சிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம் – பாகம் 2 (பி.ஏ.கே.யுடன் ஒரு சந்திப்பு)

(விசு எழுதிய பாகம் – என்ன பேசப்பட்டது என்பதை பற்றிய குறிப்புகள் அடங்கியது)

திரு. பகவதி பெருமாளின் (பக்ஸ்) இல்லத்தில் ஜுன் 9, சனிக்கிழமை மதியம் (2.00  – 7.00 ) ‘கலங்கிய நதி‘ நாவலை எழுதிய எழுத்தாளர் திரு. P.A.கிருஷ்ணனுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. முதல் இரண்டு மணிநேரம் கலங்கிய நதி நாவலைப் பற்றியும், பின்பு பொதுவாகவும் விவாதம் இருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு கிருஷ்ணன் ராஜனுடன் வந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் 10-15 பேர் வந்தபின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. கடந்த இருவது வருடங்களில், இந்திய இலக்கியச் சூழலில், தமிழ் அளவிற்கு மற்ற மொழிகளில் படைப்புகள் வருவதில்லை; புத்தக விற்பனையில் மட்டுமல்லாது, இலக்கியத் தரமான படைப்புகளிலும் தமிழ்தான் முதலிடம் என்றார் கிருஷ்ணன்.

பக்ஸ், நான், பாலாஜி உட்பட சிலர், கலங்கிய நதியின் ஆங்கில வடிவத்தை ( ‘Muddy River’ ) படித்திருந்தோம். ஆர்.வி, சுந்தரேஷ் உள்ளிட்டோர் தமிழ் வடிவத்தை ( ‘கலங்கிய நதி’ ) படித்திருந்தார்கள். கலங்கிய நதி பற்றி நாவலை படித்தவர்கள், மற்றவர்களுக்காக,  சுருக்கமாக நாவலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

நாவலில் வரும் அங்கத அம்சத்தை முதலில் பேசினோம். அரசு அலுவலக வரைமுறைகளின் சித்தரிப்பில் உள்ள அங்கதம் மிக அருமை என்றனர் அனைவரும். நாவலில் வரும் தேநீர் – அலாரம் பகுதியை ஒரு முறை கிருஷ்ணன் படித்துக்காட்டினார். அப்பொழுதே உரையாடல் களைகட்டத் தொடங்கியது.

அடுத்து, நாவலின் ஒரு சரடான, மின்செலுத்தீட்டு கோபுர (transmission tower 🙂 ) ஊழலை பற்றி பேசினோம். 2ஜி காலத்தில், முப்பது கோடி ஒரு ஊழலா, இதைவிட பெரிய ஊழல் (!!) இல்லையா என்றனர் ஆர்.வியும், பாலாஜியும். ஊழலின் அளவை கூட்டி எழுதியிருக்கலாம், நம்பர் முக்கியமில்லை, எவ்வளவு நூதனமான முறையில் ஊழல் செய்கிறார்கள், சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கூட வசூலிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதே தன் நோக்கம் என்றார். ஆனால், இனி வரும் காலங்களில், தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களால் ஊழல் குறையும் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்றார். ஊழலை ஒட்டிய விவாதத்தில், அன்னா ஹசாரே இயக்கத்தில் பிழைகள் பல இருப்பினும்,  அது தோல்வி அடைந்திருப்பினும், its a right step in the right direction என்றார்.

பகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம். பின்பு, அதையொட்டி விவாதம் தொடர்ந்தது. அஸ்ஸாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாயைப்பற்றி விளக்கினார் கிருஷ்ணன். 1971 வங்கதேசப் போரின் விளைவாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகள் அதிக அளவில் அஸ்ஸாமில் குடியேறினர். இது, அஸ்ஸாமிய மக்கள்பரவலில் (demography) பெரும் மாற்றத்தை உருவாக்கியது; மேலும், வளமான பிரம்மபுத்திரா நதிப்படுகையில் குடியேறிய அகதிகள், தங்கள் கடின உழைப்பால் முன்னேறினர்; தன்னைவிட ஏழையாக இருந்த அண்டைவீட்டான் வளமானதை பொருக்காமல், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே’ என்ற போராட்டம் ஆரம்பித்தது. சமூகப்பிரச்சனையை, மத்திய அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, ஆயுதம் கொண்டு அடக்கமுற்பட்டமையே, அஸ்ஸாம் பற்றி எரிய காரணமானது; இந்திய அரசின் ‘பெரிய அண்ணன்’ தனத்தினால், இஸ்லாமிய அகதிகளுக்கெதிராக உருவான உல்ஃபா, இந்தியாவிற்கெதிராக திரும்பியது என்றார். (நாவலில், காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் கூற்றாக இவை வரும்).

எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உயர்ந்த லட்சியவாதத்தின் அடிப்படையில் தொடங்கப்படும், பின்பு, நாளடைவில், அதிகாரப்போட்டியின் விளைவாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, தன் கொள்கையிலிருந்து இறங்கி, தாழ்ந்து, அழிவை நோக்கிச் செல்லும் என்றே நமக்கு வரலாறு சொல்கிறது.  சமீபத்திய உதாரணம் LTTE என்றார். (‘கலங்கிய நதி’ இலங்கை தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘Muddy River’ அஸ்ஸாமிய மக்களுக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, திரும்பிவராத திரு.கோஷிற்கும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது ). உல்ஃபாவிற்கும் அதுவே கதி என்றார். சீனா, மியான்மர் போன்ற நாடுகள் உல்ஃபாவிற்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டமை போன்றவற்றை காரணம் காட்டி, உல்ஃபாவோ, வேறு வடகிழக்குத் தீவிரவாத குழுக்களோ இனி threat இல்லையென்றார்.

நாவலில், சமூகப்பிரச்சனைகளுக்கு தீவிரவாதத்திற்கு மாற்றாக காந்தியம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, காந்தியம் மட்டுமே தீர்வல்ல, ஆனால், அது தீர்விற்கு நல்ல வழிமுறையாக இருக்கலாம் என்றே சொல்கிறேன் என்றார். சுதந்திர போராட்டத்தின்போது, அம்பேத்கரோ, ஜின்னாவோ ஒரு தரப்பிற்காக மட்டுமே பேசினார்கள்; காந்தி மட்டுமே அனைவருக்காவும் பேசினார்; காந்தியின் கடைசி முப்பது நாட்கள், இயேசுநாதரின் கடைசி நாட்களைப் போன்றதே; தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்தபின் தெளிவாகிவிடும், முன்பைவிட மிகத்தெளிவாக ” – பிரிவினையின்  கோர தாண்டவத்தின் நடுவிலும்கூட, காந்தி எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் பாருங்கள்; காந்தியின் optimism பிரமிக்கவைக்கிறது என்றார். ‘கலங்கிய நதி ..’ வரிகளை படித்துக்காட்டினார். நதி எப்போது தெளிவடையும் என்று தெரியாது என்றார்.

மேலும், தமிழ்நாட்டைப்போல் இல்லாமல், அஸ்ஸாமிய முதல்வர்களை எளிதாக நேரில் சந்திக்கமுடியும் என்ற கிருஷ்ணன், நாவலைப் பற்றி, அஸ்ஸாமிலிருந்து பாஸிட்டிவ்வாகவே விமர்சனங்கள் வந்தன என்றார்.

விவாதம் மார்க்ஸியத்தை நோக்கித் திரும்பியது. சுந்தரேஷ், திரு.சந்திரா [சிம்மக் குரலோன் என்ற பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட குரலுடைய ஒருவரை அன்றுதான் சந்தித்தேன் :-).] , அருண் உள்ளிட்டோர் மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டது என்றனர். சிறிது நேரம் சூடாக விவாதம் நிகழ்ந்தது. மார்க்ஸிய சித்தாந்தம் காலாவதியானாலும், மார்க்ஸிய கருவிகள் (பொருள்முதல்வாத முரணியக்கம்,..)  இன்றும் முக்கியமானது என்ற கிருஷ்ணன், மேற்கொண்டு விவாதத்தை எழுத்தில் தொடரலாம் என்றார்.

பின்பு நாவலின் வடிவம் பற்றி பேசினோம். நாவலின் கதை எளிமையானது [தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரை மீட்கப் போராடும் ஒரு எளிய அரசு அதிகாரி, மற்றும் அந்த அதிகாரி வெளிக்கொணரும் ஊழல்.] முதல் வடிவம் எழுதியபின், அது தட்டையானதாக இருந்தது. ஆகவே, அனுபமா உள்ளிட்ட கதாபாத்திரங்களை சேர்த்தேன்; நாவலுக்குள் நாவலை விமர்சிக்கும் வடிவத்தில் எழுதினேன் என்றார். புதிதாக வந்திருந்த செந்தில், இரண்டு வரி எழுதுவதே கடினமாக இருக்கிறது, எப்படித்தான் பக்கம்பக்கமாக நாவல் எழுதுகிறீர்களோ என்று கேட்டார். அதற்குத்தான் நாவலை எழுத ஏழு வருடம் எடுத்துக்கொண்டேன் என்றார் கிருஷ்ணன். கடத்தப்பட்டவரை மீட்பதில், சந்திரனுக்கு தெரியாமல் சில நிகழ்வுகள் நடந்ததாக சித்தரித்ததன் மூலம், சந்திரனை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ ஆக்காமல், மிக இயல்பாக சித்தரித்திருந்தீர்கள் என்றார் ஆர்.வி.

