பொருளடக்கத்திற்கு தாவுக

மு.வ. நூற்றாண்டு

by மேல் ஜூன் 14, 2012

மு. வரதராஜன் ஐம்பதுகளின் லட்சியங்களை, மன ஓட்டங்களை, சிந்தனைகளை தன் புனைவுகளில் பிரதிபலித்தவர். அந்த காலத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் என்றே சொல்ல வேண்டும். அவரது நாவல்கள் கரித்துண்டு, அகல் விளக்கு ஆகியவற்றையும், சில சிறுகதைகளையும், பச்சையப்பர் என்ற நாடகத்தையும், சில பல கட்டுரைகளையும், மொழி நூல், மொழி வரலாறு என்ற “பாடப் புத்தகங்களையும்” படித்திருக்கிறேன்.

கரித்துண்டு, அகல் விளக்கு இரண்டையும் நான் ரசித்தேன். இவை நாவல் என்ற முறையில் வெற்றி பெறவில்லைதான். கதையை அவர் தான் லெக்சர் அடிக்க ஒரு சட்டமாகவே பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்தக் காலத்தில் இதை விட சுவாரசியமாக காபிடலிசம், கம்யூனிசம், அரசின் கடமை ஆகியவற்றை விளக்கி இருக்க முடியாது. இன்றே கடினம். கரித்துண்டு க.நா.சு.வே சிலாகித்த நாவல்.

மொழி நூல் எனக்கு மிக பிடித்த ஒன்று. மொழி எப்படி உருவாகிறது என்று எல்லாருக்கும் புரியும் வகையில் அருமையாக எழுதி இருப்பார். படியுங்கள் என்று எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். இவை எல்லாம் ஓரளவு ஆரம்ப நிலை விளக்கங்கள்தான். வானொலியில் மொழி உருவானது பற்றிய பேச்சுகள் கூட நன்றாக இருக்கின்றன. (சொல்லின் கதை என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது)

பச்சையப்பா கல்லூரி பச்சையப்ப முதலியார் பணத்தில்தான் நிறுவப்பட்டது என்பதைத் தவிர எனக்கு முதலியாரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. மு.வ. எழுதிய இந்த நாடகம் அவரது வாழ்க்கையை சுருக்கமாக விளக்குகிறது. கஷ்டப்பட்டு, ஆனால் சின்ன வயதிலேயே பெரும் பணக்காரர் ஆன பச்சையப்ப முதலியார் 40 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் 1794-இல் விட்டுச் சென்ற சில லட்சங்கள் பல கோடிகளாகப் பெருகி இன்று கோவில், கல்லூரி என்று பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மோசமான நாடகம்தான், ஆனால் பச்சையப்ப முதலியாரின் வாழ்க்கை வரலாறு வேறு எங்கேயாவது எழுதப்பட்டிருக்கிறதா என்பதே தெரியவில்லை, அப்படியே எழுதப்பட்டிருந்தாலும் இதை விட பிரமாதமாக இருந்துவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆவண முக்கியத்துவம் உள்ள நாடகம். பேசாமல் அவர் ஒரு வாழ்க்கை வரலாறாகவே எழுதி இருக்கலாம். pdf வடிவத்தை இணைத்திருக்கிறேன்.

தம்பிக்கு புத்தகத்தில் கதை என்ற framework இல்லாமலே கடித வடிவில் லெக்சர் அடிக்கிறார். தேறவில்லை.

நான் படித்த சிறுகதைகள் எதுவும் தேறவில்லை.

அவரது திருக்குறள் தெளிவுரை மிக புகழ் பெற்றது. அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட தமிழ் பிரியர்களிடம் இந்த நூல் கட்டாயமாக இருக்கும். நூறு பதிப்புகளுக்கு மேல் வந்திருக்கிறது என்று மறைந்த சேதுராமன் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு புகழ் பெற்றது. பட்டப் படிப்பில் பாடப் புத்தகமாக இருந்தது என்று நினைவு. எப்போ பார்த்தாலும் அவர் எழுதிய கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு ஆகியவற்றை பாடமாக வைப்பார்கள். ஆனால் காந்தி அண்ணல் மாதிரி ஏதாவது புத்தகத்தை வைக்காமல் போனார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

மு.வ. ஓரளவு ஜாதிப் பற்று உள்ளவர், முதலியார் ஜாதி மாணவர்களிடம் சலுகை காட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையோ பொய்யோ தெரியாது. திரு.வி.க. இவரையும் அ.ச. ஞானசம்பந்தனையும் (இவரும் ஒரு முதலியார், ஆனால் கலப்புத் திருமணம் செய்தவர்) தனக்கு கொள்ளி போடச் சொன்னதாக அ.ச.ஞா. சொல்கிறார்.

