பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

(வழக்கமாக மாதம் ஒரு முறை சிலிக்கன் ஷெல்ப் கூட்டம் இடம்பெறும். சில சமயம் விசேஷ கூட்டம் ஆக மாறிவிடும். இது மே மாத கூட்டம். மாத இறுதியில் ஜூன் கூட்டம் நடைறபெற உள்ளது. அதில் நாஞ்சில் நாடன் கலந்து கொள்ள நேரலாம்.)
Image
புலிநகக் கொன்றை மற்றும் கலங்கிய நதி நாவல்கள் எழுதிய பிரபல எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. கலிஃபோர்னியா, சான்ஃபிரான்ஸிஸ்கோ சிலிக்கன் வேலி/வளைகுடாப் பகுதியில் வசிக்கும் வாசக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். (RSVP)
அன்புடன்
ராஜன்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
8557 Peachtree Avenue
Newark CA 94560
தேதி/நேரம்: சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி, 2 மணி முதல் 6 மணி வரை
தொடர்பு கொள்ள: ராஜன் 510-825-2971, பகவதி பெருமாள் 510-812-6036

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், நிகழ்வுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பி. ஏ. கிருஷ்ணனின் “திரும்பிச் சென்ற தருணம்
கலங்கிய நதி

சங்க சித்திரங்கள் கவிதைகள் பகுதி 1

ஜெயமோகனின் மொழிபெயர்ப்பில் பல கவிதைகளை கீழே கொடுக்கிறேன்.

நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கி தண்கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் போதியவிழ் வான்பூ
இன்கடுங் கல்லின் மணம் இல கமழும் –
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழியவர் சென்ற நாட்டே?
   – கழார்க்கீரன் எயிற்றியனார் குறுந்தொகை 330. திணை மருதம்

நன்மை செய்யும் சலவைக்காரி
கஞ்சிப் பசையிட்டு எடுத்து
கல்லில் அடித்துப் பிழிந்து
குளிர்ந்த குளத்தில் இடுகையில்
நீரில் பிரியும் துணி போல
அகன்ற இலைகள் கொண்ட
பகன்ரையின் பெரிய மலர்
துவர்ப்பும் இனிப்பும் மிக்க
கள் போல மணக்கும்
இது போன்ற ஒரு மாலைப் பொழுது
அவன் பிரிந்து சென்ற
அந்த நாட்டிலும் இருக்காதா என்ன?

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு
புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உரைசிறந்து
தூதை தூற்றுங் கூதி யாமத்து
தானுளம் புலம்புதொறும் உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
   – வெண்கொற்றனார் , குறுந்தொகை 86 , திணை குறிஞ்சி

மழைத்துளி நிரம்பிய
குளிர்ந்த காற்றில்
ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடி தாங்காது
தொழுவத்து எருமை
தலை குலுக்கும்போது
எழும் கழுத்து மணியோசையை
என்னைப் போல
அணையுடைத்த கண்ணீரால்
தாள முடியாத துயருடன்
புரண்டு புரண்டு படுத்தபடி
இரவெல்லாம்
கேட்டுக் கொண்டிருக்கும்
வேறு யார் உள்ளனர்
இந்த ஊரில்?

யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே
   – செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை 40, திணை குறிஞ்சி

எனது தாயும் உனது தாயும்
யாரென்று நாமறியவில்லை
எனது தந்தைக்கும்
உனது தந்தைக்கும்
என்ன உறவென்றும்
தெரியவில்லை
நானும் நீயும்
முன்பு கண்டதுமில்லை
பாலை மண்ணில்
மழை நீர் போல
அன்புடைய நெஞ்சங்கள்
ஒன்றாய்க் கலந்தன.

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னோடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
   – திணை பொதுவியல், புறநானூறு 256

தாழி செய்பவனே தாழி செய்பவனே
தருமம் நிறைந்த பழைய ஊரின்
தாழி செய்பவனே
அச்சில் சுழலும் வண்டிச் சக்கரத்தில்
ஒட்டியிருக்கும்
சிறிய வெளிறிய பல்லி போல
இவனுடன்
பல விதமான பாதைகள் தாண்டி வந்த
என்னிடமும் கனிவு காட்டுவாயாக.
மலர் நிரப்பி
மண்ணில் இறக்கப்படும்
உறுதியான பெரிய தாழியை
இன்னும் பெரிதாக வனைவாயாக.

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்
பாவை அன்ன நப்புறம் காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு
கண்டனம் வருமோ சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
வருந்தளைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தான் பனியலை நீயே!
   – பாடியவர் பெயர் தெரியவில்லை நற்றிணை 182 திணை குறிஞ்சி

நிலவு மறைந்தது
இருள் பரவியது
ஓவியம் போல அழகுள்ளது நம் வீடு
காவலுக்கு வரையப்பட்ட
பொம்மைகள் போல
தாயும் தந்தையும்.
அவர்களும் இதோ தூங்கிவிட்டனர்.
மேலேயும் கீழேயும் உள்ள
பாகர்களால் கைவிடப்பட்ட
கொதிக்கும் மத்தகமுள்ள
யானை போல்
தன்னந்தனியாக
உன்னைத் தேடி அவன் வருவான்.
தொலைந்த நகையை
கண்டெடுப்பது போல
ஓடிச் சென்று
துடிக்கும் மார்பில் சேர்வாயாக.

