என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. விவரிக்க விரும்பவில்லை, படித்துக் கொள்ளுங்கள்!
ஊமைச் செந்நாய் சிறுகதை அடங்கிய சிறுகதைத் தொகுப்பு கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை நூறு ரூபாய். கட்டாயம் வாங்கிப் படியுங்கள்!
என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. விவரிக்க விரும்பவில்லை, படித்துக் கொள்ளுங்கள்!
ஊமைச் செந்நாய் சிறுகதை அடங்கிய சிறுகதைத் தொகுப்பு கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை நூறு ரூபாய். கட்டாயம் வாங்கிப் படியுங்கள்!
அனேகமாக மௌக்ளிதான் கிப்ளிங்கின் மிகப் பிரபலமான படைப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஜங்கிள் புக்கில் மௌக்ளியைப் பற்றி மூன்றே மூன்று கதைகள்தான் உண்டு – Mowgli’s Brothers, Kaa’s Hunting, Tiger! Tiger! அவற்றில் நமக்குத் தெரியும் சித்திரம் மௌக்ளி ஓநாய்களிடம் வளர்ந்த சிறுவன், அவனை ஷெர் கான் என்ற புலி வேட்டையாட முயல்கிறது, அகேலா என்ற ஓநாய்த் தலைவன் பலவீனம் அடையும்போது மௌக்ளி ஓநாய்க் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான், மௌக்ளி கிராமத்திலும் நிம்மதியாக வாழமுடியவில்லை, ஆனால் புலியை வெல்கிறான் என்பதுதான். மௌக்ளியின் நண்பர்கள் சிறுத்தை பகீரா, கரடி பலூ, மலைப்பாம்பு கா. அவன் சகோதரர்கள் அவனுடன் வளர்ந்த ஓநாய்கள்.
இத்தனை அருமையான பாத்திரப் படைப்பை, களத்தை இன்னும் விவரித்திருக்கலாமே என்று நான் சிறு வயதில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். வளர்ந்த பிறகு செகண்ட் ஜங்கிள் புக் என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் ஐந்து மௌக்ளி கதைகள் இருக்கின்றன. மூன்றுதான் மௌக்ளியின் சாகசங்கள். மௌக்ளி இப்போது காட்டுக்கு அரசன். தன்னை விரட்டிய கிராமத்தவரை பழிவாங்க மௌக்ளி கிராமத்தை அழிப்பது (Letting In the Jungle), ஊடுருவி வரும் செந்நாய்க் கூட்டத்தோடு போர் (Red Dog), காட்டிலாகாவில் வேலைக்கு சேர்வது (In the Rukh) என்று. இரண்டு கதைகளில் புலிக்கு எப்படி வரிகள் வந்தன (How Fear Came), புதையலைக் காக்கும் நாகம் (King’s Ankus) என்று கதை சொல்கிறார். செந்நாய்ப் போர் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை.
இந்த எட்டு கதைகளையும் ஒன்றாகத் தொகுத்து All the Mowgli Stories என்று வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். (எனக்கு முடி கொட்டிப் போன பிறகும் குழந்தைகள் புத்தகங்கள் பிடிக்கிறது. உள்ளத்தில் குழந்தையோ?) கட்டாயம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!
கிப்ளிங்கை நாட்டார் மரபை, கதைகளை மேலை நாட்டவருக்கு கொண்டு போனவர் என்று நான் கருதுகிறேன். அதுவே அவரது சாதனை. அவரது sheer inventiveness-க்கு நான் பெரிய ரசிகன். இந்தக் கதைகள் எல்லாம் அவரே உருவாக்கின நாட்டார் கதைகள் அல்லவா?
தொடர்புடைய சுட்டிகள்:
கிப்ளிங்கின் ஜங்கிள் புக்
ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ்
தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்
ஜூன் 27 – புதன் கிழமை – அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை வானொலி நேர்காணல்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம்
ஜூன் 27, புதன் கிழமை அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரை (இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30) எழுத்தாளருடன் ஒருவானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாகhttp://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்க்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் கேட்க்கலாம் அல்லது கேள்விகளை itsdiff@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம் அவை நேர்காணலின் பொழுது வாசிக்கப் படும். அனைவரும் அழைத்து கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை சிறப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒலி வடிவம் பின்னர் http://www.itsdiff.com தளத்தில் வலையேற்றப் படும்.