மு.வ. பற்றி ஜெயமோகன் ஒரு சிறந்த மதிப்பீடு எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளில்:

மு.வ ஓர் ஆசிரியராக அவரது காலகட்டத்துக்கு அவர் பணியாற்றினார். அவரது நூல்கள் ஆசிரியர் தன் மாணவர்களுக்காக எழுதிய பாடநூல்களைப் போன்றவை. அவரது நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் என ஏதும் இல்லை. ஆனால் ஒரு காலகட்டத்தில் அக்கால இலட்சியங்களை அவை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்றன. அந்த அளவிலேயே அவருக்கு தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம்.

இது மிகத் துல்லியமான மதிப்பீடு. ஆனால் அவருக்கு முன்னோடி என்ற வகையில் முக்கியத்துவம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

மு.வ.வின் கள்ளோ காவியமோ புத்தகத்தை ஜெயமோகன் தன் நல்ல பரப்பிலக்கியப் பட்டியலில் சேர்க்கிறார்.

2009-இல் அவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆனது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதுதான் சரியான நேரமும் கூட. ஒரு நாற்பது ஐம்பது வருஷங்கள் போனால்தான் ஒரு எழுத்தாளரின் பங்களிப்பு என்ன என்று சரியாக உணர முடியும். நாட்டுரிமை ஆக்கப்பட்டபோது சேதுராமன் எழுதிய அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன்.

எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை, பேராசிரியர்களை, துணை வேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளர் – அறிவுத் தந்தையாய், அன்புள்ள தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்ல மனிதரை – இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து, வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை எதிர்காலத்தில் இனி பார்க்க முடியுமா? (மு.வ. நூல்களைத் திறனாய்வு செய்தவரும், அவரது மாணவருமான இரா. மோகன்)

மு.வரதராசன், வட ஆற்காடு திருப்பத்தூர் தாலுகா வேலம் என்ற கிராமத்தில் திரு. முனுசாமி முதலியாருக்கும் அம்மாக்கண்ணு அவர்களுக்கும், 1912ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தவர். பிறப்பின்போது இவருக்கு இடப்பட்ட பெயர் திருவேங்கடம், ஆனால் காலப்போக்கில் வரதராசன் என்ற பெயரே நிலைத்தது. இளமையில் ஆதாரக் கல்வியை கிராமத்திலும், உயர் நிலைக் கல்வியை அருகிலுள்ள திருப்பத்தூரிலும் 1928ல் முடித்தார்.

இவர் தமிழ் பயின்றது முருகையா முதலியார் என்பவரிடம். உயர் நிலைக் கல்வி முடிந்ததும், சில காலம் திருப்பத்தூர் தாலுகா காரியாலயத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.

பின்னர் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தவர் தமிழ் வித்துவான் முதல் நிலைப் படிப்பை 1931ல் முடித்து மேல் நிலைப் படிப்பை 1935ல் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசும் பெற்றார்.

அதே வருடம் மு.வ. தனது மாமன் மகள் ராதா அம்மாளை மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று மகன்கள் உண்டு.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக 1939ம் ஆண்டு சேர்ந்தவர் தொடர்ந்து 1961ம் வருடம் வரை அங்கு பணி புரிந்தார். பணியிலிருந்தவாறே தமிழ்க் கல்வியைத் தொடர்ந்த மு.வ. 1939ல் பி.ஓ.எல். பட்டத்தையும், தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தனது ஆய்வின் மூலம் 1944ல் எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார். மேலும் தமது தமிழாராய்ச்சியைத் தொடர்ந்து 1948ல், சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற படைப்பில் முனைவரானார்.

பச்சையப்பன் கல்லூரிப் பணியை விட்டுவிட்டு, மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 1961ம் ஆண்டு சேர்ந்தார். இப்பணியிலேயே தொடர்ந்த மு.வ. 1971ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றார். 1972ம் வருடம் அமெரிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியப் பேரறிஞர்(D.Litt) என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்தது.

டாக்டர் மு.வரதராசனார் 1974ம் வருடம், அக்டோபர் மாதம் 10ம் தேதி காலமானார்.

நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் இவரது படைப்புகள். இவர் எழுதிய அகல் விளக்கு என்ற நாவலுக்கு 1963ல் சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. கள்ளோ காவியமோ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. இவரது படைப்புகளின் விவரங்கள் கீழே:

நாவல்கள்:

 1. கள்ளோ காவியமோ?
 2. கரித்துண்டு
 3. பெற்ற மனம்
 4. நெஞ்சில் ஒரு முள்
 5. அகல்விளக்கு
 6. மண் குடிசை
 7. செந்தாமரை (மு.வ. தானே பதிப்பித்தது)
 8. பாவை
 9. அந்த நாள்
 10. அல்லி
 11. கயமை
 12. வாடாமலர்

சிறுகதைத் தொகுதி

 1. விடுதலையா?
 2. குறட்டை ஒலி

வாழ்க்கை வரலாறு

 1. அறிஞர் பெர்னார்ட் ஷா
 2. மகாத்மா காந்தி
 3. ரவீந்திரநாத் தாகூர்
 4. திரு.வி.க.

சிறுவர் இலக்கியம்

 1. குழந்தைப் பாட்டுகள்
 2. இளைஞர்களுக்கான இனிய கதைகள்
 3. படியாதவர் படும் பாடு
 4. கண்ணுடைய வாழ்வு

கட்டுரைகள்

 1. அறமும் அரசியலும்
 2. அரசியல் அலைகள்
 3. பெண்மை வாழ்க
 4. போர்
 5. உலகப் பேரேடு
 6. மொழிப் பற்று
 7. நாட்டுப் பற்று
 8. மண்ணின் மதிப்பு
 9. கி.பி. 2000
 10. பழியும் பாவமும்

இலக்கியம்

 1. திருக்குறள் தெளிவுரை(முதற் பதிப்பு 1949, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன – என்னிடமிருப்பது 1987ல் வெளியான 78வது பதிப்பு)
 2. தமிழ் நெஞ்சம்
 3. தமிழ் இலக்கிய வரலாறு
 4. வாழ்க்கை விளக்கம்
 5. ஓவச்செய்தி
 6. கண்ணகி
 7. மாதவி
 8. இலக்கிய ஆராய்ச்சி
 9. கொங்குதேர் வாழ்க்கை
 10. சங்க இலக்கியத்தில் இயற்கை
 11. இலக்கியத் திறன்
 12. இலக்கிய மரபு
 13. முல்லைத்திணை
 14. நெடுந்தொகை விருந்து
 15. குறுந்தொகை விருந்து
 16. நற்றிணை விருந்து
 17. நடைவண்டி
 18. புலவர் கண்ணீர்
 19. இளங்கோ அடிகள்
 20. இலக்கியக் காட்சிகள்
 21. குறள் காட்டும் காதலர்
 22. மொழி நூல்
 23. மொழியின் கதை
 24. மொழி வரலாறு
 25. மொழியியற் கட்டுரைகள்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
மு.வ. பற்றி ஜெயமோகன்
கரித்துண்டு
அகல் விளக்கு
தமிழ் விக்கிபீடியா

From → Tamil Authors

11 பின்னூட்டங்கள்
 1. Dr L Kailasam permalink

  கலைமகளில் வெளிவந்த என்னுடைய மு.வ. பற்றிய கட்டுரையைப் படித்தீர்களா?
  டாக்டர் எல். கைலாசம்
  ஆசிரியர்: மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம்

  Like

  • டாக்டர் கைலாசம், கலைமகள் படிக்கும் வாய்ப்பு இல்லை. சுட்டி இருந்தால் கொடுங்கள், இணைத்துவிடுகிறேன். இல்லாவிட்டால் மின்பிரதி இருந்தால் அனுப்புங்கள், இங்கும் பதிக்கிறேன்.

   Like

 2. Dr L Kailasam permalink

  தாங்கள் விரும்பியபடியே கலைமகலில் பிரசுரமான கட்டுரையை மின் அஞ்சலில் அனுப்பியுள்ளேன். ஆவன செய்யவும்
  அன்புள்ள
  டாக்டர் எல். கைலாசம்
  ஆசிரியர்: மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம்

  Like

  • டாக்டர் கைலாசம், இது வரை மின்னஞ்சலில் எதுவும் வரவில்லை என் முகவரி rv dot subbu at gmail dot com

   Like

Trackbacks & Pingbacks

 1. கோவை ஞானி பரிந்துரைக்கும் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 2. சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்
 3. க.நா.சு.வின் நாவல் பட்டியல் | சிலிகான் ஷெல்ஃப்
 4. நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல் | சிலிகான் ஷெல்ஃப்
 5. வ.உ.சி., திரு.வி.க., ஸ்ரீனிவாச சாஸ்திரியார், பங்காரு அடிகள்… – அ.ச. ஞானசம்பந்தன் கண்ட பெரியவர்கள
 6. அந்தக் காலத்தில் பிராமணப் பெண்களின் திருமண வயது | சிலிகான் ஷெல்ஃப்
 7. மாநில சுயாட்சியா, திராவிடஸ்தானா? | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: