முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)
“வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்
நம்மை ஆண்டு கொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத் துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால்? நினைத்தாலே சிரிப்பாக இல்லை? சரி, இதே லாஜிக்கின்படி நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் யோசித்தால்? ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது. (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ]
இந்தியா புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myths) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளை கொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளை கொண்டார்கள். புராணங்கள் கடவுளால் அருளப்பட்டவை, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை, அதுவே ஒரு தனி காவியம். இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டி.டி. கோசம்பி மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. (youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது, தற்போது காணவில்லை.) ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள் சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்க முடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
வரலாற்று ஆய்வாளர்களுக்கு இனையாக இலக்கியவாதிகளும் இந்தத் கருவில் கதைகள், நாவல்கள் படைத்துள்ளார்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் அதில் முதல் முயற்சி. அதர்மம் அதிகரிக்கும்போது, ஈசன் சினங்கொள்வான், நெற்றிக்கண்ணைத் திறப்பான், உலகம் அழிந்து மீண்டும் பிறக்கும் என்ற தொன்மத்தை மையப்படுத்தி எழுதியது கபாடபுரம். அக்கதையில் இயற்கையே கடவுளாக, ஒரு எரிமலையை பிறைசூடியாக உருவகிக்கிறார். கடல் கொண்ட பழந்தமிழகத்தின் வரலாறு மட்டுமல்லாது தத்துவத் தளத்தையும் தொடுகிறது கபாடபுரம். விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரத்தின் நீட்சி என்கிறார் ஜெயமோகன். உண்மைதான். கபாடபுரம் தொட்டுக் காட்டும் புள்ளிகளை இனைத்து விஷ்ணுபுரமென மிக விரிவான சித்திரமொன்றை வரைந்திருக்கிறார். கபாடபுரத்திற்கும் (1945) விஷ்ணுபுரத்திற்கும் (1997) ஐம்பதாண்டு காலம் இடைவெளி உள்ளது. எனக்குத் தெரிந்து, வேறு யாரும் இந்தக் கருவில் நாவல் எழுதவில்லை. யதார்த்தவாத கதை சொல்லும் முறை ஓங்கியிருந்த காலம் என்பதால் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார் என்ற தொன்மத்தை வைத்து எழுதப்பட்டது இந்நாவல். நாவலில் யுகம் எப்போது துவங்கியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் முடிவு பதிநான்காம் நூற்றாண்டு (கான் படையெடுப்புக்குப்பின் அதிகபட்சம் நூறாண்டுகள்) என்று வருகிறது. ஒரு யுகம் என்று இந்தக் காலத்தை ஏன் உருவகித்தார் ஆசிரியர்? ஒரு யுகம் என்பது இங்கு எதன் குறியீடு? நிலப்பிரபுத்துவத்தின் காலம் என்றால் இருபதாம் நூற்றாண்டுவரை வந்திருக்க வேண்டும். என் யூகம், இந்திய நிலமெங்கும் கீழை மதங்கள் தம் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலகட்டம். சொல்லால் நிலைநின்ற ஆட்சிபோய், வேலால் மட்டுமே நிலைநின்ற ஆட்சி மாற்றத்தின் குறியீடு, தத்துவ யுகம் முடிந்து விஞ்ஞான யுகத்தின் துவக்கம், போன்ற காரணங்கள் இருந்தாலும், “மாற்றுத்தரப்பு சிந்தனைகளோடு உரையாடிய தளம் இல்லாமலாவதன் குறியீடு; கொண்டும் கொடுத்தும் சிந்தனைகள் வளர்ந்த சூழ்நிலை அழிந்து, இந்தியச் சிந்தனைகள் தேக்கமுறுவதன் குறியீடு” என்றே எண்ணுகிறேன். நாவலின் நீட்சியாக நாம் அடுத்த யுகமாக எந்தக் காலத்தை கருதுவது ? ஆலிலையில் மீண்டும் பிறக்கும் விஷ்ணு மீண்டும் எப்போது புரண்டு படுப்பார் ? (இல்லை புரண்டு படுத்துவிட்டாரா?)
விஷ்ணுபுரம் அளவிற்கு தொன்மங்கள், புராணங்கள் உருவாகும் விதம், காலப்போக்கில் அவை அடையும் மாற்றம் போன்றவற்றை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கும் வேறோரு இந்திய நாவல் இல்லை. நாவலின் மிகப் பெரிய பலம் இது. பத்மாட்சி யட்சி உருவாவது போலவே, கொன்றைவனத்தம்மனும் உருவாகிறாள். (அதுவும் கொன்றைவனத்தம்மன் உருவான புராணம் பற்றி சாத்தனுக்கு அவன் தந்தை சொல்வது, கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வரும் புராணகதையின் சாயல் கொண்டது. இது போலவே நானும் சில கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். template மாறாது போல).
கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கற்பனாவாத நாவல்களால் தமிழக வாசகர் மனதில் தமிழ் மன்னர்கள் சந்தனக்காப்பு அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனின் சித்தரிப்பு மூலம் ஜெயமோகன் கருவறை புகுந்து சந்தனக்காப்பு விக்ரகங்களை வெளியில் தூக்கிப் போட்டு உடைக்கிறார். இது தேவையான ஒன்றுதான். இது புனைவு என்பவர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ படிக்க வேண்டுகிறேன். நிலப்பிரபுத்துவ அறத்தை இப்போதைய மக்களாட்சி அறத்தோடு ஒப்பிடக் கூடாதுதான், இருந்தாலும் நல்ல குரு அமையாத மன்னர்கள் கொடும் சர்வாதிகாரிகள் என்பதை மறக்க வேண்டாம். [இன்றைய ஜெயமோகன் ஃபேமஸ், 1997 ஜெயமோகன் அப்படி இல்லையே! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர்கள்தானே நாம்! தமிழ் வேறு பாண்டியன் வேறா? இதை எழுதியதற்கு எப்படி அடி வாங்காமல் தப்பித்தார் என்றே தெரியவில்லை 🙂 அது சரி, இது புனைவுதானே :-)]
நாவலில் நரோபா என்ற திபேத்திய பௌத்தர் விஷ்ணுபுரத்திற்கு வந்து மூல நூல்களை மொழிபெயர்க்கிறார். பின்னாளில் யோகவிரதர் நரோபாவின் நூல்களிலிருந்து விஷ்ணுபுரத்தைப் பற்றியும் தத்துவங்களையும் தெரிந்துகொள்கிறார். நரோபா கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சுவான்சாங்(யுவான் சுவாங்) தான். அவர் கொண்டு சென்றதின் மொழியாக்கத்திலிருந்து நாம் பலவற்றை மீட்டெடுத்தோம். வெள்ளையர்கள் எழுதிய இந்திய வரலாறு தவிர, நாம் இன்னும் நம் வரலாறை எழுதவே இல்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை அதன் சமகால சீன, திபேத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காப்பியங்களோடு ஒப்பிட்டும், முக்கியமாக நம் தொன்மங்களை அவர்களின் தொன்மங்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தால் மேலும் பல திறப்புகள் கிடைக்கலாம்.
பிற்சேர்க்கை: (ஆர்வியின் எண்ணங்கள்) – இதற்கு விசு வரலாறு என்று தலைப்பு கொடுத்திருந்தாலும் அவருடைய பேசுபொருளும் தொன்மங்களே என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை விஷ்ணுபுரத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. விஷ்ணுபுரம் புனைவு. தொன்மங்கள் உருவாகும் process-ஐ விவரிக்கிறது. முதல் பகுதியில் தொன்மங்களாக இருப்பவை இரண்டாவது பகுதியில் சமகால நிகழ்ச்சிகள்; மூன்றாவது பகுதியின் தொன்மங்கள் முதல் பகுதியில் சமகால நிகழ்ச்சிகள். இதில் வரலாற்றைத் தேட வேண்டாம் என்றே கருதுகிறேன். பாத்திரங்கள், நிகழ்ச்சிகளுக்கான inspiration சுவான்சாங்கின் பயணத்திலிருந்தும், யாக்ஞவல்கியர், சார்வாகன், ஆதி சங்கரர் தொன்மங்களில் ஏன், நா.பா. எழுதிய மணிபல்லவம் புத்தகத்தில் கூட விவரிக்கப்படும் ஞான சபை வாதங்களிலிருந்தும் வந்திருக்கலாம். அது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
ஆனால் எனக்கும் இரண்டு கேள்விகள் உண்டு. ஒன்று, விஷ்ணுபுரம் ஞான சபை போல மன்னனை விட ஒரு படி மேலாக தன்னை உணர்ந்த, காண்பித்துக் கொண்ட, மன்னனும் ஏற்றுக் கொண்ட ஹிந்து “ஆன்மீக” அமைப்புகள் இந்தியாவில் இருந்தனவா என்பது. இரண்டு ஞான சபை வாதத்தில் வெற்றி, தோல்வி என்பதை யார், எப்படி நிர்ணயித்தார்கள் என்பது. ஜெயமோகனே, அல்லது தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
விசு கபாடபுரத்தைப் பற்றி பேசும் வரையில் இவற்றுக்குள்ள தொடர்பு எனக்கு strike ஆகவில்லை. இப்படி தொடர்புகளை கண்டுபிடிப்பது விசுவின் பெரிய பலம்.
தொடரும்…
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா. ராகவன்
புதுமைப்பித்தனின் சிறுகதை – கபாடபுரம்
ஆர்வி , ஒரு வேகோ , உங்கள் குறிப்புகளை பின்னூட்டமாக் கொடுங்கள் , அல்லது முழுதாக வந்தபின் ஒரு பதிவாக .
