சுப்ரமணிய ராஜு எழுதிய சிறுகதை – நாக்கு

தெலுங்கிலிருந்து பல நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் கௌரி கிருபானந்தன் இந்த சிறுகதையை அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நன்றி!

நான் எழுதிய முதல் சிறுகதை (இப்போது காப்பி இல்லை) ஏறக்குறைய இதே மாதிரிதான் முடியும். பழைய நினைப்புடா பேராண்டி, பழைய நினைப்புடா!

நாக்கு – சுப்ரமணியராஜு

“வெங்கடேசன் இருக்காரா?’
“இன்னும் ஆபீசிலிருந்தே வரலியே! உள்ளே வாங்க!” என்று என்னை வரவேற்றாள் வெங்கடேசனின் மனைவி.
“பரவாயில்லை. நான் அப்புறம் வரேன். போன வாரம் நான் வந்துட்டுப் போனதை சொன்னீங்களா?”
“சொன்னேன். எப்படியும் இந்த மாதக் கடைசிகுள்ளே குடுத்துடறேன்னு சொல்லச் சொன்னாங்க. உங்க மனேஜர் கிட்ட சொல்லி நீங்கதான் எப்படியாவது கொஞ்சம் போருத்துக்கச் சொல்லணும்.”
“அவரு நம்ப மாட்டாரு. இதோட நீங்களும் பத்துப் பதினைஞ்சு தடவைக்கு மேல் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”
“இல்லை. இந்த தடவை மட்டும் எப்படியும் நிச்சயம் குடுத்துடுவார். இப்ப ஒரு இடத்தில் டேம்பரரியா வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தயவு செய்து போருத்துக்கச் சொல்லுங்க.”
நான் தெருவில் இறங்கி நடந்தேன். வெங்கடேசனின் மனைவியை பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஒவ்வொரு தடைவையும் எனக்கு அவள்தான் பதில் சொல்கிறாள். வெங்கடேசன் வீட்டுக்குள் இருதாலும் இல்லையென்று போய் சொல்கிறான். அவர் இல்லாத போதும் அவருக்காகக் என்னிடம் மன்னிப்புக் கோருகிறாள்.
கோபாலன் எங்கள் ஆபீஸின் பிராஞ்ச் மனேஜர். ரொம்பவும் கண்டிப்பானவர். வாழ்க்கையில் பல படிகளைக் கடந்து வந்தவர். அதனாலேயே எல்லோரும் அப்படியே வர வேண்டும் என்று நினைப்பவர். காலையில் சரியாக ஒன்பது மணிக்கி ஆபீசுக்கு வந்தாரானால் மலை ஐந்து வரை வேறு எதைப் பற்றிய சிந்தனையையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அவருக்குச் சரியாக ஓடவேண்டும். மூன்று மாதத்திற்கு முன் ஒரு நாள் என்னைக் கோபாலன் அழைத்தார்.
‘”உட்கார்! உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்.”
உட்கார்ந்தேன். உடம்பில் ஒரு விதமான் குறுகுறுப்பு ஏற்பட்டது. கோபாலன் முகம் இவ்வளவு சாந்தமாக இருந்து நான் பார்த்ததில்லை.
“நீ க்ரோம்பெட்டையிலிருந்தா வருகிறாய்?”
“எஸ் சார்!”
“ஒன்றுமில்லை. அங்கே துரைராஜ் தெரு ஆறாம் நம்பர் வீட்டில் வேங்கடேசன்னு ஒருத்தன் இருக்கான். அவன் எனக்கு ஒரு ஐநூறு ரூபாய் பணம் தரணும். ரொம்ப நாளா ஏமாத்திண்டு வரான். அவனைப் போய் நீ பார்க்கணும்.”
“வெறுமன போய் பார்த்தா போராது. நாலு வார்த்தை அவனை சூடாக் கேட்கணும். உன்னை அலைக்கழிப்பான். விடாம் போயிண்டே இருந்தாத்தான் தருவான். புரிஞ்சுதா?”
“சரி, சார்!”
அன்று ஆரம்பித்த இந்த வசூல் படலம் இன்று வரை தொடருகிறது. வெங்கடேசன் வெகு நாட்களாய் வேலை ஏதும் இல்லாதவர். அப்படியே எங்கேயாவது வேலை கிடைத்தாலும் அங்கு மூன்று மாதத்திற்கு மேல் அவர் இருப்பதில்லை. ஊரில் அவர் பாக்கி வைக்காத இடம் பாக்கியில்லை. இரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்புகிறார். இவருக்காகக் காத்திருக்கும் கடன்காரர்கள் சோர்ந்து போய் வீடு திரும்பிய பின்தான் இவர் வந்து சேருவார். அவரை இதுவரை என்னால் ஒரு தடவைதான் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் வீட்டுக்குப் போய் வந்த பின், கோபாலனிடம் வேறு நான் திட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். எதிர்த்துப் பேசினால் வேலை போய் விடும்.
