கின்கைட், பரஸ்னிஸ் எழுதிய “எ ஹிஸ்டரி ஆஃப் த மராத்தா பீப்பிள்”

எனக்கு வரலாற்று ஆசிரியர்கள் மீது எப்போதும் ஒரு குறை உண்டு – அவர்கள் தருவது பரம்பரை, போர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே. ஜெயலலிதா எம்ஜிஆருக்கு அப்புறம் முதல்வர் ஆனாரா இல்லை முன்னாலா என்பதைத் தெரிந்து கொள்வதில் நாளைய தமிழனுக்கு என்ன லாபம்? எம்ஜிஆர் தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தார், சத்துணவு திட்டத்தை அமுல்படுத்தினார் மாதிரி விஷயங்கள்தான் முக்கியமானவை. ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில் “சாலையின் இரு புறமும் நிழல் தரும் மரங்களை நட்டார்” லெவலுக்கு மேல் இதையெல்லாம் பெரிதாகப் பேசுவதே இல்லை.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இன்னொரு குறையும் பெரிதாகத் தெரிந்தது. நமக்கு பள்ளிகளில் சொல்லித் தரப்படும் வரலாறு எல்லாம் உள்ளூர் பரம்பரைகள்/போர்கள்; அதை விட்டால் பேரரசுகளின் பரம்பரை/போர்கள். நமக்கு கேரளாவின் சேரமான்கள் பற்றியும் கர்நாடகத்தின் ஹொய்சலர்கள் பற்றியும் ஆந்திரத்தின் யாதவர்கள் பற்றியும் கூடத் தெரிவதில்லை. சாளுக்கியர்களைப் பற்றி நமக்குத் தெரிவதெல்லாம் பல்லவர்களின் எதிரி என்றுதான். அதுவும் கல்கி, சிவகாமியின் சபதம் மூலமாகத் தெரிந்து கொண்டதால்தான் மனதில் நிற்கிறது என்று நினைக்கிறேன். மாமல்லருக்கும் சாளுக்கியர்கள் எதிரி, ராஜராஜ சோழன் காலத்து சோழர்களுக்கும் அவர்கள் எதிரி, ஆனால் அதே நிலப்பரப்பில் இந்த இரண்டு எதிரிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் ராஷ்டிரகூடர்கள் ஆட்சி செய்தார்கள் என்றால் சாளுக்கியர்கள் நடுவில் ஒரு நூறு வருஷம் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள் என்று தெரிவதில்லை. பள்ளி மூலம் நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு Delhi-centric view மட்டுமே.

இந்தப் புத்தகம் மகாராஷ்டிரத்தைப் பொறுத்த வரை அந்தக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்கிறது. அந்த நிலப்பரப்பில் ஆட்சி செய்த மன்னர் பரம்பரைகளைப் பற்றி (சாதவாகனர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், மீண்டும் சாளுக்கியர்கள், பாமனி அரசு, அஹமத் நகர் சுல்தான்கள், சிவாஜி) விவரிக்கிறது. மத/ஆன்மீக நிகழ்வுகள், குறிப்பாக பக்தி இயக்கம், ஞானேஸ்வரர், பண்டரிபுரம், நாமதேவர், சமர்த்த ராமதாஸ், துகாராம் போன்றவர்களின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. கலை சாதனைகளைப் பற்றி ஓரளவு எழுதுகிறார். சிவாஜியின் மீது ராமதாசின் தாக்கத்தைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். சமயத்தில் தொன்மங்களைப் பற்றி கூட பேசுகிறார். அங்கங்கே கதை கேட்பது போல இருக்கிறது.

கின்கைடுக்கு இந்தியர்கள் மீது, குறிப்பாக சிவாஜி மீது பெரும் மதிப்பு இருக்கிறது. மேலை நாட்டவரிடம் சில சமயம் காணப்படும் உயர்வு மனப்பான்மை இந்தப் புத்தகத்தில் தெரியவில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிவாஜியைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் முகலாய ஆவணங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டு சிவாஜியைப் பற்றி “இழிவாக” எழுதி இருப்பதாகத் தெரிகிறது. (அஃப்சல் கானை கொன்ற விதம் இத்யாதி) கின்கைடுக்கு முன்னாலேயே மகாதேவ கோவிந்த ரானடே போன்றவர்கள் மாற்றுக் கருத்துகளை முன் வைத்திருக்கிறார்கள். கின்கைடும் மிகவும் ஆணித்தரமாக சிவாஜி உத்தமரே என்று வாதிடுகிறார். இதுதான் இந்தப் புத்தகத்தின் சரித்திர முக்கியத்துவம் என்று நினைக்கிறேன். 1918-இல் புத்தகம் வெளி வந்திருக்கிறது, அப்போது இது முக்கியமான பங்களிப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

சிவாஜி ஹிந்து மதத்தைக் காப்பாற்ற போராடினார் என்ற வாதத்தை கின்கைடும் முன் வைக்கிறார். ஆனால் சிவாஜி அதிகாரத்துக்காக, பதவிக்காகப் போராடினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் முகலாய, பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகளை வெல்ல முயலவில்லை. தனக்கும் ஒரு அரசு வேண்டும், பலம் வாய்ந்த முகலாய அரசோடு போரிட பீஜப்பூரும், கோல்கொண்டாவும் தனக்குத் தேவை என்று உணர்ந்திருந்தார். அவற்றை பலவீனமான நிலையில், ஆனால் உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருக்கிறார். சிவாஜியின் வாழ்க்கை முழுதுமே முகலாயர்கள், பீஜப்பூர், சிவாஜி மூவரும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் எதிர்த்தும் ஆதரித்தும் அதிகாரத்தை பெருக்க எடுத்த முயற்சிகள்தான். முஸ்லிம்களோடு, முஸ்லிம் அரசுகளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற நிலையில்தான் இருந்திருக்கிறார். அவுரங்கசீப்பைத் தவிர்த்த அநேக முஸ்லிம் அரசர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்பது புத்தகத்திலிருந்து தெரிகிறது.

