அமெரிக்காவில் நாஞ்சில்நாடன்

சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ் பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ் விகிதங்களை இயக்குநர் தங்கர் பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது

வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டி.சி. மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.

 1. ஞாயிறு – ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் – ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்
 2. வியாழன் – ஜூன் 7 மாலை 7 மணியளவில் – பாஸ்டன்
 3. சனி – ஜூன் 9 மாலை – வாஷிங்டன் DC நகரம் அருகில்
 4. மேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி – bsubra at gmail dot com
  தொலைபேசி – (978) 710-9160

அனைவரும் படிக்க வேண்டிய நூறு நாவல்கள் – டெலிக்ராஃப் பத்திரிகையின் லிஸ்ட்

இந்த லிஸ்டை எனக்கு அனுப்பியது அருணா. பல புத்தகங்கள் என் லிஸ்டிலும் வரும், ஆனால் இந்தத் தரவரிசைப்படுத்துதலில் எனக்கு கடுமையான ஆட்சேபணைகள் உண்டு. டோஸ்டோவெஸ்கிக்கு 66-ஆவது இடம், ஜார்ஜ் எலியட்டுக்கு முதல் இடம் கொடுப்பதை நான் இது வரை பார்த்ததே இல்லை. (ஆனால் நானும் ஹார்ப்பர் லீக்கு முதல் இடம் கொடுக்கிறேன். 🙂 ) இருந்தாலும் இன்று ஒரு அமெரிக்க/ஆங்கிலேய பல்கலைக்கழகத்தில் (ஆங்கில) இலக்கியப் பட்டப் படிப்பில் இந்த மாதிரி ஒரு லிஸ்டைப் படிக்கச் சொன்னால் ஆச்சரியமில்லை.

இதில் மூன்றில் ஒரு பகுதியைப் படித்திருக்கிறேன்.

டாப் டென் புத்தகங்கள் வசதிக்காக:

 1. Middlemarch by George Eliot
 2. Moby Dick by Herman Melville
 3. Anna Karenina by Leo Tolstoy
 4. The Portrait of a Lady by Henry James
 5. Heart of Darkness by Joseph Conrad
 6. In Search of Lost Time by Marcel Proust
 7. Jane Eyre by Charlotte Brontë
 8. Disgrace by JM Coetzee
 9. Mrs Dalloway by Virginia Woolf
 10. Don Quixote by Miguel de Cervantes

இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

சமீபத்தில் படித்த ஒரு பதிவு (அலையல்ல சுனாமி தளம்) பல தமிழ் நாவல்களுக்கு லிங்க் கொடுத்திருந்தது. பலருக்கும் பயன்படும் என்று இங்கே சுட்டி கொடுத்திருக்கிறேன்.

பகுதி 1, பகுதி 2

பின்குறிப்பு – சிலிகான் ஷெல்ஃப் பற்றியும் சொன்னதால இங்கே லிங்க் கொடுக்கலே என்றால் யாராவது நம்பப் போகிறீர்களா?

முத்து காமிக்ஸ் – இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ்/டேவிட், ஜானி நீரோ


ரொம்பச் சின்ன வயது – மன்னார்குடியில் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்குப் போயிருந்தபோது பல பெரிய பையன்கள் இரும்புக்கை மாயாவியின் முதல் புத்தகத்துக்காக அடித்து கொண்டபோது இத்துனூண்டு சின்னப் பையன் நானும் கோதாவில் குதித்து எனக்குடா எனக்குடா என்று சண்டை போட்டு வாங்கிப் படித்தது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இரும்புக் கை மாயாவி தோன்றிய முதல் புத்தகம் மட்டுமல்ல, அதுதான் முத்து காமிக்ஸின் முதல் இதழ் என்று நினைக்கிறேன். நான் பார்த்த காமிக்ஸ் முதல் இதழ் அதுதான். பேரே இரும்புக் கை மாயாவிதான் என்று நினைவு. இரண்டாவது இதழ் உறைபனி மர்மம் என்று நினைக்கிறேன். இன்னும் பாம்புத் தீவு, பாதாள நகரம், விண்ணில் மறைந்த விமானங்கள், கொலைக்கரம், யார் அந்த மாயாவி என்று சில இதழ் பேர்கள் நினைவிருக்கின்றன. பார்த்த முதல் நாளே காமிக்ஸின் சாத்தியங்கள் புரிந்துவிட்டன.

மாயாவி, லாரன்ஸ்/டேவிட், ஜானி நீரோ ஆகியோர்தான் முதல் ஹீரோக்கள். பிறகு ஃபாண்டம், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, சிஸ்கோ கிட், மாடஸ்டி ப்ளேய்ஸ் என்று நிறைய பேர் வந்தாலும் இந்த மூன்று பேரையும் மறந்ததில்லை. கல்லூரியில் சிவகுருநாதன், சுந்தர நாராயணன் உயிர் நண்பர்களாக ஆனதற்கு அவர்களுக்கும் இந்தப் பித்து இருந்தது ஒரு முக்கிய காரணம். பத்து வருஷத்துக்கு முன்னால் சுந்தரநாராயணன் மாயாவியின் மூலமான Steel Claw பற்றி சொன்னபோது எனக்கு ஒரு காப்பி, சிவகுருவுக்கு ஒரு காப்பி வாங்கினேன். 🙂 பழைய புத்தகக்காரர்கள், நண்பர்கள் யாராவது விற்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன்!

எனக்குத்தான் கிறுக்கு என்று பார்த்தால் எழுத்தாளர் எஸ்.ரா.வுக்கும் இருக்கிறது. அவரது இந்தக் கட்டுரையைப் பார்த்து அசந்துவிட்டேன். கட்டாயம் படியுங்கள்!

தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தளம் முத்து காமிக்சைப் பற்றி நிறைய விஷயம் தருகிறது.

அவுரங்கசீப் மற்றும் நந்தன் கதை – இந்திரா பார்த்தசாரதியின் இரு நாடகங்கள்

இ.பா. என் மனத்தை அவ்வளவாகக் கவர்வதில்லை. அவருடைய படைப்புகளில் சிறந்ததாக நான் கருதும் கிருஷ்ணா கிருஷ்ணா கூட உலக மகா படைப்பு இல்லை.

ஆனால் தமிழ் நாடக உலகில் இ.பா.வின் பங்களிப்பு பெரியது என்பதை நானும் மறுக்க முடியாது. நாடகம் என்ற வடிவத்தின் சாத்தியங்களை இ.பா. உணர்ந்திருக்கிறார். குறிப்பாக நந்தன் கதை. நந்தன் கதையை நான் படிக்கும்போது கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நாடகத்தின் வீடியோவைப் பார்த்து அசந்து போய்விட்டேன். நான் பார்த்த சிறந்த தமிழ் நாடகங்களில் ஒன்று. வசனங்களின் சந்தமும், சிறந்த நடிப்பும், இசையை பயன்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. இது பார்க்க வேண்டிய நாடகம், படிக்க வேண்டியது இல்லை. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

ஆனால் நந்தன் நந்தனாராக விரும்பி தன் பறையன் என்ற அடையாளத்தைத் தொலைத்தான், அப்படி தொலைத்ததன் விளைவாகக் கொல்லப்பட்டான் என்பதெல்லாம் எனக்கு சரிப்படுவதில்லை. என் அடையாளம் என்ன என்பதை இ.பா.வா சொல்ல முடியும்? நந்தன் “கொலை” ஒரு சதி என்பது எனக்கு cliche ஆகத்தான் தெரிகிறது. என்னை எந்த விதத்திலும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்பு இல்லை. (இ.பா.வின் படிப்புகளைப் பற்றி என்னுடைய முக்கியமான விமர்சனமே அதுதான் – புத்தகத்தை மூடி வைத்த பிறகு மனதில் எந்த சலனமும் இருப்பதில்லை; புத்தகம் திறந்திருக்கும்போது கூட அப்படித்தான்.)

