவாத கதை சொல்லும் முறைக்கு மாற்றாக, மாயா யதார்த்தவாதத்தை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறார்கள். காப்ரியேல் கார்ஸிய மார்க்வெஸ் எழுதிய ‘One Hundred Years of Solitude‘ அதில் புகழ் பெற்றது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் மாயா யதார்த்தவாதம் அறிமுகம் ஆவதற்கு கால் நூற்றாண்டு முன்னரே, வங்க எழுத்தாளர் அதீன் பந்த்யோபாத்யாய, தன் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் அந்த உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் ஜெயமோகன் – கண்ணீரைப் பின்தொடர்தல். அதிலிருந்து,

காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச் செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல் பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல் மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death ! death ! death !” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டு வரவேயில்லை.

விஷ்ணுபுரம் போன்ற, யுகயுகமாக முடிவின்றி ஓயாது சுழன்றலையும் மானுடத் தேடலை அள்ள முயலும் நாவலை, யதார்த்தவாத பாணியில் எழுதியிருக்க முடியாது. நாவலில் வரும் மாயா யதார்த்தவாத கூறுகள் வாசகனை நாவலில் ஒன்றச் செய்கின்றன; வாசிப்பு அனுபவத்தை பல மடங்கு உயர்த்துகின்றன. விஷ்ணுபுரத்தில் மாய யதார்த்தத் தருணங்கள் நிறைய உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தது, அஜிதன் ஞான சபை விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெல்லும்போதும், ஞான ஸ்தம்பத்தில் ஒவ்வொன்றாக தானாகவே எரியும் சுடர். அஜிதனுடைய வெற்றியை அறிவிக்கவரும் கிருஷ்ணப் பருந்தும் அவ்வாறே. (தூய தர்க்கத்தின் அடிப்படையில் நடைபெறும் ஞான சபை விவாதத்தில் வெற்றியை அறிவிக்கும் முறைகள் தர்க்கத்தை தாண்டியதாக இருப்பது அழகிய முரண்.) அதே சமயம், அஜிதன் ஞான விவாதங்களில் வெல்வதை மாய யதார்த்தவாதமாக சித்தரிக்கும் ஆசிரியர், பத்மாட்சி அக்னிப்பரிட்சையில் ‘வெல்வதை’ யதார்த்தவாதமாக (தந்திரமாக) சித்தரிப்பதை கவனத்தில் கொண்டால், அவை உணர்த்தும் உட்பொருள் புரியும். நாவலில் வரும் மாயா யதார்த்தவாதத்திற்கு மேலும் சில உதாரணங்கள் – ஞானத் தேடலின் அதிதேவதையாக வரும் பச்சை நிற பார்வை கொண்ட மிருகநயனி, மரணத்தின் குறீயீடாக வரும் கரிய நாய், சித்திரைக்கு பத்தினித் தெய்வம் கொடுக்கும் செஞ்சுடர்… சொல்லிக் கொண்டே போகலாம்.

மார்க்வெஸின் ‘One Hundred Years of Solitude’க்கும், விஷ்ணுபுரத்திற்கும் மேலோட்டமாக சில ஒற்றுமைகள் உள்ளது. அந்த நாவலிலும், ஒரு ஊர் (மாசாண்டோ) தோன்றி அழிவதின் சித்திரம் உள்ளது. மாசாண்டோவின் கதை, பூயந்தியா என்ற கொலம்பியக் குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் கதை; மாசாண்டோவின் அழிவைப் பற்றி கடைசியில் மெல்சியாடஸ் எழுதி வைத்த சமஸ்கிருத குறிப்பை (ஜோசியம்?) படிக்கும் போதுதான் தெரிகிறது; மீண்டும் மாசாண்டோவோ, புயந்தியாக்களோ பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், நூறாண்டுகளை தனிமையில் கழித்தவர்களுக்கு மண்ணில் வாழ மீண்டுமொரு வாய்ப்பில்லை. கடவுள் அவர்களை தண்டித்துவிட்டார் என்கிறார் மார்க்வெஸ். இது ஓரளவு கிறித்தவ விழுமியம் சார்ந்த நோக்கு என்று நினைக்கிறேன். விஷ்ணுபுரம் ஒரு கோவில் நகரத்தின் பல நூற்றாண்டுக் கதை; விஷ்ணுபுரத்தில் பிரளயத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பல முறை விஷ்ணுபுரம் தோன்றி அழிந்துள்ளதாக கதைகள், காவியங்கள் கூறுகின்றன. விஷ்ணுபுரம் கீழை மரபின் தரிசனங்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, இரண்டு நாவல்களுக்கும் வேறெந்த ஒற்றுமைகளும் இல்லை. வடிவத்தில் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’, தமிழ் நாவல்களில் பி.ஏ.கிருஷ்ணனின்புலி நகக் கொன்றை‘யுடன் தான் பெரிதும் ஒத்திருக்கிறது. (அதுவும் வடிவத்தில் மட்டும்தான், பேசு பொருளில் இல்லை).

என்னளவில் விஷ்ணுபுரம் மிகச் சிறந்த பின்நவீனத்துவ, மாயா யதார்த்தவாத நாவல். ஜெயமோகன் தான், மாயா யதார்த்தவாதம் எழுதவில்லை, செவ்வியல் வடிவிற்குள் நிற்கும் மிகைக் கற்பனையைத்தான் எழுதுகிறேன்; நவீன செவ்வியல்வாதியாகவே அறியப்பட விழைகிறேன் என்கிறார். காவிய மரபும், செவ்வியலும் கற்கும்போது அவர் சொல்வது எனக்குப் புரியலாம்.

தொடரும்…

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு
விஷ்ணுபுரம் – தத்துவம்
விஷ்ணுபுரம் – கவித்துவம்+காவிய மரபு

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம்)

“வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்

சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுரம்  நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.

ஓய்வெனும் மரணம்
இரவெனும் இடைவெளி
ஒரு நூறு பாதங்கள் ஊன்றி
வானாகிக் கவிழ்ந்து
வெளியில் தலைதூக்கி
எண்ணற்ற முலை நுனிகளால்
அமுதூட்டும் கருணை.

தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன.

இந்திய காவிய மரபின் வளமைகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் ஆசிரியர். இந்திய காவிய மரபைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதி ‘skip’.

தொடரும்…

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம்)

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு
விஷ்ணுபுரம் – தத்துவம்

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் – தத்துவம்

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு)

“நிறுவப்படும் தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாத உண்மையை யாரும் அறிவதில்லை” – விஷ்ணுபுரத்தில் யாரோ.

இந்தப் பகுதியை எழுத எனக்குப் போதாமைகள் பல உண்டு. தெரிந்த வரை எழுதுகிறேன்.

மார்க்ஸிய தத்துவங்களின் தாக்கம் நாவலில் நிறையவே இருக்கிறது.