உலகம் முழுதும் படத்தைப் பார்த்த பிறகு கதைச் சுருக்கம் எல்லாம் தேவையே இல்லை. புத்தகத்தைக் கொஞ்சம் சுருக்கி படம் ஆக்கி இருக்கிறார்கள். சினிமாவில் இல்லாத அபாரமான காட்சி – ஒரு டி. ரெக்ஸ் ஆற்றில் வரும் கிரான்ட் மற்றும் இரண்டு குழந்தைகளை வேட்டை ஆடுவது. காட்சியை யோசித்துப் பாருங்கள், ஐம்பதடி நீர்வீழ்ச்சி, மேலிருந்து மூவரும் உள்ள சின்ன raft விழுகிறது, கீழே டி. ரெக்ஸ் காத்திருக்கிறது; எப்படியோ தப்பித்து இரண்டு குழந்தைகளும் நீர்வீழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் சின்ன இடத்தில் பதுங்குகிறார்கள், டி. ரெக்சுக்கு அவர்களைப் பார்க்க முடியவில்லை, நாக்கை உள்ளே நீட்டித் தேடுகிறது.
க்ரைக்டன் இதை இப்படி சம்பவங்களாகத்தான் யோசித்திருக்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக இப்படி சம்பவங்கள். வாசகனுக்கு மூச்சு விடக் கூட நேரமில்லை. த்ரில்லர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
மால்கம் இது உருப்படாது என்று சொல்லிக் கொண்டே இருப்பது லாஜிகலாக இடிக்கிறது. எல்லாமே இயற்கையை மாற்றுபவைதான். மூச்சு விடுவது கூட இயற்கையை மாற்றத்தான் செய்கிறது. மால்கமின் தியரிப்படி அது கூட நாசத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும், ஏனென்றால் எந்த மாற்றமும் நம் கண்ட்ரோலில் இல்லை.
கடைசியில் (சினிமாவில் இல்லாத காட்சி) ராப்டர் கூட்டில் உள்ள முட்டைகளை எண்ணியே ஆக வேண்டும் என்று கிரான்ட் வற்புறுத்துவது, கூட்டிற்குள் போகும் கிரான்ட், சாட்லர், ஜென்னாரோ ஆகியோரை ராப்டர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பது (என்ன எல்லாம் காந்தி கட்சி ஆகிவிட்டதா?) ஆகியவை செயற்கையாக இருக்கின்றன.
சினிமாவைப் பற்றியும் ஒரு வார்த்தை. சாதாரணமாக எந்தப் புத்தகமும் சினிமாவாக வரும்போது ஒரு மாற்று குறைகிறது. இது ஒரு விதிவிலக்கு. முதல் முறை அந்த டைனோசாரை திரையில் பார்த்தது இருபது வருஷம் கழித்தும் மறக்கவில்லை!
படியுங்கள், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்
தொடர்புடைய சுட்டி: மைக்கேல் க்ரைக்டன் எழுதிய “ரைசிங் சன்”
பாலசிங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். அவர் எழுதிய இந்தப் புத்தகம் நூலகம் தளத்தில் கிடைத்தது.
நான் விரும்பிப் படித்தது “எம்ஜிஆரும் புலிகளும்” மற்றும் “ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு” என்ற இரண்டு கட்டுரைகள்தான். சமகால சரித்திரம்! நிச்சயமாக பாலசிங்கம் முழு உண்மையையும் எழுதி இருக்க மாட்டார், அவரது தரப்பின் உண்மையைத்தான் எழுதி இருப்பார். ஆனாலும் எம்ஜிஆர் புலிகளை பெரிய அளவில் ஆதரித்தது தெரிகிறது. கருணாநிதியின் அழைப்பை நிராகரித்தார்கள் என்ற ஒரே காரணம்தானா இல்லை வேறு எதாவதும் உண்டா என்று தெரியவில்லை. எம்ஜிஆர் தன் வீட்டு பாதாள அறையிலிருந்து சொந்தப் பணம் ஐந்து கோடியை புலிகளுக்கு கொடுத்தார் என்றால் அவரிடம் எத்தனை பணம் இருந்திருக்கும்? அதுவும் எண்பதுகளில்? ராஜீவ் சின்ன “வெற்றிக்காக” புலிகளை கட்டாயப்படுத்தியதும் தெரிகிறது. Himalayan blunder!