அவுரங்கசீப் நாடகமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. அவுரங்கசீப்-தாரா ஷூகோ வாரிசு சண்டையை முக்கியக் கருவாக வைத்து மதங்களின் தன்மை, ஷாஜஹானின் தனிப்பட்ட கட்டிடக் கனவு vs மக்களுக்கு அதனால் ஏற்படும் வரிச்சுமை, இசை இல்லாத வாழ்வின் வெறுமை என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறார். ஒரு வாசகனுக்கு புதிதாக என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றுமே இல்லை. பார்த்தால் என் அபிப்ராயம் மாறலாம், இ.பா. நாடகத்தின் சாத்தியங்களை உணர்ந்த அளவுக்கு எனக்குத் தெரியாது…

இ.பா. தமிழ் நாடக உலகில் சாதனையாளர்தான். கிரேசி மோகன்களும் எஸ்.வி. சேகர்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் நாடக உலகில் அவர் பங்களிப்பு பெரியதுதான். ஆனால் தமிழில் உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை எழுதி இருப்பது சுஜாதாவும், சோ ராமசாமியும்தான். சோவின் கோமாளி அடையாளம் அவரது பங்களிப்பை மறைத்துவிடுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திரா பார்த்தசாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: இ.பா.வின் இன்னொரு நாடகம் – ராமானுஜர்

காந்தி ஆவணங்கள்

காந்தியின் பேச்சுகள், எழுத்துகள் அத்தனையும் இங்கே காலவரிசைப்படி கிடைக்கின்றன. அவர் தனது பள்ளியில் பேசிய பேச்சிலிருந்து ஆரம்பித்து இறக்கும் வரை பேசிய பேச்சுகள், எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் எல்லாம் இருக்கின்றன. Enough Said.

எம்.ஏ. சுசீலாவின் சிறுகதை – “ஊர்மிளை”

எம்.ஏ. சுசீலா சிறந்த ரசனை உள்ள வாசகி. முன்னாள் தமிழ் பேராசிரியை. தமிழ் பேராசிரியையாக இருந்தும் நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு உள்ளவர். (இது ஒரு முரண்பாடு என்று கல்லூரி தமிழ் பேராசிரியர்(யை)களோடு பழக்கம் உள்ளவர்கள் சொல்கிறார்கள்). டோஸ்டோவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை சமீபத்தில் “அசடன்” என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார். சிறப்பான மொழிபெயர்ப்பு என்று ஜெயமோகனே (வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!) சிலாகித்திருக்கிறார்.

அவரது சிறுகதை ஒன்று சமீபத்தில் தினமணியில் வெளியாகி இருக்கிறது. ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியதன் மறுவாசிப்பு இந்தக் கதை. என் கண்ணில் இது சுமாரான கதையே. குறிப்பாக நடை மீது எனக்கு விமர்சனம் உண்டு. இப்படி எழுதுவதால் சுசீலா மேடம் மனம் வருந்தமாட்டார் என்பதுதான் எங்கள் நட்பின் பலம். ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு வெளிச்சம் வேண்டும் என்று நான் கருதுகிறேன். இருநூறு முன்னூறு பேர் படிக்கும் என் ப்ளாகில் குறிப்பிட்டால் என்ன வெளிச்சம் வந்துவிடப் போகிறது என்று ஒரு கேள்வியும் உண்டு. 🙂 ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ள, எழுதும் ஆர்வம் உள்ள ஒரு கூட்டம் உருவாகி இருப்பது நல்ல விஷயம், ஜெயமோகனுக்கும் அரங்கசாமிக்கும், ராமுக்கும் நன்றி!

தொடர்புள்ள சுட்டிகள்:
எம்.ஏ. சுசீலாவின் தளம்
எம்.ஏ.சுசீலாவின் “தேவந்தி” – படிக்க விரும்பும் புத்தகம்