LikeLike
// ஆர்வி , ஒரு வேகோ , உங்கள் குறிப்புகளை பின்னூட்டமாக் கொடுங்கள் , அல்லது முழுதாக வந்தபின் ஒரு பதிவாக. // நல்ல ஐடியா, எனக்கு தோன்றாமல் போய்விட்டதே!
LikeLike
ஆர்வி,
ஒரு தொடர்புடைய சுட்டி : http://www.jeyamohan.in/?p=7377
புனைவில் வரலாறை தேடக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். விஷ்ணுபுரம் நேரடியாக வரலாறை பேசாமல், தொன்மங்களின் தோற்றத்தையும், மாற்றத்தையும் தான் பேசுகிறது. விஷ்ணுபுரத்தின் புனைவுகளை நேரடியான பொருளில் உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், தொன்மங்கள் வெறும் கதைகள் அல்லவே. அதற்கு ஒரு வரலாற்றுக்கோணம் இருக்கிறதல்லவா? விஷ்ணுபுர நாவலின் பல-அடுக்கு கதை சொல்லும்முறையின் ஒரு சரடு, தொன்மங்களின் வரலாற்றை சொல்லவோ? என்று படுகிறது. (அரங்கா சொன்னதுபோல, வரலாற்றின் அபத்தத்தை சுட்டவும் பயன்படுகிறது.) ஜெயமோகன் ஒரு பதிவில், இங்கு இருநூறு ஆண்டுகளாக நடைபெற்ற ஞான விவாதங்களை ஒரு சபையில் சில நாட்களில் நடைபெற்றதாக புனைந்திருக்கிறேன் என்கிறார். புனைவு சுட்டும் வரலாறு என்ற எண்ணத்தில்தால், இதற்கு ‘வரலாறு’ என்று தலைப்பிட்டேன்.
(நாவலுக்கு inspiration அவருடைய பரிவிராஜக வாழ்க்கையே என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்னவற்றிலும் இருக்கலாம். நா.பா படித்ததில்லை. படிக்கிறேன்).
மேலும், http://buddhiststudies.berkeley.edu/graduate/phd_requirements.html (language study section)
பெர்க்லி பல்கலைகழகத்தின் பௌத்த ஆராய்ச்சி படிப்பில் சீன, ஜப்பானிய, பாலி (சிங்கள), சமஸ்கிருத, நேபாள மொழிகளில் ஏதேனும் இரண்டில் தேர்ச்சியை எதிர்ப்பார்க்கிறார்கள். இதில் தமிழ் இல்லை. மணிமேகலை பற்றி இவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. எப்படியும் இவர்கள் செவ்வியல் ஆக்கங்களைத் தவிர நாட்டாரியல் கதைகளை ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இனையத்தில் தேடியதில், பாணாரஸ் இந்து பல்கலையின் வெப்ஸைட் கீழே..இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பெர்க்லி அளவிற்கு பணபலம் இல்லை..அங்கேயும் பாலி மொழி தவிர மற்ற மொழிகள் இல்லை..நம் தலைமுறையில் பௌத்தம் பரவிய இடங்களிடையே உள்ள ‘லிங்க்’குகளை கண்டுபிடிப்பது கடினம் என்றே நினைக்கிறேன்.
http://www.bhu.ac.in/arts/Pali/index.html
LikeLike
விசு – உங்கள் விமர்சனம் மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக விஷ்ணுபுரம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். உங்கள் விமர்சனம், மற்றவர்களின் குறிப்புகள், related links எல்லாம் மீண்டும் புத்தகத்தை படிப்பதற்கான நல்ல முன் தயாரிப்பாக இருக்கிறது. மீதி பகுதிகளையும் ஆவலோடு எதிர்பார்கிறேன்.
LikeLike
From Gopi Ramamoorthy who was unable to post his comment for some weird reason:
Regarding your first question:
I could think of Magna Carta in this context. I am not aware of any Tamil Kingdom which accepted the Supremacy of an established religious set up.
For your second question, I think we have enough answers in the novel itself. It is very clear that the Sarvagnar lost to Ajithan. The lamps get lit one by one as Ajithan articulates his point.
LikeLike
மறுமொழிக்கு நன்றி அருணா, கோபி..
LikeLike
“பிரும்ம ரகசியம்” என்ற நூலில் இது போன்று பல விவாதங்களை முன் வைத்துள்ளார் ர,சு. நல்லபெருமாள். ஆனால் அவை விவாதங்கள் மட்டுமே! இருக்கட்டும். தொடர் பதிவு முடிந்த பின்பு கருத்துரைப்பதுதான் சரியானதாக இருக்கும் என்றாலும் மயிலேறியின் இந்தக் கருத்துரை அவரைப் போலவே மிக அழகாக இருக்கிறது 🙂
LikeLike
நன்றி ரமணன் 🙂
LikeLike