ஒரு நாள் வெங்கடேசனை அதி காலையில் பிடித்து விட்டேன்.
”வாங்கோ! உள்ளே வாங்கோ!” என்று வாய் நிறைய வரவேற்றார். நான் தயங்கிய படியே உள்ளே நுழைந்தேன். அவருடைய பெண்களும், பிள்ளை களும் கூடத்தில் வரிசையாகக் மறுநாள் பற்றிய கவலையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பேச்சை ஆரம்பிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. வெங்கடேசன் சிறிதும் தயக்கமின்றி, “சொல்லுங்கோ” என்றார்.
“ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம்னு தான் வந்தேன். கோபாலன் என்னைக் கொவிச்சுக்கறார்.”
“பாவம்! அவர் ரொம்ப நல்லவர். சரியான் நேரத்தில் பணம் கொடுத்து உதவினார். இந்தப் பணம் அவர் கிட்ட எதுக்கு வாங்கினேன் தெரியுமா உங்களுக்கு?”
நான் அவை நிமிர்ந்து பார்த்தேன்.
“என் மனைவிக்குப் பிரசவ டைம். கையில் காலணா இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிட்டேன். கோபாலனைப் போய்ப் பார்த்தேன். உடனே குடுத்து உதவினார். ஒரு வருஷம் ஆயிடுத்து. அதோ, அந்த கொடியில படுத்துண்டு இருக்காளே, அவதான் கடைசிப் பொண்ணு! ரொம்ப தங்கமான மனுஷன்!”
“ஆனால் தினமும் ஆபீஸ்ல என்னைக் கொவிச்சுக்கிறார் சார்.”
‘நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ. எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் இல்லை. ஒவ்வொரு நாளையும் தள்ளறதே கஷ்டமாக இருக்கு. பாருங்கோ, நேத்திக்கு குழந்தைகள் யாருமே சாப்பிடலை. நான் வரும்போது பத்து இட்டிலி வாங்கிண்டு வந்தேன்.எல்லாம் காக்கா மாதிரி விழுந்து பிடுங்கி தின்றதுகள். பார்க்கவே கஷ்டமாக இருக்கு. ஒரு காலத்தில் எங்க தாத்தா எல்லாம் ரொம்ப வசதியா இருந்தவா. ஒவ்வொரு நாளும் கொறஞ்சது பத்து அசலூர் காரா வந்து சாப்பிட்டு விட்டுப் போவா! இன்னும் நன்னா ஞாபகம் இருக்கு. எங்க அப்பா எனக்குத் தடைபுடலாக் கல்யாணம் பண்ணினார். என் பெண்டாட்டி வந்து ஒரு வருஷம் கூட ஆகலை. ஒரு நாள் என்னைக் கேட்டா, “இது என்ன சத்திரமா! ஊர்ல இருக்கிற அன்னக்காவடிகெல்லாம் சோறு போட?” அப்படின்னு. அவ்வளவுதான். இப்ப நாங்களே அன்னக்காவடி ஆயிட்டோம். அத்தனை நிலமும், சொத்தும் எப்படிப் போச்சுன்னே தெரியலே. இப்ப பிச்சக்காரன் மாதிரி அலையறேன். உங்க மனேஜர் கோபாலனை எனக்கு எப்படித் தெரியும்னு உங்களுக்குத் தெரியுமோ? அவனோட அப்பா எங்க கிராமத்திலே எங்க நிலத்தை எல்லாம் மேற்பார்வை பார்க்கிறவர். இப்ப கோபாலன் பெரிய ஆளாயிட்டான்! என்னோட கஷ்டம் அவனுக்கு நல்லாத் தெரியம். இருந்தாலும் போட்டு நெருக்கறான்.”
என்னால் பதில் பேச முடியவில்லை. அந்தக் குழந்தைகளை ஒரு தடவை திரும்பிப் பார்த்தேன். காலையில் எழுந்தவுடன் மறுபடி அதுகளுக்கு பசிக்கும். அப்பாவைப் பிடுங்கும்.
“சார்! நீங்க கொவிச்சுக்கலேன்னா நான் ஒன்று சொல்லாட்டுமா?”
‘சொல்லுங்கோ”