  1. “இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகங்களாக மாற்றி தன்னுள் இழுத்துக் கொள்ளும்.”
  2. தந்திர சமுச்சயம் விஷ்ணு வேறு, நாராயணன் வேறு என்கிறது.
  3. காட்டில் செங்கழல் கொற்றவையாக இருக்கும் தாய் தெய்வம், நிலத்திற்கு வரும்போது பத்தினித் தெய்வமாகிறது.
  4. உள்ளூர் பண்டிதர்கள், ஞானம் என்றால் வைகைக் கரை நாணல் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். பார்த்தான் பாண்டியன், அக்னிதத்தனை குலகுருவாக ஏற்று, விஷ்ணுபுரத்தை கட்ட ஆனையிட்டு, மற்ற பாண்டியர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டான்.

தன் இணைய தளத்தில் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். இந்து மதம் போன்ற தொன்மையான மதங்களை ஆய்வதற்கு நம்மிடையே இருக்கும் சிறந்த கருவி மார்க்ஸிய முரணியக்கம் என்கிறார். ஒரே நேரத்தில் விஷ்ணுபுரத்தை ஹிந்துத்துவ நூல் என்றும், மார்க்ஸிய நூல் என்றும் சொல்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் விஷ்ணுபுரத்தில் சேவை சாதிப்பது, விஷ்ணுவோ, ததாதகரோ, பெருமூப்பனோ இல்லை, அது மார்க்ஸ் என்கிறார் :-). ஆனால், நாவலின் மையம் தாந்திர சமுச்சையம் சொல்லும் ‘செய்தி’ அல்ல. ஒரு முனையில், எல்லாம் வல்ல பரம்பொருளோ, அறியவே முடியாத இருள் சூழ்ந்த சூன்யமோ, ஏதோ ஒன்று இருக்கிறது. மறு முனையிலிருந்து அதை அறிவதற்கு விட்டில் பூச்சிகள் போல, மனிதர்கள் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள். யுக யுகமாக தொடரும் இந்தப் பயணத்தை அள்ள முயலும் நாவலே விஷ்ணுபுரம்.

விஷ்ணுபுரம் ஒரு தத்துவ நூலும் கூட. முதல் பகுதியில் வரும் பிங்கலன்-சிரவண மகாபிரபு, பிங்கலன்-சாருகேசி, சங்கர்ஷணன்-பத்மாட்சி உரையாடல்களும், நாவலின் இரண்டாம் பகுதியும் தத்துவச் செறிவு நிறைந்தவை. விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் சாமானியர்களின் கண்களுக்கு முப்பது அடுக்குகளுக்கு மேல் தெரிவதில்லை. ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை. விஷ்ணுபுரத்திலே, சுடுகாட்டுச் சித்தன் மட்டும்தான் ராஜகோபுரம் மேல் ஏறி இறங்கியவன். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தை மனிதன் கண்டடைந்த ஞானம் என்று உருவகித்தால், கோபுரத்தின் பின்னால் உள்ள ஹரிதுங்கா மலையை ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக உருவகிக்கலாம். ஒரு வேளை, சித்தன் ராஜகோபுரத்தின் மீதேறி, ஹரிதுங்காவைக் கண்டதால்தான், கோபுரத்திலிருந்து இறங்கி வந்தவுடன் ஞான நூல்களை எரித்துவிட்டானோ?

வைதீக மரபை உயர்த்தியோ, பௌத்தத்தை உயர்த்தியோ நாவல் பேசவில்லை. மொத்த நாவலில், சித்தனும், நீலியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். அனைத்தையும் கற்று, அனைத்தையும் உதறி, சூன்யத்தை உணர்ந்தவன் சித்தனென்றால், செங்கழல் கொற்றவையின் பேருருவம் கொள்பவள் நீலி. ஜெயமோகனின் கதைப்புலத்தில் நீலிக்கும் சித்தனுக்கும் தனி இடமுண்டு. காடு, விஷ்ணுபுரம், கொற்றவை, எண்ணற்ற சிறுகதைகளில் வரும் பெண் தெய்வமாக நீலியும், ஏழாம் உலகம் மற்றும் விஷ்ணுபுரத்தில் சித்தனும் அவர் நாவல்களைப் பினைக்கும் சங்கிலி என மீளமீள வருகிறார்கள். (நான் காந்தியை பித்தனாகக் கருதுவதால் சித்தன் வரிசையில் இன்றைய காந்தியையும் சேர்த்துக்கொள்வேன்).

இன்னொன்றையும் கவனித்தேன். விஷ்ணுபுரத்தில் வரும் சில வரிகளைக் கூட சாராம்சமாகக் கொண்டு தன் தளத்தில் விரிவான கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ஒரு வகையில் அவர் மீளமீள விஷ்ணுபுரத்தைத்தான் தன் கட்டுரைகளில், கதைகளில் வெவ்வேறு வடிவங்களில் எழுதுகிறார். பேரிலக்கியவாதிகளும் அதைத்தான் செய்தார்களா? என்னால், தர்க்கத்தை விடவும் முடியவில்லை, அதேசமயம் தர்க்கத்தை தாண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்றும் அகம் இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இருபது வயதில் எல்லோரும் தேடுகிறார்கள், நாற்பது வயதில் கண்டடைகிறார்கள் என்று இந்நாவலில் ஒரு வரி வேறு வருகிறது! (ஆர்வி தத்துவ விவாதெமெல்லாம் தியரிடிக்கல் எக்ஸைஸ் என்கிறார் :-)).

அறிய முடியாமை (சூன்யம்) என்பதை எப்படி பதிலாக ஏற்க முடியும், அடுத்த வேளை உணவில்லையென்றால் ஞானத்தை பற்றியெல்லாம் யோசிப்போமா என்றெல்லாம் யோசித்தாலும், இதுவரை பொருளாதார ரீதியாக அடைந்தவற்றில் சிறிதைக் கூட துறக்கத் தயாரில்லாமல் ‘அறிவது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கே எந்தத் தகுதியும் இல்லை என்று உணர்ந்து என் மனம் சிறுமை கொள்கிறது. இலக்கியம், அறிதல் என்றெல்லாம் பேசினாலும், ஆழ்மனதில், என் ஊழ், பொருள் ஈட்டுவதுதான் என்று அறிந்தே இருக்கிறேன். நாளை, ஒரு வேளை பெரும் பணம் ஈட்டினால், புண்ணியம்/மறுபிறவி என்றெல்லாம் யோசித்து, எந்த மடத்திற்கோ, மடாதிபதிக்கோ, கோவிலுக்கோ ஒரு பைசா கொடுக்கப் போவதில்லை. ஏனோ, விஷ்ணுபுரம், இந்தக் கருத்தை என்னுள் வலுப்படுத்துகிறது.

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு)

தொடரும்

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு

விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் – வரலாறு

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)

“வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத் துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால்? நினைத்தாலே சிரிப்பாக இல்லை? சரி, இதே லாஜிக்கின்படி நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் யோசித்தால்? ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது. (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ]

இந்தியா புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myths) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளை கொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளை கொண்டார்கள். புராணங்கள் கடவுளால் அருளப்பட்டவை, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை, அதுவே ஒரு தனி காவியம். இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டி.டி. கோசம்பி மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. (youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது, தற்போது காணவில்லை.) ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள் சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்க முடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு இனையாக இலக்கியவாதிகளும் இந்தத் கருவில் கதைகள், நாவல்கள் படைத்துள்ளார்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் அதில் முதல் முயற்சி. அதர்மம் அதிகரிக்கும்போது, ஈசன் சினங்கொள்வான், நெற்றிக்கண்ணைத் திறப்பான், உலகம் அழிந்து மீண்டும் பிறக்கும் என்ற தொன்மத்தை மையப்படுத்தி எழுதியது கபாடபுரம். அக்கதையில் இயற்கையே கடவுளாக, ஒரு எரிமலையை பிறைசூடியாக உருவகிக்கிறார். கடல் கொண்ட பழந்தமிழகத்தின் வரலாறு மட்டுமல்லாது தத்துவத் தளத்தையும் தொடுகிறது கபாடபுரம். விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரத்தின் நீட்சி என்கிறார் ஜெயமோகன். உண்மைதான். கபாடபுரம் தொட்டுக் காட்டும் புள்ளிகளை இனைத்து விஷ்ணுபுரமென மிக விரிவான சித்திரமொன்றை வரைந்திருக்கிறார். கபாடபுரத்திற்கும் (1945) விஷ்ணுபுரத்திற்கும் (1997) ஐம்பதாண்டு காலம் இடைவெளி உள்ளது. எனக்குத் தெரிந்து, வேறு யாரும் இந்தக் கருவில் நாவல் எழுதவில்லை. யதார்த்தவாத கதை சொல்லும் முறை ஓங்கியிருந்த காலம் என்பதால் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார் என்ற தொன்மத்தை வைத்து எழுதப்பட்டது இந்நாவல். நாவலில் யுகம் எப்போது துவங்கியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் முடிவு பதிநான்காம் நூற்றாண்டு (கான் படையெடுப்புக்குப்பின் அதிகபட்சம் நூறாண்டுகள்) என்று வருகிறது. ஒரு யுகம் என்று இந்தக் காலத்தை ஏன் உருவகித்தார் ஆசிரியர்? ஒரு யுகம் என்பது இங்கு எதன் குறியீடு? நிலப்பிரபுத்துவத்தின் காலம் என்றால் இருபதாம் நூற்றாண்டுவரை வந்திருக்க வேண்டும். என் யூகம், இந்திய நிலமெங்கும் கீழை மதங்கள் தம் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலகட்டம். சொல்லால் நிலைநின்ற ஆட்சிபோய், வேலால் மட்டுமே நிலைநின்ற ஆட்சி மாற்றத்தின் குறியீடு, தத்துவ யுகம் முடிந்து விஞ்ஞான யுகத்தின் துவக்கம், போன்ற காரணங்கள் இருந்தாலும், “மாற்றுத்தரப்பு சிந்தனைகளோடு உரையாடிய தளம் இல்லாமலாவதன் குறியீடு; கொண்டும் கொடுத்தும் சிந்தனைகள் வளர்ந்த சூழ்நிலை அழிந்து, இந்தியச் சிந்தனைகள் தேக்கமுறுவதன் குறியீடு” என்றே எண்ணுகிறேன். நாவலின் நீட்சியாக நாம் அடுத்த யுகமாக எந்தக் காலத்தை கருதுவது ? ஆலிலையில் மீண்டும் பிறக்கும் விஷ்ணு மீண்டும் எப்போது புரண்டு படுப்பார் ? (இல்லை புரண்டு படுத்துவிட்டாரா?)

விஷ்ணுபுரம் அளவிற்கு தொன்மங்கள், புராணங்கள் உருவாகும் விதம், காலப்போக்கில் அவை அடையும் மாற்றம் போன்றவற்றை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கும் வேறோரு இந்திய நாவல் இல்லை. நாவலின் மிகப் பெரிய பலம் இது. பத்மாட்சி யட்சி உருவாவது போலவே, கொன்றைவனத்தம்மனும் உருவாகிறாள். (அதுவும் கொன்றைவனத்தம்மன் உருவான புராணம் பற்றி சாத்தனுக்கு அவன் தந்தை சொல்வது, கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வரும் புராணகதையின் சாயல் கொண்டது. இது போலவே நானும் சில கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். template மாறாது போல).

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கற்பனாவாத நாவல்களால் தமிழக வாசகர் மனதில் தமிழ் மன்னர்கள் சந்தனக்காப்பு அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனின் சித்தரிப்பு மூலம் ஜெயமோகன் கருவறை புகுந்து சந்தனக்காப்பு விக்ரகங்களை வெளியில் தூக்கிப் போட்டு உடைக்கிறார். இது தேவையான ஒன்றுதான். இது புனைவு என்பவர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ படிக்க வேண்டுகிறேன். நிலப்பிரபுத்துவ அறத்தை இப்போதைய மக்களாட்சி அறத்தோடு ஒப்பிடக் கூடாதுதான், இருந்தாலும் நல்ல குரு அமையாத மன்னர்கள் கொடும் சர்வாதிகாரிகள் என்பதை மறக்க வேண்டாம். [இன்றைய ஜெயமோகன் ஃபேமஸ், 1997 ஜெயமோகன் அப்படி இல்லையே! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர்கள்தானே நாம்! தமிழ் வேறு பாண்டியன் வேறா? இதை எழுதியதற்கு எப்படி அடி வாங்காமல் தப்பித்தார் என்றே தெரியவில்லை 🙂 அது சரி, இது புனைவுதானே :-)]

நாவலில் நரோபா என்ற திபேத்திய பௌத்தர் விஷ்ணுபுரத்திற்கு வந்து மூல நூல்களை மொழிபெயர்க்கிறார். பின்னாளில் யோகவிரதர் நரோபாவின் நூல்களிலிருந்து விஷ்ணுபுரத்தைப் பற்றியும் தத்துவங்களையும் தெரிந்துகொள்கிறார். நரோபா கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சுவான்சாங்(யுவான் சுவாங்) தான். அவர் கொண்டு சென்றதின் மொழியாக்கத்திலிருந்து நாம் பலவற்றை மீட்டெடுத்தோம். வெள்ளையர்கள் எழுதிய இந்திய வரலாறு தவிர, நாம் இன்னும் நம் வரலாறை எழுதவே இல்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை அதன் சமகால சீன, திபேத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காப்பியங்களோடு ஒப்பிட்டும், முக்கியமாக நம் தொன்மங்களை அவர்களின் தொன்மங்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தால் மேலும் பல திறப்புகள் கிடைக்கலாம்.

