விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு

நண்பரும் சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினருமான விசு விஷ்ணுபுரம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறார், பகுதி பகுதியாக வெளிவரும்.

விசு என்கிற விஸ்வநாதன் இளைஞர். மயிலேறி என்ற பேரில் வலைத்தளம் நடத்துகிறார். அங்கே சில அருமையான பயணக் கட்டுரைகள் இருக்கின்றன. அவர் வயதில் எனக்கு அவருக்கு இருப்பதில் பாதி கூட விவேகம் இருந்ததில்லை, அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை, அப்ளிகேஷன் போட விரும்புவர்களுக்கு வசதியாக இங்கே புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.

நான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை:

  

“யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார். ஒரு யுகமென்றால், எத்தனை கோடி கனவுகள், எத்தனை கோடி சிந்தனைகள். நான் கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். எனது காவியம் ஒரு யுகத்தை பிரதிபலித்துக் காட்டும்.” – சங்கர்ஷணன்

விஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன். கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்தேன். கவிதைகள், தர்க்க விவாதங்கள் (இரண்டாம் பகுதி), பல பக்கங்களுக்கு நீளும் எண்ண ஓட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். படித்து முடித்த பின் ஒன்று தெரிந்தது. நான் படித்த மற்ற தமிழ் நாவல்கள் போல இது இல்லை. (கண்டிப்பாக டைம் பாஸ் நாவல் இல்லை). குழப்பமும் பிரமிப்பும் அடைந்தேன். (குழப்பம் ஏனென்றால், நாவல் எனக்கு புனைவு என்பதைத் தாண்டி, உண்மை என்று தோன்றியதால்.) பத்து வரிகளில், ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். சில மாதங்கள் கழித்து பதில் எழுதினார்.

ஒரு புதிய கலை வடிவுக்குள் ஒரு புதிய அறிவுத் துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒரு வருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக் கொண்ட பொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது. அதை விட அது போடக் கூடிய விரிவான கோலம். முன்னும் பின்னும் கதை பின்னிச் செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக் கொண்டு வாசித்தால் பெரிய விஷயம் அல்ல.

கடந்த ஒன்றரை வருடத்தில் அவர் எழுதிய பல நூல்களை ஒரு முறை படித்திருக்கிறேன். மீண்டும் பல முறை படிக்கவேண்டும். விஷ்ணுபுரத்தை இரண்டாம் முறை படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி ஆர்விக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பதிவு நாவலின் விமர்சனம் இல்லை. நாவலை மேலும் புரிந்து கொள்ள ஒரு முயற்சி. [இந்தப் பதிவை பல நாட்களாக, பல மனநிலைகளில் எழுதியதால், கட்டுரையின் நடை திடீரென்று தாவினால், சற்று பொறுத்தருள்க.]

நாவலை, இரண்டாவது முறை படிக்கும்பொழுது, பரபரப்பில்லாமல் பொறுமையாகப் படித்தேன். உணர்ச்சிகரத் தருணங்களை தவிர்த்துவிட்டேன் (லலிதாங்கி – வல்லாளன்), பல இடங்களில் குறிப்பெடுத்துக் கொண்டது, மிக வசதியாக இருந்தது. வழக்கமான பானியில், ‘கதை என்னனா?’, ‘அதாவது இவரு இன்னா சொல்ராருன்னா’ என்று மட்டும் ஆராயாமல், நாவலின் பல பரிணாமங்களை, எனக்குத் தெரிந்த அளவு, தொட்டுக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதன்படி விஷ்ணுபுரத்தை, கீழ்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறேன்.

  1. விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
  2. விஷ்ணுபுரம் – வரலாறு
  3. விஷ்ணுபுரம் – தத்துவம்
  4. விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு
  5. விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்
  6. விஷ்ணுபுரம் – மொழி
  7. விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்
  8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு
  9. விஷ்ணுபுரம் – முடிவுரை

விசுவின் பதிவுகளைப் பற்றி என் விமர்சனத்தை இங்கே எழுதி இருக்கிறேன்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்