ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமியின் முன்னுரை

ஒரு புளியமரத்தின் கதை எனக்குப் பிடித்த தமிழ் நாவல்களில் ஒன்று. முதல் முறை படிக்கும்போது இது உலக சாதனை என்று நினைத்தேன். இப்போது கொஞ்சம் மார்க்கை குறைத்துவிட்டாலும் நல்ல நாவல்தான். வள்ளியூர்க்காரனான பக்ஸ் இதைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறான்.

அழியாச்சுடர்கள் தளத்தில் சுந்தர ராமசாமி இதற்கு எழுதிய முன்னுரையைப் பிரசுரித்திருந்தார்கள். சிறப்பான முன்னுரை. குறிப்பாக இந்தப் பகுதி:

அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரி கடலைக்காரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். மேலே இருந்து பார்க்கையில் முறத்தில் பொரிகடலைக் குவியல்மீது அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பது போல் தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்ததால் அவள் என் மனசில் இடம் பெற்றாள். கொழகொழவென்று வெற்றிலைச் சாறு தளும்பும் வாயுடன், தலையில் கனகாம்பர மூட்டையுடன், பெரிய பொட்டுடன், மலிவான அலங்காரங்களுடன், செயற்கைக் கவர்ச்சிகளுடன், ‘இது என் தொழில் அல்ல; உப தொழில்’ எனப் போடாமல் போடும் கோஷத்துடன், சிரிப்பும் வசையுமாக, கண்களால் ஆண்மையை அவ்வப்போது சீண்டியபடி இருப்பாள். அவளுக்கு இந்நாவலில் முக்கிய பங்கு அளிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு அத்தியாயத்தில் அவளை அறிமுகப்படுத்தியும் வைத்தேன். கூலி ஐயப்பனின் காதலியாகவோ, சகோதரியாகவோ, மாமியாராகவோ பின்னால் வளர்த்திக்கொண்டு வரவேண்டுமென்று யோசித்திருந்தேன். அடித்துத் திருத்திக் கிழித்துப்போட்டுத் திரும்ப எழுதிய பக்கங்களின் அவஸ்தையில் அவள் எப்போது நழுவி வெளியே விழுந்தாள் என்பதே தெரியவில்லை.

நாலைந்து கதை எழுதிய எனக்கே இப்படி நடந்திருக்கிறது. 🙂

படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுந்தர ராமசாமி பக்கம்