பிற்சேர்க்கை: (ஆர்வியின் எண்ணங்கள்) – இதற்கு விசு வரலாறு என்று தலைப்பு கொடுத்திருந்தாலும் அவருடைய பேசுபொருளும் தொன்மங்களே என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை விஷ்ணுபுரத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. விஷ்ணுபுரம் புனைவு. தொன்மங்கள் உருவாகும் process-ஐ விவரிக்கிறது. முதல் பகுதியில் தொன்மங்களாக இருப்பவை இரண்டாவது பகுதியில் சமகால நிகழ்ச்சிகள்; மூன்றாவது பகுதியின் தொன்மங்கள் முதல் பகுதியில் சமகால நிகழ்ச்சிகள். இதில் வரலாற்றைத் தேட வேண்டாம் என்றே கருதுகிறேன். பாத்திரங்கள், நிகழ்ச்சிகளுக்கான inspiration சுவான்சாங்கின் பயணத்திலிருந்தும், யாக்ஞவல்கியர், சார்வாகன், ஆதி சங்கரர் தொன்மங்களில் ஏன், நா.பா. எழுதிய மணிபல்லவம் புத்தகத்தில் கூட விவரிக்கப்படும் ஞான சபை வாதங்களிலிருந்தும் வந்திருக்கலாம். அது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

ஆனால் எனக்கும் இரண்டு கேள்விகள் உண்டு. ஒன்று, விஷ்ணுபுரம் ஞான சபை போல மன்னனை விட ஒரு படி மேலாக தன்னை உணர்ந்த, காண்பித்துக் கொண்ட, மன்னனும் ஏற்றுக் கொண்ட ஹிந்து “ஆன்மீக” அமைப்புகள் இந்தியாவில் இருந்தனவா என்பது. இரண்டு ஞான சபை வாதத்தில் வெற்றி, தோல்வி என்பதை யார், எப்படி நிர்ணயித்தார்கள் என்பது. ஜெயமோகனே, அல்லது தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

விசு கபாடபுரத்தைப் பற்றி பேசும் வரையில் இவற்றுக்குள்ள தொடர்பு எனக்கு strike ஆகவில்லை. இப்படி தொடர்புகளை கண்டுபிடிப்பது விசுவின் பெரிய பலம்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா. ராகவன்
புதுமைப்பித்தனின் சிறுகதை – கபாடபுரம்

விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

முந்தைய பகுதி

விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.)

விஷ்ணு யுகத்திற்கு ஒரு முறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்த வண்ணம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர் வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.

நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்தி மரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஶ்ரீபாதத் திருவிழா. பத்தாம் நூற்றாண்டில் விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில் தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம் சென்று சேர்கிறான். விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து போகத்தின் எல்லைக்கும் ஞானத் தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான். சங்கர்ஷணனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனை கோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப் பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றிய பின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன்.

கணிகையர் குலத்தில் பிறந்த லலிதாங்கியிடம் காதல் வயப்படும் வாத்தியக்காரனான திருவடி, கணிகையர் வீதியில் அவளுக்காக காத்திருந்து, காத்திருந்து, பித்தேறி, தன்னிலை இழந்த நிலையில், திருவிழாவில் பங்கேற்க வந்த கிழ ஆழ்வார், குதிரை மீதேறி ‘வைகுந்தம்’ போய்ச் சேர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அவன் உறவினர்களால், திருவடி ஆழ்வாராக ஆக்கப்பட்டு, விஷ்ணுபுரத்தில் கைவிடப்பட்ட கடையனிலும் கடையர்களுக்கு ரட்சகனாகிறான். ஹரிதுங்கா மலையிலுள்ள செங்கழல் கொற்றவையின் ரூபமான விஷ்ணுபுரத்தின் பத்தினித் தெய்வத்திடம் ‘உன் குலக் கொழுந்தாவாய்’ என்று ஆசி பெற்ற சித்திரை எனும் பதின்பருவச் சிறுமி, ஒரு மாயத் தருணத்தில் தீயினால் உண்ணப்பட்டு, தன் குலத்தின் தெய்வமாகிறாள். விஷ்ணுபுரத்தின் தலைமை அதிகாரியான நரசிங்கரிடம் இருந்து சதி மூலம் பாண்டிய மன்னன் ஆதரவுடன் தலைமைப் பொறுப்பை அடைகிறான் காவலாளியான வில்லாளன். விஷ்ணுபுரத்தின் அடையாளமான விஷ்ணு கோவிலின் தலைமைச் சிற்பியான பிரசேனர், காளாமுகர்களால் உந்தப்பட்டு, மனம் பேதலித்து, விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிட எண்ணி ராஜகோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

பத்தாம் நூற்றாண்டிலிருந்து, கதை நான்காம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. (நாவலின் இரண்டாம் பகுதி) அப்போது, விஷ்ணுபுரத்தின் சொல்லாக, வைதீக மரபின் காவலராக இருப்பவர் பவதத்தர். இளம் பௌத்த பிக்குவான அஜிதனின் வாதத்திற்கான அறைகூவலை ஏற்று, பவதத்தர் விஷ்ணுபுர ஞான சபையை கூட்டுகிறார். பவதத்தர் தன் வாதத் திறமையால், சமணர்களையும், சைவர்களையும், திபேத்திய பௌத்தர்களையும் வெல்கிறார். பவதத்தரின் மருமகனாகிய விஷ்ணுதத்தன் என்ற பண்டிதன், தான் கற்ற ஞானமனைத்தையும் துறந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, பெருச்சாளித் தோலில் செய்த கௌபீனம் அனிந்து, சுடுகாட்டுச் சித்தனாகி விஷ்ணுபுர வீதிகளில் கூத்தாடுகிறான். சித்தனும் அவன் சீடனும் விவாதத்தில் பங்கேற்காமல், வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். பவதத்தர், வேதத்தை மூல நூலாக ஏற்க மறுக்கும் அஜிதனிடன் தோல்வியுறுகிறார். அதிகாரத்தை விட மனமில்லாதவர்கள், பௌத்த மரபை விஷ்ணுபுரத்தின் சொல்லாக ஏற்க மறுத்து கலகம் செய்கிறார்கள். தாந்த்ரீக பௌத்தர்களின் துனையுடன், சந்திரகீர்த்தி எனும் வணிகன், கலகத்தை அடக்குகிறான். விஷ்ணுபுரத்தின் அதிகாரம் வைதீகர்களிடமிருந்து, வணிகர்களின் கைகளுக்குப் போகிறது. வாதத்தில் வென்றபின் அதிகாரத்திற்கான போட்டியை நினைத்தும், சித்தனை நினைத்தும் அஜிதன் துணுக்குறுகிறான். விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்த மரபு மாறியதே தவிர, வேறொன்றும் மாறவில்லை. தன் குருவின் சொல்லை ஏற்று பௌத்த மரபைக் கற்க நரோபா என்ற திபேத்திய பௌத்தன் அஜிதனின் கடைசிக் காலத்தில் விஷ்ணுபுரத்திற்கு வருகிறான். நரோபா அஜிதரின் அறையில் நுழையும்போது அவர் தனிமையில் மரணமடைகிறார். அஜிதரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்ற சங்ககீர்த்தியின் ஆணையை அறிந்து, பதறி, மனம் வெறுத்து, நரோபா விஷ்ணுபுரத்தை விட்டு விலகி ஓடுகிறான்.

