ஷெர்லாக் ஹோம்ஸின் மனைவி – மேரி ரஸ்ஸல்

லாரி ஆர். கிங் எழுதிய மேரி ரஸ்ஸல் சீரிஸ்

56 சிறுகதைகள், நான்கு நாவல்கள். அவ்வளவுதான் ஷெர்லாக் ஹோம்ஸின் official canon.

துப்பறியும் கதைகள் சிறப்பாக வர மூன்று கூறுகள் அவசியம். பாத்திரப் படைப்பு, சுவாரசியமான கதை, சுலபமாக யூகிக்க முடியாத மர்மம். பாத்திரங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சுவாரசியமாக இருக்கின்றனவோ அவ்வளவு நல்லது. உதாரணமாக ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்சன், மோரியார்டி, கணேஷ்/வசந்த் போன்றவர்கள் charismatic பாத்திரங்கள். சுலபமாக யூகிக்க முடியாத, கொஞ்சம் கொஞ்சமாக அவிழும் மர்மம், எல்லா க்ளூக்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள நம்மை மீண்டும் முந்தைய பக்கங்களைப் போய் பார்க்க வைக்கும் மர்மம் இருந்தால் கதை பிரகாசிக்கும். And Then There Were None, Murder in the Orient Express போன்றவை நல்ல உதாரணங்கள். சுவாரசியமான கதையும் இருந்தால் கதை எங்கேயோ போய்விடுகிறது. Red Headed League, Purloined Letter போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். சுவாரசியமான கதை மட்டுமே இருந்து மர்மம் அவ்வளவு பிரமாதமாக இல்லாவிட்டாலும் நன்றாகவே இருக்கிறது. Blue Carbuncle, Dying Detective போன்ற கதைகளை சொல்லலாம். மர்மம் ஏதோ ஒரு obscure உண்மையின் மீது கட்டப்பட்டிருந்தால் அவ்வளவு சுகப்படுவதில்லை. எலரி க்வீன் (Ellery Queen) போன்றவர்கள் இப்படித்தான் எழுதினார்கள், கதைகளை தீவிர ரசிகர்கள் தவிர யாரும் சீந்துவதில்லை. ஹோம்ஸ் கதைகளில் நல்ல பாத்திரப் படைப்பு is a given. சுவாரசியமான கதை, நல்ல மர்மம் இரண்டில் ஒன்றாவது அனேகமாக இருக்கிறது. அதனால்தான் ஹோம்ஸ் இடத்துக்கு யாருமே போக முடியவில்லை.

ஹோம்ஸ் பாத்திரத்தை வைத்தே இந்த நிலையை அடைய முயற்சிக்கும் கதைகள் பல உண்டு. கானன் டாயில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிக் கொண்டிருந்தபோதே parodies வரத் தொடங்கிவிட்டன. இன்றும் ஹோம்ஸ் கதைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகோலஸ் மேயர் எழுதிய Seven Percent Solution போன்றவை ஓரளவு பிரபலமானவை. நான் சமீபத்தில் படித்த மேரி ரஸ்ஸல் கதைகளும் சுவாரசியமானவை.

மேரி 15 வயதில் முதல் முறையாக ஹோம்ஸை சந்திக்கிறாள். ஹோம்ஸ் மேரியும் அந்த வயதிலேயே தன்னைப் போலவே சின்னச் சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிப்பதையும், அவற்றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வருவதையும் பார்க்கிறார். அவர்களுக்குள் நட்பு, பந்தம் உருவாகிறது. மேரியை ஹோம்ஸ் தன் மாணவியாக நடத்த ஆரம்பிக்கிறார். சில கேஸ்களில் சேர்ந்து துப்பறிய ஆரம்பிக்கிறார்கள். மேரி ஹோம்ஸின் சரிசமமான பார்ட்னராகவே மாறுகிறாள். பிற்காலத்தில் மேரியும் ஹோம்சும் நிறைய வயது வித்தியாசம் இருந்தும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து துப்பறியும் கதைகள்தான் இந்த சீரிஸில். இந்தக் கதைகளில் ஹோம்ஸ் வயது, அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றால் சீனியர் பார்ட்னர் என்றாலும் அவர் ஒரு துணைப்பாத்திரம்தான். கதைகள் எப்போதும் மேரியின் கோணத்தில்தான் விவரிக்கப்படுகின்றன, நிறையத் துப்பறிவதும் மேரிதான். மேரிக்கு ஹோம்ஸ் உதவி செய்வதாகவேதான் கதைகள் எழுதப்படுகின்றன. இந்தக் கதைகளில் மர்மம் கொஞ்சம் குறைவு, ஆனால் பின்புலம் (பெண்ணுரிமைப் போராட்டம், பாலஸ்தீனம்…) எப்போதுமே நன்றாக இருக்கிறது, கதைகளும் சுவாரசியமானவை.

சீரிஸின் முதல் நாவலான Beekeeper’s Apprentice (1994)-இல் மேரிக்கு பதினைந்து வயது இருக்கும்போது ரிடையர் ஆகிவிட்ட ஹோம்ஸை சந்திக்கிறாள். ஹோம்ஸ் ஒரு ஆளைப் பார்த்தவுடன் அவன் யார், என்ன தொழில் செய்கிறான் என்றெல்லாம் (Blue Carbuncle) deduce செய்வது போலவே ஹோம்சைப் பற்றி மேரி கணிக்கிறாள். இருவருக்கும் நட்பு உருவாகிறது, ஹோம்ஸ் மேரியை தன் “மாணவியாக” ஏற்றுக் கொள்கிறார். மேரியும் அவரும் சில கேஸ்களை சேர்ந்து துப்பறிகிறார்கள். ஒரு படு பயங்கர வில்லன் – மோரியார்டி லெவல் வில்லன் வரும்போது – மேரியும் ஹோம்சும் பார்ட்னரே ஆகிறார்கள்.

A Monstrous Regiment of Women (1995): 20 வயது மேரி ரஸ்ஸல் 60 வயது ஹோம்ஸை மணக்க விரும்புகிறாள். ஹோம்ஸ் மறுக்கிறார். மேரி மார்ஜரி சைல்ட் என்ற “சாமியாரிணியை” சந்திக்கிறாள். மார்ஜரி பெண் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவள். பல பணக்காரப் பெண்கள் அவளுக்கு உதவியாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு மூன்று பேர் இறந்துவிடுகிறார்கள். இறந்தவர்கள் மார்ஜரியின் சர்ச்சுக்கு நிறைய பணம் எழுதி வைத்திருக்கிறார்கள். மேரி துப்பறியப் போய் அவளே மாட்டிக் கொள்கிறாள். ஹோம்ஸ் காப்பாற்றுகிறார், இருவரும் சேர்ந்து மர்மங்களை அவிழ்க்கிறார்கள். ஹோம்ஸ் மேரி மேல் உள்ள காதலை ஒப்புக் கொள்கிறார், திருமணத்தோடு கதை முடிகிறது.

A Letter from Mary (1997): டோரதி பாலஸ்தீனத்தில் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட். மேரியிடம் ஒரு பழைய papyrus கடிதத்தைக் கொடுக்கிறாள். அது மேரி மக்தலீன் எழுதியது, அதில் தான் ஒரு அப்போஸ்தலர் என்று எழுதி இருக்கிறார். அது வெளியே வந்தால், ஒரு பெண் அப்போஸ்தலராக இருந்தாள் என்று தெரிந்தால் அன்றைய ஆணாதிக்க சமூகத்தில் பெரும் சர்ச்சை உண்டாகும். அன்று இரவே டோரதி ஒரு “விபத்தில்” இறக்கிறாள். அது விபத்து இல்லை, கொலை என்று ஹோம்சும் மேரியும் நிரூபிக்கிறார்கள். அடுத்த நாள் ஹோம்ஸ்-மேரியின் வீடு சூறையாடப்படுகிறது. என்ன மர்மம், யார் கொலையாளி என்று துப்பறிகிறார்கள். பில்டப் இருக்கும் அளவுக்கு மர்மம் இல்லை. ரொம்ப சிம்பிளாக முடித்துவிடுகிறார். ஹோம்சே கதையில் பூ இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்கிறார்!