அதிகம் விவரிக்க விரும்பவில்லை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
இதுதான் சிவசங்கரியின் மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது.
கதை ஒன்றும் பிரமாதமில்லை. பிரச்சாரக் கதை என்றே சொல்லலாம். த்யாகு (தியாகு இல்லை த்யாகு) குடிப் பழக்கத்துக்கு ஆளாகிறான். கொஞ்சம் வாயில்லாப் பூச்சி. ஸ்டீரியோடைப் அனுசரணை இல்லாத மனைவி. நண்பனின் உதவியால் சிகிச்சை பெறுகிறான். ஆனால் மீண்டும் குடிக்க ஆரம்பித்து, வேலை, குடும்பம், மரியாதை எல்லாவற்றையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளப்போகும்போது Alcoholics Anonymous அமைப்பைச் சேர்ந்த சிலரால் காப்பாற்றப்படுகிறான், மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
குடியின் அபாயத்தை ஒரு தலைமுறைக்கு விவரமாகச் சொன்ன புத்தகம். இப்போது யாரும் பெரிதாக மதிக்கப் போவதில்லை, இருந்தாலும் த்யாகுவின் பாத்திரம் ஓரளவு நன்றாக இருக்கிறது. AA அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்லும் சுயசரிதைக் கதைகள் geniune ஆகத் தெரிகின்றன. உத்தம நண்பன் நாணா, சரியாக க்ளைமாக்சில் மனம் மாறும் மனைவி என்ற ஸ்டீரியோடைப் துணைப் பாத்திரங்கள் யாரும் சரிப்படவில்லை.
ரகுவரன் நடித்து தொலைக்காட்சித் தொடராகவும் வந்ததாம்.
படிக்கலாம். இதை விட பாலங்களை சிபாரிசு செய்வேன். ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் இதைச் சேர்க்கிறார். அப்படி அவர் சேர்த்திராவிட்டால் என்றாவது சிவசங்கரி பற்றி ஒரு பதிவு எழுதி அதில் இதை ஒரு பாராவாகச் சேர்த்திருப்பேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்
தொடர்புடைய சுட்டி: சிவசங்கரியின் “பாலங்கள்”
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .
இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:
நாஞ்சில்நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு: (நாஞ்சில்நாடன் கம்ப ராமாயணத்தை கரைத்து குடித்தவர். அவரது உரைகளை கேட்டவர்கள் மறக்க முடியாத உரைகள் என்று புகழ்கிறார்கள். தவறவிடாதீர்கள்!)
ஜூன் 20 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – இடம்: 38884 Stillwater Cmn, Fremont, CA
ஜூன் 21 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – இடம்: 4743 Mendocino Ter, Fremont, CA 94555
கம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் strajan123@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜூன் 30 – பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி – எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன் மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் புலிவார்ட், பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை
ஜூலை 1 ஞாயிறு காலை – எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி – சாக்ரமெண்டோ நகரம் – சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஜூலை 5 – நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் – இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் – வியாழன் மாலை 7 மணி முதல் – 10 மணி வரை
நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு ராம்: 310-420-5465 losangelesram@gmail.com மற்றும் ராஜேஷ் 626-848-2102 rajeshmadras@gmail.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன், 510-825-2971, strajan123@gmail.com
இது மு.வ.வின் நூற்றாண்டு. மு.வ. ஒரு காலத்தில் பெரிய சமூக சக்தி என்பது இன்று கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய புத்தகங்கள் எல்லாம் இன்று காலாவாதியானவையே. ஆனால் க.நா.சு.வே ஒரு காலத்தில் அவருடைய புத்தகங்களை பாராட்டி இருக்கிறார். அவருடைய நினைவாக ஒரு பழைய பதிவை மீண்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
நான் மு.வ.வை அதிகமாக படித்ததில்லை. மொண்ணையாகத்தான் கதைகள் எழுதுவார் என்று எனக்கு ஒரு impression. தமிழ் பட்டப் படிப்பில் எப்போதும் அவரது நூல்கள் பாடமாக வைக்கப்படுவதால் எழுந்த ஒரு prejudice என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் அவர் எழுதிய மொழி நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது போல இருந்தது.