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினேன் அல்லனோ யானே பொலந்தார்த்
தேரவண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.
   – பொத்தியார், புறநானூறு, திணை பொதுவியல்

பெரிய சோற்றுருண்டை தந்து
வெகுநாள் வளர்த்த
ஓங்கிய யானை
இறந்த பின்பு
அது நிறைந்து ஆடிக் கொண்டிருந்த
காலியான கொட்டில் கண்டு
கண்ணீர் மல்கும் பாகனைப்
போல
பெற்தேர் கிள்ளி இருந்த
உறையூர் மாமன்றத்தைக் கண்டு
நானும் இதோ கலங்குகிறேன்.

செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த
செங்கோல் அம்பில் செங்கோட்டு யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
   – திப்புத்தோளார், குறுந்தொகை, திணை குறிஞ்சி

சிவந்த போர்க்களத்தில்
கொன்று வீழ்த்தப்பட்ட
அசுரர்களின் உதிரம் தோய்ந்துச்
சிவந்த அம்பும்,
ரத்தத்தால் சிவந்த
தந்தங்களுள்ள யானையும்,
செங்கழலணிந்த கால்களும்
கொண்ட
செவ்வேளின் குன்று
குருதி நிற மலர்க் கொத்துகளால்
நிரம்பியது.

துறுகல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளிறு இவருங் குன்ற நாடன்
நெஞ்சுகலனாக நீயலேன் யானென
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ தோழி நின் வாயிநானே?
   – பரணர், குறுந்தொகை, திணை குறிஞ்சி

உருண்ட பாறை
அருகே இருந்தும்
மாணைக்கொடி
தூங்கும் யானை மேல் படரும்
குன்றுக்கு அதிபன்
உன் அழகிய தோள்களை
தன் நெஞ்சையே சாட்சியாக்கி
ஒருபோதும் பிரியேன் என்
உறுதியளித்ததை எண்ணியா
வருத்துகிறாய் தோழி?

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்பசிச் சென்னா உயங்குமறை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு
அருஞ்சுரம் செல்வோருக்கு வல்சி ஆகும்
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறைகை விட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறத்து இருத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே.
   – எயினந்தையார், நற்றிணை, திணை பாலை

வெள்ளை ஆடையை விரித்தது போல
வெயில் பரவிய மலைச்சரிவில்
கோடையில் தளர்ந்த
வரையாட்டை
தின்று பசியாற்றிய ஓநாய்கள்
கிழித்து போட்டுப்போன
உலர்ந்த சதித் துணுக்குகள்
தொலைதூர இலக்கிடம் தேடி
பசித்துத் தள்ளாடி நடக்கும்
பயணிகளுக்கு உணவாகும்
வெந்து பழுத்த சாலையின்
வழியாக
இவளைப் பிரிந்து பயணமாவது
ஒரு வேளை உனக்கு
குளிர்தென்றல் போல
மகிழ்வூட்டலாம்
இவளுக்கோ
காக்கும் கடவுளால் கைவிடப்பட்டு
ஈரக் கண்களுள்ள
யானைப் படையுடன்
துணைக்கு யாருமில்லாமல் ஆன
விரிசலிடும் ஒற்றைக் கோட்டை
உடைய
சிற்றரசனைப் போல
மரணம் நெருங்கி வருகிறது.

கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை
வடுக்கொலப் பிணித்த விடுமுரி முரற்சிக்
கைபுனை சிறுநெறி வாங்கி பையென
விசும்பாடு ஆய்மயில் கடுப்ப யானின்று
பசுங்காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ தோழி பலவுடன்
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபட காணாது
பெருங்களிறு பிளிரும் சோலை அவர்
சேண்நெடுங் குன்றம் காணிய நீயே.
   – கபிலர், நற்றிணை 222, திணை குறிஞ்சி

வாழைக் கூட்டம் அடர்ந்த
மலைச் சரிவில் உறங்கும்
பிடி யானையின் மீது
மேகம் படரும்போது
துனைவியைக் காணாத
ஆண் யானை பிளிரும்
சோலைகள் நிரம்பிய
அவனது குன்றைக் காண வசதியாக
கரிய அடிமரமுள்ள
வேங்கை மரத்தின்
சிவந்த பூக்கள் நிரம்பிய கிளையில்
தடம் பதியும்படி கட்டப்பட்ட
அலங்கார ஊஞ்சலில்
உன்னை அமரச் செய்து
இடைக் கச்சையில் பற்றி
மெல்ல ஆட்டிவிடட்டுமா?
விண்ணிலாடும் மயில் போல
வானில் நின்று பார்த்துக் கொள்!

இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழு நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத்து உகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கொடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவம் கொல்லாதொனே
   – புறநானூறு 232

புலரியும் அந்தியும்
இனி இல்லாமலாவதாக!
என் நாட்கள் எல்லாம்
கெட்டு மறைவதாக!
சிகரங்கள் உயர்ந்த
குன்றுகள் நிரம்பிய
நாட்டையே அளித்தாலும்
கையேந்திப் பெறாதவன்
அதியமான் நெடுமானஞ்சி
நடுகல் நட்டு வைத்து
பூமாலை அணிவித்து
நாரால் அரித்த கள்ளை
சிறு கலயத்தில்
படையலிட்டால் அவன்
ஏற்றுக் கொள்வானா என்ன?

பின்குறிப்பு: அடுத்த பகுதியை எப்போது தட்டச்சிடுவேனோ தெரியாது. வேறு யாராவது ஏற்கனவே தட்டச்சிட்டிருந்தால் சொல்லுங்கள், பேசாமல் இணைப்பு கொடுத்துவிடலாம். இல்லை யாருக்காவது பொறுமை இருந்தால் தட்டச்சு செய்து அனுப்புங்கள், பதித்துவிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதை பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: கவிதை என்றால் என்ன என்று தெளிவாக்கிய “சங்க சித்திரங்கள்