Moor (1998): பாஸ்கர்வில்லி கதை நடந்த டார்ட்மூருக்கு ஹோம்ஸ் திரும்பி வருகிறார். இப்போதும் ஒரு அமானுஷ்ய நாய். ஒரு நாடோடிப் பாட்டுக்காரனின் மரணம். பாஸ்கர்வில்லி மாளிகையில் ஒரு அமெரிக்கப் பணக்காரன். ஹோம்ஸின் godfather பேரிங்-கவுல்ட் இறக்கும் தருவாயில் இருக்கிறார். இதை வைத்து ஒரு சுவாரசியமான கதையைப் பின்னி இருக்கிறார்.

O Jerusalem (1999):: இந்தக் கதை chronologically ஆரம்ப நாவலான Beekeeper’s Apprentice நடுவில் இரண்டு மூன்று வாரத்தில் நடக்கிறது. படித்ததில் எனக்குப் பிடித்தது இதுதான். ஹோம்சும் மேரியும் பாலஸ்தீனத்தில். பாலஸ்தீன கவர்னர் ஆலன்பி. யூதர்கள், முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் யாரும் இன்னும் சீரியஸாக அடித்துக் கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஆனால் டென்ஷன் இருக்கிறது. லோகல் ஒற்றர்களான அலி, முகம்மது இருவரின் உதவியுடன் ஜெருசலேத்தில் வெடிகுண்டு சதியை முறியடிக்கிறார்கள். பாலஸ்தீன குழுக்களை மிக அருமையாக விவரித்திருக்கிறார். அலி, முகம்மது இருவருமே நல்ல பாத்திரப் படைப்புகள்.

Justice Hall (2002): போன கதையில் சந்தித்த முகம்மதும் அலியும் இந்தக் கதையிலும் முக்கிய பாத்திரங்கள். முகம்மது உண்மையில் ஒரு ஆங்கில பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவன். உண்மையான பேர் மார்ஷ். பல வாரிசுகள் இறந்துவிடுவதால் அடுத்த ட்யூக் ஆக பதவி ஏற்க வேண்டிய நிலை. ஆனால் முகம்மது உண்மையில் விரும்புவதோ பாலஸ்தீனப் பாலைவனங்களில் ஒரு நாடோடியாக வாழ்வதைத்தான். அலி அவனது உறவினன், பதவிக்கு உரிமை உள்ளவன், அவனும் முகம்மதோடு அப்படி சுற்றுவதைத்தான் விரும்புகிறான். மார்ஷ் பதவி தன் கடமை, அதைத் தவிர்க்கக் கூடாது என்று நினைக்கிறான். மார்ஷின் மனதை மாற்ற அலி ஹோம்ஸ் மற்றும் மேரியின் உதவியை நாடுகிறான். என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
எனக்கு மிகவும் பிடித்த கதைகள் முகம்மது, அலி இருவரும் வரும் இந்த இரண்டு கதைகள்தான்.

Game (2004): இப்போது ஹோம்ஸ், மேரி இருவரும் இந்தியாவுக்கு வருகிறார்கள். அங்கே கிம்மைகிப்ளிங் உருவாக்கிய கிம் – மூன்று வருஷங்களாகக் காணவில்லை. ஹோம்ஸ் மோரியார்டி மறைவுக்குப் பின் இந்தியா வந்ததாகவும், அப்போது கிம்முடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்புலம். Pigsticking – காட்டுப்பன்றி வேட்டை – காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. சின்னச் சின்னத் தவறுகள் (anachronisms) தெரிகின்றன – ஜின்னா 1924இலேயே முஸ்லிம்களின் தலைவராகிவிட்டார், மேற்கு உத்தரப்பிரதேசத்தைப் பற்றி பேசுகிறார்கள் – ஒரு இந்தியனை proofread செய்ய வைத்திருக்கலாம்.

