Skip to content

ரோஹின்டன் மிஸ்திரி எழுதிய “எ ஃபைன் பாலன்ஸ்”

by மேல் ஜூன் 12, 2012

இது நண்பர் பாலாஜி (பாலாஜி ஸ்ரீனிவாசன் இல்லை) எழுதிய பதிவு. அவருக்கு நன்றி!

A Fine Balance” நாவலை நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாசிக்கத் துவங்கினேன். Rohinton Mistry-யின் பெயரை இணையத்தில் யாரோ சொல்லிக் கேட்டிருந்ததால் நூலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்ததும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

கூட்டமான மும்பை ரயிலில் பிரயாணம் செய்யும் 3 பாத்திரங்களின் அறிமுகத்தோடு துவங்குகிறது இந்த நாவல். 18 அல்லது 19 வயதுடைய ஓம் பிரகாஷ், அவனது பெரியப்பா ஈஸ்வர் மற்றும் கல்லூரி மாணவன் மானெக். முதல் இருவரும் வேலை தேடியும், மானெக் தங்கும் இடம் தேடியும் செல்கிறார்கள். மூவர் செல்லும் இடம் ஒன்றே. அது நான்காவது கதாபாத்திரம், தினா தலாலின் வீடு. இந்தப் புள்ளியிலிருந்து பின்னோக்கிச் சென்று இவர்களின் முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளும், இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்த சூழ்நிலைகளையும் விவரிக்கிறது.

தினா தலால், காதலித்துக் கைப்பிடித்த கணவன் மூன்றே வருடங்களில் விபத்தில் மரணமடைந்த பின், உறவென்று இருக்கும் ஒரே அண்ணனின் தயவில் வாழ நேர்ந்தவள். வெறும் சமூகத்திற்கு பயந்தே தன்னை காப்பாற்றும் அண்ணனின் தயவில் வாழ விருப்பமில்லாமல், சுயமாய் சம்பாத்தித்து வாழத் துடிப்பவள். தோழிகளின் உதவியால் தையல் வேலை கிடைக்க, தனியே வாழ முனைகிறாள். வரும் வருமானம் போதவில்லை. ஆனால் வேலையோ நிறைய. இரண்டையும் சமாளிக்க, வீட்டை உள்வாடகைக்கும்,தையல் வேலைக்கு ஆட்களையும் வைத்துக் கொள்ள முடிவு செய்கிறாள். வாடகைக்கு மானேக்கும், வேலைக்கு ஓம் பிரகாஷ் மற்றும் ஈஸ்வரும் வந்து சேர்கிறார்கள். இவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதை.

தினாவின் முந்தைய வாழ்க்கை, அவள் அண்ணனுடன் சிறு வயது முதல் ஏற்படும் உரசல்கள், 3 வருட மண வாழ்க்கை போன்றவை மேல் நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்புகள்.

ஈஸ்வரும், ஓம் பிரகாஷும் வட இந்தியக் கிராமத்திலிருந்து, மும்பைக்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள். செருப்புத் தைக்கும் வேலையைக் குலத் தொழிலாகக் கொண்ட இவர்கள் குடும்பம் எதிர் கொள்ளும் சாதிக் கொடுமைகளும், மும்பை வந்த பிறகு இவர்களின் வாழ்க்கை முறையும் அடித்தட்டு மக்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது.

மானெக், ஒரு மலை வாசஸ்தலத்திலிருந்து, கல்லூரியில் சேர்ந்து படிக்க மும்பைக்கு வரும் மாணவன். அவன் தந்தை ஒரு மளிகைக் கடை வைத்திருப்பவர். மகன் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று விரும்பி, மானேக்கின் விருப்பத்திற்கு மாறாக அவனை மும்பைக்கு அனுப்புகிறார். இது கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பு.

நால்வருக்கும் ஒருவரது உதவி மற்றவருக்குத் தேவைப்படுகிறது. தினாவிர்க்கு மானேக்க்கின் மூலம் வரும் வாடகைப் பணம், ஈஸ்வர் மற்றும் ஓம் பிரகாஷ் மூலம் வரும் உபரி வருமானம் ஆகியவை முக்கியம். மானேக்கிற்கு, கல்லூரி விடுதியில் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களினாலும், மும்பையில் தினாவின் வீட்டைத் தவிர குறைவான வாடகையில் வேறு இடம் கிடைக்காத காரணத்தினாலும் அங்கு இருப்பது அவசியம். மற்ற இருவருக்கும் மும்பையில் பல வேலை தேடி அலைந்த பிறகு கிடைத்த இவ்வேலையை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இதனால் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் சந்தேகங்களும், அர்த்தமற்ற பயங்களும் கலந்த ஒரு வாழ்க்கை தரிசனத்தைக் காட்டுகிறார் மிஸ்திரி.