நாவலின் கடைசிப் பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து அதைத் தேடி வருகிறார் காசியைச் சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்ம புராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்த பின் அவருடைய பைத்தியக்கார மகனுக்கு பட்டம் சூட்டுவதன் மூலம் விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது. திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம் தன் சீடனுடன் மதுரைக்குப் போய் விடுகிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரத்தின் மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்து விடுகிறார்கள். ததாதகராகவும், விஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள். நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழி காட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார்.

யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான்.

முந்தைய பகுதி
தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு

நண்பரும் சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினருமான விசு விஷ்ணுபுரம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார், பகுதி பகுதியாக வெளிவரும்.

விசு என்கிற விஸ்வநாதன் இளைஞர். மயிலேறி என்ற பேரில் வலைத்தளம் நடத்துகிறார். அங்கே சில அருமையான பயணக் கட்டுரைகள் இருக்கின்றன. அவர் வயதில் எனக்கு அவருக்கு இருப்பதில் பாதி கூட விவேகம் இருந்ததில்லை, அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை, அப்ளிகேஷன் போட விரும்புவர்களுக்கு வசதியாக இங்கே புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.

நான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை:

  

“யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார். ஒரு யுகமென்றால், எத்தனை கோடி கனவுகள், எத்தனை கோடி சிந்தனைகள். நான் கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். எனது காவியம் ஒரு யுகத்தை பிரதிபலித்துக் காட்டும்.” – சங்கர்ஷணன்

விஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன். கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்தேன். கவிதைகள், தர்க்க விவாதங்கள் (இரண்டாம் பகுதி), பல பக்கங்களுக்கு நீளும் எண்ண ஓட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். படித்து முடித்த பின் ஒன்று தெரிந்தது. நான் படித்த மற்ற தமிழ் நாவல்கள் போல இது இல்லை. (கண்டிப்பாக டைம் பாஸ் நாவல் இல்லை). குழப்பமும் பிரமிப்பும் அடைந்தேன். (குழப்பம் ஏனென்றால், நாவல் எனக்கு புனைவு என்பதைத் தாண்டி, உண்மை என்று தோன்றியதால்.) பத்து வரிகளில், ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். சில மாதங்கள் கழித்து பதில் எழுதினார்.

ஒரு புதிய கலை வடிவுக்குள் ஒரு புதிய அறிவுத் துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒரு வருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக் கொண்ட பொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது. அதை விட அது போடக் கூடிய விரிவான கோலம். முன்னும் பின்னும் கதை பின்னிச் செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக் கொண்டு வாசித்தால் பெரிய விஷயம் அல்ல.

கடந்த ஒன்றரை வருடத்தில் அவர் எழுதிய பல நூல்களை ஒரு முறை படித்திருக்கிறேன். மீண்டும் பல முறை படிக்கவேண்டும். விஷ்ணுபுரத்தை இரண்டாம் முறை படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி ஆர்விக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பதிவு நாவலின் விமர்சனம் இல்லை. நாவலை மேலும் புரிந்து கொள்ள ஒரு முயற்சி. [இந்தப் பதிவை பல நாட்களாக, பல மனநிலைகளில் எழுதியதால், கட்டுரையின் நடை திடீரென்று தாவினால், சற்று பொறுத்தருள்க.]

நாவலை, இரண்டாவது முறை படிக்கும்பொழுது, பரபரப்பில்லாமல் பொறுமையாகப் படித்தேன். உணர்ச்சிகரத் தருணங்களை தவிர்த்துவிட்டேன் (லலிதாங்கி – வல்லாளன்), பல இடங்களில் குறிப்பெடுத்துக் கொண்டது, மிக வசதியாக இருந்தது. வழக்கமான பானியில், ‘கதை என்னனா?’, ‘அதாவது இவரு இன்னா சொல்ராருன்னா’ என்று மட்டும் ஆராயாமல், நாவலின் பல பரிணாமங்களை, எனக்குத் தெரிந்த அளவு, தொட்டுக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி விஷ்ணுபுரத்தை, கீழ்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறேன்.

  1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
  2. விஷ்ணுபுரம் – வரலாறு
  3. விஷ்ணுபுரம் – தத்துவம்
  4. விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு
  5. விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்
  6. விஷ்ணுபுரம் – மொழி
  7. விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்
  8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு
  9. விஷ்ணுபுரம் – முடிவுரை

விசுவின் பதிவுகளைப் பற்றி என் விமர்சனத்தை இங்கே எழுதி இருக்கிறேன்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

நண்பர் பாலாஜி வாங்கிய புத்தகங்கள்

புத்தகங்களை லிஸ்ட் போடுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. சிலிகன் ஷெல்ஃப் குழும உறுப்பினரான பாலாஜியும் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இந்தியா போயிருக்கிறார், புத்தகங்களை வாரிக்கொண்டு வந்திருக்கிறார்! புத்தகக் கண்காட்சி சமயத்திலேயே பதித்திருக்க வேண்டும், எப்படியோ கைதவறிவிட்டது.

  1. India after Gandhi – ராமச்சந்திர குஹா
  2. Following Fish – சமந்த் சுப்ரமணியம்
  3. River of Smoke – அமிதவ் கோஷ்
  4. Muddy Riverபி.ஏ. கிருஷ்ணன்
  5. துயில் – எஸ். ராமகிருஷ்ணன்
  6. சில இலக்கிய ஆளுமைகள் – வெங்கட் சாமிநாதன்
  7. இந்திரா பார்த்தசாரதி கதைகள்
  8. கந்தர்வகானம் (ஜிஎன்பி)லலிதாராம், வி. ராம்நாராயண்
  9. துருவ நட்சத்திரம்லலிதாராம்
  10. நம்பக் கூடாத கடவுள் – அரவிந்தன் நீலகண்டன்
  11. கம்யூனிசம் – அரவிந்தன் நீலகண்டன்
  12. சூடிய பூ சூடற்கநாஞ்சில்நாடன்
  13. பனுவல் போற்றுதும் – நாஞ்சில்நாடன்
  14. வாழ்விலே ஒரு முறை – ஜெயமோகன்
  15. இரவு – ஜெயமோகன்
  16. உலோகம் – ஜெயமோகன்
  17. அறம் – ஜெயமோகன்
  18. எக்சைல் – சாரு நிவேதிதா
  19. தேகம் – சாரு நிவேதிதா
  20. சரசம், சல்லாபம், சாமியார் – சாரு நிவேதிதா
  21. வெள்ளெருக்கு – கண்மணி குணசேகரன்
  22. கன்னி – ஜே. பிரான்சிஸ் க்ருபா
  23. ஓரிரு எண்ணங்கள் – சுஜாதா
  24. இரண்டாம் இடம் – எம்.டி. வாசுதேவன் நாயர்
  25. பாத்திமாவின் ஆடு – வைக்கம் முஹம்மது பஷீர்
  26. சப்தங்கள் – வைக்கம் முஹம்மது பஷீர்
  27. தவிப்பு – ஞானி
  28. அஞ்ஞாடி – பூமணி
  29. ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்ஜெயகாந்தன்
  30. சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்
  31. எம் தமிழர் செய்த படம் – தியோடோர் பாஸ்கரன்
  32. சித்திரம் பேசுதடி – தியோடோர் பாஸ்கரன்
  33. அடூர் கோபாலகிருஷ்ணன் – கௌதமன் பாஸ்கரன்
  34. மணிரத்னம், தலைகீழ் ரசவாதி – மகாதேவன்
  35. தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
2012 புத்தகக் கண்காட்சியில் அருணா

