ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய “ராஜாம்பாள்”

ராஜாம்பாளைப் பற்றி நான் கேள்விப்பட்டது கல்கி மூலம்தான். கல்கியின் சிறு வயதில் இந்தப் புத்தகம் கிடைக்க, அவர் இரவெல்லாம் கண் விழித்துப் படித்தாராம். அதைப் பற்றி மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். க.நா.சு.வும் இந்தப் புத்தகத்தை சிலாகித்து எங்கேயோ எழுதி இருக்கிறார்.

ஆனால் புத்தகம் ஒன்றும் பிரமாதம் இல்லை. இலக்கியமா இல்லையா என்றெல்லாம் நான் குறை சொல்லவில்லை, நல்ல பொழுதுபோக்கு புத்தகம் கூட இல்லை. முன்னோடி பொழுதுபோக்கு புத்தகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காலாவதி ஆகிவிட்ட புத்தகம். ஹீரோ பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு ஒரே நேரத்தில் எழுபது பேரை அடிக்கும், துப்பாக்கி குண்டை பல்லில் பிடித்து துப்பும் சினிமா மட்டுமே பார்ப்பவர்கள் கூட யூகிக்கக் கூடிய மர்மம்தான்.

பிறகு கல்கி, க.நா.சு. போன்ற ஜாம்பவான்கள் மனதில் இந்தப் புத்தகம் எப்படி இடம் பிடித்தது? இது எல்லாருக்குமே நடக்கக் கூடியதுதான் என்று தோன்றுகிறது. சிறு வயதில் வாசிப்பின் சாத்தியங்களை காட்டக் கூடிய முதல் சில புத்தகங்கள் நம் மனதில் ஒரு ஸ்பெஷலான இடத்தை எடுத்துக் கொள்கின்றன. வளர்ந்த பிறகு அதில் ஒன்றுமில்லை என்று தெரிந்தாலும் அவை நமக்கு ஸ்பெஷல்தான். எனக்கு இரும்புக் கை மாயாவி, அலிஸ்டர் மக்ளீன் போன்றவர்கள் அப்படித்தான். இன்றுள்ள விமர்சகர்களில் நான் முதல் இடத்தைக் கொடுக்கும் ஜெயமோகன் சிறந்த தமிழ் “வணிக நாவல்கள்” என்று தேர்ந்தெடுத்திருக்கும் புத்தகங்கள் எனக்கு பல தடவை வெட்டியாகத் தெரிகின்றன. அனேகமாக அவர் சின்ன வயதில் படித்தவையாக இருக்கும். 🙂

இன்றும் நான் ரசித்துப் படித்தது ரங்கராஜுவின் நடை. வெகு சரளமான நடை. புத்தகம் போரடிக்காமல் காப்பாற்றுவது அந்த நடைதான்.

ராஜாம்பாளும் கோபாலனும் காதலிக்கிறார்கள். ராஜாம்பாளுக்கு வயது என்ன? பதிமூன்றுதான். 🙂 அவள் நம்ம ஊர் ஜூலியட் போலிருக்கிறது. (ஜூலியட்டுக்கு வயது பனிரண்டு என்று கேள்வி.) ராஜாம்பாளின் பணக்கார அப்பாவும் இந்தக் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார். “கெட்ட நடத்தை” உள்ள தாய்மாமன் நடேசன், மற்றும் உள்ளூர் நீதிபதி வயதான கிழவர் ஒருவர் இரண்டு பேருக்கும் ராஜாம்பாள் மீது ஆசை. கிழவர் சூழ்ச்சியால் ராஜாம்பாளை அவருக்கே மணமுடித்துக் கொடுப்பதாக அப்பா வாக்களித்துவிடுகிறார். கலயாணத்துக்கு முந்தைய நாள் ராஜாம்பாளின் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்ட பிணம் கிடைக்கிறது. என்ன மர்மம் என்று துப்பறியும் கோவிந்தன் கண்டுபிடிக்கிறார். திடுக்கிடும் திருப்பத்தோடு கதை முடிகிறது.

படிக்க விரும்புபவர்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

ராஜாம்பாள் இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. 1935-இல் ஒரு முறை, 1951-இல் ஒரு முறை. ஆர்.எஸ். மனோகர் 1951 திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர்தான் ஹீரோ கோபாலன். ராஜாம்பாளாக யாரோ பி.கே. சரஸ்வதி என்பவர் நடித்திருக்கிறார். நடேசனாக வீணை எஸ். பாலச்சந்தரும், துப்பறியும் கோவிந்தனாக சாரங்கபாணியும் நடித்திருக்கிறார்கள்.

ராஜாம்பாள் தவிர இவர் எழுதிய மோகனசுந்தரம் (டி.ஆர். மகாலிங்கம் நடித்தது), சந்திரகாந்தா ஆகியவையும் திரைப்படமாக வந்திருக்கின்றன. சவுக்கடி சந்திரகாந்தா அந்த காலத்தில் புகழ் பெற்ற திரைப்படம். காளி என். ரத்னம் போலி சாமியாராக வருவார் போலிருக்கிறது. சாமிகள் யோகத்தில் இருக்கிறார் என்றால் சிஷ்ய கோடிகள் புரிந்துகொண்ட அந்த பக்கம் போக மாட்டார்களாம்.

இவரது புகைப்படம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன், தென்படவில்லை. யாரிடமாவது இருந்தால் சுட்டி கொடுங்கள் இல்லை அனுப்புங்கள்.

தமிழில் நாவல்கள் எப்படி வளர்ந்தன என்று புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். இலக்கியம் மட்டும்தான் படிப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் தவிர்த்துவிடலாம். நான் அப்படி எந்தக் கங்கணமும் கட்டிக் கொள்ளாததால் புத்தகம் கிடைத்தால் வாங்கிவிடுவேன்.

தொடர்புள்ள சுட்டிகள்:
மின்னூல்
1951 திரைப்படம் பற்றி ராண்டார்கை
ஜே.ஆர். ரங்கராஜு பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில்

அனுபந்தம்

ஜே.ஆர். ரங்கராஜுவின் புத்தகங்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. அப்போது இப்படி கவுரவிக்கப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றி மறைந்த சேதுராமன் எங்கள் இன்னொரு தளமான கூட்டாஞ்சோறில் நிறைய எழுதினார். வசதிக்காக அந்தப் பதிவில் இருந்து விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

ரங்கராஜு 1875-இல் பிறந்து 1956-இல் மறைந்தாராம்.

க.நா.சுப்ரமண்யம் தன்னுடைய இலக்கிய சாதனையாளர்கள் கட்டுரைகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:

இருபதுகளில் ஒரு தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் இருவரென்று ஜே. ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தாரென்றும், இவர்களிருவரும் தங்களையறியாமலேயே காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

ஜே.ஆர்.ஆரின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை வெளி வந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு மொத்தம் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு பத்து பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது வாசகர்கள் மிகவும் பரபரப்பாக வாங்கிப் படித்தனர்.

வரதராஜன் என்ற நாவல் இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. அந்த நாவலின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என்ற ஒரு வழக்குப் பதிவான பின், மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அவருக்குத் தண்டனை விதிக்கப் பட்டதாக எண்ணுகின்றேன்.

ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. நாற்பதுகளின் ஆரம்பத்தில் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும் (அவர் வைஷ்ணவ நாயுடு என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார்.

*** (இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம்)

இவரது துப்பறியும் நிபுணர் கோவிந்தன் – ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் அவதாரம் என்று கூறப்பட்டார். இவரது படைப்பான ராஜாம்பாள் இருபத்தாறு வருஷங்களில் இருபத்தாறு பதிப்புகள் வெளி வந்தன என்று தெரிகிறது. இன்னோர் நாவலான சந்திரகாந்தா 1936ல் தன்னுடைய ஆறாவது பதிப்பை எட்டியது. (சிசிர் குமார் தாஸ் எழுதிய இந்திய இலக்கியச் சரித்திரம் – சாஹித்திய அகாடெமி பிரசுரம்)

(கொசுறு – இவரது ராஜாம்பாள் சினிமாவாக எடுக்கப் பட்டது. ஆர்.எஸ். லக்ஷ்மிநரசிம்மன் என்கிற மனோஹர் சினிமா உலகப் பிரவேசம் அதில்தான். மனோஹர் அப்போது தோட்டக்கார விஸ்வனாதனின் நடராஜா அமெச்சூர்ஸ் என்ற குழுவிலும், ஒய்.எம்.ஐ.ஏ. ஃபைன் ஆர்ட்ஸ் குழுவிலும் நடித்துக் கொண்டிருந்தார் – ஒரு நாடகத்தைப் பற்றி நான் (அதாவது சேதுராமன்) ஃப்ரீ இந்தியா, நாரதர் பத்திரிகைகளில் எழுதிய விமர்சனம் டி.ஆர். சுந்தரம் கண்களில் பட்டு, ஃப்ரீ இந்தியா கோவிந்தன் மூலம் மனோஹரும், கல்யாணம் என்பவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு அழைக்கப்பட்டனர். மனோஹருக்கு ராஜாம்பாள் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது பின்னர்.)

ஜே.ஆர்.ரங்கராஜு – படைப்புகள்

  1. இராஜாம்பாள் (1906 – கடைசிப் பதிப்பு 1955 – எவ்வளவு பதிப்புகள் என்று தெரியவில்லை)
  2. மோகனசுந்தரம் (1911)
  3. ஆனந்த கிருஷ்ணன் (1921 – 15)
  4. வரதராஜன் (1925)
  5. சந்திரகாந்தா ( ? -1936 -6 )
  6. ராஜேந்திரன் ( ? 1956 – 13)
  7. பத்மராஜு
  8. ஜெயரங்கன்

முதற்பதிப்பு வெளியான வருஷமும் மொத்தப் பதிப்புகளும் அடைப்புக் குறிக்குள் உள்ளன. கடைசி இரண்டு நாவல்கள் விவரங்கள் தெரியவில்லை.

2 thoughts on “ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய “ராஜாம்பாள்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.