கரித்துண்டு க.நா.சு.வால் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதை சமீபத்தில் மீண்டும் படித்தபோதுதான் கவனித்தேன். சரி என்றாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மறைந்த நண்பர் சேதுராமன் கரித்துண்டு, அகல் விளக்கு ஆகிய இரு புத்தகங்களையும் எங்களுக்கு கொடுத்து அனுப்பினார், அவர் புண்ணியத்தில்தான் படித்தேன். அவர் நினைவாக எங்களிடம் இருப்பது அந்த இரண்டு புத்தகங்கள்தான்.
கரித்துண்டின் கதை அவ்வளவு முக்கியமில்லை. கணவன் முடமானதால் விலகும் மனைவி, மனைவி விலகியதாலும், முடமானதாலும் உயர் மத்தியதர நிலையிலிருந்து ஏழ்மையை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு ஓவியர், அவர் சேர்த்துக்கொண்ட ஒரு பெண், அவரது ஓவியங்களை ரசிக்கும் கதை சொல்பவர், அமெரிக்க வாழ்வினால் impress ஆன ஒரு பேராசிரியர், கம்யூனிச சிந்தனை கொண்ட அவரது மாணவன் – இவர்களை வைத்து தொழில், கைத்தொழில் ஆகியவற்றில் அரசு என்ன செய்ய வேண்டும், ஆந்திர-தமிழக எல்லை தகராறு, அமெரிக்கத்தன வாழ்க்கையின் சாதக பாதகங்கள், திருக்குறள், தேர்தல் முறையின் பலவீனங்கள் ஆகியவற்றை பற்றி பல லெக்சர்கள். இதுதான் புத்தகம்.
அந்த காலத்துக்கு புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும். ஓவியரின் மனைவி பேராசிரியருடன் மணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறாள். கற்பை பற்றி லெக்சர்கள் எல்லாம் இல்லை – ஆனால் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை சேர்த்துக் கொள்கிறார். கற்பை பற்றி ஒரு பாத்திரம் பேசும்போது தமிழர்கள் சீர்திருத்தம் பற்றி பேசினாலும் கன்னித்தன்மைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கிண்டல் தொனிக்க பேசுகிறாள்.
மிக சரளமான நடை. கல்கியின் நடை மாதிரி ஓடுகிறது. படிக்க ஆரம்பித்தால் சுலபமாக படித்துக்கொண்டே போகலாம்.
மேலே சொன்ன லெக்சர்கள்தான் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவை எல்லாம் எனக்கு இசைவானவை இல்லை. ஆனால் அந்த காலத்துக்கு மிக பெரிய விஷயமாக இருந்திருக்கும். அரசின் கடமைகள், காபிடலிசம், முதலாளித்துவம் பற்றி மிக எளிமையாக புரிய வைத்துவிடுகிறார். இன்றும் இது பெரிய விஷயம்தான்.
ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் மு.வ.வின் பலம், பலவீனம் இரண்டுமே அவரிடமிருக்கும் வாத்தியார்த்தனம்தான் என்று நினைக்கிறேன். அவர் எதையும் படிப்பவனின் சிந்தனைக்கு விடுவதில்லை. கடைசி சொட்டு வரை நமக்கு புகட்டி விடுகிறார்.
படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்
தொடர்புடைய பதிவுகள்:
மு.வ.வின் நூற்றாண்டு
மு.வ.வைப் பற்றி ஜெயமோகன்
மு.வ.வின் “அகல் விளக்கு”
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?
