நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம் ஏழாம் உலகம். திலீப்குமாரின் மனைவி அதை என் கையில் கொடுக்கும்போதே சொன்னார், இது depressing ஆக இருக்கும், ஆனால் கீழே வைக்க முடியாது என்று. சரியாகத்தான் சொன்னார். ஆனால் எனக்கு அதைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சியும் ஏற்பட்டது. வாழ்க்கை என்பது அற்புதமான விஷயம், உருப்படிகளுக்குக் கூட என்பது தெரிந்தது. அப்புறம் ரப்பரைப் படித்தேன். நல்ல நாவல், ஆனால் முழு வெற்றி இல்லை என்று தோன்றியது. பிறகு படித்த கன்யாகுமரி எனக்கு சரிப்படவே இல்லை. ஏற்கனவே விஷ்ணுபுரத்தின் சைஸ் பயமுறுத்தியதால் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், கன்யாகுமரி எல்லாம் படித்த பிறகு படிப்பதற்கான உந்துதலும் குறைவாகத்தான் இருந்தது. அப்புறம் வழக்கம் போல ஒரு நீளமான விமானப் பயணத்தில் விஷ்ணுபுரத்தைப் பிரித்தேன்.
ஆரம்பித்த சில பக்கங்களுக்குள் பெரிய பிரமிப்பில் மூழ்கிவிட்டேன். புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. நான் படித்த தமிழ் புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று. படிக்கும்போதே ஜெயமோகன், அசோகமித்திரன் மற்றும் புதுமைப்பித்தன் லெவலுக்கு என் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
ஆனால் புத்தகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகும் நான் விஷ்ணுபுரத்தின் பக்கம் போகவே இல்லை. கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்திருக்கிறேனே தவிர, இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை, எத்தனையோ நுட்பமான இடங்களை கவனிக்கத் தவறிவிட்டேனோ என்று ஒரு சந்தேகம்.இப்படி எல்லாம் சந்தேகப்படுபவனே இல்லை, அப்படியே அபூர்வமாக சந்தேகம் வந்தாலும் அதைப் பொருட்படுத்தவும் மாட்டேன். ஆனால் விஷ்ணுபுரத்தைப் பற்றி எழுதும் அளவுக்கு எனக்குப் பத்தாது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. விசுவின் பதிவுகளைப் படிக்கும்போது அந்த எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.
விஷ்ணுபுரத்தைப் பற்றி நல்ல மதிப்புரைகள் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் எழுதியது மதிப்புரையே கிடையாது. அது என் பிரமிப்பைப் பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான். பா.ராகவனின் மதிப்புரையை ஸ்ரீனிவாசின் உதவியோடு இங்கே பதித்திருக்கிறேன், ஆனால் அதுவும் நல்ல மதிப்புரை இல்லை. பாராட்டுபவர்களை, திட்டுபவர்களை, இந்தா தடிதடியா எழுதினா எவன் படிப்பான் என்று அலுத்துக் கொள்பவர்களை பார்த்திருக்கிறேன். சீர்தூக்கிப் பேசியவர்கள் அபூர்வம். நண்பர் பாலாஜி ஒரு முறை இஸ்லாமியத் தாக்கம் பற்றி பேசாததால் நாவல் முழுமை அடையாதது போல இருக்கிறது என்று சொன்னார், நான் கேட்ட ஒரே ஒரு உருப்படியான விமர்சனம் அதுதான். சரியோ தவறோ, அப்படியா என்று யோசிக்க வைத்த விமர்சனம்.
விசு அப்படி முயன்றிருப்பது முக்கியமான விஷயம். அதுவும் அனேகமாக எல்லாரும் கதைச்சுருக்கம் எழுதுவதிலேயே தாவு தீர்ந்து போய் அதற்கு மேல் தம் கட்ட முடியாமல் கிடுகிடுவென்று முடித்துவிடுவார்கள். விசு கதைச்சுருக்கத்தை ஒரு பகுதியாகப் பிரித்து இந்தப் பிரச்சினையைத் தாண்டி இருப்பது புத்திசாலித்தனமான விஷயம். விசுவின் பதிவுகளும் அப்படி முழுமையானவை அல்லதான். ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாரும் குருடர்கள் யானையத் தடவிப் பார்த்து புரிந்து கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் அவர் பகுதி பகுதியாகப் பிரித்தது நல்ல முயற்சி. வரலாறு, தத்துவம், கவித்துவம், காவிய மரபு, மொழி, கதாபாத்திரங்கள் என்று ஒரு taxonomy-ஐ உருவாக்கி இருக்கிறார். அப்படி பகுப்புகளை ஆரம்பித்து வைத்திருப்பதையே நான் விசுவின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.
குறிப்பாகச் சொல்வதென்றால் தத்துவம் என்ற பகுப்பில் விசு எழுதியது எனக்கு மிகவும் பிடித்த பதிவு. சிறப்பான ஆரம்பம்.