“இன்னிக்கி உங்க ஓய்பையும் குழந்தைகளையும் அழைச்சுண்டு எங்க வீட்டுக்கு சாப்பிட வரீங்களா?”
“வேண்டாம். உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
“பரவாயில்லை சார்! எனக்கென்னமோ நீங்க ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டா திருப்தியா இருக்கும்.”
“சரி, வரேன்!”
“இன்னிக்கே வரீங்களா?”
“வரேன்.”
ஆபீசுக்கு போனவுடன் அக்கௌண்டண்டிடம் ஐநூறு ரூபாய் அட்வான்ஸ் கேட்டு ஒரு வின்னபத்தைக் கொடுத்தேன். உடனே கைழெத்திட்டுக் கொடுத்தார். பணத்தை வாங்கிக் கொண்டு நேராக் கோபாலனின் அறைக்குப் போனேன்.
“என்ன? வேங்கடேசனைப் பார்த்தியா?”
“பார்த்தேன் சார். குடுத்துட்டார்!”
“என்னது? பணமா?”
“ஆமாம் சார்!” பாக்கெட்டிலிருந்து அந்த ஐநூறு ரூபாயை எடுத்து அவர் மேஜை மேல் வைத்தேன். கோபாலனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
“எப்படிக் குடுத்தான்? ஏதாவது சொன்னானா? பாவம்! நல்லவன்தான். அவன் போறாத வேளை! அவன் குடும்பம் எல்லோருக்கும் குடுத்தே அழிஞ்சு போச்சு. அவனோட அப்பா தன்னோட நிலத்தில் விளைச்சல் இல்லேன்னாலும் கடன் வாங்கி தானம் பண்ணுவார். அதுக்காக நாம்பளும் அப்படியே இருக்க முடியுமோ? அப்புறம் இந்த வேங்கடேசனைப் போல் நடுத் தெருவில் நிக்க வேண்டியதுதான்!” என்று சொல்லிக்கொண்டே பணத்தைப் பையில் பத்திர படுத்திக் கொண்டார்.
அன்று இரவு வெங்கடேசன் தன் குடும்ப சகிதமாய் என் வீட்டுக்கு சாப்பிட வந்தார். என் மனைவி லலிதா கிட்டதட்ட ஒரு விருந்து மாதிரி அமர்க்களப் படுத்தி விட்டாள்.
சாப்பாடு முடிந்து அவர்களை வழியனுப்ப வெளியே வந்த போது வெங்கடேசனிடம் விஷயத்தைச் சொன்னேன்.
“உங்களால் எப்ப முடியுமோ அப்ப எனக்குத் திருப்பிக் குடுங்க போதும். எனக்கும் உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்த தொந்தரவு குடுக்க கஷ்டமாயிருதது. அதனால் தான் ஆபீஸ்ல நானே அட்வான்ஸ் போட்டு வாங்கிக் குடுத்துட்டேன். நீங்களே பணத்தைத் திருப்பிக் குடுத்துட்டீங்கன்னு அவர் கிட்ட சொல்லிட்டேன். அவரை எப்பவாவது பாத்தீங்கன்னா இதைப் பத்தி ஒன்னும் சொல்லிடாதீங்க. அப்ப நான் வரட்டுமா!”
வெங்கடேசன் குரல் தழுதழுக்க காலில் விழாத குறையாக ஏதேதோ பேசினார். அவரைச் சமாதானப் படுத்திவிட்டு வீட்டுக்குத் திரும்புவதற்குள் பெரும்பாடாகி விட்டது. எனக்குச் சந்தோஷமாக இருந்தது. ஏதோ என்னாலும் ஒருத்தருக்கு உதவ முடியும் என்கிற தன்னபிக்கையில் உடம்பு புல்லரித்தது.
உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தேன்.
“என்ன லலிதா? பேசாமல் இருக்கே? இந்த மாதிரி பசிக்கிறவங்களுக்குச் சாதம் போட்டா ஒரு சந்தோஷம் வரலை?”
“ம்……”
“என்ன, சுவாரசியமே இல்லாம இருக்கே?”
“சந்தோஷம்தான். ஆனா ஏதோ ஒரு தடவை போட்டா சரிதான். அப்புறம் இதுவே பழக்கம் ஆயிடும்.”
“நீ என்ன சொல்றே?”
“இவாள்ளாம் ஒட்டுண்ணிகள் மாதிரி. யாராவது கிடைக்க மாட்டாளான்னு காத்துண்டு இருப்பா. உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சாப் போதும். அப்படியே ஒட்டிண்டு விடுவா. நம் என்ன, சத்திரமா வெச்சுண்டு இருக்கோம், ஊர்ல பட்டினியா இருக்கிறவாளையெல்லாம் கூட்டி விருந்து படைக்க?”
கல்யாணம் ஆன இந்த இரண்டு வருடத்தில் அன்றுதான் முதன்முதலாய் என் மனைவியைக் கை நீட்டி அடித்தேன்.