மயிலிராவணன் கதை

நவராத்திரி படம் பார்த்திருக்கலாம். அதில் ஒரு நாடகக் காட்சி வரும். “ஆஹா! பளபளா! இவள் இடையழகும் நடையழகும் உடையழகும் என் நெஞ்சை விட்டகலா நிற்கிறதே!” என்கிற மாதிரி நடையில் வசனம் பேசி நடிப்பார்கள். அனேகமாக சங்கரதாஸ் சுவாமிகள் மாதிரி யாராவது எழுதிய நாடக வசனமாக இருக்கும். கொஞ்சம் கதா காலட்சேபப் பாணியை நினைவுபடுத்தும், ஆனால் பிராமண வழக்கு இல்லாத நடை.

Mayiliravanan Kathaiசமீபத்தில் ஏறக்குறைய அதே மாதிரி நடையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் – “மயிலிராவணன் கதை” – இணையத்தில் கிடைத்தது. எழுதியவர் பெயர், எந்த வருஷம் வெளிவந்தது என்று தெரியவில்லை. B. ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் “பெரிய எழுத்து” பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். சில படங்களும் உண்டு. கொஞ்சம் தஞ்சாவூர் பாணியை நினைவுபடுத்தும் அந்த ஓவியப் பாணியை நான் பெரிய எழுத்து புத்தகங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

உண்மையில் மயில்ராவணன் தொன்மம் வெறும் சாகசக் கதை மட்டுமே. ஆனால் எனக்கு எப்போதுமே தொன்மங்களின் மீது கொஞ்சம் பித்து உண்டு. அதுவும் அந்த நடைக்கு ஒரு ஸ்பெஷல் charm இருக்கிறது. நான் ரசித்துப் படித்தேன்.

ராவணனின் ஒன்றுவிட்ட தம்பியும், மாயாவியும், பாதாள இலங்கையின் மன்னனுமான மயில்ராவணன் ஒரு இரவில் ராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி, கடத்திப் போய் காளிக்கு பலி கொடுக்க ஏற்பாடு செய்கிறான். மயில்ராவணனைக் கொல்வது எளிதல்ல, அவன் உயிர் ஐந்து வண்டுகளில் இருக்கிறது. ஹனுமான் பல வீர சாகசங்களை நிகழ்த்தி, அந்த வண்டுகளையும் மயில்ராவணனையும் கொன்று, ராம லட்சுமணர்களை மீட்பதுதான் கதை. இந்தத் தொன்மத்தில்தான் பிரம்மச்சாரியான ஹனுமான் தனக்கும் ஒரு மகன் – மச்சவல்லபன் – இருப்பதை அறிகிறார்.

தமிழ்நாட்டில்தான் மயில்ராவணன் என்று பெயர் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வெளியே அஹிராவணன். மச்ச்சவல்லபன் பெயரும் மகரத்வஜன் என்று மாறிவிடுகிறது. இருபது வருஷங்களுக்கு முன்னால் இதிகாசங்கள், புராணங்கள், எல்லாவற்றையும் என்னை விட ஒரு படி அதிகமாகவே கரைத்துக் குடித்திருந்த என் ஆந்திர நண்பன் முஹம்மது ஃபர்ஹாத் ஜாமாவிடம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போது ஒரே தொன்மத்தை வேறு வேறு பெயர்களுடன் இருவரும் அறிந்திருக்கிறோம் என்று தெரிந்த கணம் படுகுஷியாக இருந்தது. சரி முன்னூறு ராமாயணம் இருக்கிறது, பேர் மாற்றம் எல்லாம் ஒரு பெரிய விஷயமா?

என் மாதிரி தொன்மப் பித்தோ, இல்லை இந்த நடையில் விருப்பமோ இல்லாதவர்களுக்கு, இதெல்லாம் படிக்க லாயக்குப்படாது. நானோ புத்தகம் கிடைத்தால் வாங்கிவிடுவேன்.

தொடர்புள்ள சுட்டிகள்:
மயிலிராவணன் கதை – மின்னூல்

அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்”

ராமன் எத்தனை ராமனடி என்று ஒரு சினிமா உண்டு. சிவாஜி கணேசன்தான் ஹீரோ. அதில் நடுவில் ஒரு காட்சியில் கணேசன் மராத்திய சிவாஜியாக வந்து வீர வசனம் பேசுவார். அதைப் பார்த்த நாளிலிருந்தே “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” நாடகத்தைப் படிக்க வேண்டும் என்று ஆசை.

அண்ணாவின் நோக்கம் (எப்போதுமே) ரொம்ப சிம்பிளானது. ஜாதீய அடக்குமுறை எப்போதும் பிராமணர்களால் திட்டம் போட்டு திறமையாக நடத்தப்படும் சதிவேலை என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். நாடகம் அந்தப் பிரச்சார நோக்கத்துக்குப் பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.

அண்ணாவுக்கு கிடைத்த சிறு துரும்பு சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொள்ள விழைந்தபோது அவர் சூத்திரன் என்று சில எதிர்ப்புகள் கிளம்பியது என்ற தகவல். அவரை காகபட்டர் (நிஜ மனிதரா இல்லை அண்ணாவின் கற்பனையா? நிஜ மனிதர்) என்ற பிராமண குரு எப்படி எல்லாம் அலைக்கழித்தார், ஒவ்வொரு செயலிலும் பிராமணர்களின் “மேன்மையை” நிறுவுவதே அவர் குறிக்கோள், சிவாஜியும் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக சில “பகுத்தறிவாளர்களின்” அதிருப்தியை அலட்சியப்படுத்தி பட்டருக்கு தழைந்துபோனார் என்று நாடகக் கதை செல்கிறது. சந்திரமோகன் என்ற பகுத்தறிவாளனின், சிவாஜியின் விசுவாசமான துணைவனின் காதல் கதை ஒன்று சைடில். உண்மையில் சந்திரமோகன்தான் நாடகத்தின் கதாநாயகன். சிவாஜி முக்கியமான துணைப்பாத்திரம் மட்டுமே. நாடகத்தின் இன்னொரு பெயரே “சந்திரமோகன்”!

கதை எல்லாம் ஒன்றும் முக்கியமில்லை. சொல்லப் போனால் அண்ணாவின் எந்த நாடகத்திலும் கதையிலும் கதை முக்கியமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அவரது நோக்கம் பிரச்சாரம். நாடகம் நடத்தும்போது அனல் பறக்கும் வசனங்களைப் பேசி பிரச்சாரம் செய்ய முடியும் என்று அவர் உணர்ந்திருந்தார். காரசாரமான மேடைப் பேச்சை கதைச் சூழலுக்கு ஏற்ப மாற்றி பாத்திரங்களின் வாய் வழியே வெளிப்படுத்துகிறார், அவ்வளவுதான். அந்த நோக்கத்தை நன்றாகவே நிறைவேற்றி இருக்கிறார். ஆனால் நாடகம் என்ற முறையில் வெட்டி. இதைப் படிப்பவர்கள் ஒரு ஆவணம் என்றுதான் படிக்க வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் நாடகம் என்பது உயர்வு நவிற்சி அணி.

சிவாஜி கணேசன் மாதிரி யாராவது வசனம் பேசி நடித்தால் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் அண்ணாவே காகபட்டர் ரோலில் நடித்தாராம். 1945-இல் எழுதி இருக்கிறார். முதலில் எம்ஜிஆர்தான் சிவாஜி ரோலில் நடிக்க இருந்ததாகவும் அவர் எதோ சாக்குப்போக்கு சொல்லி மறுத்துவிட்டதால், அப்போது அண்ணா வீட்டில் இருந்த கணேசன் வசனங்களை ஒரே நாளில் மனப்பாடம் செய்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியதாகவும், அதனால்தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், நாடகத்தைப் பார்த்த ஈ.வெ. ராமசாமி கணேசனுக்கு “சிவாஜி” என்று பட்டம் கொடுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

படித்தது கொஞ்சம்தான். ஆனால் ஒரு எழுத்தாளராக அண்ணா கருணாநிதியை விட miles ahead என்று தோன்றுகிறது. கருணாநிதியில் படைப்புகளில் செயற்கைத்தன்மை மிக மிக அதிகமாக இருக்கிறது. நான் திராவிட இயக்கத்தினரின் படைப்புகளை அவ்வளவாகப் படித்ததில்லை, ஆனால் அண்ணா ஒருவர்தான் கொஞ்சமாவது பொருட்படுத்த வேண்டிய எழுத்தாளரோ என்று தோன்றுகிறது.

என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது. அதனால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

பிற்சேர்க்கை: பரீக்‌ஷா ஞானியின் மறுமொழிகளிலிருந்து கிடைத்த தகவல்கள்:

எங்கள் பரீக்‌ஷா நாடகக் குழுவின் சார்பில் தொண்ணூறுகளில் இந்த நாடகத்தை என் இயக்கத்தில் நடித்திருக்கிறோம். சென்னை நாரதகான சபா அரங்கில் நடித்தோம். அண்ணா நடித்த காகபட்டர் வேடத்தில் நான் நடித்தேன். சிவாஜி நடித்த சிவாஜி வேடத்தில் ஆறுமுகவேலு என்ற நண்பர் நடித்தார். இந்த நாடகம் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா நாடக விழாவில் கோவையிலும் நடிக்கப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்து கோவை எழுத்தாளர் விமலா ரமணி சுபமங்களாவை நடத்தி வந்த ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். கோமல் அதற்கு விளக்கம் அளித்தார். இந்த நாடக அனுபவம் பற்றி நான் நடத்திய தீம்தரிகிட இதழில் ஒரு தனிக்கட்டுரை எழுதியிருக்கிறேன். என்னிடம் ஸ்கேன் வசதி இல்லாததால் அதை எடுத்து வெளியிட முடியவில்லை.

ராமன் எத்தனை ராமனடி வீடியோவில் முதலில் சிவாஜியிடம் வந்து அவர் முடி சூட்டிக் கொள்ள எதிர்ப்பு இருப்பதைத் தெரிவிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு முக்கியமானவர். அவர் பெயர் எஸ்.ஏ.கண்ணன். அவரும் சிவாஜி கணேசனும் பத்து வயதுச் சிறுவர்களாக இருந்தபோது ஒரே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கியவர்கள். பராசக்தி படத்திலும் கோர்ட் சீனில் கண்ணன் ஒரு வக்கீலாகத் தோன்றி “உனக்கேன் அவ்வளவு அக்கறை ?” என்று கேட்பார். சிவாஜி தனக்கென்று சொந்தமாக ஒரு நாடக மன்றம் தொடங்கியபோது அதன் இயக்குநராகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் கண்ணன். வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப் பதக்கம் ஆகியவற்றையெல்லாம் நாடகங்களாக இயக்கியவர் அவர்தான். அண்மையில் காலமானார். அதற்கு சில மாதம் முன்பு அவரை நானும் ராஜன் குறையும் எடுத்த பேட்டி காட்சிப்பிழை திரை விமர்சன இதழில் வெளியாகியிருக்கிறது. 19989-90ல் நான் இயக்கித் தயாரித்த் தொலைக்காட்சித் தொடரான ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’ படத்தில் கண்ணன் ‘குப்புக்கிழவன்’ என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த தொடர், மறைந்த அறந்தை நாராயணன் எழுதிய ‘வாரந்தோறும் வயசாகிறது’ என்ற நாவலின் திரைவடிவம்.

காகபட்டர் நிஜ மனிதர். காசியைச் சேர்ந்தவர். சிவாஜி சூத்திரன், ஷத்திரியன் அல்ல என்பதால் முடி சூட்டிக் கொள்ளும் தகுதி இல்லை என்று சித்பவன் பிராமணர்கள் சொன்னதும் சிவாஜியின் தூதர்கள் காசிக்குச் சென்று அங்கே செல்வாக்குள்ள பண்டிதரான காகபட்டரிடம் உதவி கேட்கிறர்கள். அவர் ஒரு ஹோமம் நடத்தி சிவாஜியை ஷத்திரியனாக்கி முடி சூட்ட வழி இருப்பதாக சொல்லி அதன்படியே மராட்டியத்துக்கு வந்து முடிசூட்டி வைக்கிறார். இது சரித்திரத்தில் நடந்தது. இது பற்றி டாக்டர் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். காகபட்டரை முற்போக்கான பிராமணராக வியாக்யானம் செய்யும் சரித்திர ஆசிரியர்களும் உண்டு. அம்பேத்கர் காகபட்டரை முற்போக்காளராக பார்க்கவில்லை. சித்பவன் பிராமணர்களின் பிடிவாதம் அவர்களுக்கே எதிரானது ஆகிவிடும். சிவாஜிக்கு பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதால் அவன் எப்படியும் மன்னனாகிவிடுவான். அதைத் தடுத்த பிராமணர்கள் அரசு ஆதரவை இழப்பார்கள். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து அரசில் பிராமண செல்வாககை தக்க வைப்பதற்காக காகபட்டர் சூழ்ச்சி செய்து சிவாஜிக்கு முடிசூட்ட முன்வந்தார் என்பதே அம்பேத்கரின் கருத்து. அண்ணா அதைப் பின்பற்றியே தன் நாடகத்தை எழுதினார்.