Locked Rooms (2005): இந்தியாவிலிருந்து ஹோம்சும் மேரியும் சான் ஃபிரான்சிஸ்கோ செல்கிறார்கள். அங்கே மேரிக்கு நிறைய சொத்து இருக்கிறது. மேரிக்கு கப்பலிலேயே பல கெட்ட கனவுகள் ஆரம்பிக்கின்றன. ஹோம்ஸ் அந்தக் கனவுகளை வைத்து மேரி தன் இளமைக் கால நினைவுகளை மறந்திருக்கிறாள் என்று யூகிக்கிறார். மேரியின் பெற்றோரின் இறப்பில் என்ன மர்மம் என்று கண்டுபிடிக்கிறார்கள். கதையின் ஒரு பாத்திரம் டாஷியல் ஹாம்மெட்!

Language of Bees (2009): ஹோம்ஸின் மகன் – ஹோம்சுக்கும் ஐரீன் ஆட்லருக்கும் பிறந்த டேமியன் ஆட்லர் – ஹோம்சைத் தேடி வருகிறார். அவரது மனைவி, மகள் இருவரையும் காணவில்லை. டேமியனுக்கு அப்பா மேல் நிறைய கோபம் உண்டு, அப்பாவை வாழ்க்கை முழுதும் தவிர்த்திருக்கிறார். தேடும்போது உறவு ஓரளவு சுமுகம் அடைகிறது. அதற்குள் டேமியனே விலகிப் போய்விடுகிறார். ஹோம்சும் மேரியும் டேமியனின் மனைவி ஒரு cult தலைவனால் பலி கொடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மேரி டேமியன்தான் அதை செய்தவரோ என்று சந்தேகப்படுகிறாள். டேமியனையும், அவர் மகளையும் தப்ப வைக்கும் காட்சியோடு புத்தகம் முடிகிறது, ஆனால் கதை அடுத்த புத்தகத்தில் தொடர்கிறது.

God of the Hive (2010): போன நாவல் இங்கே தொடர்கிறது. cult தலைவன் ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரியின் கைப்பாவை. மைக்ராஃப்ட் ஹோம்ஸை கவிழ்க்க போட்ட சதி என்பது தெரிகிறது.

Pirate King (2011): இந்த முறை மேரி ஒரு சினிமா கம்பெனியில் துப்பறியப் போகிறாள். Pirates of Penzance நாடகத்தை பின்புலமாக வைத்து எடுக்கப்படும் கதை. சில நடிகர்களே உண்மையில் கடற்கொள்ளையர்கள். இது வரை வந்த கதைகளில் இதைத்தான் படு சுமார் என்று சொல்வேன்.

சீரிஸில் அடுத்ததாக வரப் போகும் நாவல் Garment of Shadows (2012): மீண்டும் முஹம்மதும் அலியும். பின்புலம் மொராக்கோ. 1920களில் மொராக்கோவின் வட பகுதி ரிஃப் குடியரசாக உருவாகியது. அங்கே மேரியும் ஹோம்சும் முஹம்மதும் அலியும் குட்டையைக் குழப்புகிறார்கள்.

Garment of Shadows (2012): இப்போது ஜப்பானிய இளவரசர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவருக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் ஒரு நிஞ்சா இளைஞி ஹருகி சாடோ. சுமார்தான்.

Island of the Mad (2018) இன்னொரு படுசுமாரான நாவல். இந்த முறை வெனிசில் மேரியும் ஹோம்சும் இங்கிலாந்திலிருந்து ஓடிவந்துவிட்ட முன்னாள் பைத்தியக்கார சீமாட்டியைத் தேடுகிறார்கள்.

சிறுகதைகளின் தொகுப்பாக வந்திருப்பது Mary Russell’s War (2016). இவை மர்மக் கதைகள் அல்ல, ஆனால் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

சீரிசை நான் சிபாரிசு செய்வேன். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் Justice Hall புத்தகத்தை பரிந்துரைப்பேன்.

கிங் எழுதிய பிற நாவல்களில் ஒன்று Keeping Watch (2003). கதையின் premise – abuse செய்யப்படும் சிறுவர் சிறுமியரைக் கடத்திக் காப்பாற்றும் ஒரு சின்ன டீம் – கவனத்தை ஈர்த்தாலும் கதையில் நிறைய ஓட்டைகள்.

தொடர்புடைய சுட்டிகள்:
லாரி ஆர். கிங்கின் தளம்
லாரி ஆர். கிங் விக்கி குறிப்பு
ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்
ஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்த சிறுகதைகள்