“இன்று நிஜம்” கதைத் தொகுப்பு, சுப்ரமணியராஜு , நர்மதா பதிப்பகம், முதல் பதிப்பு ஜூலை 1985

விசுவின் விஷ்ணுபுரம் பதிவுகள்

நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம் ஏழாம் உலகம். திலீப்குமாரின் மனைவி அதை என் கையில் கொடுக்கும்போதே சொன்னார், இது depressing ஆக இருக்கும், ஆனால் கீழே வைக்க முடியாது என்று. சரியாகத்தான் சொன்னார். ஆனால் எனக்கு அதைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சியும் ஏற்பட்டது. வாழ்க்கை என்பது அற்புதமான விஷயம், உருப்படிகளுக்குக் கூட என்பது தெரிந்தது. அப்புறம் ரப்பரைப் படித்தேன். நல்ல நாவல், ஆனால் முழு வெற்றி இல்லை என்று தோன்றியது. பிறகு படித்த கன்யாகுமரி எனக்கு சரிப்படவே இல்லை. ஏற்கனவே விஷ்ணுபுரத்தின் சைஸ் பயமுறுத்தியதால் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், கன்யாகுமரி எல்லாம் படித்த பிறகு படிப்பதற்கான உந்துதலும் குறைவாகத்தான் இருந்தது. அப்புறம் வழக்கம் போல ஒரு நீளமான விமானப் பயணத்தில் விஷ்ணுபுரத்தைப் பிரித்தேன்.

ஆரம்பித்த சில பக்கங்களுக்குள் பெரிய பிரமிப்பில் மூழ்கிவிட்டேன். புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. நான் படித்த தமிழ் புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று. படிக்கும்போதே ஜெயமோகன், அசோகமித்திரன் மற்றும் புதுமைப்பித்தன் லெவலுக்கு என் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஆனால் புத்தகங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகும் நான் விஷ்ணுபுரத்தின் பக்கம் போகவே இல்லை. கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் படித்திருக்கிறேனே தவிர, இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை, எத்தனையோ நுட்பமான இடங்களை கவனிக்கத் தவறிவிட்டேனோ என்று ஒரு சந்தேகம்.இப்படி எல்லாம் சந்தேகப்படுபவனே இல்லை, அப்படியே அபூர்வமாக சந்தேகம் வந்தாலும் அதைப் பொருட்படுத்தவும் மாட்டேன். ஆனால் விஷ்ணுபுரத்தைப் பற்றி எழுதும் அளவுக்கு எனக்குப் பத்தாது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. விசுவின் பதிவுகளைப் படிக்கும்போது அந்த எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

விஷ்ணுபுரத்தைப் பற்றி நல்ல மதிப்புரைகள் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் எழுதியது மதிப்புரையே கிடையாது. அது என் பிரமிப்பைப் பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான். பா.ராகவனின் மதிப்புரையை ஸ்ரீனிவாசின் உதவியோடு இங்கே பதித்திருக்கிறேன், ஆனால் அதுவும் நல்ல மதிப்புரை இல்லை. பாராட்டுபவர்களை, திட்டுபவர்களை, இந்தா தடிதடியா எழுதினா எவன் படிப்பான் என்று அலுத்துக் கொள்பவர்களை பார்த்திருக்கிறேன். சீர்தூக்கிப் பேசியவர்கள் அபூர்வம். நண்பர் பாலாஜி ஒரு முறை இஸ்லாமியத் தாக்கம் பற்றி பேசாததால் நாவல் முழுமை அடையாதது போல இருக்கிறது என்று சொன்னார், நான் கேட்ட ஒரே ஒரு உருப்படியான விமர்சனம் அதுதான். சரியோ தவறோ, அப்படியா என்று யோசிக்க வைத்த விமர்சனம்.

விசு அப்படி முயன்றிருப்பது முக்கியமான விஷயம். அதுவும் அனேகமாக எல்லாரும் கதைச்சுருக்கம் எழுதுவதிலேயே தாவு தீர்ந்து போய் அதற்கு மேல் தம் கட்ட முடியாமல் கிடுகிடுவென்று முடித்துவிடுவார்கள். விசு கதைச்சுருக்கத்தை ஒரு பகுதியாகப் பிரித்து இந்தப் பிரச்சினையைத் தாண்டி இருப்பது புத்திசாலித்தனமான விஷயம். விசுவின் பதிவுகளும் அப்படி முழுமையானவை அல்லதான். ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாரும் குருடர்கள் யானையத் தடவிப் பார்த்து புரிந்து கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் அவர் பகுதி பகுதியாகப் பிரித்தது நல்ல முயற்சி. வரலாறு, தத்துவம், கவித்துவம், காவிய மரபு, மொழி, கதாபாத்திரங்கள் என்று ஒரு taxonomy-ஐ உருவாக்கி இருக்கிறார். அப்படி பகுப்புகளை ஆரம்பித்து வைத்திருப்பதையே நான் விசுவின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.