ஈஸ்வர், ஓம் பிரகாஷ் ஆகியோரது கிராம வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது தலித் கொடுமைகள், மேல் சாதியினர் தலித்துகளுக்கு இழைத்த கொடுமைகளை மிக விவரமாக எழுதுகிறார். போதாக்குறைக்கு, ஈஸ்வரின் முன் தலைமுறையிலிருந்து விவரிக்கத் தொடங்குவதால், சுதந்திரத்தை ஒட்டி நடந்த ஹிந்து-முஸ்லிம் கலவரத்தையும் சேர்த்திருக்கிறார். இது தவிர, எமர்ஜென்சிக் காலத்தை ஒட்டி நடக்கும் இக்கதையில், மானேக்கின் கல்லூரி நண்பன் அவினாஷின் திடீர் தலைமறைவு, பின்னர் அவனது மரணமாக வெளிவரும் சம்பவம் ராஜன் கொலை வழக்கின் பாதிப்பில் எழுதியதோ என்ற சந்தேகம் எனக்கு.

மேலும் அந்தச் சமயத்தில் சஞ்சய் காந்தியின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நடந்த அட்டூழியங்களையும் கதைக்குள் புகுத்திவிடுகிறார். ‘இந்தியால இப்போ எமர்ஜென்சி வரணும் அப்போதான் இந்த பஸ், ரயிலெல்லாம் சரியான நேரத்துக்கு வரும்’ என்னும் வகையில் அரசியல் பேசும் ஆட்களையே பார்த்த எனக்கு, அன்று எமர்ஜென்சியினால் விளைந்த கொடுமைகளும், மனித உரிமை மீறல்களும் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் வரவழைத்தன. இதோடு இந்நாவலில் எளிமையான, நேரடியான அரசியல் அங்கதமும் உண்டு.

இவை தவிர, ஈஸ்வரும், ஓம் பிரகாஷும் மும்பையில் சந்திக்கும் பல்வகைப்பட்ட மனிதர்கள் – ராஜாராம் (தலைமுடியை சேகரித்து, விற்று வாழ்பவன்), குரங்காட்டி (Monkey Man), பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்தும் Beggar Master (ஏழாம் உலகத்தின் போத்திவேலு பண்டாரத்தை நினைவூட்டும் பாத்திரம்). இவர்கள் மூலம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை நுணுக்கமாக விவரிக்கிறார்.

இருக்க இனி ஒன்றுமில்லை என்ற நிலையிலும், இழக்க இனி ஒன்றுமில்லை என்று போராடத் துணியும் இந்தப் பாத்திரங்கள் மூலம், இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அதே நேரம் அர்த்தமற்ற அரசியலாலும், சமூகத்தின் அக்கறையின்மையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்களது வாழ்க்கையைப் பார்க்கும் போது, நம் அடிப்படைக் கட்டமைப்பின் மீதே ஒரு அவநம்பிக்கையை தோற்றுவிக்கிறார். மொத்தத்தில் நாவலை வாசித்து முடிக்கும் போது ஒரு நீண்ட காலத்தைக் கடந்து வந்ததைப் போன்ற ஆயாசம் ஏற்ப்படுகிறது. அதையும் தாண்டி ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்திரம் கிடைப்பதால் வாசிப்பனுபவத்திற்க்குக் குறை இல்லை.

என்னைப் பொறுத்தவரை வாசிக்க வேண்டிய, நீண்ட நாவல் என்றாலும் வாசிக்கக் கூடிய புத்தகம் இது. கண்டிப்பாக வாசியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

Advertisements
2 பின்னூட்டங்கள்
 1. அருணா permalink

  பாலாஜி – சில வருடங்கள் முன்பு படித்த் புத்தகம். எனக்கு ரொம்ப பிடித்தது. ஞூழ் நிலையின் காரணமாக சேர்ந்து வேலை செய்ய தொடங்கி பின்பு வளரும் நட்பை நன்றாக சித்தரித்திருப்பார். Beggar Master போன்ற பாத்திரங்கள் வந்தாலும், மிக ஏழ்மையிலும் அவர்களிடையே நடக்கும் கிண்டலானா உரையாடல்கள், நட்பு போன்றவை அவர்களை வெறும் பிச்சைகாரர்களாக காரிகேச்சராக இல்லாமல் அவர்களின் அகவாழ்வின், சிறு சந்தோஷங்களை காட்டி மனிதர்களாக்கியது.

  இப்புத்தகம் படித்து பல வருடங்கள் கழித்து தான் நான் ஏழாம் உலகம் படித்தேன். அதில் உள்ள சித்தரிப்புக்கள் இப்புத்தகத்தை ஞாபகப்படுத்தியது (ஏழாம் உலகம் இன்னும் வெகு ஆழமாக).

  Like

  • Balajee permalink

   அருணா,

   உங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். அடிநாதமாக ஓடும் அந்தச் சூழ்நிலை நட்பின் நுண்மையான சித்தரிப்பு இப்படைப்பின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். மேலும், எந்த நிலையிலும் மனிதத்தை தக்க வைத்துக்கொள்ளும் அப்பாத்திரங்கள் மூலம் பொதுவான பல மனப்பிம்பங்களை உடைத்து முன்னகர்கிறார்.
   நானும் தங்களைப் போலவே ஏழாம் உலகத்தை இதற்குப் பிறகு தான் வாசித்தேன். ஆம், அதன் உக்கிரத்தின் பாதிப்பை அதிகமாகத்தான் உணர்ந்தேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: