ராமன் எத்தனை ராமனடி என்று ஒரு சினிமா உண்டு. சிவாஜி கணேசன்தான் ஹீரோ. அதில் நடுவில் ஒரு காட்சியில் கணேசன் மராத்திய சிவாஜியாக வந்து வீர வசனம் பேசுவார். அதைப் பார்த்த நாளிலிருந்தே “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” நாடகத்தைப் படிக்க வேண்டும் என்று ஆசை.
அண்ணாவின் நோக்கம் (எப்போதுமே) ரொம்ப சிம்பிளானது. ஜாதீய அடக்குமுறை எப்போதும் பிராமணர்களால் திட்டம் போட்டு திறமையாக நடத்தப்படும் சதிவேலை என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். நாடகம் அந்தப் பிரச்சார நோக்கத்துக்குப் பொருத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
அண்ணாவுக்கு கிடைத்த சிறு துரும்பு சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொள்ள விழைந்தபோது அவர் சூத்திரன் என்று சில எதிர்ப்புகள் கிளம்பியது என்ற தகவல். அவரை காகபட்டர் (
நிஜ மனிதரா இல்லை அண்ணாவின் கற்பனையா? நிஜ மனிதர்) என்ற பிராமண குரு எப்படி எல்லாம் அலைக்கழித்தார், ஒவ்வொரு செயலிலும் பிராமணர்களின் “மேன்மையை” நிறுவுவதே அவர் குறிக்கோள், சிவாஜியும் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக சில “பகுத்தறிவாளர்களின்” அதிருப்தியை அலட்சியப்படுத்தி பட்டருக்கு தழைந்துபோனார் என்று நாடகக் கதை செல்கிறது. சந்திரமோகன் என்ற பகுத்தறிவாளனின், சிவாஜியின் விசுவாசமான துணைவனின் காதல் கதை ஒன்று சைடில். உண்மையில் சந்திரமோகன்தான் நாடகத்தின் கதாநாயகன். சிவாஜி முக்கியமான துணைப்பாத்திரம் மட்டுமே. நாடகத்தின் இன்னொரு பெயரே “சந்திரமோகன்”!
கதை எல்லாம் ஒன்றும் முக்கியமில்லை. சொல்லப் போனால் அண்ணாவின் எந்த நாடகத்திலும் கதையிலும் கதை முக்கியமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அவரது நோக்கம் பிரச்சாரம். நாடகம் நடத்தும்போது அனல் பறக்கும் வசனங்களைப் பேசி பிரச்சாரம் செய்ய முடியும் என்று அவர் உணர்ந்திருந்தார். காரசாரமான மேடைப் பேச்சை கதைச் சூழலுக்கு ஏற்ப மாற்றி பாத்திரங்களின் வாய் வழியே வெளிப்படுத்துகிறார், அவ்வளவுதான். அந்த நோக்கத்தை நன்றாகவே நிறைவேற்றி இருக்கிறார். ஆனால் நாடகம் என்ற முறையில் வெட்டி. இதைப் படிப்பவர்கள் ஒரு ஆவணம் என்றுதான் படிக்க வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் நாடகம் என்பது உயர்வு நவிற்சி அணி.
சிவாஜி கணேசன் மாதிரி யாராவது வசனம் பேசி நடித்தால் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் அண்ணாவே காகபட்டர் ரோலில் நடித்தாராம். 1945-இல் எழுதி இருக்கிறார். முதலில் எம்ஜிஆர்தான் சிவாஜி ரோலில் நடிக்க இருந்ததாகவும் அவர் எதோ சாக்குப்போக்கு சொல்லி மறுத்துவிட்டதால், அப்போது அண்ணா வீட்டில் இருந்த கணேசன் வசனங்களை ஒரே நாளில் மனப்பாடம் செய்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியதாகவும், அதனால்தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், நாடகத்தைப் பார்த்த ஈ.வெ. ராமசாமி கணேசனுக்கு “சிவாஜி” என்று பட்டம் கொடுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
படித்தது கொஞ்சம்தான். ஆனால் ஒரு எழுத்தாளராக அண்ணா கருணாநிதியை விட miles ahead என்று தோன்றுகிறது. கருணாநிதியில் படைப்புகளில் செயற்கைத்தன்மை மிக மிக அதிகமாக இருக்கிறது. நான் திராவிட இயக்கத்தினரின் படைப்புகளை அவ்வளவாகப் படித்ததில்லை, ஆனால் அண்ணா ஒருவர்தான் கொஞ்சமாவது பொருட்படுத்த வேண்டிய எழுத்தாளரோ என்று தோன்றுகிறது.
என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது. அதனால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
பிற்சேர்க்கை: பரீக்ஷா ஞானியின் மறுமொழிகளிலிருந்து கிடைத்த தகவல்கள்:
எங்கள் பரீக்ஷா நாடகக் குழுவின் சார்பில் தொண்ணூறுகளில் இந்த நாடகத்தை என் இயக்கத்தில் நடித்திருக்கிறோம். சென்னை நாரதகான சபா அரங்கில் நடித்தோம். அண்ணா நடித்த காகபட்டர் வேடத்தில் நான் நடித்தேன். சிவாஜி நடித்த சிவாஜி வேடத்தில் ஆறுமுகவேலு என்ற நண்பர் நடித்தார். இந்த நாடகம் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா நாடக விழாவில் கோவையிலும் நடிக்கப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்து கோவை எழுத்தாளர் விமலா ரமணி சுபமங்களாவை நடத்தி வந்த ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். கோமல் அதற்கு விளக்கம் அளித்தார். இந்த நாடக அனுபவம் பற்றி நான் நடத்திய தீம்தரிகிட இதழில் ஒரு தனிக்கட்டுரை எழுதியிருக்கிறேன். என்னிடம் ஸ்கேன் வசதி இல்லாததால் அதை எடுத்து வெளியிட முடியவில்லை.
ராமன் எத்தனை ராமனடி வீடியோவில் முதலில் சிவாஜியிடம் வந்து அவர் முடி சூட்டிக் கொள்ள எதிர்ப்பு இருப்பதைத் தெரிவிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு முக்கியமானவர். அவர் பெயர் எஸ்.ஏ.கண்ணன். அவரும் சிவாஜி கணேசனும் பத்து வயதுச் சிறுவர்களாக இருந்தபோது ஒரே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கியவர்கள். பராசக்தி படத்திலும் கோர்ட் சீனில் கண்ணன் ஒரு வக்கீலாகத் தோன்றி “உனக்கேன் அவ்வளவு அக்கறை ?” என்று கேட்பார். சிவாஜி தனக்கென்று சொந்தமாக ஒரு நாடக மன்றம் தொடங்கியபோது அதன் இயக்குநராகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் கண்ணன். வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப் பதக்கம் ஆகியவற்றையெல்லாம் நாடகங்களாக இயக்கியவர் அவர்தான். அண்மையில் காலமானார். அதற்கு சில மாதம் முன்பு அவரை நானும் ராஜன் குறையும் எடுத்த பேட்டி காட்சிப்பிழை திரை விமர்சன இதழில் வெளியாகியிருக்கிறது. 19989-90ல் நான் இயக்கித் தயாரித்த் தொலைக்காட்சித் தொடரான ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’ படத்தில் கண்ணன் ‘குப்புக்கிழவன்’ என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த தொடர், மறைந்த அறந்தை நாராயணன் எழுதிய ‘வாரந்தோறும் வயசாகிறது’ என்ற நாவலின் திரைவடிவம்.
காகபட்டர் நிஜ மனிதர். காசியைச் சேர்ந்தவர். சிவாஜி சூத்திரன், ஷத்திரியன் அல்ல என்பதால் முடி சூட்டிக் கொள்ளும் தகுதி இல்லை என்று சித்பவன் பிராமணர்கள் சொன்னதும் சிவாஜியின் தூதர்கள் காசிக்குச் சென்று அங்கே செல்வாக்குள்ள பண்டிதரான காகபட்டரிடம் உதவி கேட்கிறர்கள். அவர் ஒரு ஹோமம் நடத்தி சிவாஜியை ஷத்திரியனாக்கி முடி சூட்ட வழி இருப்பதாக சொல்லி அதன்படியே மராட்டியத்துக்கு வந்து முடிசூட்டி வைக்கிறார். இது சரித்திரத்தில் நடந்தது. இது பற்றி டாக்டர் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். காகபட்டரை முற்போக்கான பிராமணராக வியாக்யானம் செய்யும் சரித்திர ஆசிரியர்களும் உண்டு. அம்பேத்கர் காகபட்டரை முற்போக்காளராக பார்க்கவில்லை. சித்பவன் பிராமணர்களின் பிடிவாதம் அவர்களுக்கே எதிரானது ஆகிவிடும். சிவாஜிக்கு பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதால் அவன் எப்படியும் மன்னனாகிவிடுவான். அதைத் தடுத்த பிராமணர்கள் அரசு ஆதரவை இழப்பார்கள். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து அரசில் பிராமண செல்வாககை தக்க வைப்பதற்காக காகபட்டர் சூழ்ச்சி செய்து சிவாஜிக்கு முடிசூட்ட முன்வந்தார் என்பதே அம்பேத்கரின் கருத்து. அண்ணா அதைப் பின்பற்றியே தன் நாடகத்தை எழுதினார்.
இதே பதிவிலேயே வேறு சில படைப்புகளைப் பற்றி இரண்டு வரி எழுதிவிடுகிறேன். நீதிதேவன் மயக்கம் என்ற நாடகம், குமரிக் கோட்டம் என்று குறுநாவல். அதற்கெல்லாம் தனிப்பதிவு என்றால் தாங்காது. நீ. மயக்கம் நாடகத்தில் ராவணன் தன் கேசை எமன் முன்னால் வாதிடுகிறான். இதை வைத்து “கடவுள்கள்”, தேவர்கள் செய்த அநீதிகளை எடுத்துச் சொல்லி வாங்கு வாங்கென்று வாங்குகிறார். குமரிக் கோட்டம் குறுநாவலில் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பும் மகனை வீட்டை விட்டு விரட்டிவிடும் அப்பா இன்னொரு கீழ்ஜாதிப் பெண்ணிடம் மயங்குகிறார், அதனால் திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். அந்தக் காலத்து திராவிட இயக்கத்தினர் விரும்பிப் படித்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று தவிர்த்துவிடுவது ஓடிவிடுவது பெட்டர்.
அண்ணாவின் (அனேகமாக) எல்லா படைப்புகளும் – கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் – “அண்ணாவின் படைப்புகள்” தளத்தில் கிடைக்கின்றன. ராமலிங்கம் என்ற தஞ்சாவூர்க்காரர் தொகுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்!
தொடர்புடைய சுட்டிகள்:
“சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” – மின்னூல்
“நீதிதேவன் மயக்கம்” – மின்னூல்
“அண்ணாவின் படைப்புகள்” தளம்
அண்ணாவின் “கம்பரசம்”
அண்ணாவின் “வேலைக்காரி”
அண்ணாவின் படைப்புகள் பதிவு
கருணாநிதியின் படைப்புலகம்
மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?“
எங்கள் பரீக்ஷா நாடகக்குழுவின் சார்பில் தொண்ணூறுகளில் இந்த நாடகத்தை என் இயக்கத்தில் நடித்திருக்கிறோம். சென்னை நாரதகான சபா அரங்கில் நடித்தோம். அண்ணா நடித்த காகபட்டர் வேடத்தில் நான் நடித்தேன். சிவாஜி நடித்த சிவாஜி வேடத்தில் ஆறுமுகவேலு என்ற நண்பர் நடித்தார். இந்த நாடகம் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா நாடகவிழவில் கோவையிலும் நடிக்கப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்து கோவை எழுத்தாளர் விமலா ரமணி சுபமங்களாவை நடத்திவந்த ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார்.கோமல் அதற்கு விளக்கம் அளித்தார். இந்த நாடக அனுபவம் பற்றி நான் நடத்திய தீம்தரிகிட இதழில் ஒரு தனிக்கட்டுரை எழுதியிருக்கிறேன். என்னிடம் ஸ்கேன் வசதி இல்லாததால் அதை எடுத்து வெளியிடமுடியவில்லை. அன்புடன் ஞாநி
LikeLike
இங்கே நீங்கள் கொடுத்திருக்கும் வீடியோவில் முதலில் சிவாஜியிடம் வந்து அவர் முடி சூட்டிக் கொள்ள எதிர்ப்பு இருப்பதைத் தெரிவிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒரு முக்கியமானவர். அவர் பெயர் எஸ்.ஏ.கண்ணன். அவரும் சிவாஜிகணேசனும் பத்து வயதுச் சிறுவர்களாக இருந்தபோது ஒரே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கியவர்கள். பராசக்தி படத்திலும் கோர்ட் சீனில் கண்ணன் ஒரு வக்கீலாகத்தோன்றி “உனக்கேன் அவ்வளவு அக்கறை ?” என்று கேட்பார். சிவாஜி தனக்கென்று சொந்தமாக ஒரு நாடகமன்றம் தொடங்கியபோது அதன் இயக்குநராகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் கண்ணன். வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் ஆகியவற்றையெல்லாம் நாடகங்களாக இயக்கியவர் அவர்தான். அண்மையில் காலமானார். அதற்கு சில மாதம் முன்பு அவரை நானும் ராஜன் குறையும் எடுத்த பேட்டி காட்சிப்பிழை திரை விமர்சன இதழில் வெளியாகியிருக்கிறது. 19989-90ல் நான் இயக்கித்த்யாரித்த் தொலைக்காட்சித்தொடரான ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’ படத்தில் கண்ணன் ‘குப்புக்கிழவன்’ என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த தொடர், மறைந்த அறந்தை நாராயனன் எழுதிய ‘வாரந்தோறும் வயசாகிறது’ என்ற நாவலின் திரைவடிவம். அன்புடன் ஞாநி
LikeLike
காகபட்டர் நிஜ மனிதரா, கற்பனையா என்று கேட்டிருக்கிறீர்கள். அவர் நிஜ மனிதர். காசியைச் சேர்ந்தவர். சிவாஜி சூத்திரன் , ஷத்திரியன் அல்ல என்பதால் முடி சூட்டிக் கொள்ளும் தகுதி இல்லை என்று சித்பவன் பிராமணர்கள் சொன்னதும் சிவாஜியின் தூதர்கள் காசிக்குச் சென்று அங்கே செல்வாக்குள்ல பண்டிதரான காகபட்டரிடம் உதவி கேட்கிறர்கள். அவர் ஒரு ஹோமம் நடத்தி சிவாஜியை ஷத்திரியனாக்கி முடி சூட்ட வழி இருப்பதாக சொல்லி அதன்படியே மராட்டியத்துக்கு வந்து முடி சூட்டி வைக்கிறார். இது சரித்திரத்தில் நடந்தது. இது பற்றி டாக்டர் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். காகபட்டரை முற்போக்கான் பிராமணனராக வியாக்யானம் செய்யும் சரித்திர ஆசிரியர்களும் உண்டு. அம்பேத்கர் காகபட்டரை முற்போக்காளராக பார்க்கவில்லை. சித்பவன் பிராமணர்களின் பிடிவாதம் அவர்களுக்கே எதிரானதுஆகிவிடும். சிவாஜிக்கு பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதால் அவன் எப்படியும் மன்னன்னாகிவிடுவான். அதைத்தடுத்த பிராமணர்கள் அரசு ஆதரவை இழப்பார்கள். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து அரசில் பிராமண செல்வாககை தக்கவைப்பதற்காக காகபட்டர் சூழ்ச்சி செய்து சிவாஜிக்கு முடி சூட்ட முன்வந்தார் என்பதே அம்பேத்கரின் கருத்து. அண்ணா அதைப் பின்பற்றியே தன் நாடகத்தை எழுதினார். – ஞாநி
LikeLike
ஞானி சார், தகவல்களுக்கு நன்றி, இப்போது பதிவிலேயே சேர்த்துவிட்டேன்.
LikeLike
காகபட்டர் (நிஜ மனிதரா இல்லை அண்ணாவின் கற்பனையா? நிஜ மனிதர்)
—->
பதிவிடும்பொழுது…(சமூக இணைய தளத்தில் முக்கியமாக )ஆராய்ந்து பதிவிடுங்கள்…. நீங்கள் இந்த கட்டுரையை அழித்து விடுவதே நல்லது…. பிறரை விமர்சிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு விமர்சிக்க கிளம்புங்கள் அய்யா!!!
LikeLike