(விசு எழுதிய பாகம் – என்ன பேசப்பட்டது என்பதை பற்றிய குறிப்புகள் அடங்கியது)
திரு. பகவதி பெருமாளின் (பக்ஸ்) இல்லத்தில் ஜுன் 9, சனிக்கிழமை மதியம் (2.00 – 7.00 ) ‘கலங்கிய நதி‘ நாவலை எழுதிய எழுத்தாளர் திரு. P.A.கிருஷ்ணனுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. முதல் இரண்டு மணிநேரம் கலங்கிய நதி நாவலைப் பற்றியும், பின்பு பொதுவாகவும் விவாதம் இருந்தது.
சரியாக இரண்டு மணிக்கு கிருஷ்ணன் ராஜனுடன் வந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் 10-15 பேர் வந்தபின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. கடந்த இருவது வருடங்களில், இந்திய இலக்கியச் சூழலில், தமிழ் அளவிற்கு மற்ற மொழிகளில் படைப்புகள் வருவதில்லை; புத்தக விற்பனையில் மட்டுமல்லாது, இலக்கியத் தரமான படைப்புகளிலும் தமிழ்தான் முதலிடம் என்றார் கிருஷ்ணன்.
பக்ஸ், நான், பாலாஜி உட்பட சிலர், கலங்கிய நதியின் ஆங்கில வடிவத்தை ( ‘Muddy River’ ) படித்திருந்தோம். ஆர்.வி, சுந்தரேஷ் உள்ளிட்டோர் தமிழ் வடிவத்தை ( ‘கலங்கிய நதி’ ) படித்திருந்தார்கள். கலங்கிய நதி பற்றி நாவலை படித்தவர்கள், மற்றவர்களுக்காக, சுருக்கமாக நாவலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
நாவலில் வரும் அங்கத அம்சத்தை முதலில் பேசினோம். அரசு அலுவலக வரைமுறைகளின் சித்தரிப்பில் உள்ள அங்கதம் மிக அருமை என்றனர் அனைவரும். நாவலில் வரும் தேநீர் – அலாரம் பகுதியை ஒரு முறை கிருஷ்ணன் படித்துக்காட்டினார். அப்பொழுதே உரையாடல் களைகட்டத் தொடங்கியது.
அடுத்து, நாவலின் ஒரு சரடான, மின்செலுத்தீட்டு கோபுர (transmission tower 🙂 ) ஊழலை பற்றி பேசினோம். 2ஜி காலத்தில், முப்பது கோடி ஒரு ஊழலா, இதைவிட பெரிய ஊழல் (!!) இல்லையா என்றனர் ஆர்.வியும், பாலாஜியும். ஊழலின் அளவை கூட்டி எழுதியிருக்கலாம், நம்பர் முக்கியமில்லை, எவ்வளவு நூதனமான முறையில் ஊழல் செய்கிறார்கள், சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கூட வசூலிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதே தன் நோக்கம் என்றார். ஆனால், இனி வரும் காலங்களில், தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களால் ஊழல் குறையும் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்றார். ஊழலை ஒட்டிய விவாதத்தில், அன்னா ஹசாரே இயக்கத்தில் பிழைகள் பல இருப்பினும், அது தோல்வி அடைந்திருப்பினும், its a right step in the right direction என்றார்.
பகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம். பின்பு, அதையொட்டி விவாதம் தொடர்ந்தது. அஸ்ஸாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாயைப்பற்றி விளக்கினார் கிருஷ்ணன். 1971 வங்கதேசப் போரின் விளைவாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகள் அதிக அளவில் அஸ்ஸாமில் குடியேறினர். இது, அஸ்ஸாமிய மக்கள்பரவலில் (demography) பெரும் மாற்றத்தை உருவாக்கியது; மேலும், வளமான பிரம்மபுத்திரா நதிப்படுகையில் குடியேறிய அகதிகள், தங்கள் கடின உழைப்பால் முன்னேறினர்; தன்னைவிட ஏழையாக இருந்த அண்டைவீட்டான் வளமானதை பொருக்காமல், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே’ என்ற போராட்டம் ஆரம்பித்தது. சமூகப்பிரச்சனையை, மத்திய அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, ஆயுதம் கொண்டு அடக்கமுற்பட்டமையே, அஸ்ஸாம் பற்றி எரிய காரணமானது; இந்திய அரசின் ‘பெரிய அண்ணன்’ தனத்தினால், இஸ்லாமிய அகதிகளுக்கெதிராக உருவான உல்ஃபா, இந்தியாவிற்கெதிராக திரும்பியது என்றார். (நாவலில், காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் கூற்றாக இவை வரும்).
எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உயர்ந்த லட்சியவாதத்தின் அடிப்படையில் தொடங்கப்படும், பின்பு, நாளடைவில், அதிகாரப்போட்டியின் விளைவாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, தன் கொள்கையிலிருந்து இறங்கி, தாழ்ந்து, அழிவை நோக்கிச் செல்லும் என்றே நமக்கு வரலாறு சொல்கிறது. சமீபத்திய உதாரணம் LTTE என்றார். (‘கலங்கிய நதி’ இலங்கை தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘Muddy River’ அஸ்ஸாமிய மக்களுக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, திரும்பிவராத திரு.கோஷிற்கும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது ). உல்ஃபாவிற்கும் அதுவே கதி என்றார். சீனா, மியான்மர் போன்ற நாடுகள் உல்ஃபாவிற்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டமை போன்றவற்றை காரணம் காட்டி, உல்ஃபாவோ, வேறு வடகிழக்குத் தீவிரவாத குழுக்களோ இனி threat இல்லையென்றார்.
நாவலில், சமூகப்பிரச்சனைகளுக்கு தீவிரவாதத்திற்கு மாற்றாக காந்தியம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, காந்தியம் மட்டுமே தீர்வல்ல, ஆனால், அது தீர்விற்கு நல்ல வழிமுறையாக இருக்கலாம் என்றே சொல்கிறேன் என்றார். சுதந்திர போராட்டத்தின்போது, அம்பேத்கரோ, ஜின்னாவோ ஒரு தரப்பிற்காக மட்டுமே பேசினார்கள்; காந்தி மட்டுமே அனைவருக்காவும் பேசினார்; காந்தியின் கடைசி முப்பது நாட்கள், இயேசுநாதரின் கடைசி நாட்களைப் போன்றதே; தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்தபின் தெளிவாகிவிடும், முன்பைவிட மிகத்தெளிவாக ” – பிரிவினையின் கோர தாண்டவத்தின் நடுவிலும்கூட, காந்தி எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் பாருங்கள்; காந்தியின் optimism பிரமிக்கவைக்கிறது என்றார். ‘கலங்கிய நதி ..’ வரிகளை படித்துக்காட்டினார். நதி எப்போது தெளிவடையும் என்று தெரியாது என்றார்.
மேலும், தமிழ்நாட்டைப்போல் இல்லாமல், அஸ்ஸாமிய முதல்வர்களை எளிதாக நேரில் சந்திக்கமுடியும் என்ற கிருஷ்ணன், நாவலைப் பற்றி, அஸ்ஸாமிலிருந்து பாஸிட்டிவ்வாகவே விமர்சனங்கள் வந்தன என்றார்.
விவாதம் மார்க்ஸியத்தை நோக்கித் திரும்பியது. சுந்தரேஷ், திரு.சந்திரா [சிம்மக் குரலோன் என்ற பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட குரலுடைய ஒருவரை அன்றுதான் சந்தித்தேன் :-).] , அருண் உள்ளிட்டோர் மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டது என்றனர். சிறிது நேரம் சூடாக விவாதம் நிகழ்ந்தது. மார்க்ஸிய சித்தாந்தம் காலாவதியானாலும், மார்க்ஸிய கருவிகள் (பொருள்முதல்வாத முரணியக்கம்,..) இன்றும் முக்கியமானது என்ற கிருஷ்ணன், மேற்கொண்டு விவாதத்தை எழுத்தில் தொடரலாம் என்றார்.