கின்கைட் (Charles Augustus Kinkaid) அன்றைய பாம்பே மாகாணத்தில் நீதிபதியாக இருந்தவர். புத்தகத்தின் இன்னொரு ஆசிரியரான பரஸ்னிஸ் (Dattaray Balwant Parasnis) மராத்தியர். அவரிடம் நிறைய ஆவணங்கள் இருந்திருக்கின்றன. கின்கைட் அவர் உதவியோடுதான் எழுதி இருக்கிறார். ஆங்கிலப் புத்தகம் என்பதால் இந்தப் புத்தகத்தை காகிதத்தில் ஆங்கில எழுத்துகளில் “எழுதியது” கின்கைட்தான்.

புத்தகத்தைப் படிக்கும்போது மீண்டும் மீண்டும் சாண்டில்யனை நினைத்துக் கொண்டேன். அவரால்தான் இந்தியாவின் பிற லோகல் அரசுகளைப் பற்றி ஓரளவாவது (பேராவது) எனக்குத் தெரிய வந்திருக்கிறது. இந்தப் புத்தகமும் ஜலதீபத்தின் reference-களில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டதால்தான் படித்தேன்.

முகலாயர், பீஜப்பூர், கோல்கொண்டா காலத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மை இருந்தது தெரிகிறது. இடை விடாத போர்கள்தான், ஆனால் போர்கள் கோட்டைகளின் பக்கத்தில், தலைநகரத்தின் அருகே நடந்தது போலத் தெரிகிறது. சாதாரண தொழிலாளி/வியாபாரி/விவசாயிக்கு பெரிய பாதிப்பு இருந்திருக்காது. சிவாஜி காலத்திலிருந்தே தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற ஆட்சி முறை ஆரம்பம் ஆகி இருக்கிறது. சிவாஜி சூரத் நகரத்தை சூறையாடியது ஒரு inflection point என்று தோன்றுகிறது. சிவாஜி காலத்தில் படைகள் கட்டுப்பாட்டில் இருந்தன, ஆனால் சிவாஜிக்குப் பிறகு நகரங்களில் புகுந்து கொள்ளை அடிப்பது மராத்தியர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டிருக்கிறது. சிவாஜிக்கு பிற்பட்ட வரலாறு என்பது மராத்தியப் பிரபுக்களின் power jockeying ஆகத்தான் இருக்கிறது. பலவீனமான முகலாய அரசு, பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகளின் இறப்பு எல்லாம் இப்படி நடப்பதற்கு இன்னும் காரணங்களாக இருந்திருக்கின்றன. வருஷத்துக்கு இரண்டு மூன்று முறை குதிரைப்படை கிராமம் வழியாகப் போகும் என்றால் விவசாயிக்கும் சிறு தொழிலாளிக்கும் எக்கச்சக்க பிரச்சினையாக இருந்திருக்க வேண்டும்.

கனோஜி ஆங்கரேயின் கடல் ஆதிக்கத்தைத் தொடராமல் விட்டது மராத்தியர்களின் பெரிய குறை. இத்தனைக்கும் சிவாஜி காலத்திலிருந்தே ஜன்ஜீராக் கோட்டை யாராலும் கைப்பற்ற முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது, அதனால் கடற்படையின் முக்கியத்துவத்தை மராத்தியர்கள் உணராமல் இருந்திருக்க முடியாது. அரபிக் கடலை மராத்தியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மேலை நாடுகள் இந்தியாவை ஆக்கிரமித்தது குறைந்த பட்சம் தள்ளிப் போயிருக்கும்.

இணையத்தில் மூன்று பகுதிகளும் (1, 2, 3) கிடைக்கின்றன. முதல் பகுதி சிவாஜியின் மறைவு வரை. இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாம் பகுதி சாம்பாஜி, சத்ரபதி ஷாஹு மகராஜின் காலம். மூன்றாம் பகுதி பேஷ்வாக்களின் ஆட்சி முடிவடைவது வரை.

சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்.

2 thoughts on “கின்கைட், பரஸ்னிஸ் எழுதிய “எ ஹிஸ்டரி ஆஃப் த மராத்தா பீப்பிள்”

  1. ஆர்.வி – நல்ல அறிமுகத்துக்கு நன்றி. சில மாதங்களுக்கு முன் தென் தமிழக வரலாற்றியல் பற்றிய நல்லதொரு புத்தகத்தைப் படித்தேன்.

    http://www.flipkart.com/textures-time-8178241730/p/itmdyug5yydazaky?pid=9788178241739&_l=XSQwWGOaCHdDym9iqu9MRQ–&_r=y5Ad82tymfgUARKu1ORt5Q–&ref=a8600a23-fb93-40af-9ebf-a65b2fd51178

    Like

    1. கிரிதரன், புத்தக விவரங்களுக்கு நன்றி! முடிந்தால் ஹிஸ்டரி ஆஃப் த மராத்தா பீப்பிள் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.