முதல் ஒரிய மொழி நாவல்

ஃபகீர் மோகன் சேனாபதி ஒரிய இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார்.ஒரிய மொழியின் முதல் நாவலான எழுதியவர் Chaamana Atha Guntha (சரியான உச்சரிப்பு தெரியவில்லை. ஆங்கிலத்தில் Six Acres and a Third என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.) இவரே. ஒரிய மொழியின் முதல் சிறுகதையான “ரேபதி” (ரேபதி என்றால் ரேவதி – வங்காள, ஒரிய மொழிகளில் “வ” என்ற ஒலி “ப” என்று ஒலிக்கப்படுகிறது) இவர் எழுதியதே. அதுவும் நல்ல சிறுகதை. திறமை அற்ற எழுத்தாளர் எழுதி இருந்தால் செயற்கையான மெலோட்ராமா சிறுகதையாக வந்திருக்கும், இவர் மெய்நிகர் அனுபவத்தை, ஒரு காலகட்டத்தை, அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

1897, 98 வாக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்த புத்தகம். நாலு முறை தேனாம்பேட்டை சாஹித்ய அகாடெமி அலுவலகத்தில் தேடி இருக்கிறேன், எப்போதும் out of print-தான். இந்த வருஷம் படிக்க விரும்பும் புத்தகம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக சான் ஹோசே நூலகத்தில் கிடைத்தது. அவரது உறவினர்களே யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

நாவல் ஒரு gem. மொழிபெயர்ப்பே இவ்வளவு அருமையாக இருந்தால் ஒரிய மொழியில் நிச்சயமாக வெகு பிரமாதமாக இருக்கும்.

கதை கிதை என்றெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை. மங்கராஜ் எல்லாரையும் ஏமாற்றி ஜமீந்தார் ஆகிறான். ஒரிஜினல் ஜமீன்தாரை ஏமாற்றி நிலத்தை அபகரிக்கிறான். ஏழை நெசவாளி பகியா, அவன் மனைவி சரியா இருவரையும் ஏமாற்றி அவர்களுடைய 6.32 ஏக்கர் (நம்மூரில் காணி, குழி, மா என்றெல்லாம் இருந்தமாதிரி ஒரிஸ்ஸாவில் அவர்களுக்கான நில அளவுகோல்கள், அதை ஏக்கரில் மாற்றி புத்தகத்துக்கு பேர் வைத்திருக்கிறார்கள்.) நிலம், அவர்களுடைய பசு ஆகியவற்றை பிடுங்கிக் கொள்கிறான். அவனுடைய கூட்டாளி சம்பா மூலம் தன் விரோதி வீட்டில் தீ வைக்கிறான். ஆனால் சரியாவை கொலை செய்தான் என்று அவனை ஒரு கேசில் மாட்டிவிடுகிறார்கள். அவனுடைய வக்கீல் இவனிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு ஜமீந்தார் ஆகிவிடுகிறான். கொலை செய்யவில்லை என்று நீதிபதி சொன்னாலும் ஆறு மாதம் ஜெயில் தண்டனை கிடைக்கிறது. சம்பா இவன் பணத்தை எல்லாம் திருடிக் கொண்டு போகும்போது கொல்லப்படுகிறாள். கொலையாளியை முதலைகள் தின்கின்றன. மங்கராஜ் “Six Acres and a Third! Six Acres and a Third!” என்று புலம்பிக் கொண்டே இருக்கிறான்.

கதை சில இடங்களில் ஜம்ப் ஆகிறது. மங்கராஜ் ஏமாற்றுவது, சம்பா எதிரிகளின் வீட்டுக்குத் தீ வைப்பது, மங்கராஜ் கைது செய்யப்படுவது ஆகிய இடங்களுக்கு நடுவே கொஞ்சம் கோர்வையாக இல்லை. இது மொழிபெயர்ப்பாளரின் தவறா, இல்லை சேனாபதியே அப்படித்தான் எழுதினாரா என்று தெரியவில்லை.

சேனாபதி வெகு சுலபமாக அந்தக் கால சமூகத்தை நம் கண்ணெதிரே கொண்டுவருகிறார். ஒரிஜினல் ஜமீன்தாரின் ஊதாரித்தனம், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு விதித்தது கஷ்ட வாழ்க்கைதான் என்று உழலும் கிராமத்தார்கள், தகராறுகள், போலீஸ்காரர்களின் அராஜகம், வாழ்க்கை முறை மாறும்போது போலீஸ், வக்கீல், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் ஆகியவை பற்றி தெரிந்தவன் சுலபமாக எல்லாரையும் ஏமாற்றுவது என்று சின்ன சின்ன சித்திரங்களைக் காட்டுகிறார்.

நாவலை மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு போவது அவர் வாசகர்களிடம் நேரடியாக பேசுவதுதான். நூறு பக்கம் கதை என்றால் அதில் ஐம்பது பக்கம் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார். அதில் satire, irony, அங்கதம் எல்லாம் இருக்கிறது. நேரடியாகப் பேசுவதை நான் ரசிப்பேன் என்று இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் நினைத்ததில்லை.

கட்டாயமாகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஹிந்து பத்திரிகையில் சில excerpts-களை பதித்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்