இதே பதிவிலேயே வேறு சில படைப்புகளைப் பற்றி இரண்டு வரி எழுதிவிடுகிறேன். நீதிதேவன் மயக்கம் என்ற நாடகம், குமரிக் கோட்டம் என்று குறுநாவல். அதற்கெல்லாம் தனிப்பதிவு என்றால் தாங்காது. நீ. மயக்கம் நாடகத்தில் ராவணன் தன் கேசை எமன் முன்னால் வாதிடுகிறான். இதை வைத்து “கடவுள்கள்”, தேவர்கள் செய்த அநீதிகளை எடுத்துச் சொல்லி வாங்கு வாங்கென்று வாங்குகிறார். குமரிக் கோட்டம் குறுநாவலில் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பும் மகனை வீட்டை விட்டு விரட்டிவிடும் அப்பா இன்னொரு கீழ்ஜாதிப் பெண்ணிடம் மயங்குகிறார், அதனால் திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். அந்தக் காலத்து திராவிட இயக்கத்தினர் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று தவிர்த்துவிடுவது ஓடிவிடுவது பெட்டர்.

அண்ணாவின் (அனேகமாக) எல்லா படைப்புகளும் – கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் – “அண்ணாவின் படைப்புகள்” தளத்தில் கிடைக்கின்றன. ராமலிங்கம் என்ற தஞ்சாவூர்க்காரர் தொகுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்!

தொடர்புடைய சுட்டிகள்:
சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” – மின்னூல்
நீதிதேவன் மயக்கம்” – மின்னூல்
அண்ணாவின் படைப்புகள்” தளம்

அண்ணாவின் “கம்பரசம்”
அண்ணாவின் “வேலைக்காரி
அண்ணாவின் படைப்புகள் பதிவு
கருணாநிதியின் படைப்புலகம்

மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?

கிருத்திகாவின் “வாசவேஸ்வரம்”

வெகு நாளாகப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம். சான் ஹோசே நூலகத்தில் கிடைத்தது.

கதை நாற்பதுகளில் நடப்பது போலத் தெரிகிறது. சின்ன கிராமம். கதையின் தளம் பிராமணக் குடியிருப்பு. முறை, சம்பிரதாயம் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் முறை தவறிய காமம்தான் மனிதர்களை செலுத்தும் முக்கியமான சக்தியாக இருக்கிறது. காலட்சேபம் செய்பவருக்கு தொடுப்பு. டாக்டர் சுந்தாவுக்கு சுப்பையா மனைவி விச்சுவோடு உறவு. சுப்பையாவுக்கு சந்திரசேகரய்யர்தான் போட்டியாளர், விச்சு அவரை விரும்புகிறாள் என்று சுப்பையா நினைக்கிறான். சந்திரசேகரய்யரோ மனைவி ரோகிணியோடு ஒரு ஈகோ போராட்டத்தில். ரோகிணிக்கு பிச்சாண்டி மேல் ஈர்ப்பு. சுந்தாவின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை கோமு மீது ஊர்ப் பெரிய மனிதர் பெரிய பாட்டாவின் மகன் ரங்கனுக்கு ஒரு கண். காமம்தான் கிராமத்தின் முக்கிய சக்தியாக இருக்கிறது.

அடுத்தபடி சின்னச் சின்ன ஈகோ மோதல்கள். பிச்சாண்டிதான் ஊரின் rebel. கம்யூனிசம் அது இது என்று பேசிக் கொண்டிருக்கிறான். தேர்தலுக்கு வேறு நிற்கப் போகிறான். நடுவில் விருந்துக்கு முறைப்படி அழைக்கவில்லை என்று சண்டைகள் வேறு. அப்படியே கதை நீண்டு ஒரு கொலை வழியாக முடிகிறது.

ஒரு சின்ன வட்டத்துக்குள் தேங்கிக் கிடக்கும் கிராமத்தை மிக அருமையாக சித்தரிக்கிறார். எனக்கு என் தாத்தா வீடு இருந்த நீண்ட அக்ரஹாரத் தெரு நினைவு வந்தது. சமையல், சாப்பாடு, சீட்டாட்டம் தவிர வேறு எதுவும் எனக்கு என் சிறு வயதில் தெரியவில்லை. காமம் நிச்சயமாக இருந்திருக்கும் என்று இப்போது தெரிகிறது.

காமம் எப்படி எல்லாம் அலைக்கழிக்கிறது என்பதும் அருமையாக வந்திருக்கிறது. ரோகிணிக்கும் சந்திரசேகரய்யருக்கும் நடுவில் நடக்கும் மோதல், சுப்பையா வீட்டில் விருந்துக்கு முறைப்படி அழைக்கவில்லை என்று டாக்டர் சுந்தா போடும் சண்டை எல்லாம் பிரமாதம்.

கம்யூனிசமே எட்டிப் பார்க்கும் கிராமத்தில் யாரும் காந்தியைப் பற்றி மூச்சு விடாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காந்தி பேரை வைத்து ஜல்லி அடிக்கும் ஒரு பாத்திரத்தையாவது உருவாக்கி இருந்தால் நாவலின் நம்பகத்தன்மை இன்னும் அதிகரித்திரிருக்கும். (இப்போது ஒன்றும் குறைவாக இல்லை)

ஜெயமோகன்

ஆன்மா தேங்கிப்போய் தீனி காமம் என புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால் சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே

என்று இந்த நாவலைப் பற்றி எழுதி இருந்தார். அவர் கருத்து எனக்கு இசைவானதல்ல. சித்தரிப்பு மட்டுமே போதுமானது என்ற ஸ்கூலைச் சேர்ந்தவன் நான். இந்த நாவல் சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதைக் கூட நான் ஏற்கமாட்டேன். அப்படி புலன் சுவைகளில் ஒரு கூட்டமே முழுகிப் போவது சாத்தியம் என்பதே இந்த நாவலின் தரிசனம். அதற்கு மேலும் வாழ்க்கை உண்டு, வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு என்பதை மறந்துவிடுவது சாத்தியமே என்பதே இந்த நாவல் காட்டும் தரிசனம். அந்த சூழலைத் தாண்டும் கோட்டிகள் நம் கண்ணுக்கு கோட்டிகளாகத் தெரிகிறார்கள் என்பதே நம் பலவீனம்.

1966-இல் வெளிவந்த புத்தகம். வாசகர் வட்டம் பதிப்பா? 2007-இல் காலச்சுவடு மீண்டும் வெளியிட்டிருக்கிறது. விலை 140 ரூபாய். கிடைத்தால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குங்கள். ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டிலும் எஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டிலும் இடம் பெறுகிறது.

தமிழ் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிருத்திகா பக்கம்

தொடர்புடைய சுட்டி: கிருத்திகா மறைந்தபோது ஜெயமோகன் எழுதிய அஞ்சலி