ஆர்.வி, பாலாஜி, சுந்தரேஷ் உள்ளிட்டோர், கலங்கிய நதியைவிட புலிநகக் கொன்றை தங்களை மிகவும் கவர்ந்தது என்றனர். புலிநகக் கொன்றையின் கதைக்களம், தமிழகமாக இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு பிடித்திருக்கலாம், வட இந்திய நண்பர்களுக்கு கலங்கிய நதி பிடித்திருந்தது; அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் என்றார்.

தன் இரு நாவல்களுமே அரசியல் நாவல்கள் என்ற கிருஷ்ணனிடன், 1970களோடு தமிழ்நாட்டில் கல்லூரிகள் apolitical ஆகி, 1970களுக்கு பிந்தய மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டதை குறிப்பிட்ட பாலாஜி, அதற்கேற்றார்போல, 200 வருட கதையைச் சொல்லும் புலிநகக் கொன்றையை 1970களில் முடித்தீர்களா என்று கேட்டார். அதை ஆமோதித்த கிருஷ்ணன், 1970களுக்கு பின் நடந்தவை என, புலிநகக் கொன்றை – 2 எழுத ஒரு திட்டமிருக்கிறது என்றார்.

தன் அடுத்த புத்தகத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார். தமிழர்/இந்தியர்களுக்கு வரலாற்றை பதிவு செய்வதில் அக்கறை இல்லை, வெள்ளையர் பதிவுசெய்தவற்றையும் நாம் முழுமையாக ஆராயவில்லை என்றார். மருது பாண்டியர், ஊமைத்துரை, வெள்ளையர்கள் பின்னனியில் கதை இருக்கலாம், அதிகபட்சம் நானூறு பக்கங்கள் இருக்கும் என்றார். ( தலையனை சைஸ் புத்தகங்கள் எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்!!).

புதிதாக வந்தவர்கள் மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பிச் சென்றபின், சிலிக்கான் ஷெல்ஃப் குழும நண்பர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கிருஷ்ணனுடன் செலவிட்டோம். அவரை கவர்ந்த நாவல்களைப் பற்றியும், அரசியல், சினிமா என்று பல தளங்களிலும்  உரையாடினோம்.

ஐந்து மணிநேரம், சிறிது கூட சோர்வடையாமல் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலிக்கான் செஷ்ஃப் சார்பாக நன்றிகள். சிறப்பான உணவு மற்றும் இடம் ஏற்பாடு செய்த பக்ஸ் மற்றும் சித்ரா தம்பதிகளுக்கு ம் நன்றிகள். கலிஃபோர்னியாவிற்கு வருகை தரும் தமிழ் எழுத்தாளுமைகளையும், வாசகர்களையும் இனைக்கும் பாலமாக செயல்படும் அண்ணன் ராஜன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்

தொடர்புடைய பிற இடுகை:
பாகம் 1
‘கலங்கிய நதி

9 thoughts on “சிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம் – பாகம் 2 (பி.ஏ.கே.யுடன் ஒரு சந்திப்பு)

 1. Reblogged this on Tamil Archives and commented:
  பிரகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம்.

  Like

 2. மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் விசு… வாழ்த்துக்கள்.

  உண்மையிலேயே KBC ஒரு சிம்மக்குரலோன் தான் 🙂

  ஒரு வேண்டுகோள். உங்களுக்கு சிரமமாக இல்லாவிட்டால் நான் தவறவிட்ட அந்த இரண்டு மணி நேர உரையாடலையும் இங்கு பதியுங்களேன்…

  Like

  1. விசு, பொதுவாக நமக்குள்ளே என்ன முதுகு சொரிந்து கொள்வது என்று நான் உங்கள் பதிவுகளுக்கு கமென்ட் எழுதுவதை நிறுத்தி இருந்தேன். இருந்தாலும் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

   Like

 3. பதிவு அருமையாக இருந்தது (அவருக்கு என்ன சாப்பிடக் கொடுத்தீர்கள், அதைச் சொல்லவே இல்லையே!). திருமதி பிஏகேவும் வந்திருந்தார்களா என்று தெரியவில்லை. லண்டனில் அவர்களுடனான உரையாடல் மிக சுவாரசியம்!

  Like

 4. நன்றி சிவா.. பி.ஏ.கே எதையும் சாப்பிடவில்லை.நாங்களெல்லாம் பேல் பூரி, ஸ்வீட், டீ என்று பல அயிட்டங்களை பதம்பார்த்தோம். அவர் மனைவியும் வந்திருந்தார்கள்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.