ஜெயமோகனின் “சங்க சித்திரங்கள்”

நான் பள்ளியில் டாப் மாணவன். முதலிரண்டு ராங்க்தான் எப்போதும். தமிழிலும் ஒரு எண்பது மார்க்காவாது வாங்குவேன். பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி என்று பல பரிசுகள் வாங்கி இருக்கிறேன். எல்லாவற்றிலும் எக்கச்சக்கமாக கவிதைகளை மேற்கோள் காட்டுவேன். ஆனால் பாடப்புத்தகங்களில் படித்ததில் ஒரு கவிதை என்றால் ஒரு கவிதை பிடித்ததில்லை. கடனே என்றுதான் படிப்பேன். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி மாதிரி ஒரு மோசமான கவிதையை எழுத சிவபெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு வெளியே வந்திருக்கவே வேண்டாம் என்று நக்கல் அடிப்பேன். கடவுளே இவ்வளவு மோசமாய் கவிதை எழுதினால் மனுஷன் மட்டும் எப்படி நன்றாக எழுதுவான்? (ஆனால் பாரதியார் கவிதைகள் என்றால் அப்போதெல்லாம் உயிர்) பிடித்துப் படித்தது இரண்டு விஷயம்தான் – ஒன்று அசை, சீர் பிரிப்பது. அதில் இருந்த கணித அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது தேமா புளிமா எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டது. இரண்டாவது குற்றாலக் குறவஞ்சியின் சந்தம்.

வளர்ந்த பிறகும் பலரும் ரசிப்பவை எனக்கு அப்பீல் ஆகவே இல்லை. ஒரு நல்ல கவிதை படிக்க ஆயிரம் கவிதைகள் படிக்க வேண்டி இருந்தது. வேற வேலை வெட்டி கிடையாதா என்ன? எப்போதாவது நற்றிணை, நல்ல குறுந்தொகை, கற்றறிந்தார் ஏத்தும் கலி(த்தொகை) என்று படிக்க முயற்சி செய்தால் வார்த்தைகள் புரிவதில்லை. ஆழ்வார், நாயன்மார், கம்பன் எதுவும் பெரிதாக அப்பீல் ஆகவில்லை. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் எனக்கு ஓரளவு பிடித்திருந்தன. ஆனால் மு. மேத்தா, அப்துல் ரஹ்மான், மீரா போன்றவர்களின் கவிதைகள் எனக்கு அனேகமாக pretentious ஆக இருந்தன. அடப் போங்கப்பா என்று விட்டுவிட்டேன்.

ஷெல்லி, கீட்ஸ், பைரன், வோர்ட்ஸ்வொர்த் போன்றவர்களும் என் ரசனைக்கு ஒத்தே வரவில்லை. Ode to a Grecian Urn, Ode to the West Wind மாதிரி எதையாவது கண்டால் ஓட ஆரம்பித்தேன். உண்மையில் இந்த மாதிரி கவிதைகளுக்கும் புண்ணாக்குக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது சில கவிதைகளைப் (தேவதேவன்) பற்றி சொல்ல முயற்சித்தார். ஏதோ மரியாதைக்காக தலை ஆட்டினேன். ஜெயமோகனே ஒரு முறை உனக்கு கவிதை சரிப்படாது என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் அடித்தார். அபார பொறுமை உள்ளவரையே சாய்த்துவிட்டோம், சரி நமக்கு அவ்வளவுதான் கற்பூர வாசனை விதித்திருக்கிறது, ஏதோ ஒரு கவிதை அபூர்வமாக பிடித்திருந்தால் அதுவே நமக்கு பெரிய அதிர்ஷ்டம் என்று விட்டுவிட்டேன்.

கவிதையை அணுகுவதிலேயே எனக்கு நிறைய பிரச்சினை உண்டு. எனக்கு மொழியால் கட்டுப்படுவது உயர்ந்த இலக்கியம் இல்லை. ஜெயமோகன் உள்ளிட்ட பலரும் ஒரு கவிதை மொழியை முழுவதுமாகத் தாண்ட முடியாது என்றே கருதுகிறார்கள். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. புத்தம்வீடு நாடார் பின்புலம் உள்ள இலக்கியம், பனைமரத்தில் ஒரு முறை கூட ஏறாத எனக்குப் புரியாது என்றால் அதை நான் இலக்கியமாகக் கருதவே மாட்டேன். பாரதியைப் பற்றிய என் எண்ணம் ஆட்டம் கண்டதே என் கேரள நண்பன் ஒருவன் என்னவோ பாரதி பாரதி என்று தமிழர்கள் கொண்டாடுகிறீர்களே, உனக்கு மிகவும் பிடித்த ஒரு நாலு வரியை மொழிபெயர்த்து சொல்லு என்றபோதுதான். எனக்கு நினைவு வந்த வரிகள் எல்லாம் மொழிபெயர்த்தால் சர்வசாதாரணமாக இருந்தன. பக்கத்து ஊர்க்காரனுக்கே புரிய வைக்க முடியவில்லை என்றால் இது என்ன இழவு இலக்கியம் என்று தோன்றியது அப்போதுதான்.

