ஜெயமோகனின் “வாழ்விலே ஒரு முறை”

இந்தப் புத்தகத்தை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதா கட்டுரைத் தொகுப்பு என்று சொல்வதா? கட்டுரை என்று சொல்லக் கூடியவற்றில் கொஞ்சம் புனைவுத் தன்மை தெரிகிறது, கதை என்று சொல்லக் கூடியவற்றில் உண்மை அனுபவங்களின் சாயல் தெரிகிறது. எனக்கு சிறுகதைகள்தான் பிடித்தமானவை என்பதால் சவுகரியமாக சிறுகதைத் தொகுப்பு என்றே வைத்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்திலிருந்து நான் மீண்டும் மீண்டும் நினைவு கூர்வது அவதாரம் சிறுகதையைத்தான். உக்கிரமான சிறுகதை. ஒரு மூர்க்கமான மோதலை, ஏறக்குறைய ஒரு டேவிட் கோலையாத் கதையை தமிழ்ப் படுத்தி இருக்கிறார் இல்லை இல்லை நாஞ்சில் படுத்தி இருக்கிறார். என்ன, தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ என்று பாடுவது டேவிட் இல்லை, கதைசொல்லி. அந்த மோதல் தமிழ் சிறுகதை உலகில் ஒரு உச்சம்.

முதல் இரண்டு பாராவும் மெதுவாகப் போகிறது. ஊர் சண்டியர் ஆசீரான் கதைக்குள் வந்ததுமே சூடு பிடிக்கிறது. ரவுடிகளின் டெக்னிக்குகள் – காலுறச்சு நிற்பது, உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பார்வை, இடது கைப்பழக்கம் என்றெல்லாம் விவரித்து அசத்துகிறார்.

வேறு எங்கோ போவது போல நடந்த ஆசீரான் சட்டென்று பிரபாவின் பின்பக்கத்தைப் பற்றி ஒரு அமுக்கு அமுக்கினான். அவள் ‘ச்சீ” என்று சீறியபடி திரும்ப அப்படியே அள்ளிப் பிடித்து மார்பை அள்ளிக் கசக்கினான்

என்று சர்வசாதாரணமாக ஒரு அநீதியை இரண்டு வரியில் எழுதிச் செல்கிறார்.

நேர்மாறாக பயந்தாங்கொள்ளி கோலன் அப்பு. ஒரு கால் வேறு ஊனம். பிரபாவின் சகோதரன். பிரபாவுக்கு நடந்ததைக் கேட்டு அவன் ஆசீரானோடு மோத வரும்போது நீ என்ன செய்ய முடியும் என்றுதான் தோன்றுகிறது.

கதையின் உச்சக்கட்டமாக அந்த சண்டை. சண்டை கிண்டை என்றெல்லாம் சொன்னால் சரிப்படவில்லை. போர், யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நுணுக்கமாக விவரிக்கப்படும் வன்முறை.

என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் நோகடித்தது “கடைசி வரை” சிறுகதை. பின்னே, இந்த சாயலில் நானும் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேனே! 🙂 என் கதையை எழுதிவிட்டு பிறகு இந்த கதையைப் படித்தபோது ரொம்ப நொந்து போய்விட்டேன். என் குறைகள் பூதாகாரமாகத் தெரிவது ஒரு பக்கம், அடடா மனுஷன் எனக்கு அபூர்வமாக வந்த ஒரு ஐடியாவையும் விடவில்லையே என்ற வருத்தம் இன்னொரு பக்கம்.

களம் எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை. குழந்தைகளின் மனநிலையைக் காட்டுவதில் ஜெயமோகன் ராஜாதான்.

பாலையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளமைப் பருவத்தை தத்ரூபமாக விவரித்திருக்கிறார்.

மூக்குத்தியும் கடலும், பாதையில் ஒரு கூழாங்கல், ஆதி, மூன்றாவது சீட்டு, லாவா, கண்ணன் ஒரு கைக்குழந்தை போன்றவை டிபிகல் ஜெயமோகன் கதைகள். உணர்ச்சி பொங்கும் ஒரு கட்டத்தை நோக்கித் திறமையாகச் செல்கின்றன.

முடிவின்மையிலிருந்து ஒரு பறவை (யோகி ராம்சுரத்குமார் பற்றி), தரிசனம் மற்றும் தேசம் (வாரங்கல் அனுபவங்கள்), யோகி (நாய் குட்டப்பன்), சாப்ளின், குதிரைவால் மரம் (குரு நித்யாவுடன் சிறு வயது அஜிதன்), உலகெலாம் (பெரிய புராணம்), மகாராஜாவின் இசை (மகாராஜபுரம் சந்தானம்), தனிமொழிகள் (பயன்படுத்தாத சில வரிகள் ) ஆகியவற்றை கட்டுரை என்றுதான் வகைப்படுத்துவேன். ப்ளாக் வராத அந்தக் காலத்திலேயே ப்ளாக் எழுத ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றுகிறது!

தனிமொழிகளிலிருந்து சில மேற்கோள்கள்:

  1. எதிர்காற்றில் நடந்து வரும் சுடிதார்ப் பெண்போல் என் மொழியில் என் சுயம் வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.
  2. உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச் செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
  3. கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.
  4. முற்போக்கு இலக்கியத்திற்கும் அரசாங்கப் பிரசாரத்திற்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.

ஜெயமோகனின் வார்த்தைகளில்:

வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்க வேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும் விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்ய வேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது.

என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. “இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்” என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.

புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை எண்பது ரூபாய். அவதாரம் சிறுகதைக்கு மட்டுமே கொடுத்த காசு செரித்துவிடுகிறது. மிச்ச கதை கட்டுரை எல்லாம் போனஸ்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன், தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி:
அவதாரம் சிறுகதை
அவதாரம் சிறுகதை பற்றிய பதிவு