எனக்கு இன்றும் விஷ்ணுபுரம் அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆடும் ஆட்டத்தை விவரிப்பதுதான் முக்கியமான கூறு. அநேகமானவர்களுக்கு தத்துவ விவாதங்கள்தான் முக்கியம். எனக்கோ தத்துவம் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு பத்தாது. தர்க்கத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. தர்க்கத்தில் குறைகள் இருக்கின்றனதான், ஆனால் அதை விட சிறந்த கருவி நம்மிடம் இல்லை. தர்க்கத்தில் குறை இருக்கிறதே, அதனால் நான் தர்க்கத்தை பயன்படுத்த மாட்டேன் என்பதெல்லாம் எனக்கு பரம முட்டாள்தனமாகவே தெரிகிறது. குறை இல்லாத கருவி கிடைக்கும் வரைக்கும் நான் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருப்பேன் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. Occam’s Razor எப்போதாவது நம்மைத் தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லும் சாத்தியக் கூறு இருக்கிறதுதான், அதற்காக அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. Godel’s Incomplete Theorem எல்லா உண்மைகளையும் ஒரு axiom based system நிறுவ முடியாது என்பதை நிறுவுகிறது, அதனால் கணிதத்தைத் தூக்கிப் போட்டு விடுவோமா? அப்படிப்பட்ட நானே விஷ்ணுபுரத்தின் தத்துவ விவாதங்களை நான் ரசித்துப் படித்தேன். எனக்குப் புரியாத இடங்கள் இருந்தனதான். ஆனால் புரியும்போதெல்லாம் தர்க்கம் என்ற முறையின் வெளிப்படுத்துதலை ரசித்தேன். தத்துவ விவாதங்களில் பெரிதாக அக்கறை இல்லாத என்னையே இப்படி கட்டிப் போட்டது ஜெயமோகனின் சாதனை!
ஜெயமோகனே புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை தன் ஆரம்பப் புள்ளி என்று சொல்லி இருக்கிறாராம். எனக்கு விசு மூலம்தான் தெரியவந்தது. அதற்காகவும் ஒரு ஸ்பெஷல் நன்றி!
விசுவின் பதிவுகளின் மீது எனக்கு விமர்சனம் என்று மூன்று உண்டு.
- ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் போகப் போக கொஞ்சம் குறைந்து விடுகிறது. பிந்தைய பதிவுகளில் விசு கொஞ்சம் களைத்துவிட்டது தெரிகிறது.
- விஷ்ணுபுரத்தில் வரலாற்றைத் தேடுவது என்னைப் பொறுத்த வரையில் வீண் முயற்சி. அப்படித் தேடுவதென்றால் தத்துவங்கள், சிந்தனா முறைகள் வளர்ந்த வரலாற்றைத்தான் பேச வேண்டும்.
- அதிகார ஆட்டம், தொன்மங்கள் உருவாவது போன்றவை விஷ்ணுபுரத்தின் முக்கியக் கூறுகள். அவற்றைப் பற்றி விசு இன்னும் விவரித்திருக்கலாம்.
உண்மையைச் சொல்லப் போனால் எல்லாமே குருடன் யானையைத் தடவி உணரும் கதைதான். ஒவ்வொருவரும் பேசும்போது இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்கிறேன். விசுவின் பதிவுகள் அளவுக்கு உபயோகமான அலசல் இன்னும் எனக்குத் தெரிந்து வரவில்லை. இனி மேல் வரும் அலசல்களும் அவர் உருவாக்கி இருக்கும் பகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
பின்குறிப்பு: ஜெயமோகன் முன்னிலையில் விஷ்ணுபுரத்தைப் பற்றி பல சீரியஸ் வாசகர்கள் கலந்து பேசும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் ஜெயமோகன் அதைத் தவிர்த்துவிட்டார். அது நடந்திருந்தால் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்!
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்
நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்ற லிஸ்டில் இருக்கும் புத்தகம்.. நீங்கள் இன்னும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்..
நட்புடன்
கவிதை காதலன்
LikeLike
கவிதை காதலன், படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை தவறாமல் எழுதுங்கள்!
LikeLike
நன்றி ஆர்.வி.
//உண்மையைச் சொல்லப் போனால் எல்லாமே குருடன் யானையைத் தடவி உணரும் கதைதான்.
வழிமொழிகிறேன். தேர்ந்த விமர்சகர்களின் அலசல், வாசகர் கருத்தரங்குகள் நடந்தால் மட்டுமே, இந்நாவலை, மேலும் உள்வாங்க முடியும். ஊட்டி முகாம் நடக்காமல் போனதும், முன்பு நடந்தவற்றை பற்றி பதிவுகள் இல்லாததும் வருத்தமே.
கபாடபுரம் கதை, கொற்றவை நாவலிலும் வருகிறது. [கடைசி சில பக்கங்களில், கதைசொல்லி, புதுமைப்பித்தனின் கபாடபுரத்தில் வருவதுபோல, கன்யாகுமரி கடலில் இறங்கி, குமரிக்கோட்டிற்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறான்.] கொற்றவை பற்றி ஒரு பதிவிடுங்கள் ஆர்.வி.
LikeLike
விசு, இன்னும் கொற்றவையைப் படித்து முடிக்கவில்லை. நீங்கள்தான் எழுதுங்களேன்! (திருப்பி ஆள் பிடிக்கும் முயற்சி. :-))
LikeLike
ஆகா 🙂 .. கொற்றவை பற்றி தமிழ் புலவர்களோ / பண்டிதர்களோ எழுதவேண்டும் ஆர்.வி. நான் புரிந்துகொண்ட அளவிற்கு ஒரு அறிமுகம் எழுதி அனுப்புகிறேன். (சுனிலுக்கு ஒரு கட்டுரை பல மாதங்களாக பெண்டிங்.. அதை அனுப்பிவிட்டு இதை எழுதுகிறேன்).
LikeLike
விசு, சீக்கிரம் கொற்றவை பற்றி அனுப்புங்கள், காத்திருக்கிறோம்…
LikeLike