பின்பு நாவலின் வடிவம் பற்றி பேசினோம். நாவலின் கதை எளிமையானது [தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரை மீட்கப் போராடும் ஒரு எளிய அரசு அதிகாரி, மற்றும் அந்த அதிகாரி வெளிக்கொணரும் ஊழல்.] முதல் வடிவம் எழுதியபின், அது தட்டையானதாக இருந்தது. ஆகவே, அனுபமா உள்ளிட்ட கதாபாத்திரங்களை சேர்த்தேன்; நாவலுக்குள் நாவலை விமர்சிக்கும் வடிவத்தில் எழுதினேன் என்றார். புதிதாக வந்திருந்த செந்தில், இரண்டு வரி எழுதுவதே கடினமாக இருக்கிறது, எப்படித்தான் பக்கம்பக்கமாக நாவல் எழுதுகிறீர்களோ என்று கேட்டார். அதற்குத்தான் நாவலை எழுத ஏழு வருடம் எடுத்துக்கொண்டேன் என்றார் கிருஷ்ணன். கடத்தப்பட்டவரை மீட்பதில், சந்திரனுக்கு தெரியாமல் சில நிகழ்வுகள் நடந்ததாக சித்தரித்ததன் மூலம், சந்திரனை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ ஆக்காமல், மிக இயல்பாக சித்தரித்திருந்தீர்கள் என்றார் ஆர்.வி.
ஆர்.வி, பாலாஜி, சுந்தரேஷ் உள்ளிட்டோர், கலங்கிய நதியைவிட புலிநகக் கொன்றை தங்களை மிகவும் கவர்ந்தது என்றனர். புலிநகக் கொன்றையின் கதைக்களம், தமிழகமாக இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு பிடித்திருக்கலாம், வட இந்திய நண்பர்களுக்கு கலங்கிய நதி பிடித்திருந்தது; அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் என்றார்.
தன் இரு நாவல்களுமே அரசியல் நாவல்கள் என்ற கிருஷ்ணனிடன், 1970களோடு தமிழ்நாட்டில் கல்லூரிகள் apolitical ஆகி, 1970களுக்கு பிந்தய மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டதை குறிப்பிட்ட பாலாஜி, அதற்கேற்றார்போல, 200 வருட கதையைச் சொல்லும் புலிநகக் கொன்றையை 1970களில் முடித்தீர்களா என்று கேட்டார். அதை ஆமோதித்த கிருஷ்ணன், 1970களுக்கு பின் நடந்தவை என, புலிநகக் கொன்றை – 2 எழுத ஒரு திட்டமிருக்கிறது என்றார்.
தன் அடுத்த புத்தகத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார். தமிழர்/இந்தியர்களுக்கு வரலாற்றை பதிவு செய்வதில் அக்கறை இல்லை, வெள்ளையர் பதிவுசெய்தவற்றையும் நாம் முழுமையாக ஆராயவில்லை என்றார். மருது பாண்டியர், ஊமைத்துரை, வெள்ளையர்கள் பின்னனியில் கதை இருக்கலாம், அதிகபட்சம் நானூறு பக்கங்கள் இருக்கும் என்றார். ( தலையனை சைஸ் புத்தகங்கள் எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்!!).
புதிதாக வந்தவர்கள் மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பிச் சென்றபின், சிலிக்கான் ஷெல்ஃப் குழும நண்பர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கிருஷ்ணனுடன் செலவிட்டோம். அவரை கவர்ந்த நாவல்களைப் பற்றியும், அரசியல், சினிமா என்று பல தளங்களிலும் உரையாடினோம்.
ஐந்து மணிநேரம், சிறிது கூட சோர்வடையாமல் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலிக்கான் செஷ்ஃப் சார்பாக நன்றிகள். சிறப்பான உணவு மற்றும் இடம் ஏற்பாடு செய்த பக்ஸ் மற்றும் சித்ரா தம்பதிகளுக்கு ம் நன்றிகள். கலிஃபோர்னியாவிற்கு வருகை தரும் தமிழ் எழுத்தாளுமைகளையும், வாசகர்களையும் இனைக்கும் பாலமாக செயல்படும் அண்ணன் ராஜன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜே.
தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்
தொடர்புடைய பிற இடுகை:
பாகம் 1
‘கலங்கிய நதி‘