தரம்பால் எழுதிய “பியூட்டிஃபுல் ட்ரீ”

தரம்பால் எழுதிய இந்தப் புத்தகம் எனக்கு ஒரு eye-opener. ஆங்கில ஆட்சிக்கு முன் இந்தியாவில் படிப்பு என்பது பிராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் மட்டுமே உரியது, வைசியர்களும் சூத்திரர்களும் தொழிற்கல்வி அல்லது வியாபாரத்துக்குத் தேவையான கணிதம் கற்றிருப்பார்கள், முஸ்லிம்களில் பணக்காரர்கள் படித்திருப்பார்கள், ஏழைகளுக்கு குரான், தொழிற்கல்வி தெரிந்தால் அதிகம் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இதில் ஆச்சரியம் இல்லை, தரம்பாலுக்கே அப்படித்தான் ஒரு பிம்பம் இருந்திருக்கிறது. ஆனால் ஆங்கிலேயர்களின் ஆவணங்கள் மூலம் நமக்குத் தெரிய வரும் நிலையே வேறு.

தரம்பால் மூன்று ஆவணங்களை ஆதாரமாகத் தருகிறார். ஒன்று அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் (இது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளப் பகுதிகளை உள்ளடக்கியது) கல்வி நிலையைப் பற்றி சர் தாமஸ் மன்றோ காலத்தில் எழுதப்பட்ட ரிபோர்ட்டுகள். இரண்டு அன்றைய வங்கம்/பீகார் ஸ்டேட்டில் கல்வி நிலையைப் பற்றி தரப்பட்ட ஆடம் ரிபோர்ட்டுகள். மூன்றாவதாக பஞ்சாபின் கல்வி நிலையைப் பற்றி எழுதப்பட்டவை.

இவை மூன்றிலுமே காட்டப்படும் கல்வி நிலையே வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்திருக்கிறது. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர், ஏன் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்ட தலித்கள் கூட அங்கே படித்திருக்கிறார்கள். பள்ளிக்கென்று நிலம் மானியமாகத் தரப்படுவது அபூர்வமே, ஆனால் ஆசிரியருக்கு ஊரே கூடி சம்பளம் தந்திருக்கிறது. எல்லாருக்கும் எழுதப் படிக்க சொல்லித் தரப்பட்டிருக்கிறது. இதற்கு சில வாரங்கள்தான் ஆகுமாம். மணலில் எழுதிப் பழகுவார்களாம். (நான் கூட குச்சி வைத்து மணலில் எழுதி இருக்கிறேன், ஆனால் ஸ்லேட்டு பலப்பம்தான் அனேகமாக.) அதற்குப் பிறகு நூறு வரை எண்ணுவது, கூட்டல் கழித்தல், பெருக்கல் வாய்ப்பாடு, அளவுக் கணக்குகள் என்று சில வருஷம். அதற்குப் பிறகு பாரதம், ராமாயணம் என்று கொஞ்சம் வருஷம். இதற்குள் தொழிற்கல்வி என்று போனவர்களும் உண்டு.

ஆடம் ரிபோர்ட்டுகள் வங்காளத்தில் ஒரு லட்சம் கிராமப் பள்ளிகள் இருக்கலாம் என்று யூகிக்கின்றன. (கிராமங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்.) இவை அழிந்து கொண்டிருக்கின்றன என்று அவர் எழுதி இருக்கிறார். அன்றைக்கு உருவாகிக் கொண்டிருந்த சென்னை நகரத்திலேயே நிறையப் பள்ளிகள் இருந்திருக்கின்றன.

பெண்கள் கல்வி கற்றது மிகவும் குறைவு. தேவதாசிகள்தான் ஓரளவு கல்வி கற்றார்கள் என்று தெரிகிறது. முஸ்லிம்களுக்கும் பாரசீகப் பள்ளிகள் இருந்தன.

அன்றையக் கல்வி முறை மேலை நாடுகளின் எந்தக் கல்வி முறைக்கும் குறைந்ததாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் உயர்கல்வி (கணிதம், அறிவியல்) அங்கே வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. இங்கே தேங்கிப் போனதுதான் ஐரோப்பிய நாடுகளின் வேகமான முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும். அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கல்வி முறை புரிந்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மூர் ஆட்களுக்கே, அதுவும் வேகமாக anglicize ஆகிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கல்வி முறையை இளக்காரமாகத்தான் பார்த்திருப்பார்கள். சர் சையத் அஹமத் கான் போன்றவர்கள் இந்த பாரம்பரியக் கல்வி முறை இனி மேல் பயன்படாது, கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்று நினைத்துத்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவி இருப்பார் என்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் ஆங்கிலக் கல்வி என்பது ஒரு paradigm shift. அது பழைய கல்வி முறையை அழித்துத்தான் வளர்ந்திருக்கிறது.

தரம்பால் காந்தீயவாதி என்று தெரிகிறது. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைப் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்து நிறைய எழுதி இருக்கிறார். இவரது ஆராய்ச்சி ஏன் பாப்புலராக இல்லை என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் ஹிந்துத்துவவாதிகளாவது இவரைப் பற்றி நிறைய பேச வேண்டாமா? ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

ஜெயமோகன் இவரைப் பற்றி பெரிதாக ஒரு கட்டுரை எழுதி இருப்பதாகவும் அதை இப்போது வெளியிட முடியவில்லை என்றும் சொல்லி இருந்தார். தளத்திலாவது போடுங்க சார்!

தமிழ் பேப்பரில் ஒரு நேர்காணல் வந்திருக்கிறது, அதைப் படித்துவிட்டுத்தான் நான் இந்தப் புத்தகத்தை தேடத் தொடங்கினேன்.

தரம்பாலின் புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது. துரதிருஷடவசமாக tables சரியாக வருவதில்லை. 1983-இல் முதல் பதிப்பு வந்திருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
பியூட்டிஃபுல் ட்ரீ ஆன்லைனில்
தரம்பாலின் நேர்காணல்
விக்கி குறிப்பு

3 thoughts on “தரம்பால் எழுதிய “பியூட்டிஃபுல் ட்ரீ”

  1. பின் குறிப்பு: இதையே ஒரு தொடராக எழுதுமாறு பதிவுலக நண்பர்களைக் கோருகிறோம். எது கல்வி, எது அறிவு, காப்பியடிப்பது, கல்வி முறை, தேர்வுமுறை, ஆங்கிலம் படிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்று உங்கள் அனுபவத்தோடு எழுதலாம். வாசகர்கள் இங்கேயே விவாதிக்கலாம்.

    Like

    1. பனாமா, // இதையே ஒரு தொடராக எழுதுமாறு பதிவுலக நண்பர்களைக் கோருகிறோம். எது கல்வி, எது அறிவு, காப்பியடிப்பது, கல்வி முறை, தேர்வுமுறை, ஆங்கிலம் படிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்று உங்கள் அனுபவத்தோடு எழுதலாம். வாசகர்கள் இங்கேயே விவாதிக்கலாம். // தொடர்பதிவை நீங்கள்தான் ஆரம்பியுங்களேன்! rv டாட் subbu அட் ஜிமெய்ல் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.