மௌக்ளி கதைகள்

அனேகமாக மௌக்ளிதான் கிப்ளிங்கின் மிகப் பிரபலமான படைப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஜங்கிள் புக்கில் மௌக்ளியைப் பற்றி மூன்றே மூன்று கதைகள்தான் உண்டு – Mowgli’s Brothers, Kaa’s Hunting, Tiger! Tiger! அவற்றில் நமக்குத் தெரியும் சித்திரம் மௌக்ளி ஓநாய்களிடம் வளர்ந்த சிறுவன், அவனை ஷெர் கான் என்ற புலி வேட்டையாட முயல்கிறது, அகேலா என்ற ஓநாய்த் தலைவன் பலவீனம் அடையும்போது மௌக்ளி ஓநாய்க் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான், மௌக்ளி கிராமத்திலும் நிம்மதியாக வாழமுடியவில்லை, ஆனால் புலியை வெல்கிறான் என்பதுதான். மௌக்ளியின் நண்பர்கள் சிறுத்தை பகீரா, கரடி பலூ, மலைப்பாம்பு கா. அவன் சகோதரர்கள் அவனுடன் வளர்ந்த ஓநாய்கள்.

இத்தனை அருமையான பாத்திரப் படைப்பை, களத்தை இன்னும் விவரித்திருக்கலாமே என்று நான் சிறு வயதில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். வளர்ந்த பிறகு செகண்ட் ஜங்கிள் புக் என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் ஐந்து மௌக்ளி கதைகள் இருக்கின்றன. மூன்றுதான் மௌக்ளியின் சாகசங்கள். மௌக்ளி இப்போது காட்டுக்கு அரசன். தன்னை விரட்டிய கிராமத்தவரை பழிவாங்க மௌக்ளி கிராமத்தை அழிப்பது (Letting In the Jungle), ஊடுருவி வரும் செந்நாய்க் கூட்டத்தோடு போர் (Red Dog), காட்டிலாகாவில் வேலைக்கு சேர்வது (In the Rukh) என்று. இரண்டு கதைகளில் புலிக்கு எப்படி வரிகள் வந்தன (How Fear Came), புதையலைக் காக்கும் நாகம் (King’s Ankus) என்று கதை சொல்கிறார். செந்நாய்ப் போர் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை.

இந்த எட்டு கதைகளையும் ஒன்றாகத் தொகுத்து All the Mowgli Stories என்று வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். (எனக்கு முடி கொட்டிப் போன பிறகும் குழந்தைகள் புத்தகங்கள் பிடிக்கிறது. உள்ளத்தில் குழந்தையோ?) கட்டாயம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!

கிப்ளிங்கை நாட்டார் மரபை, கதைகளை மேலை நாட்டவருக்கு கொண்டு போனவர் என்று நான் கருதுகிறேன். அதுவே அவரது சாதனை. அவரது sheer inventiveness-க்கு நான் பெரிய ரசிகன். இந்தக் கதைகள் எல்லாம் அவரே உருவாக்கின நாட்டார் கதைகள் அல்லவா?

தொடர்புடைய சுட்டிகள்:
கிப்ளிங்கின் ஜங்கிள் புக்
ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ்

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்