குறிப்பாகச் சொல்வதென்றால் தத்துவம் என்ற பகுப்பில் விசு எழுதியது எனக்கு மிகவும் பிடித்த பதிவு. சிறப்பான ஆரம்பம்.

எனக்கு இன்றும் விஷ்ணுபுரம் அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆடும் ஆட்டத்தை விவரிப்பதுதான் முக்கியமான கூறு. அநேகமானவர்களுக்கு தத்துவ விவாதங்கள்தான் முக்கியம். எனக்கோ தத்துவம் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு பத்தாது. தர்க்கத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. தர்க்கத்தில் குறைகள் இருக்கின்றனதான், ஆனால் அதை விட சிறந்த கருவி நம்மிடம் இல்லை. தர்க்கத்தில் குறை இருக்கிறதே, அதனால் நான் தர்க்கத்தை பயன்படுத்த மாட்டேன் என்பதெல்லாம் எனக்கு பரம முட்டாள்தனமாகவே தெரிகிறது. குறை இல்லாத கருவி கிடைக்கும் வரைக்கும் நான் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருப்பேன் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. Occam’s Razor எப்போதாவது நம்மைத் தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லும் சாத்தியக் கூறு இருக்கிறதுதான், அதற்காக அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. Godel’s Incomplete Theorem எல்லா உண்மைகளையும் ஒரு axiom based system நிறுவ முடியாது என்பதை நிறுவுகிறது, அதனால் கணிதத்தைத் தூக்கிப் போட்டு விடுவோமா? அப்படிப்பட்ட நானே விஷ்ணுபுரத்தின் தத்துவ விவாதங்களை நான் ரசித்துப் படித்தேன். எனக்குப் புரியாத இடங்கள் இருந்தனதான். ஆனால் புரியும்போதெல்லாம் தர்க்கம் என்ற முறையின் வெளிப்படுத்துதலை ரசித்தேன். தத்துவ விவாதங்களில் பெரிதாக அக்கறை இல்லாத என்னையே இப்படி கட்டிப் போட்டது ஜெயமோகனின் சாதனை!

ஜெயமோகனே புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை தன் ஆரம்பப் புள்ளி என்று சொல்லி இருக்கிறாராம். எனக்கு விசு மூலம்தான் தெரியவந்தது. அதற்காகவும் ஒரு ஸ்பெஷல் நன்றி!

விசுவின் பதிவுகளின் மீது எனக்கு விமர்சனம் என்று மூன்று உண்டு.

  1. ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் போகப் போக கொஞ்சம் குறைந்து விடுகிறது. பிந்தைய பதிவுகளில் விசு கொஞ்சம் களைத்துவிட்டது தெரிகிறது.
  2. விஷ்ணுபுரத்தில் வரலாற்றைத் தேடுவது என்னைப் பொறுத்த வரையில் வீண் முயற்சி. அப்படித் தேடுவதென்றால் தத்துவங்கள், சிந்தனா முறைகள் வளர்ந்த வரலாற்றைத்தான் பேச வேண்டும்.
  3. அதிகார ஆட்டம், தொன்மங்கள் உருவாவது போன்றவை விஷ்ணுபுரத்தின் முக்கியக் கூறுகள். அவற்றைப் பற்றி விசு இன்னும் விவரித்திருக்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால் எல்லாமே குருடன் யானையைத் தடவி உணரும் கதைதான். ஒவ்வொருவரும் பேசும்போது இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்கிறேன். விசுவின் பதிவுகள் அளவுக்கு உபயோகமான அலசல் இன்னும் எனக்குத் தெரிந்து வரவில்லை. இனி மேல் வரும் அலசல்களும் அவர் உருவாக்கி இருக்கும் பகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

பின்குறிப்பு: ஜெயமோகன் முன்னிலையில் விஷ்ணுபுரத்தைப் பற்றி பல சீரியஸ் வாசகர்கள் கலந்து பேசும் ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் ஜெயமோகன் அதைத் தவிர்த்துவிட்டார். அது நடந்திருந்தால் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்!

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்