முதல்மூன்றாவது முறையாக அனுபவித்துப் படித்த கவிதைப் புத்தகம் சங்க சித்திரங்கள்தான். அனேகமாக ஜெயமோகன் தேர்ந்தெடுத்திருக்கும் எல்லா கவிதைகளுமே மொழிக்குள் கட்டுப்படுபவை இல்லை. அப்படி மொழிக்குள் கட்டுப்படுபவையாக இருந்தால் இந்த சங்கத் தமிழ் எல்லாம் எனக்கு எங்கே புரியப் போகிறது? நாற்பத்து சொச்சம் கவிதைகளை ஜெயமோகன் விளக்குகிறார். அதில் ஒரு இருபத்தைந்து முப்பதாவது எனக்குப் பிடித்தது. மொழி என்ற constraintஐ இந்தக் கவிதைகள் படுசுலபமாகத் தாண்டுகின்றன. கவிதைகள் எல்லாம் ஒரு வாழ்க்கை அனுபவத்தை, எல்லாராலும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை நயமாக, universal appeal-ஓடு ரத்தினச் சுருக்கமாக கொடுக்கின்றன. அப்படிக் கொடுப்பதுதான் எனக்கு கவிதை!

என் பிரச்சினை என்ன என்று சங்க சித்திரங்களைப் படித்த பிறகுதான் எனக்கே புரிகிறது. ஒன்று இன்று புழக்கத்தில் இல்லாத தமிழ். படித்தவுடன் எதுவும் புரிந்துவிடுவதில்லை. இரண்டாவது தமிழ் வாத்தியார்கள் மற்றும் கோனார் நோட்ஸ். சாரத்தை பிழிந்து எடுத்துவிட்டு சக்கையை மாணவர்களுக்கு கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். எனக்கு கொஞ்சநஞ்சம் இருந்த கவிதை ஆர்வம் இவர்களால்தான் முக்தி அடைந்திருக்க வேண்டும். வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக என்ற கவிதையை ரசிக்க யார் உதவியும் தேவை இல்லை. ஆனால் அந்த வரிகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்று விளக்கி அதை எப்படி எழுதினால் கூட அரை மார்க் கிடைக்கும் என்று யோசிப்பதில்தான் பள்ளிப் பருவம் செலவழிந்தது. கவிதை? அதை யார் கவனித்தது?

என்னடா நமக்கு இந்தக் கவிதை விஷயத்தில் செக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையே என்று எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. எனக்கு எல்லா உருளையும் சிவலிங்கம் இல்லை, சரியான அளவுகளில் இருந்தால்தான் அது சிவலிங்கம் என்று இப்போதுதான் புரிகிறது. கவிதை என்றால் அழகான படிமம், அருமையான உவமை என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்கள் எடுத்துக் காட்டும் கவிதைகளில் அப்படி படிமங்களும், காட்சிகளும், உவமைகளும் நிறைந்து காணப்படுகிறது. எனக்கோ உவமைகள் கூட (வையம் தகளியா, அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய…) நான் நேரடியாகக் கண்டு அனுபவித்த அல்லது உணரக்கூடிய உவமைகளாக இருந்தால்தான் சரிப்படுகிறது. நான் கவிதைகளில் எதிர்பார்ப்பது வேறு. எனக்குக் கவிதை என்பது வாழ்க்கை அனுபவம். அதை நாலிலிருந்து நாற்பது வரிக்குள் சுருக்கமாக, ஆனால் மனதுக்குள் பெரிதாக விரியும் கதையாகச் சொல்வதுதான் கவிதை. “வாரணம் பொருத மார்பும்” என்ற கம்பன் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது என்றால் அது தோல்வியை விவரிக்கிறது, நானும் அப்படி வீரத்தைக் களத்தில் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்த மகள்கள், nephews, nieces, பக்கத்து வீட்டுக் குழந்தைகள் உண்டு. டி.எஸ். எலியட் சொன்ன மாதிரி காலை ஐந்து மணிக்கு சப்பாத்திக் கள்ளியை சுற்றி வருவது (Here we go round the prickly pear at five o’clock in the morning) போல அர்த்தமில்லாமல் நாட்களைமாதங்களை செலவழித்திருக்கிறேன். அந்தக் கவிதைகள்தான் என் நெஞ்சைத் தொட்டிருக்கின்றன. அப்படி அனுபவத்தைச் சொல்லும் கவிதைகளை நான் படித்த வரை கம்பனிலும், ஆழ்வார்களிலும், தேவாரம், திருவாசகத்திலும், ஏன் பாரதி, பிச்சமூர்த்தியிலும் கூட பெரிதாகக் காணவில்லை. சங்கக் கவிதைகளில்தான் அப்படித் தெரிகிறது.

சங்க சித்திரங்களைப் பற்றி இரண்டு மூன்று மாதம் முன்னால் இங்கே உள்ளூர் சிலிகான் ஷெல்ஃப் குழுமத்தினர் விவாதித்தோம். தோழி காவேரி அருமையாகப் பேசினார். நண்பர் பாலாஜி இந்தப் புத்தகத்தின் நடையைப் பற்றி குறிப்பிட்டார். இந்தப் புத்தகத்தில் சரளமான நடை; சுலபமாகப் படிக்கும் வகையில் கொஞ்சம் dumb down செய்திருக்கிறாரோ என்று கேட்டார். உண்மைதான், ஜெயமோகன் எழுத்தில் அடர்த்தி அதிகம், பொதுவாக ஊன்றிப் படிக்க வேண்டும். யோசித்து செய்ததோ, இல்லை தற்செயலாக அமைந்ததோ, அதுதான் சரியான அணுகுமுறை. பாலாஜி இன்னொரு கேள்வி கேட்டார் – இந்தக் கவிதைகளில் தரும் சமகாலத்தன்மை (நான் காலம் கடந்த தன்மை என்று சொல்வேன்) பொதுவாக எல்லா சங்கக் கவிதைகளிலும் காணப்படுகிறதா, இல்லை ஜெயமோகன் அப்படிப்பட்ட 40 கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரா என்று. என்னைப் பொறுத்த வரை இந்தப் புத்தகத்தின் பயன் சங்கக் கவிதைகளை சாதாரணர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது. அதற்கு இந்த இரண்டு அம்சங்களும் உதவியாக இருக்கின்றன. அவ்வளவுதான்.

எல்லா கவிதைகளுக்கும் ஒரு உக்ரமான சம்பவத்தை வைத்துப் பேசுவது நாற்பது கவிதைகளுக்குத் தாங்கலாம். நானூறு கவிதைகளுக்கு தாங்கமுடியுமா என்று தெரியவில்லை. இந்த அனுபவங்கள் அனைத்தும் உண்மையா, இல்லை புனைவு கலந்த உண்மையா என்ற கேள்விக்கே நான் போகவில்லை.

நான் கவிதையில் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கே இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது, ஜெயமோகன் புரிய வைத்திருக்கிறார். என்றாவது சங்கக் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறார். அவர் நன்றி எல்லாம் எதிர்பார்த்து இதை எல்லாம் எழுதவில்லை, இருந்தாலும் நன்றி!

கவிதைகளையும் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பையும் (விளக்கம் கிளக்கம் இல்லாமல்) அடுத்த சில பதிவுகளில் கொடுக்க முயற்சிக்கிறேன்.

பின்குறிப்பு: நான் இந்தப் புத்தகத்தை ரசித்ததைப் பார்த்தோ என்னவோ காவேரி வேறு சில புதுக்கவிதைப் புத்தகங்களை என்னிடம் தள்ளப் பார்த்தார்; எனக்கு இன்னும் அவ்வளவு தைரியம் வரவில்லை, ஜகா வாங்கிவிட்டேன். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதை பக்கம்

5 thoughts on “ஜெயமோகனின் “சங்க சித்திரங்கள்”

 1. சங்கச்சித்திரங்கள் புத்தகத்தை எந்தப் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது? வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. எனக்கு சங்க காலக் கவிதைகளை வாசிப்பது ரொம்பப் பிடிக்கும். பகிர்விற்கு நன்றி.

  Like

 2. ”சங்க சித்திரங்கள்” மிகவும் அருமைதான். (விகடனில் தொடராக வெளியானது. கவிதாவோ தமிழினியோ வெளியிட்டது என நினைக்கிறேன்) அதைப் படித்ததும் எனக்கு ஏனோ சுஜாதாவின் புற்நானூறு ஓர் எளிய அறிமுகம், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகமும் அதன் நடையும் ஞாபகத்திற்கு வந்தது. ஜெயமோகன் சீரியஸாக பாடல்களை விளக்கிச் செல்ல, சுஜாதா (வழக்கம் போல) விளையாட்டாகவே, மிக எளிமையாகப் பல பாடல்களை அணுகியிருக்கிறாரோ என்றும் பட்டது. 🙂

  Like

 3. சித்திரவீதிக்காரன், ரமணன், சங்க சித்திரங்களை ரசிக்கும் இன்னும் இரண்டு பேர்! அது நீங்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 🙂

  Like

 4. ஆர்வி,

  நன்றாக எழுதியுள்ளீர்கள். என்னை மிகவும் பாதித்தது மன்னன் கட்டளையிட்டு களம் சென்று மாயும் போர்வீரர்களை வெள்ளாட்டு மந்தை என்று விளிக்கும் தாயின் மனோநிலையை ஈழப்போரில் இறந்த தமிழரின் தாயை முன்வைத்து விளக்கும் கதை. தந்தையின் மனம் நீண்ட உரையாடலில் தெரியவர தாயின் மனம் ஓரிரு வாக்கியங்களில்.

  அதில் வரும் காலுடைந்த கட்டில் அலைக்கழிக்கவைத்த ஒரு படிமம்.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.