அவுரங்கசீப் மற்றும் நந்தன் கதை – இந்திரா பார்த்தசாரதியின் இரு நாடகங்கள்

இ.பா. என் மனத்தை அவ்வளவாகக் கவர்வதில்லை. அவருடைய படைப்புகளில் சிறந்ததாக நான் கருதும் கிருஷ்ணா கிருஷ்ணா கூட உலக மகா படைப்பு இல்லை.

ஆனால் தமிழ் நாடக உலகில் இ.பா.வின் பங்களிப்பு பெரியது என்பதை நானும் மறுக்க முடியாது. நாடகம் என்ற வடிவத்தின் சாத்தியங்களை இ.பா. உணர்ந்திருக்கிறார். குறிப்பாக நந்தன் கதை. நந்தன் கதையை நான் படிக்கும்போது கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நாடகத்தின் வீடியோவைப் பார்த்து அசந்து போய்விட்டேன். நான் பார்த்த சிறந்த தமிழ் நாடகங்களில் ஒன்று. வசனங்களின் சந்தமும், சிறந்த நடிப்பும், இசையை பயன்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. இது பார்க்க வேண்டிய நாடகம், படிக்க வேண்டியது இல்லை. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

ஆனால் நந்தன் நந்தனாராக விரும்பி தன் பறையன் என்ற அடையாளத்தைத் தொலைத்தான், அப்படி தொலைத்ததன் விளைவாகக் கொல்லப்பட்டான் என்பதெல்லாம் எனக்கு சரிப்படுவதில்லை. என் அடையாளம் என்ன என்பதை இ.பா.வா சொல்ல முடியும்? நந்தன் “கொலை” ஒரு சதி என்பது எனக்கு cliche ஆகத்தான் தெரிகிறது. என்னை எந்த விதத்திலும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்பு இல்லை. (இ.பா.வின் படிப்புகளைப் பற்றி என்னுடைய முக்கியமான விமர்சனமே அதுதான் – புத்தகத்தை மூடி வைத்த பிறகு மனதில் எந்த சலனமும் இருப்பதில்லை; புத்தகம் திறந்திருக்கும்போது கூட அப்படித்தான்.)

அவுரங்கசீப் நாடகமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. அவுரங்கசீப்-தாரா ஷூகோ வாரிசு சண்டையை முக்கியக் கருவாக வைத்து மதங்களின் தன்மை, ஷாஜஹானின் தனிப்பட்ட கட்டிடக் கனவு vs மக்களுக்கு அதனால் ஏற்படும் வரிச்சுமை, இசை இல்லாத வாழ்வின் வெறுமை என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறார். ஒரு வாசகனுக்கு புதிதாக என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றுமே இல்லை. பார்த்தால் என் அபிப்ராயம் மாறலாம், இ.பா. நாடகத்தின் சாத்தியங்களை உணர்ந்த அளவுக்கு எனக்குத் தெரியாது…

இ.பா. தமிழ் நாடக உலகில் சாதனையாளர்தான். கிரேசி மோகன்களும் எஸ்.வி. சேகர்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் நாடக உலகில் அவர் பங்களிப்பு பெரியதுதான். ஆனால் தமிழில் உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை எழுதி இருப்பது சுஜாதாவும், சோ ராமசாமியும்தான். சோவின் கோமாளி அடையாளம் அவரது பங்களிப்பை மறைத்துவிடுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திரா பார்த்தசாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: இ.பா.வின் இன்னொரு நாடகம் – ராமானுஜர்